கொழும்பில் "சார்க்' திருவிழா

நூற்று நாற்பத்தாறு கோடி மக்கள் வசிக்கும் தென்னாசிய வட்டகையைச் சேர்ந்த எட்டு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்குபற்றும் "சார்க்' உச்சி மாநாடு கொழும்பில் பலத்த ஆரவார எடுப்புகளோடும் பலத்த கெடு பிடிகளோடும் நடைபெற்று வருகின்றது.

இனித்தான் உச்சி மாநாட்டின் உச்சக்கட்டமாக வெளி விவகார அமைச்சர்கள் சந்திப்பும் அதைத் தொடர்ந்து "சார்க்' நாட்டுத் தலைவர்களின் ஒன்றுகூடலும் இடம் பெறப் போகின்றன.
பல நூறு கோடி ரூபா நிதியை அள்ளிக் கொட்டி, தடல்புடல் ஏற்பாடுகளைச் செய்து, பாதுகாப்பு நடவடிக் கைகளை முன்னெப்போதுமில்லாதவாறு இறுக்கிப் பிடித்து கொழும்பு செய்யும் இந்த ஒரு வாரக் கூத்தினால் நாட்டுக்கும் இந்தப் பிராந்திய மக்களுக்கும் நன்மை ஏதும் விளையுமா என்பதே பலரினதும் மனங்களைக் குடையும் கேள்வியாகும்.

இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் பிராந்தியத் தலைமைப் பதவியை வழங்கி, அவரைக் கௌரவித்து ஆர்ப்பாட்டம் பண்ணும் ஓர் எடுப்பு நிகழ்ச்சியாகவும் இப்பிராந்தியத் தலைவர்கள் ஒன்று கூடி, படப்பிடிப்புக் கமராக்களுக்கு "போஸ்' கொடுத்து, வெறுமனே கூடிக் கலையும் கேளிக்கை நிகழ்வாகவும் இது அரங்கேறி முடியுமா அல்லது பயன்தரு முடிவுகளை எட்டவும், அவை வழி செயற்படுவதற்கான தூண்டுதலைத் தரவும் வாய்ப்பளிக்கும் ஓர் அம்சமாக இது நடந்தேறுமா என்பதே இன்றைய வினாவாகும்.

மிக முக்கியமான காலகட்டத்தில் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் தீவிரமடைந் திருக்கும் ஓர் இக்கட்டான சமயத்தில் இந்தப் பிராந்தியத் தலைவர்கள் ஒன்று கூடுகின்றார்கள்.

பயங்கரவாதத்தை நசுக்குதல், வறுமையை ஒழித்தல், புவி வெப்பமடைதலையும் மாசடைதலையும் தடுத்து, காலநிலை மாற்றங்களைச் சீர்படுத்துதல், உணவுப் பொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை யேற்றம் ஆகியவற்றால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குக் கூட்டாக முகம் கொடுத்தல் போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை இந்த "சார்க்' மாநாடு ஆராயவிருப்பதாகக் கூறப்படுகின்றது.

"சார்க்' நாடுகளில் மிகப் பெரியது உபகண்டம் என்று வர்ணிக்கப்படும் இந்தியா. அந்தத் தேசத்தில் அண்மை யில்தான் அடுத்தடுத்து பல குண்டு வெடிப்புகள். குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தும், பெங்களூரும் அதனால் அதிர்ந்து, பேரழிவுகளைச் சந்தித்து நிற்கின்றன. எல்லை கடந்த பயங்கரவாதமே இக் கொடூரங்களுக்குப் பின்னணி என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.

போதாக்குறைக்கு காபூலில் இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் அண்மையில் இடம்பெற்ற மிக மோசமான மிகக் கொடூரமான வெடிகுண்டுத் தாக்குதலுக்கு அப்பிராந்திய நாடு ஒன்றின் உளவு அமைப்பே காரணம் என்று அதிகாரபூர்வ வட்டாரங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்திய பாகிஸ்தான் எல் லையில் காஷ்மீர் பகுதியில் இரு நாட்டு இராணுவங்களும் மோதிக் கொண்டதில் இரு தரப்பிலும் சில ஜவான்கள் பலியாகியிருக்கின்றனர்.

இப்படி மோதலும் முறுகலும் முற்றியிருக்கும் சமயத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளின் உயர் தலைவர்கள் "பிராந்திய ஒத்துழைப்பும் நட்புறவும்' என்ற பெயரில் கைகொடுத்து, பரஸ்பரம் குசலம் விசாரித்து, புகைப் படங்களுக்குப் "போஸ்' கொடுப்பதில் அர்த்தமில்லை.

அப்படிச் செய்வது வெறும் சம்பிரதாயபூர்வ கோமாளித் தனமாகவே இருக்கமுடியும்.

நாடுகளுக்கு இடையில் நிலவும் பிரசசினைகள் பற்றியோ, அங்கத்துவ நாடு ஒன்றின் உள்நாட்டுப் பிரச்சினைகள், பூசல்கள் பற்றியோ அரசுத் தலைவர்கள் கூடும் "சார்க்' மாநாட்டில் குரல் எழுப்பவோ, கருத்துக்களை வெளியிடவோ முடியாது என்பது உண்மைதான்.

ஆனாலும் இந்தப் பிராந்தியத்தை ஆட்டிப்படைத்து வரும் பிரதான பிரச்சினைகள் எல்லாம் மேற்படி இரண்டு வகைக்குள் அடங்கி விடுவனவாக இருக்கும்போது அவை குறித்துப் பேசாமல் இந்த "சார்க்' கூடிக் கலைவ தில் என்ன பயன்?

இந்தப் பிராந்திய மாநாட்டை இவ் வளவு செலவு, சிரமம், கஷ்டம் சகித்து முன்னெடுப் பதில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்?

இந்த மாநாடு நடைபெறும் இலங்கைத் தீவே இன்று அதன் தேசிய இனப்பிரச்சினையில் இரத்தக்களரியாகி, வன்முறைப்புயல் வீசும் பூமியாகியிருக்கின்றது.

தலைநகர் கொழும்பில் பல்லாயிரக்கணக்கான படையினரைக் குவித்து, பாதுகாப்புகளை இறுக்கிக் கொண்டு, "சார்க்' மாநாட்டுப் பிரதிநிதிகள் பயணம் செய்யும் பாதைகளை மட்டும் செப்பனிட்டு, அழகு படுத்தி, "ஆலாபரணம்' பண்ணி அமைதிப்படம் போடுகிறது கொழும்பு.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு "பயங்கரவாத' முலாம் பூசி, அரச பயங்கரவாதத்தை மறைக்கவும் அது எத்தனிக்கின்றது.

இப்ப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்களின் பக்க நியாயக் கருத்தை வெளிப்படுத்த இடமளிக்காமல், தமிழர்களின் நீதியான போராட்டத் தைப் பயங்கரவாதப் படம் காட்டி, சர்வதேச சமூகத்தை அதற்கு எதிராகத் திருப்பும் எத்தனத்துக்கு கொழும்பு இந்த மாநாட்டையும் பயன்படுத்தும் என்பது நிச்சயம்."சார்க்' பிராந்திய நாடுகளில் பயங்கரவாதத்தை நசுக்குதல் என்ற தலைப்பில் இந்த நாடகத்தை அது அரங்கேற்ற முயற்சிப்பதும் வெளிப்படை.


Comments