அதிகரிக்கும் இழப்புக்களால் அதிகரிக்கும் பிரச்சினைகள்

கடந்த வாரங்களில் நடைபெற்ற இரு சம்பவங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்று சர்வதேச நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கையில் அல்லல்படும் மக்களின் உரிமைக்காக அணிதிரண்ட பொங்கு தமிழ் நிகழ்வுகள். இரண்டாவது இலங்கை அரசின் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொது பணிப்புறக்கணிப்பு போராட்டம்.

இவை இரண்டும் தற்போதைய அரசிற்கு அனுகூலமானதல்ல. எனவேதான் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களால் நடத்தப்படும் உரிமைக்கான ஒன்று கூடல்களை தனது வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நிறுத்துவதற்கு அரசு கடுமையான முயற்சிகளை எடுத்ததுடன், பொது வேலை நிறுத்தத்தை தடுப்பதற்கு தனது முழு வளங்களையும் பயன்படுத்தி இருந்தது.

கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி, சுவிற்சர்லாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்கொண்ட உரிமைக்கான முழக்கங்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது அதற்கு துணைபுரிந்து வரும் சர்வதேச நாடுகளுக்கும் காத்திரமான ஒரு செய்தியை வழங்கியிருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதிலும் ஏறத்தாள 3 இலட்சம் தமிழ் மக்கள் வாழும் கனடாவில் 87,000 இற்கும் மேற்பட்டோர் ரொறன்ரோவின் டவுன்வியூ பூங்கா திடலில் அணிதிரண்டது இலங்கை அரசுக்கும், சர்வதேசத்தில் தமிழ் மக்கள் மீது அழுத்தங்களை புரிந்துவரும் பல நாடுகளுக்கும் அதிர்ச்சியான விடயமாகும்.

தமிழ் மக்களுக்கு இலங்கையில் மறுக்கப்படும் உரிமைகள், அதனை பெறுவதற்கு ஒன்று திரளும் ஆதரவுகள் தொடர்பான ஒரு அழுத்தமான தகவலை இந்த பேரணி வழங்கியுள்ளது. தமது அன்றாட கடமைகளையும் விடுத்து மூன்றில் ஒரு பங்கு மக்கள் ரொறன்ரோ ஒன்று கூடலில் பங்கெடுத்தது ஒரு முக்கியமான திருப்பமாகும்.

இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் முகமாக தமக்கு ஊதிய உயர்வுகள் மற்றும் இதர சலுகைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொழிற்சங்கங்கள் தொழில்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசு பதவி ஏற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் போராட்டம் இதுவாகும்.

இந்த தொழில்புறக்கணிப்பு போராட்டமானது தென்னிலங்கையில் அரசின் அரசியல் பலம் தொடர்பான கருத்துக்களை தகர்த்துவிடலாம் என்ற அச்சம் அரசுக்கு உண்டு. எனவே தான் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசு பல வழிகளில் முயன்று வந்திருந்தது. எனினும் இந்த தொழில் புறக்கணிப்பு போராட்டம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாகவும், தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தம்மை தயார் செய்து வருவதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

போரின் அழுத்தம் ஏற்படுத்திவரும் வாழ்க்கைச் சுமைகளை தாங்க முடியாத ஒரு நிலைக்கு தென்னிலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளதையே இந்த பொது பணிப்புறக்கணிப்பு போராட்டமும், அரசுக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளும் எடுத்து காட்டுகின்றன.
இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும், அது தொடர்பாக சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளும், சர்வதேசத்தின் அசைவுகளும் இனப்பிரச்சினையுடன் நேரடியாகவோ அல்லது நேரடியற்றோ தொடர்பு கொண்டுள்ளன. இலங்கையின் பொருளாதாரமும் இனப்பிரச்சினையும் முக்கிய கட்டத்தை அடைந்துள்ள நிலையில் உலகின் பொருளாதார நெருக்கடிகள் ஆசிய பிராந்தியத்தில் கடுமையான தாக்கங்களை உண்டு பண்ணலாம் என்ற எதிர்வு கூறல்கள் பலமாக எழுந்துள்ளன.

தொடர்ச்சியாக அதிகரித்துவரும் எரிபொருள் உயர்வுகள் கப்பல் வர்த்தக துறையை கடுமையாக பாதித்து வருவதால் அதில் தங்கியுள்ள ஆசிய பிராந்திய பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கலாம்.

இதில் ஆசிய நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் ஒருபுறம் இருக்க, மேற்குலக நாடுகளினால் ஆசிய நாடுகளில் பாராமரிக்கப்பட்டுவரும் தொழில் நிறுவனங்கள் பல மூடப்படும் அபாய கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலப்பொருட்களை தருவித்து குறைந்த பணியாளர் ஊதியத்துடன் ஆசிய நாடுகளில் மேற்குலக நாடுகள் மேற்கொண்டு வந்த வர்த்தகம், கப்பல் கட்டண அதிகரிப்பினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வுகளால் கப்பல் கட்டணங்கள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்ட சி.எம்.ஏ. , சி.எம்.ஜி ஆகிய கப்பல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே பல நாடுகள் ஆசிய பிராந்தியத்தில் அமைந்துள்ள தொழில்நிறுவனங்களை இடம் மாற்றும் முடிவுகளை மேற்கொண்டுள்ளன.

இந்த புறச்சூழலானது இலங்கை அரசின் வர்த்தகத்திலும் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தலாம். அரசின் பொருளாதாரம் பல்வேறு வழிகளில் பின்னடைவை சந்தித்து வருகையில் போர் முனைகளும் அரசுக்கு பல அழுத்தங்களை கொடுத்து வருகின்றது என்பது அரசின் அறிக்கைகள் மூலம் மெல்ல மெல்ல தெளிவாகி வருகின்றது.

கடந்த மாதம் நடைபெற்ற மோதல்களில் 122 படையினர் கொல்லப்பட்டதாகவும், 793 படையினர் காயமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (08.07.2008) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தின் போது பிரதமர் தெரிவித்த இந்த கருத்துக்கள் போர் முனை தொடர்பாக அன்றாடம் அரசு தெரிவித்து வந்த கருத்துக்களில் இருந்து வேறுபட்டது.

போர் நிறுத்த காலத்தில் விலக்கி கொள்ளப்பட்ட அவசரகாலச்சட்டம் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் மீண்டும் கொண்டுவரப்பட்டதுடன், அது ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வருவதுண்டு.

அரசின் தகவல்களின் படி கடந்த மாதம் 915 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இலங்கை இராணுவத்தின் ஒரு றெஜிமென்ட் படையினரின் எண்ணிக்கைக்கு ஒப்பானது.

கடந்த ஆறு மாதங்களில் படையினரின் இழப்புக்கள் தொடர்பாக அரசு ஒவ்வொரு மாதமும் அவசரகாலசட்ட நீடிப்பு விவாதத்தின் போது தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு

ஜனவரி 2008: 68 படையினர் கொல்லப்பட்டதுடன், 468 படையினர் காயமடைந்துள்ளனர்.
பெப்ரவரி 2008: 104 படையினர் கொல்லப்பட்டதுடன், 822 படையினர் காயமடைந்துள்ளனர்.

மார்ச் 2008: 93 படையினர் கொல்லப்பட்டதுடன், 676 படையினர் காயமடைந்துள்ளனர்.

ஏப்ரல் 2008: 120 படையினர் கொல்லப்பட்டதுடன், 945 படையினர் காயமடைந்துள்ளனர்.

மே 2008: 138 படையினர் கொல்லப்பட்டதுடன், 549 படையினர் காயமடைந்துள்ளனர்.

ஜூன் 2008: 112 படையினர் கொல்லப்பட்டதுடன், 793 படையினர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை அரசின் இந்த தகவல்களின்படி இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 635 படையினர் கொல்லப்பட்டுள்ளதும், 4253 படையினர் காயமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக ஆறு மாத காலப்பகுதியில் 4888 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டதாக படைத்தரப்பின் தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் படையினரின் இழப்புக்கள் தொடர்பாக அரசு இருட்டடிப்பு செய்துவருவதாக பல மட்டங்களில் இருந்து சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆறு மாத காலத்தில் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்ட இந்த படையினரின் எண்ணிக்கை இரண்டு பிரிகேட் படைப்பிரிவுக்கு இணையானது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சில டிவிசன்கள் இரண்டு பிரிகேட்டுக்களை மட்டும் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது அரசின் புள்ளிவிபரங்களிப் படி கடந்த ஆறு மாதங்களில் தினமும் 4 படையினர் கொல்லப்பட்டும், 25 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தும் வருவதும் கவனிக்கத்தக்கது.

மேலும் மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் முழுக்க முழுக்க அரசின் தகவல்களை அடிப்படையாக கொண்டவை. அவை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. ஆனால் படையினரின் இழப்புக்கள் அரசு தெரிவிக்கும் தகவல்களை விட அதிகமானவை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது.

உதாரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முகமாலை களமுனையில் இராணுவத்தின் முன்னணி படைப்பிரிவுகளான 53 மற்றும் 55 ஆவது படையணிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதலுக்கு எதிரான விடுதலைப்புலிகளின் முறியடிப்பு தாக்குதலில் கணிசமானளவு படையினர் கொல்லப்பட்டும், காயமடைந்ததும் தெரிந்தவையே.

பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின்படி 43 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 33 படையினர் காணாமல் போனதாகவும், 126 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த மோதல்களில் 47 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காணாமல் போனதாகவும், 300 இற்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

படையினரின் இழப்புக்கள் தொடர்பாக ஒவ்வொரு மோதல்களின் போதும் விடுதலைப்புலிகள் தெரிவித்து வரும் தகவல்களும், சுயாதீன ஊடகங்கள் வெளியிடும் தகவல்களும் அரசின் தகவல்களை விட அதிகமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய படை நடவடிக்கையை பொறுத்தவரையில் ஐந்துக்கு மேற்பட்ட களமுனைகளைத் திறந்துள்ள அரசு, புதிதாக படையணிகளை உருவாக்கி படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றது. எனினும் படையினரின் இந்த நடவடிக்கைக்கான எதிர்ச்சமரில் மட்டுமே விடுதலைப்புலிகள் ஈடுபட்டு வருவதாக படைத்தரப்பு தகவல்களே தெரிவித்தும் வருகின்றன.

வலிந்த தாக்குதல்களை தவிர்த்து, முன்நகரும் படையினருக்கு எதிராக பொறி வெடிகள், ஜொனி மிதி வெடிகள், எறிகணைகள், கிளைமோர், சினைப்பர் தாக்குதல்கள் பேன்றவற்றை மேற்கொண்டுவரும் விடுதலைப்புலிகள் இடைமறிப்பு தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

புலிகளின் படைத்துறை உத்திகள் இரு நோக்கங்களைக் கொண்டவை. படையினரின் வலிந்த தாக்குதல்களில் இருந்து தமது போராளிகளையும், படை வளங்களையும் தக்கவைப்பது ஒரு உத்தி,

முன்னகரும் படையினரின் வலிமையான படையணிகளை அவர்களுக்கு சாதகமற்ற களமுனைகளில் வைத்து சிதைத்துவிடுவது மறு உத்தி.


இந்த போர் முனைகளில் படை பலத்தை தக்கவைப்பதற்கு படைத்தரப்பு பல வழிகளில் முயன்று வருகின்றது. அதற்காக படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதுடன், படையில் இருந்து தப்பி ஓடியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கும் அரசு பல தடவைகள் முயன்றும் வந்துள்ளது.

புதிதாக பல படையணிகளையும், இராணுவ பிரிவுகளையும் உருவாக்கி இராணுவத்தின் மனநிலையை மேம்படுத்தவும் அரசு முயன்று வருகின்றது.

கடந்த வாரமும் இராணுவத்தின் குடாஓயா இராணுவ பயிற்சி கல்லூரியில் இருந்து கொமோண்டோ பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட 203 இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் மூலம் இராணுவம் தனது படையணிகளின் தரத்தை தக்கவைக்க முற்பட்டு வருகின்ற அதேநேரம் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக வன்னி களமுனைகளில் இழுபட்டுவரும் மோதல்களில் கணிசமான அளவில் படையினரை இழந்தும் வருகிறது.

- வேல்ஸிலிருந்து அருஷ்

Comments