வன்னி இடப்பெயர்வு ஏற்படுத்தியிருக்கும் பாரிய மக்கள் அவலம்


சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்புக்கள், எறிகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக வன்னியின் மேற்குப் பகுதியில் பாரிய மக்கள் அவலம் ஏற்பட்டுள்ளது.
மன்னாரின் மடு உதவி அரச அதிபர் பிரிவைச் சேர்ந்த அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து விட்டனர்.

மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த 50 விழுக்காட்டு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த சுமார் 25 ஆயிரம் பேர் மன்னாரின் எல்லைப் பிரதேசங்களான தேவன்பிட்டி-வெள்ளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.

இடம்பெயர்ந்த மடுமாதா சொரூபம் வைக்கப்பட்டுள்ள தேவன்பிட்டி புனித சவேரியார் கோவிலில் பெருமளவான மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

அப்பகுதியில் தற்போது நிலவும் கடும் வறட்சியால், அங்கு இடம்பெயர்ந்து வாழும் மக்கள் குடிதண்ணீருக்கு பெரும் துன்பப்பட்டு வருகின்றனர்.


தற்காலிக இருப்பிடங்களாக ஓலைக்கொட்டில்கள் மற்றும் தறப்பாள்களின் கீழ் வாழும் மக்கள் தண்ணீர் தாங்கிகளில் வரும் நீரை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.

அப்பிரதேசத்தக்கு அருகில் ஓடும் பாலிஆற்று நீர் அடிமட்டத்துக்கு சென்றுவிட்டது.

அங்கு வாழும் மக்கள் தமது நீராடல் மற்றும் ஏனைய தேவைகளுக்கு அந்த ஆற்றுத்தண்ணீரையே நம்பி வாழ்கின்றனர்.

தமது விவசாய நிலங்களை விட்டு இடம்பெயர்ந்த அம் மக்கள் நிவாரணத்தை எதிர்பார்த்து கையேந்தும் நிலையில் உள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை புரிந்து வந்த தமிழர் புனர்வாழ்வுக்கழக நிதி, சிறிலங்கா அரசினால் முடக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை செய்யமுடியாத நிலைமை உள்ளது.

அதேநேரத்தில் இருப்பில் உள்ள பொருட்களை வழங்கும் நடவடிக்கையும் மந்தமாகக் காணப்படுகின்றது.

சில தொண்டு நிறுவனங்கள் தமது வளமான இடங்களுக்கு வந்தால் ஏதாவது செய்யலாம் என்ற நிலைப்பாட்டை காட்டுகின்றன. இதனால் மக்கள் கடும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


மேலும் இடம்பெயர்ந்த மக்களின் புள்ளிவிவரங்கள் தெளிவாக மேற்கொள்ளப்படவில்லை.

மக்கள் நாள்தோறும் இடம்பெயர்வதால் புள்ளிவிவரங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் உள்ளது.

கிளிநொச்சியைப் பொறுத்தவரை நான்கு உதவி அரச அதிபர் பிரிவுகள் இருக்கின்றன.

அவற்றில் கரைச்சி, கண்டாவளை தவிர பூநகரி-பளை உதவி அரச அதிபர் பிரிவுகளிலிருந்த மக்கள் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட மாத மோதலின் போதே இடம்பெயர்ந்து விட்டனர்.

மன்னாரில் மடு-மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பிரிவில் பாரிய இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன.

முல்லைத்தீவில் மாந்தை கிழக்கு-துணுக்காய் உதவி அரச அதிபர் பிரிவுகளில் இடம்பெயர்வுகள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன.

இடம்பெயர்ந்த ஒரு தொகுதி மக்கள் அதே மாவட்டத்துக்குள் தங்கியுள்ளனர். பிறிதொரு பகுதியினர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு சென்றுள்ளனர்.

மறுபக்கம், வவுனியா வடக்கிலிருந்தும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் தமது பிரிவுகளுக்குள்ளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்குள்ளும் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடப்பெயர்வுகளால் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகும்.

பெரும்பாலும் விவசாயத்தை மையமாகக்கொண்ட மக்களுக்கு இடப்பெயர்வு பெரும் பாதிப்பை தந்துள்ளது. பாரியளவில் விவசாயம் செய்யும் கட்டுக்கரை-வவுனிக்குளம் பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீர் - உணவு - இருப்பிட அவலம்தான் முதற்கட்டமாக இருக்கின்றது. இடம்பெயர்ந்த மக்கள் வீதியோரக்காடுகளில் அடைக்கலமடைந்துள்ளனர். சிறிய கொட்டில்களை அமைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். எவரதும் உதவியும் கிட்டாத நிலையில், குழந்தைகள் உட்பட சிறுவர்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காட்டு மரங்களில் ஏணைகள் கட்டி குழந்தைகள் உறங்குகின்றன. தண்ணீருக்காக சிறுவர்கள் குடங்கள், கொள்கலன்களுடன் அலைகின்றனர்.

Comments