இலங்கைக் கடற்படையின் ரத்த வேட்டை - செங்கடலாகச் சிவக்கும் வங்க்கடல்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு. நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறைக்கு அப்பால் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே கடல்பகுதியை இருட்டு ஒரு போர்வை போல போர்த்தியிருந்தது. தமிழக மீனவர்களின் இன்றைய நிலைமையைச் சொல்வது போல இருந்த அந்தக் கும்மிருட்டில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் வாசகன், நாராயணசாமி, முரளி ஆகியோர்.

நட்டநடுநிசி. இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று சத்தமில்லாமல் இவர்களது மீன்பிடிப் படகை அணுகியது. இந்தியக் கடல் பகுதியில், அதுவும் சேதுக்கால்வாய் தோண்டப்பட்டு வரும் பகுதியில் இலங்கை ரோந்துப் படகா? என்று இவர்கள் திகைத்து திக்குமுக்காடிய வேளையில், ரோந்துப் படகில் இருந்து பறந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள் மீனவர்களின் படகைப் பதம் பார்க்கத் தொடங்கியது.

``நாங்கள் மீனவர்கள்! கடத்தல்காரர்களோ, புலிகளோ இல்லை'' என்று கத்தினார்கள் மீனவர்கள். அதை இலங்கை நேவிக்காரர்கள் காதிலேயே வாங்கவில்லை. படகை நெருங்கி வந்த அவர்கள், மூன்று மீனவர்களும் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் அவர்களைப் படகில் நிற்க வைத்தனர். அதன்பின் துப்பாக்கிக் குழல்கள் கனல் கக்கியபடி குரைக்கத் தொடங்கின.

குண்டுகள் மீனவர் வாசகனின் தலையைத் தாக்க, அவர் மூளை சிதறிச் செத்து விழுந்தார். ``சுட வேண்டாம்'' என்று கைகளைக் கூப்பிய நாராயணசாமியின் கைவிரல்கள் குண்டுகள் தாக்கி தனித்தனியே பறந்தன. முரளிக்கும் படுகாயம். மூன்று மீனவர்களும் படகில் சாய, வந்த வேலை முடிந்ததென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது இலங்கை ரோந்துப்படகு.

கும்மிருட்டில் ரத்தவெள்ளத்தில் கிடந்த முரளி,அடுத்த சில மணிநேரத்தில் விழித்துக் கொண்டார். கையிலிருந்த செல்போனில் ஊருக்குத் தகவலைச் சொல்லி விட்டு மீண்டும் மூர்ச்சையானார். அந்தத் தகவலறிந்ததும் ஆறுகாட்டுத்துறையே அலறிப்போனது.

மூன்று படகுகள் அவர்களைத் தேடி விரைந்தன. சேதுசமுத்திரப் பணி நடக்கும் கடல்பகுதியில் இருப்பதாக முரளி சொன்னதால், அதையே அடையாளமாக வைத்துத் தேடிய அவர்கள், கடைசியில் அலைகடலில் அனாதரவாக மிதந்து கொண்டிருந்த படகைக் கண்டுபிடித்தார்கள். உள்ளே ரத்தச் சகதியில் கிடந்தனர் மூன்று மீனவர்களும்.

மூளை சிதறிய வாசகன் ஏற்கெனவே இறந்து போயிருந்தார். நாராயணசாமியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. முரளி மயக்கத்தில் இருந்தார். மூவரையும் கரைக்குக் கொண்டுவரும்போது பாதிவழியில் தனது இறுதி மூச்சை விட்டுவிட்டார் நாராயணசாமி.

இருவர் இறந்த தகவல் இதற்குள் காட்டுத்தீயாய்ப் பரவிவிட,ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கூடிவிட்டனர். உறவினர்களின் கதறல் கடலோசையை விஞ்ச,காலை பத்து மணியளவில் படகுகள் கரை வந்து சேர்ந்தன.

அதற்குள் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு அமைச்சர் மதிவாணன், மாவட்ட கலெக்டர் ஜெயராமன், எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் வேதரத்தினம், உலகநாதன் என பலரும் வந்துவிட்டனர். காயமடைந்த முரளி ஆம்புலன்ஸில், தஞ்சாவூர் மருத்துக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

படகில் ரத்த வெள்ளத்தில் கோரமான முறையில் இறந்துகிடந்த வாசகன், நாராயணசாமி ஆகியோரது உடல்களைப் பார்த்து உறவினர்களும், ஒட்டுமொத்த மீனவர்களும் கதறிய கதறல் அந்தப் பகுதியையே கலங்க வைத்தது. ரத்தக் களறியாகக் கிடந்த படகில், இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு துளைத்த ஓட்டைகள் காணப்பட்டன.

மீனவர்களின் உடல்கள் போஸ்ட்மார்ட்டத்திற்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவர்களது குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை அமைச்சர் மதிவாணனால் வழங்கப்பட்டு ஆறுதல் கூறப்பட்டது.

இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து, சோகத்தில் முங்கி முழுக்காடிய நாகை மாவட்ட மீனவர்கள், மறுநாள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதேநாளில் கூடிய நாகை மாவட்ட மீனவர் பிரதிநிதிகள், முதற்கட்டமாக நாகை, காரை மாவட்ட மீனவர்களை ஒன்றிணைத்து ஒரு பெரும் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.

நாம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம தலைவரான மயில்வாகனம் என்பவரிடம் பேசினோம்.

``இந்தச் சம்பவம் பற்றி ராத்திரி ஒரு மணிக்கே அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தந்து விட்டோம். அவர்கள் வந்து கரையில் காத்திருந்தார்களே தவிர, கடலில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிய மீனவர்களை மீட்க எந்த உதவியும் செய்யவில்லை.

இந்திய கடலோர காவல்படை எங்கே போனது என்பதே தெரியவில்லை? நாங்கள்தான் மீனவர்களை மீட்டுக் கரை சேர்த்தோம்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. அதிகாரிகள், முதல்வரின் ஒரு லட்ச ரூபாயை அவசரமாகக் கொடுத்துவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டு புறப்பட்டால் போதும், அத்துடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாகவே நினைக்கிறார்கள்.

ஆளுங்கட்சியினரோ எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்கின்றனர்.

மனித நேயத்திற்கு மதிப்பே இல்லை. சிங்கள கடற்படை இனி நம் கடல் எல்லைக்குள் அல்ல, இனி வீட்டுக்கே வந்து சுட்டுவிட்டுப்போனாலும் கேட்க நாதியில்லை.

தமிழக அரசு இதுபற்றி மத்திய அரசிடம் புகார் செய்வதோடு சரி. அதன் பிறகு அமைதியாகி விடுகிறது. அப்பாவி மீனவர்களுக்கு எப்போதுமே நிம்மதியில்லை'' என்றார், அவர் துக்கம் ததும்பிய குரலில்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்து சி.பி.ஐ. சார்பில், மீனவர் வாழ்வுரிமை விழிப்புணர்வு இயக்கம், நாகை மாவட்டம் பழையாறிலிருந்து, ராமேஸ்வரம் வரை போராட்டம் நடத்தியிருக்கிறது.

அடுத்த கட்டமாக ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரிவரை போராட்டம் நடக்கவிருந்த சூழ்நிலையில், இப்படியொரு கொடூரச் சம்பவம் நடந்து விட்டதால், சி.பி.ஐ.யின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கொதித்துப்போயிருக்கிறார்.

``இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இலங்கையில் நடக்கவிருக்கும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டில் இதை ஒரு முக்கியப் பிரச்னையாக வைத்து இந்திய அரசு தீர்வு காண வேண்டும்'' என்று சூடாகியிருக்கிறார் அவர்.

அதோடு இலங்கை அரசைக் கண்டித்து, வரும் 30-ம்தேதி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ``சிங்கள அரசின் இந்த இனவெறி அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் கருணாநிதி டெல்லிக்கு நேரிடையாகச் சென்று பிரதமரைச் சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்ட, இலங்கையுடன் உள்ள உடன்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்'' என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில்,12-ம்தேதி இரவு வேதாரண்யம் கோடியக்கரை பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை சிங்கள ராணுவத்தினர்வழிமறித்து, நெஞ்சுக்கு நேரே துப்பாக்கியை நீட்டி மிரட்டியதோடு, வலைகளை அறுத்து சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது மீனவர்கள் மத்தியில் மேலும் பதற்றத்தைப் பற்ற வைத்துள்ளது.

ஆர். விவேக் ஆனந்தன்
குமுதம் - ஆடி 20, 2008

Comments