சார்க் மாநாட்டை குழப்ப மாட்டோம்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு

சார்க் மாநாட்டை குழப்புவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் சுதந்திரப் பேராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "த சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய பேட்டியின் முழு விபரம்:

அரசாங்கம் அண்மையில் 1-4 பேஸ் மற்றும் மன்னார் நெற்களஞ்சியம் ஆகிய முகாம்களை கைப்பற்றியதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு ரீதியான போர் ஆற்றலை வலுவிழக்கச் செய்துள்ளதாக அறிவித்திருந்தது. உங்களின் பார்வையில் விடுதலைப் புலிகள் எவ்வளவு பலவீனமடைந்துள்ளனர்?

1-4 பேஸ் என்ற முகாம் தற்போது எமது கைவசம் இல்லை. சிறிலங்காப் படையினர் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்வதனால் அவர்கள் இடம்பெயர நேரிட்டுள்ளது.

இந்த வயல்வெளிகள் மக்கள் மக்களின் பிரதான வாழ்வாதாரமாக காணப்படுகின்றது. குறித்த பிரதேச மக்களை வெளியேற்றி அதன் மூலம் மன்னார் நெற்களஞ்சியம் பகுதியை கைப்பற்றியதாக அறிவிப்பதன் மூலம் சிங்கள அரசாங்கத்தின் மனோநிலை தெளிவாக புலனாகின்றது.

கடந்த 30 ஆண்டு காலமாக சிறிலங்கா அரசாங்கங்கள் இவ்வாறான போலியான பிரசார நடவடிக்கைகளை வலிந்து மேற்கொண்டு வருகின்றன.

அனைத்து காலங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் மரபு ரீதியான போராற்றலின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களை பாதுகாத்து வந்துள்ளது. களநிலைமைகளுக்கு ஏற்ப நாம் மாறுமட்ட அணுகுமுறைகள் மற்றும் தந்திரோபாயங்களை பயன்படுத்துகின்றோம்.

கடந்த காலங்களிலும், தற்போதும் எந்த வகையிலான இராணுவத் தாக்குதல்களையும், சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய வல்லமையை விடுதலைப் புலிகள் மிகத்தெளிவாக உலகிற்கு பறை சாற்றியுள்ளனர்.

சமீப காலமாக தெற்கில் பேருந்து மற்றும் தொடருந்துகளில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன, இந்த சம்பவங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலவீனமடைந்த காரணத்தினாலா பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன?

ஒருபோதும் பொதுமக்களை இலக்கு வைத்து நாம் தாக்குதல் மேற்கொள்ளவில்லை. நாம் பலவீனமடையவில்லை, தாயகப் பிரதேசத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் மேற்கொள்வோம். சிறிலங்கா அரசாங்கமே பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்கின்றது.

உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீது மகிந்த அரசாங்கம் போர் தொடுத்துள்ளது. இதனை ஏன் நீங்கள் இவ்வாறு நோக்கக் கூடாது?

ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் படைத்தரப்பைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும், முகவர் நிறுவனங்களும் பாரியளவு வருமானம் ஈட்டுகின்றனர். இவர்கள் போர் முடிவுக்குக் கொண்டுவருவதனை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். துணை இராணுவக் குழுக்களை பயன்படுத்தி இழி செயல்களை மேற்கொண்டு போர் தொடர்வதை இவர்கள் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு மிகவும் பலமானதோர் புலனாய்வு வலையமைப்பு காணப்படுகின்றது. விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்ளாவிடின் உங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி யார் இதனை மேற்கொள்கின்றனர்?

ஆம். எம்மிடம் மிகவும் வலுவான ஓர் புலனாய்வு வலையமைப்பு காணப்படுகின்றது. அதன் மூலம் எமது மக்களையே நாம் பாதுகாப்பதற்கு விழைகின்றோம். தேவையற்ற விடயங்களை ஆராய்வதில் எமது நேரத்தை வீணடிக்க நாம் தயாரில்லை.

எனினும் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்வோர் தொடர்பில் ஊகங்களை வெளியிட முடியும். இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினரை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்கு ஒர் குழு இயங்கி வருகின்றது.

மேர்வின் சில்வா போன்ற நபர்கள் இந்த குழுவின் முக்கிய உறுப்பினர்களாகும். அரசியல் ரீதியான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள மக்களைக் கொன்று குவிப்பதற்குக் கூட இவர்கள் தயக்கம் காட்டமாட்டார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து உங்கள் அமைப்பின் மீதே குற்றம் சுமத்தப்படுகின்றது. அனைத்துலக ரீதியிலும் இந்தத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இது குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுமல்லவா?

எந்தவொரு ஆதாரமும் இன்றி நாம் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்வதாக அனைத்துலக சமூகம் எடுக்கும் தீர்மானங்களையிட்டு நாம் கவலையடைகின்றோம். 1971, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள இளைஞர்களை படுகொலை செய்வதற்கு சிங்கள அரசாங்கங்கள் சற்றும் தயங்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

தென்பகுதி தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளாவிடின், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நியாயப்படுத்தல்களையும் ஏற்றுக்கொள்ள நேரிடும் அல்லவா?

இந்தத் தாக்குதல்களை அரச படையினர் மேற்கொள்கின்றனர் என்பதனை நிரூபிப்பதற்கு எம்மிடம் போதியளவு சான்றுகள் உள்ளன. சிறிலங்கா அரசாங்கம், அனைத்துலக சமூகம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இந்த ஆதாரங்களை அம்பலப்படுத்த முடியும்.

1991 ஆம் ஆண்டு கிழக்கில் 600 காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கம் விசாரணை ஆணைக்குழுவொன்றை நிறுவியுள்ளது. அண்மையில் லண்டனிலிருந்து நாடு திரும்பிய கருணா, இந்தப் படுகொலைகளை தாம் மேள்கொள்ளவில்லை எனவும், புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானிடம் குறித்த காவல்துறை உறுப்பினர்கள் ஒப்படைக்கப்பட்தாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து உங்களின் கருத்து என்ன?

நாம், ஓர் போராட்ட இயக்கமாகும், ஒழுக்க விதிகளை நாம் மிகவும் உச்சளவில் பேணிப் பாதுகாக்கின்றோம். கருணா மீது ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டமைக்கு எதிராக தண்டனை வழங்க ஆயத்தமாகும் போது தப்பிச் சென்று விட்டார். தற்போது அரசாங்கத்துடன் இணைந்து துணை இராணுவக் குழுக்களுடன் செயலாற்றி வருகின்றார். ஜெனீவா உடன்படிக்கையின் பிரகாரமே தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படையினருடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்தால் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அண்மையில் அறிவித்திருந்தார். நீங்கள் பேச்சுக்குத் தயாரா? இல்லையெனில் என்ன காரணம்?

நிபந்தனைகளற்ற சூழ்நிலையில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். 30 வருடங்களுக்கு முன்னர் எமது மக்களை பாதுகாப்பதற்காக நாம் ஆயுதங்களை கையில் ஏந்தினோம். மகிந்த ராஜபக்சவின் பொறுப்புணர்ச்சியற்ற வேண்டுகோளுக்காக எமது மக்களை காப்பாற்றும் தலையாய கடமையிலிருந்து விடுபடுவதற்கு நாம் ஒருபோதும் தயாராக இல்லை.

2006 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 9 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாகவும், இந்தக் காலப்பகுதியில் 1 ஆயிரத்து 700 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்தத் தகவல்களை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? இல்லையெனில் உங்களின் கருத்துப்படி களநிலவரங்கள் எவ்வாறு அமைந்துள்ளது?

அவர் அநேக சந்தர்ப்பங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின்றார். அவரின் தகவல்கள் சிங்கள மக்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தை பிழையான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடும். அப்பாவி சிங்கள இளைஞர்கள் தமது உயிர்களை தியாகம் செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசியல் தலைமைகளும், இராணுவத் தளபதிகளும் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.

ஆயிரம் போராளிகளைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் 20 ஆண்டுகள் வரை தமது போராட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியவாத ஆதரவு கிட்டும் வரை விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கக்கூடிய இயலுமை கிட்டும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு நியாயமான தீர்வுத் திட்டங்களை அரசாங்கத்தினால் வழங்க முடியுமா?

கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில் எந்தவொரு அரசாங்கமும் தமிழர் பிரச்சினையை சரியான முறையில் அணுகவில்லை. இதற்கு பண்டா-செல்வா உள்ளிட்ட பல உதாரணங்களை முன்வைக்க முடியும். சிங்கள அரசாங்கங்களின் தோல்வி காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க நேரிட்டுள்ளது. தமிழர்களுக்கு நியாயமான முறையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலைப் போராட்டம் தொடரும்.

அனைத்து கட்சிக்குழுவினால் முன்வைக்கப்படும் சமஷ்டி தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர்களுக்க நியாயமான தீர்வுத்திட்டங்கள் கிடைக்கப்பெற்றால், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகின்றதா?

அனைத்து கட்சிக்குழு மற்றுமொரு ஏமாற்று நாடகமாகும். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே இந்தத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

அனைத்து கட்சிக்குழு பரிந்துரைகளில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இந்தப் பரிந்துரைகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஒருபோதும் தீர்வுத் திட்டமாக அமையாது.

சார்க் மாநாடு நடைபெறாமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது?

சார்க் மாநாட்டை குழப்புவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கின்றோம்.

விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காப் படைகள் அறைகூவல் விடுக்கின்றன. 2005 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிப்பிலிருந்து புறக்கணித்தமை ஓர் மாபெரும் தவறாக நீங்கள் தற்போது கருதுகின்றீர்களா?

ஐக்கிய இலங்கையையும், அரச தலைவர் தேர்தல் முறையையும் தமிழ் மக்கள் நிராகரித்தனர். இதனால் சிறிலங்காவின் அரசியல் கட்டமைப்பில் செல்வாக்கைச் செலுத்துவதற்கு தமிழ் மக்கள் என்றுமே நாட்டம் காண்பிக்கவில்லை. சுதந்திர தமிழர் தாயகமொன்றுக்கான ஆணையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளனர்.

ஒன்றிரண்டு வான் தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அரச படையினர் புலிகளின் வானூர்திகளுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய சிறந்த பலத்தை கொண்டுள்ளனர் என்பதே இதன் மூலம் அர்த்தப்படுகின்றதா?

இது மிகவும் பிழையானதோர் மதிப்பீடு. இதன் மூலம் எமது தந்திரோபயங்களையோ திட்டங்களோ வெளிப்படுத்தப்படமாட்டாது.

போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்கனவே இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கை இரண்டாகப் பிரித்து கிழக்கில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு மேற்கொள்ளத் தயாரானால் ஓர் புதிய போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா?

தமிழர் தாயக மக்கள் பிரிக்கப்படவில்லை. தமிழர் தாயகப் பிரதேசம் வடக்கு-கிழக்கை ஒன்றிணைத்த ஒன்றேயாகும். போர் நிறுத்த உடன்படிக்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஓர் பின்னணியை உருவாக்கியிருந்தது. அரசாங்கமே போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்தது.

இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து உங்களின் கருத்து என்ன? அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து விடுதலைப் புலிகள் கவலையடைந்துள்ளனரா?

தமிழ் மக்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த ஒத்துழைப்பின் மூலம் தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சி மேற்கொள்வதனை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். கடந்த காலங்களிலும் சிறிலங்கா அரசாங்கங்கள் இவ்வாறான அடக்குமுறைகளை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்தது. இந்திய பிரச்சினைகளை சந்திக்கும் போது அதனை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.

சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இந்தியா அதிருப்தி வெளியிட்டிருந்தது. இந்த நாடுகளிடமிருந்து கிடைக்கப் பெறும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

சிறிலங்கா அரசாங்கம் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை தனது போர் முயற்சிக்காக பயன்படுத்துகின்றது. எனினும், இது சுலபமான காரியமல்ல. எனினும், இந்த நாடுகள் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே எனது கருத்தாகும்.

பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமித்ததன் மூலம் இணைக்கப்பட்ட மாகாணங்களில் எவ்வித பலனும் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் உலகிற்கு வெளிக்காட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது?

பிள்ளையான் ஒழுக்க விதிமுறைகளை மீறிய ஒரு துணை இராணுவக்குழு உறுப்பினர் ஆவார். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு கொலைகளை மேற்கொள்ளும் ஓர் குழுவின் தலைவராகவே செயற்படுகின்றார். எனவே உங்களின் கருத்து வெகுவிரைவில் தகர்த்தெறியப்படும்.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலைமை நிதி திரட்டல் நடவடிக்கைகளை எங்கனம் பாதிக்கும்?

குறித்த நாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் தங்களின் தாய்நாட்டில் அல்லலுறும் சகோதரர்களுக்கே நிதி சேகரிக்கின்றனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற மனிதாபிமான உதவிகளை வழங்கிய நிறுவனங்கள் தடை செய்யப்படுதன் ஊடாக தாயக மண்ணில் உள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் பிரச்சாரங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தடைகளின் மூலம் தமிழாகள் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றது


Comments