கைச்சாத்திடப்பட்ட பின்னர் கடந்தோடிவிட்ட 21 ஆண்டுகள்
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 21 வருடம் ஆகின்றது. இந்த ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் வடக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் அரசியல் நிர்வாகத்தின் தலைமையில் செயற்படுகின்றன. வட, கிழக்கு மட்டும் தொடர்ந்தும் ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது.
இணைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணமும் உயர் நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது. இப்பிரிப்பு பற்றி ஒப்பந்தத்தின் பங்காளியான இந்தியா வாயினையே திறக்கவில்லை. கிழக்கில் இராணுவத்தின் தேவைக்காக மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட்டு பிள்ளையான் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கின்றார்.
பிள்ளையான் நிர்வாகத்தை பொம்மையாக வைத்து சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளை அரசு அங்கு முன்னெடுக்கின்றது.
இந்நிலையில் இலங்கை, இந்திய ஒப்பந்தம் அதன் நடைமுறைச் செயற்பாடுகள் தோல்விகளுக்கான காரணங்கள் என்பவை பற்றி தமிழ் மக்கள் நிலை நின்று ஓர் மீள்பரிசீலனை அவசியமாகிறது. ஒப்பந்தத்தினை புலிகளும், அரசாங்கமும் ஏற்று நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது என்ற கருத்து ஒரு சிலரிடம் இன்றும் நிலவி வருவதால் இப்பரிசீலனை முக்கியமாகின்றது.
ஒப்பந்தத்தினை ஆராயும் போது மூன்று விடயங்கள் முக்கியமாகின்றன. ஒப்பந்தத்தின் உருவாக்கம், ஒப்பந்தத்தின் உள்ளடக்கம். ஒப்பந்தத்தின் நடைமுறைப் பிரயோகம் என்பவையே அவை மூன்றுமாகும்.
முதலில் நாம் ஒப்பந்தத்தின் உருவாக்கத்தைப் பார்ப்போம்.
எந்தவொரு ஒப்பந்தத்தையும் உருவாக்கும் போது அதற்கென தார்மீக நெறிமுறைகள் உள்ளன. அவை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அவற்றுள் பிரதானமானது ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் எவருக்கு விதிக்கப்படுகின்றதோ அவர்களே ஒப்பந்தத்தின் பங்காளிகளாக இருத்தல் வேண்டும் என்பதாகும்.
இதனை இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் எப்பிரச்சினை தொடர்பாக ஒப்பந்தம் வரையப்படுகின்றதோ அப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்வளே பங்காளிகளாக இருத்தல் வேண்டும். வேறொருவர் ஒரு தரப்பாக கைச்சாத்திடுவதாயின் அவர் பங்காளிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இருத்தல் வேண்டும்
உண்மையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முதல் சறுக்கல் இங்குதான் ஏற்பட்டது.
ஒப்பந்தம் நீண்டகாலமாக நிலவிய இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த வகையில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சிங்களத் தேசத்தலைவர்களும், தமிழ் தேசத்தலைவர்களுமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருத்தல் வேண்டும்.
மாறாக இரு நாடுகளின் தலைவர்களே கைச்சாத்திட்டிருந்தனர்.
தமிழ் மக்கள் தமது சார்பில் கைச்சாத்திடும்படி இந்தியாவைக் கேட்கவுமில்லை. முகவராக நியமிக்கவும் இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முதல் நாள் நயவஞ்சகமாக இந்தியாவுக்கு வரவழைத்து, டில்லி ஹோட்டலில் காவலில் வைத்துவிட்டே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஹோட்டலில் வைத்தே ஒப்பந்தப் பிரதி அவருக்கு காட்டப்பட்டு சம்மதம் பெற முயற்சிக்கப்பட்டது. இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் தொடக்கம் அப்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வரை பலர் முயன்றும் அவர் சம்மதிக்கவில்லை.
தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை ஒப்பந்தம் போதியளவு பிரதிபலிக்கவில்லையென்றும் ஒப்பந்தத்தின் நடைமுறைப் பிரயோகம் தொடர்பாக சிங்கள அரசாங்கத்தினை நம்ப முடியாது என்றும், வடகிழக்கு தற்காலிக இணைப்பினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல ஆதாரங்களுடன் தனது மறுப்பினை அவர் தெரிவித்திருந்தார்.
பிரபாகரனின் கருத்திலுள்ள நியாயத்தன்மையைக் கேட்ட எம்.ஜி.ஆர். "நான் உங்களுடனேயே நிற்பேன்' எனக் கூறிவிட்டு சென்றிருந்தார்.
இறுதியில் நள்ளிரவு பிரதமர் ராஜீவ் காந்தி தானே நேரடியாகவே வந்து பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொள்ளும் படியும், தமிழ் மக்கள் சம்பந்தமான முழு விடயத்துக்கும் நான் பொறுப்பாக இருப்பேன் எனவும், என்னை நம்புங்கள் எனவும் ஒப்பந்தத்தை எதிர்க்க வேண்டாம் எனவும் வேண்டினார்.
"வடகிழக்கு இணைப்பு தற்காலிகமானது' என்பது சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக கூறப்பட்டது என்றும் அது நிரந்தரமாகவே இணைந்திருக்கும் என்றும் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒருபோதும் நடைபெறாது என்றும் தான் உறுதிதருவதாக குறிப்பிட்டார்.
எல்லாம் தங்கள் கைகளை மீறி நடக்கின்றது. இந்தியாவின் கைதியாக இருந்து கொண்டு சம்மதம் கொடுக்காமல் இருக்க முடியாது எனக் கருதியே இறுதியில் பிரபாகரன் வாய்மூலச் சம்மதத்தை தெரிவித்திருந்தார்.
இச்சம்தம் எதிரி கைது நிலையில் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலமாக கொள்ளப்பட வேண்டுமே தவிர மனப்பூர்வமான சம்மதமாக கொள்ள முடியாது.
பிரபாகரன் அன்று சம்மதம் தெரிவித்திருக்காவிட்டால் தாயகத்துக்கு திரும்பி வந்திருக்கவே முடியாது. பிரபாகரனின் கடைசி இந்தியப் பயணமும் இதுவாகவே இருந்தது. சாராம்சத்தில் இச்சம்மதத்தினை பலவந்தமாக பெற்று சம்மதம் என்றே கூறுதல் வேண்டும்.
ஒருவகையில் தமிழ் மக்கள் தொடர்பான பொறுப்பினை இந்தியா பலவந்தமாக பெற்றுக் கொண்டது எனக் கூறல் வேண்டும்.
சரி பலவந்தமாக பெற்றுக் கொண்டாலும் பரவாயில்லை இந்தியா கடைசிவரை அப்பொறுப்பிற்கு விசுவாசமாக இருந்ததா?
அதுதான் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகவும் சோகமான விடயம். இது விடயத்தில் தன்னுடைய நலன்கள் நிறைவேற்றப்பட்டதும் இந்தியா தமிழ் மக்களின் நலன்களை கைவிட்டதே உண்மை நிலையாகும்.
இந்தியா தன்னுடைய நலனுக்காகவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள் இலங்கையில் காலூன்றுவதைத் தடுப்பதே ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் இலக்காக இருந்தது.
எந்த ஒரு நாடும் தன்னுடைய நலனுக்காக ஒப்பந்தம் செய்வதை தவறு எனக் கூற முடியாது. ஆனால் அதற்காக ஒரு தேசிய இனத்தின் அபிலாஷைகளை விலையாக கோரியமைதான் சகிக்க முடியாத ஒன்றாகும்.
இந்தியா இது விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ள விரும்பியிருப்பின் இரு ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும். ஒன்றை தன்னுடைய பிராந்திய நலன் தொடர்பாகவும், மற்றொன்றை இனப்பிரச்சினை தொடர்பாகவும் செய்திருக்கலாம். பிராந்திய நலன்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டிருக்கலாம்.
ஆனால், இனப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தத்தில் சிங்களத் தமிழ் தலைவர்களை கைச்சாத்திட வைத்துவிட்டு தான் மத்தியஸ்தராக இருந்திருத்தல் வேண்டும். ஆனால், நடந்தது வேறு. பிராந்திய நலன்கள் தொடர்பான விடயங்களை தனியாக கடிதங்களில் பரிமாறி ஏற்றுக்கொண்டு விட்டு இனப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தத்திலேயே இரு நாடுகளும் கைச்சாத்திட்டிருந்தன.
இரண்டாவது விடயம் ஒப்பந்தத்தின் உள்ளடக்கமாகும். உள்ளடக்கத்தில் பிரதான விடயம் இனப்பிரச்சினை தொடர்பான ஏற்பாடுகளேயாகும். இதற்கு ஒப்பந்தத்தினை விட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய ஆலோசனையுடன் அரசியல் யாப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தினையே முக்கியமாக ஆராய வேண்டும்.
உண்மையில் ஒப்பந்தத்தின் இரண்டாவது சறுக்கல் இங்குதான் இடம் பெற்றது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது குறைந்த பட்சம் கூட்டாட்சி அடிப்படையிலான அதிகாரப்பங்கீடாக இருத்தல் வேண்டும். இது 1957இல் கைச்சாத்திடப்பட்ட பண்டாசெல்வா ஒப்பந்தத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். கூட்டாட்சி என வருகின்ற போது "கூட்டும் பகிர்வும்' என்ற தத்துவமே மேலோங்கியதாக இருக்கும்.
பொதுவான விடயங்களில் கூட்டும் தனியான விடயங்களில் பகிர்வும் என்பதே கூட்டும் பகிர்வும் என்ற தத்துவத்தின் நடைமுறை அர்த்தமாகும்.
இக்கூட்டும் பகிர்வும் என்ற தத்துவம் சிறப்பாக செயற்படுவதற்கு நான்கு விடயங்கள் முக்கியமானவையாகும்.
ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனத்தின் கூட்டிருப்பினை பேணக் கூடிய அதிகார அலகு, சுயநிர்ணய உரிமையினை பிரயோக்கிக்கக்கூடிய அதிகாரங்கள், மத்திய அரசான கூட்டு அரசில் தேசிய இனத்திற்கு சமத்துவமான பங்கு, பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்துக்கான பாதுகாப்பு என்பனவே அந்நான்குமாகும்.
இந்நான்கு விடயங்களையும் ஒப்பந்தஉள்ளடக்கம் போதிய அளவிற்கு கவனமெடுக்கவில்லை. அதிகார அலகு தற்காலிகமாக இணைக்கப்பட்டதே தவிர நிரந்தரமாக இணைக்கப்படவில்லை. அந்த தற்காலிக இணைப்பு கூட அரசியல் யாப்பின் ஒரு ஏற்பாடாக சேர்க்கப்படவில்லை.
குறைந்தபட்சம் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட மாகாணசபைகள் சட்டத்திலும் சேர்க்கப்படவில்லை. வெறும் வர்த்தமானி அறிவித்தலாகவே அது இருந்தது.
உண்மையில் இது விடயத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும், ராஜீவ் காந்தியும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
யாப்பு ஏற்பாடாக அல்லது பாராளுமன்ற சட்டமாக இருந்திருக்குமானால் நீதிமன்றம் தன் விருப்பம்போல இணைப்பினை இரத்து செய்வது கடினமாக இருந்திருக்கும்.
சுனாமி பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் கூட இதுதான் நடைபெற்றது. அது பாரளுமன்ற சட்டமாக இருந்திருந்தால் அல்லது அதில் ஜனாபதிபதி கையொப்பமிட்டிருந்தால் நீதிமன்றம் இலகுவாக அதை நிராகரித்திருக்க முடியாது.
அதிகாரப் பங்கீட்டினை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமையினை பிரயோகிக்கக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மாகாணசபைப் பட்டியலிலுள்ள விடயங்களில் அதிகாரங்கள் குறைவாக இருந்ததுடன் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் கூட சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை இருந்தது.
குறிப்பாக வரிவிதிப்பு, சுகாதாரம் போன்ற எட்டு விடயங்களில் மாகாணசபைகள் எவ்வளவிற்கு சட்டமியற்றலாமென மத்திய பாராளுமன்றம் சட்டமியற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயமிருந்தது. அன்று வடகிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட வரதராஜப் பெருமாள் தலைமையிலான மாகாண சபை அரசாங்கம் பல தடவைகள் சட்டங்களை இயற்ற முயன்றபோதும் மத்திய அரசு அதனைத் தடுத்து நிறுத்தியது. இது விடயத்தில் அரச இயந்திரத்தின் நிலைதான் அதிக கொடூரமானதாக இருந்தது.
சிங்கள அதிகாரிகள் நடைமுறையில் எந்த அதிகாரப் பங்கீட்டுக்கும் தயாராக இருக்கவில்லை.
இந்தியா அதிகாரப் பங்கீடு விடயத்தில் இந்திய மாதிரியையே சிபார்சு செய்ய இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தது. இந்திய மாதிரிக்கு மேலாக எதையும் கேட்கக்கூடாதென தமிழ் தலைவர்களுக்கு முன்னரே எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
இந்தியக் கூட்டாட்சி என்பது அரசியல் அறிஞர்களினால் அரைகுறை கூட்டாட்சி என விமர்சிக்கப்படுகின்ற ஒன்றாகும். அந்த அரைகுறை கூட்டாட்சியினைத் தமிழ் மக்களின் தலையில் சுமத்துவது எந்த வகையில் நியாயமானது என்பதற்கப்பால் இந்திய அதிகாரப்பங்கீட்டில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு இருக்கவில்லை என்பதே கவலை தரும் விடயமாகும்.
மூன்றாவது மத்திய அரசில் மாகாணங்களின் பங்கு தொடர்பானது இதனை இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் மத்திய அரசில் தமிழ் தேசத்தின் பங்கு தொடர்பானது.
கூட்டும் பகிர்வும் தத்துவப்படி மத்திய அரசில் தமிழ் தேசத்திற்கு சமத்துவமான பங்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். உண்மையான கூட்டும் பகிர்வும் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதாயின் சிங்கள தேசம், தமிழ்த்தேசம் என்கின்ற இரு பகிர்வு அரசாங்கங்களும் இரண்டையும் சமமாக இணைத்த கூட்டு அரசாங்கமும் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
ஆனால், இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்படவில்லை. பகிர்வு விடயத்தில் ஒரு தேசிய இனத்தையே கொச்சைப்படுத்தக்கூடிய வகையில் அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்வு மேற்கொள்ளப்பட்டது. மத்தியில் கூட்டு என்ற விடயத்தில் எந்தவித பங்கும் கொடுக்கப்படவில்லை.
குறைந்தபட்சம் தமிழ் தேசிய இனம் சம்பந்தமான விடயங்களில் இரத்து அதிகாரத்தினையாவது அதற்கு வழங்கியிருக்கலாம். அவை எதுவும் வழங்கப்படாமல் மத்திய அரசு என்பது தொடர்ந்தும் சிங்கள ஆதிக்கமுள்ள அரசாகவே இருந்தது. இந்திய மாதிரியில் உள்ளது போன்ற மாநிலங்களவை ஏற்பாடு கூட இருக்கவில்லை.
நான்காவது மிக முக்கியமானது அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பதே அதுவாகும். இதில் தமிழ் மக்களின் சார்பில் ஒப்பந்தத்தினை மேற்கொண்ட தரப்பு என்ற வகையில் இந்தியாவின் பொறுப்பு அதிகமாக இருந்தது. ஆனால், இந்தியா பெரிதாக இதில் அக்கறை காட்டவில்லை.
பேரினவாத செயற்பாடுகளுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது என்ற வகையிலும் 75% பெரும்பான்மை இனத்தைக் கொண்ட நாடு என்ற வகையிலும் இந்தியா மிகவும் கவனமாக இருந்திருத்தல் வேண்டும்
சி.அ.யோதிலிங்கம்

Comments