தெற்காசிய நாடுகளுக்குள் தமிழீழம் ,,,அச்சப்படுகின்றது சிறீலங்கா

பதினைந்தாவது „சார்க்“ மாநாட்டை சிறீலங்காவில் நடத்துவது பற்றிய செய்திகள்… சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பற்றிய செய்திகளையும் விட அல்லது அமெரிக்க இந்திய அரசியல் மாற்றங்களை விடவும் முக்கியமானதாக பேசப்படவேண்டும் என்ற தோரணையில், சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிங்களப் பேரினவாதிகள் உலக மகா நாடகமொன்றை அரங்கேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனை சரியாக அவதானித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் சாணக்கியம் பொதிந்த குண்டொன்றை (சமாதானக் குண்டு) மகிந்த ராஜபக்சவின் பக்கம் உருட்டி விட்டதும், அவர் உட்பட சிங்களப் பேரினவாதிகள் திக்குமுக்காடித்தான் போனார்கள்.

„சார்க்“ நாடுகளின் கூட்டிணைவு பொருளாதார, அரசியல், கலை கலாச்சார பண்புகளை முன்னேற்றுவதற்கான கூட்டிணைவு என்றுதான் மகுடம் சூட்டியுள்ளது. தெற்காசிய நாடுகளின் இந்த கூட்டிணைவு வியாபார விடயத்தில் கூடிய கவனம் கொண்டதாக இருந்தபோதும், பெரும் சாதனை எதனையும்; கிண்டியடுக்கி விட்டதாக காணப்படவில்லை.

மாநாடுகளின்போது கலந்து பேசி முடிவெடுக்கப்பட்ட விடயங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தொட்டால் குற்றம் பட்டால் குற்றம் என்ற போக்கில் உள்ளூர வைரிகளாகவே உள்ளனர். இது போன்ற தன்மைகளை கொண்ட இந்த கூட்டிணைந்த நாடுகளின் வரிசையில் ஆப்பானிஸ்தானின் புதிய இணைவினை (நாடுகள் அதிகமாகிய தன்மை) ஓரளவிற்கு இந்தியாவைப் பொறுத்தளவில் நன்மை எனச் சொல்லலாம் இது தனிக்கதை.

நாம் சிறீலங்காவின் பக்கம் வருவோம். சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்தராஜபக்சவும், படைத்தளபதி சரத் பொன் சேகாவும் நாட்டின் பாதுகாப்பு பற்றி என்ன கூறுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து வெளியேற்றிவிட்டோம். வடக்கில் வலுக்குன்ற வைப்பதில் தீவிரமாக ஈடுபடுக்கின்றோம். எமது படையினர் புலிகளை அடித்து நொருக்கிகொண்டுள்ளனர் இனி முழு இலங்கையும் இங்கு வாழும் மக்களும் சிறீலங்காப் படையாட்களால் பாதுகாக்கப்பட்டுவார்கள்.

இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். புலிகளின் கதையை முடித்துவிடுவோம் என்று காலக்கெடுக்களையும் சிறீலங்கா அரச தரப்பிலிருந்து பலரும் அறிக்கைவிட்டனர். சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான கெகலிய ரம்புக்வெல அறிக்கை மன்னராக திகழ்கின்றார். புலிகள் பிரணவாயுவற்றுள்ளனர் (சேடமிழக்கின்றனர்) என இறுதியாக அறிக்கை விட்டார்.

இப்படி அறிக்கை விட்டவர்கள் தமது அறிக்கைகள் மகாதவறானவை என்று தங்களை அறியாமலே ஒத்துக்கொண்டனர். „சார்க்“ மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் மாநாடு நடைபெறும் இடம், மாநாட்டிற்கு வருவோர் அழைத்துச் செல்லப்படும் இடங்களை பூசிமெழுகி அழகுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் பார்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் கூடிய கவனம் செலுத்துகின்றனர்.

என்ன தான் கொழும்பை பூசிமெழுகினாலும் கொழும்பின் மீன்கடை, நாலாம் குறுக்குதெரு ஆகியவற்றின் துர்நாற்றத்தைப் போக்கமுடியாமல் இருக்கின்றதோ அதே போன்று தமிழரை இனஅழிப்புச் செய்து கொண்டு சிறீலாங்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வைத்துக் கொள்ளமுடியாது. அதற்காக „சார்க்“ மாநாட்டிற்கு வரும் தலைவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தமிழீழ விடுதலை புலிகள் இருப்பார்கள் என காண்பிக்க முற்பட்ட நாடகமாடலில் தாமே மார்தட்டிக் கொண்ட பாதுகாப்பு விவகாரங்களின் மேலாண்மை தவறு என ஒத்துக் கொள்வதாக குறிப்பிட்ட விடயங்கள் பற்றிப் பேசப்பட்டன.

இந்தியாவின் அரசு தலைவர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்கு இந்தியப் பாதுகாப்பு படையினர் வருவது தான் சிறப்பானது என்றால்… இதன் அர்த்தம் தான் என்ன?

சிறீலங்காவின் பாதுகாப்பு படையினர் கையாலாகதவர்கள் என்றாகிவிடாதா?


ஆகமொத்தம் இந்ந நாடகமாடலின் உட்கிடக்கை என்னவென்றால் புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் பயங்கரமான வேலைகளைச் செய்வார்கள் என்பது தான்.

அப்படியென்றால்

எதற்காக சிறீலங்காவில் இந்த மாநாட்டை நடத்தவேண்டும்?

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக்கூடிய இடத்தை எதற்காக வலிந்து தேர்ந்தெடுக்கவேண்டும்?


ஒட்டுமொத்த நோக்கமும் இந்த மாநாட்டை வைத்துக் கொண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக காண்பிக்கமுயல்வதாகத் தான் தெரிகின்றது.

இதில் என்ன கொடுமையென்றால் இந்தியாவும் துணைபோகின்றது. இதில் நாம் இந்தியாவிற்கு ஒரு விடயத்தை நினைவூட்ட வேண்டும்.

மன்மோகன் சிங் அவர்களே சிறீலங்காவின் அணிவகுப்பு மரியாதை ஏற்கவேண்டி வந்தால் மிகவும் அவதானமாக இருங்கள் பிறடியில் அடித்துவிட்டு அடித்தவருக்கு மனநோய் என கதைகட்டி விடுவார்கள்.

தமிழ் மக்களை மிகவும் கோரமாக கொடுமைப்படுத்தி இன அழிப்பு செய்கின்றனர். தமிழரின் உயிரிற்கு துளியெனவும் மதிப்பளிக்காது „சாதனை நிகழ்த்துவதற்கு படுகொலை செய்வது போல“ தமிழன் என்ற ஒரே காரணத்தை மட்டும் வைத்தக்கொண்டு நாளாந்தம் படுகொலைகள் நடக்கின்றன. இதுபற்றி வாயே திறக்காமல் இருந்துகொண்டு இந்தியாவின் நலனை மட்டும் வைத்துக் கொண்டு ஈழத்தமிழர் விவகாரத்தில் ஊறுகாயை தொடுவது போல உங்கள் சுவைக்காக தொட்டுக்கொள்ளாதீர்கள்.

இன்றைய இந்த நவீன உலகில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களப் பேரினவாதிகள் ஈழத் தமிழரை அழிக்கின்றனர். இன அழிப்பென்பது தனியே உயிர்களை மட்டும் பறிப்பதல்ல. எனவே பொருளாதாரம், கலாசாரம், கல்வி, என பல்வகை இலக்குகளை நெறிப்படுத்தி இன அழிப்பு மும்முரமாக நடக்கின்றபோது உங்களுடைய நலன் கருதி எண்ணை அகழ்வாராட்சி போன்ற வியாபார நலன் கொண்ட விடயங்களை மட்டும் பற்றி சிந்திக்காதீர்கள்.

ஈழத் தமிழரின் பாதுகாவலர்களான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக காண்பித்து சுயநலன் பற்றி மட்டும் அக்கறை கொள்ளாதீர்கள். எனவே மாநாட்டை மன்மோகன்சிங் புறக்கணிக்கக் கூடாது என்பதற்கான கையூட்டாக மன்னாரின் எண்ணை வள ஆராட்சி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம்.

பாக்கிஸ்தானிற்கு மகிந்தராஜபக்ச என்ன கையூட்டுக் கொடுத்திருப்பார் என்பது பற்றியும் சிந்தியுங்கள். எனவே சிறீலங்காவில் காலபதிக்க இந்தியத் தலைவர் மன்மோகன்சிங் எண்ணியதும் அவரின் பாதுகாப்பு பற்றி நிறையவே சிந்திப்பார்கள் என்பது பற்றி எவரும் ஆருடம் கூறத்தேவையில்லை. உங்களின் பாதுகாப்பிற்கு உங்களுடைய படைதான் தேவை என நீங்கள் சிந்திப்பது பிழையானதல்ல. அதற்கு விடுதலைப் புலிகள் என்ற விடயத்தை முற்படுத்தாதீர்கள்.

மாநாட்டிற்கு முன் கொழும்பின் பாதுகாப்பு விவகாரங்கள் என நோக்கின்ற போது செய்யப்படும் வேலைகளை „சார்க்“ நாடுகளைச் சேர்ந்தவர்கள் நோக்கிப் பாருங்கள். தமிழர் மீதே கெடுபிடிகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தமிழர் என்ற அடையாளம் மட்டுமே பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகினறன. யாழ்தேவி (யாழ்ப்பாணத்திற்கான தொடரூர்தி) வடக்கே தாண்டிக்குளம் வரைசென்று தரித்து, வவுனியாவுடன் தரிப்பை மட்டுப்படுத்தியது, மதவாச்சியை தாண்டாதும் தடுக்கப்பட்டது.மாநாட்டை முன்னிட்டு குறிப்பிட்ட இந்த தொடரூர்த்தி கொழும்பு கோட்டை தரிப்பிடத்திற்கு வருவது தடுக்கப்பட்டு மருதானையில் தரிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இது போன்ற இந்த வழியூடாக பயணிக்கும் ஏனைய தொடரூர்த்திகளின் நிலமைகளும். இப்படி தமிழரை இலக்கு வைத்து கெடுபிடிகளைச் செய்வதற்கு தமிழர் மீது சுமத்தப்படும் பட்டம் பயங்கரவாதிகள். குறிப்பிட்ட இந்த விடயம் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியதல்ல என்பது போலவே தெரியும் ஆனால்… இரகசியமாகத் தமிழரை இலக்குவைத்து அரக்கத்தணத்தை புரிவதற்கு மாநாட்டையும் சாட்டாக வைத்து செயற்படுகின்றனர்.

கேட்பாரில்லை என்பதுபோல நடக்கும் சிறீலங்காப் பேரினவாதிகளின் செயலை முடிவிற்குக் கொண்டுவரக்கூடிய தமிழரின் பாதுகாவலர்களான தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பற்றியும், தமிழரின் புனிதமான விடுதலை போராட்டம் பற்றியும் மாநாட்டில் கலந்து கொள்ளப்போகின்றவர்கள் சரியான பார்வையைச் செலுத்துங்கள். உலகத்தில் விலங்குகளைப் பாதுகாப்பதற்கு சில அமைப்புகள் இருக்கின்றன. அந்த அமைப்புகள் விலங்குகளின் உயிர் மீது மட்டுமல்லாமல் உரிமைகள்; மீது கூட அக்கறை காட்டப்பட வேண்டுமென குரல்கொடுக்கின்றன.

சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரையில் தமிழரை விலங்குகளிலும் மோசமாக வேட்டையாடுகின்றனர். இதற்கெதிராக இன்றைய சூழ்நிலையில் உலகப்பரப்பில் குரல் கொடுக்கின்றவர்கள் உள்ளனர் எனினும் இளைக்கப்படும் கொடுமைகளிற்கு ஈடாக உலக சமூகத்தவரின் குரல் அமையவில்லை.

இந்த நிலமையில் „சார்க்“ மாநாடு நடக்கின்றது. தெற்காசிய நாடுகளின் ஐக்கியம் பற்றி பேசுகின்றவர்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் சுயநிர்ணய உரிமையைப் புறம்தள்ளிவிட்டு ஐக்கியப்படுவோம் என்ற முடிவோடே மாநாடுகளை கூட்டுவார்களெனின், அந்த ஐக்கியத்திற்குள் மெய் இராது. அத்துடன் பாதகமான தன்மைகளையே நிர்பந்தமாக உள்ளிழந்து வைத்திருக்க வேண்டியேற்படும். எனவே ஈழத்தமிழர் பற்றி நியாயமான நேர்மையான பார்வையை செலுத்தி அயல்நாட்டவர்கள் பேசுவார்களெனின் அது மிகச் சிறப்பானதாக அமையும்.

ஈழத்தமிழரை வன்முறையாளர் பயங்கரவாதிகள் என முத்திரையிட்டு வன்போக்கை பிரயோகிப்பதன் மூலம் தீர்வு கிட்டாது என்பதை உறுதியாக கூறலாம். இதற்கு இந்தியாவின் அரசியல் போக்கில் நடந்த சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்குமென எண்ணுகின்றேன்.

சீக்கிய மக்களிற்கு தனி அரசொன்றை வேண்டிநின்ற சீக்கிய இனத்தலைவரான மாஸ்ரர் தாராசிங், காஸ்மீர விடுதலை கேட்ட ஷேக் அப்துல்லா போன்றோர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். குறிப்பிட்ட இன மக்களின் தனியாட்சி உரிமை கோரலிற்கு முடிவு வந்ததா?

வன்முறையை பிரயோகித்து எந்த தேசிய இனத்தின் போராட்ட உணர்வுகளையும் அழித்துவிடமுடியாது. குறிப்பிட்ட இனதலைவர்களின் சிறையிருப்பு எந்தமாதிரியான எதிர்விளைவைத் தந்தது. காலிஸ்தான் விடுதலைப் போராட்டம், காஸ்மீர் விடுதலைப் போராட்டம் எனப் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்துள்ள இந்த நிலையில் சிங்களப் பேரினவாதிகளின் ஒட்டுமொத்த சிந்தனையின் வெளிப்பாடாக ஈழத்தமிழ் சமூகத்தை பயங்கரவாதம் என முடிவுகட்டி விடுவது. மேலும் போராட்டத்தை வீச்சுடன் முன்னெடுக்க முனைப்புக் காட்டபடுமே தவிர பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்குத் தள்ளிவிடப் போவதில்லை.

இதற்காக மீண்டும் காலிஸ்தான், காஸ்மீர் விடுதலைப் போராட்டங்களை கோடிட்டுக் காட்டுவதே பொருத்தமாக இருக்குமென எண்ணுகின்றேன். „ தமிழீழம்“ பற்றி தெற்காசிய நாடுகளின் ஐக்கிய எண்ணம் கொண்டவர்கள,; அவரவர் விருப்பு வெறுப்புக்களை மட்டும் கருத்தில் எடுத்துப் பேசாது, உண்ணமையை மனச்சாட்சிக்கு ஒப்பாக ஆராய்ந்து பேசுங்கள். இந்தியாவிலும் குண்டுகள் வெடிக்கின்றன. அப்படியான வேளைகளில் பயங்கரவாதிகள் குண்டுவைக்கின்றார்கள் என ஒரே போடாகப் போடுவதிலும் பார்க்க ஏன் இந்த குண்டுகள் வெடிக்க வைக்கப்படுகின்றன என ஆராய்ந்து அறிய வேண்டும். அதன் மூலம் மட்டுமே தீர்வுகளைக் காணமுடியும்.

தெற்காசிய நாடுகள் என்று ஐக்கியம் பற்றி பேச முற்படுகின்றவர்கள் நாடுகளிடையே சரியான முறையிலான ஐக்கியத்தைக் கொண்டுவரவில்லை என்பது பரவலாக யாவரும் அறிந்ததே. ஆனால்… நாடுகளிற்கிடையிலான ஐக்கியம் என்பதிலும் நாட்டிற்குள்ளேயே இருக்கக்கூடிய ஐக்கியத்தின் நிலை என்ன?

இந்தியாவினுடைய நிலை யாவரும் அறிந்ததே. பாகிஸ்தான்… 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் பங்காளதேஸ் ஆகிவிட்ட கதை யாவரும் அறிந்ததே. அதனுடன் பாகிஸ்தானின் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?

இன்று பாகிஸ்தானில் இருக்கக் கூடிய நான்கு தேசிய இனங்களின் ஆழ்மனவிடுப்பினை நிறைவேற்றாத வரை தேசத்தின் ஒருமைப்பாடு சாத்தியமில்லை என்பதற்கு பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் அங்குள்ள நான்கு தேசிய இனங்களும் நல்லதொரு உதாரணமாகத் தான் தெரிகின்றன. எனவே அவரவரின் உள்விவகாரங்களை நினைத்துக்கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நோக்காதீர்கள்.

தமிழர் சுயநிர்ணய உரிமை கேட்பதால் எவரிற்கு எங்கே வலிக்கின்றதென்பதல்ல இங்கு பிரச்சனை. வலியத்தாங்கிக் கொண்டு போராடும் ஒரு இனத்தின் உணர்வைப் புரிந்துகொள்ளாத அரசுகள் உறவில் தோற்றுப்போவார்கள்.

ஒரு அனுபவ சுழற்சிக்குப் பின் அரசிற்கு அரசு என்ற ரீதியில் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே…கால ஓட்டத்தின் பின் அயலவரும் ஏனைய உலக நாட்டவர்களும் அரசிற்கு அரசு என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ளும் வகையில் தந்திரோபாய அரச உறவுகளில் புதிய சேர்க்கைகளை அவரவரிற்கு ஏற்றால் போல தமிழீழத்தின் பக்கம் கொண்டுவருவர்.இதில் „சார்க்“ நாடுகளும் விதிவிலக்கற்றிருக்கும்.

„சார்க்“ நாடுகளுடன் ஆப்கானிஸ்தானும் இணைந்துள்ளது. ஆப்கானிஸ்தானை சூழவுள்ள நாடுகளின் எல்லைகளின் நிலைப்பாட்டினை மையமாக வைத்தே ஆப்கானிஸ்தானின் அரசியல் போரியல் நிலமைகள் பற்றி பலரும் ஆராய்வர். உள்முரண்பாட்டின் கனம் எவ்வளவென தெரிந்துகொண்ட வலுவுள்ளவர் தமக்கென தனிநாடு பற்றிப் பேசுகின்றவர்களை ஒதுக்கிவிடுவது போன்ற நிலையிலேயே நாடுகளையும் அணுகுகின்றனர். இந்த நிலையில் நாடுகளின் கூட்டிணைவு அவசியம் என்ற எடுகோளின் அடிப்படையில் தான் காரணம் ஒன்றை முன்கொண்டு வந்து கூட்டிணைகின்றன. ஆனால்… தங்களின் உள்நாட்டு விவகாரங்களை பொறுத்தே ஒவ்வொருத்தரின் செய்பாடுகளும், கைகொடுப்புகளும் தொடர்கின்றன.

சிறீலங்காவை பொறுத்தவரை தமிழீழம் சாத்தியமில்லை. தமிழரை அழித்து விடுவோம் கதை முடிகின்றது. ஈழத்தமிழர் கொடுப்பதை பெறுவார்கள், பொத்திக் கொண்டிருப்பார்கள், அல்லது பச்சை தமிழராய் இருந்துகொண்டு பச்சைத் துரோகம்; செய்பவர்களை வைத்து அலுவலை முடித்துவிடலாம் என எண்ணித்தான், அனைத்து வழிகளிலும் செய்ற்படுகின்றது. அந்த எண்ணத்தோடு தான் „சார்க்“ நாடுகளின் தலைவர்களின் பாதுகாப்புக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசின் நாடகமாடலிற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் „சார்க்“ மாநாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கமாட்டோம் என அறிவித்ததோடு மட்டுமல்லாமல்… தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தையும் அறிவித்தனர்.

இது மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள பேரினவாதிகளை திணற வைத்தது. எனினும் அவர்கள் போர் பற்றியே ஆர்வமாகவுள்ளனர். இப்பொழுது யார் வன்முறையை தமிழர் மீது திணிக்கின்றனர் என்பது „சார்க்“ நாடுகளிற்கு மட்டுமல்ல உலகத்தவர்களிற்கும் நன்கு புரியவைக்கப்பட்டுள்ளது.

தமிழீழம் சாத்தியமற்றது என வலியுறுத்தும் சிறீலங்கா…தமிழீழத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்பதை தான் இதுபோன்றவற்றினூடாகவும் ஈழத்தமிழரிற்குச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றது.

„சார்க்“ நாடுகளிற்குள் தமிழீழம் இணையும் என்ற அச்சமே... சிறீலங்காவின் தற்போதைய செயற்பாடுகளிற்கான முக்கிய காரணம்.

-மதி-


Comments