குடாநாட்டு மக்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் விதிமுறைகள்

"ஏ 9' கண்டி வீதி ஊடான போக்குவரத்துப் பாதையை மூடி யாழ். குடாநாட்டு மக்களைத் திறந்த வெளிச் சிறையில் அடைத்துள்ளது அரசு என்பது வெளிப்படையான விடயம்.

அப்படிச் "சிறை' வைக்கப்பட்டிருக்கும் குடாநாட்டு மக்களுக்கு மேலும் மேலும் தொந்தரவு கொடுக்கும் கெடுபிடிகள் அநேகம்.

ஊரடங்குகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், சந்திக்குச் சந்தி தடை நிலைகள், சோதனைச் சாவடிகள், வாகனப் பதிவுகள் என்று சாதாரண வாழ்க்கை யையே வாழவிடாமல் இம்சிக்கும் கட்டுப்பாடுகள் அதிகம், அநேகம்.

அந்த வகையில் ஒன்றுதான் யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கு பயண அனுமதிப்பத்திரம் (பாஸ்) பெற வேண்டும் என்ற விதிமுறையும்
யாழ். குடாநாட்டு மக்களுக்குப் பெருங் கஷ்டத்தை யும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் இவ்விடயம் மக்களின் நடமாடும் சுதந்திரத்தையும், பிரதான அடிப்படை உரிமைகளையும் மீறும் கொடூரம் எனக் கண்டித்தும் அவற்றை விவரமாகச் சுட்டிக்காட்டியும் அவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

யாழ்.குடாநாட்டு மக்கள் இத்தகைய பயண அனுமதி பெறுவதற்காகப் படும் கஷ்டங்கள், துன்ப துயரங்கள், அவலங்கள் போன்றவற்றை அவர் அந்தக் கடிதத்தில் விலாவாரியாக விவரித்திருக்கின்றார்.

உல்லாசப் பயணம் போவதற்காகவோ, சுற்றுலா செல்வதற்காகவோ யாழ். குடாநாட்டு மக்கள் அங்கி ருந்து வெளியேறுவதில்லை. மரண வீடுகள், அவசர மருத் துவ சிகிச்சைகள், வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர் களை வரவேற்று அழைத்து வருவது, அவர்களைச் சந்திப்பது, தலைநகரில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவது போன்ற கட்டாய அன்றாட பணிகளின் நிமித்தமே யாழ்.

குடாநாட்டிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்கு யாழ். மக்கள் இத்தகைய பயணத்தை முன்னெடுக்கின்றார்கள். அப்படி அவர்கள் பயணம் செய் வதற்குத்தான் இத்தகைய கெடுபிடி.

அதுவும் அரசு தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம் என்று கூறும் யாழ். குடாநாட்டிலிருந்து
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்புக்கோ, திரு கோணமலைக்கோ அரசின் அனுமதியுடனும் அரசின் ஏற்பாட்டிலும் நடக்கும் கப்பல் மற்றும் விமான சேவை களில்தான் அவர்கள் பயணிக்கின்றார்கள்.

அத்தகைய பயணத்துக்குக் கிராமசேவையாளர் முதல் கொண்டு உதவி அரச அதிபர், பிரதேச இராணுவ அதி காரி, இராணுவ மேலதிகாரி என்று பலரிடம் அலைந்து, காத்துத் தவம் கிடந்து, அனுமதி பெறவேண்டிய கட்டாயம் குடாநாட்டு மக்கள் மேல் விதிக்கப் பட்டி ருக்கின்றது. இது குடாநாட்டில் திறந்த வெளிச்சிறைக் கைதிகளாக வாழும் தமிழர்களுக்கு மேலும் இம்சையையும் தொல்லையையும் ஏற்படுத்தும் விநோதக் கெடுபிடியாகும் என்பதை மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தலைநகர் கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கைது செய்யப்படுவது மற்றும் தலைநகரிலிருந்து பலவந்தமாக கட்டாயப்ப டுத்தி வெளியேற்றப்படுவது ஆகியவை தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு சம்பந்தமான தீர்ப்பில்

இலங்கையின் உயர்நீதிமன்றம் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டிக் காட்டமான உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றது.

வடக்கு, கிழக்கிலிருந்து தலைநகர் கொழும்புக்குத் தமது பணிக்காக வருபவர்களுக்கு அந்தப் பயணங் களுக்கு எந்தத் தடையும், கெடுபிடியும், கட்டுப்பாடும் விதிக்கப்படக்கூடாது என்பதுதான் அந்த உத்தரவு.


யாழ். குடாநாட்டிலிருந்து தலைநகர் கொழும்புக்கும் பிற இடங்களுக்கும் பயணமாவதற்கு விசேட பயண அனுமதி பெறவேண்டும் என்று இழுத்தடித்து, காலவிரயம் செய்து, கட்டுப்பாடுகளை விதித்து யாழ். குடா நாட்டு மக்களைத் தொல்லைப்படுத்துவது உயர்நீதி மன்றத்தின் மேற்படி உத்தரவை மீறும் செயற்பாடாக அர்த்தப்படுத்தப்படக்கூடியதாகும்.

நாட்டின் பிரஜை ஒருவர் நாட்டுக்குள் தாம் விரும்பிய எந்த இடத்துக்கும் சென்று வருவதற்கும் எந்த இடத்திலும் வசிப்பதற்கும் உரித்தும், சுதந்திரமும் உடையவர் என அரசமைப்புத் தெளிவாகக் கூறுகின்றது. நாட்டின் உயர் சட்டமான அரசமைப்பினால் தெளிவா கவும், திடமாகவும் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளில் நடமாட்டத்துக்கான சுதந்திரமும் பிரதானமானதாகும். இலங்கை அரசமைப்பின் 14 ஆவது பிரிவு இதனை எடுத்துக் கூறுகின்றது.

குடாநாட்டு மக்கள் குடாநாட்டுக்கு வெளியில் இலங்கையின் பிற பாகங்களுக்கு பயணம் செய்வதற்கு இவ்வாறு படைத்தரப்பின் முன் அனுமதியைப் பெற்றாக வேண்டும் என வற்புறுத்துவது மேற்படி அரசமைப்பு உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமையை அப்பட் டமாக மீறும் செயற்பாடாகும்.

இவ்விடயத்தில் சட்டமும், நீதியும், ஒழுங்கும், அடிப் படை உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ள யாழ். குடா நாட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்குமா?

அரசு இது விடயத்தில் அக்கறை காட்டுமா என்று குடாநாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

உதயன்

Comments