வீரர்கள் மதிக்கும் வீரன்

முதற்பயணம்
அது 1984 ஆம் ஆண்டு. செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது.

அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர்.

விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர்.

லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும்.

செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும்.

தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடித்து விடுதலை வீரர்களாக வெளியேறுவர்.

நம்பிக்கையோடு தொடங்கிய பயணம்;; இறுதிவரை நல்லபடியாக முடிய வேண்டும்.
உழவுப் பொறியொன்றில் எல்லோரும் ஏறினர்; மகிழ்ச்சியோடு அந்தச் செம்மண் வீதிகளைக் கடந்து விரைந்து கொண்டிருந்தனர்; தமது விடுதலைக்கான பயணத்தில்.

செம்மலையைத் தாண்டி ஒதியமலைக்குக் கிட்டவாக் உழவுப்பொறி விரைந்து கொண்டிருக்க அந்த விடிகாலையை பயங்கரமாக்கி; நடந்தேறியது அந்தத் துயரம்.

பற்றைக்காடுகளுக்குள் மறைந்து கிடந்த சிங்களப் பேய்கள்;; தாக்கத் தொடங்கினர். எதிர்பாராத ஒரு பதுங்கித் தாக்குதல்.

சுதாகரிக்கவோ.... நிதானிக்கவோ முடியாத அளவுக்கு; கடுமையான தாக்குதல்.
பெரும் எதிர்பார்க்கையோடு பயணித்த் அந்தப் புதிய போராளிகளை; எதிரி ஒவ்வொருவராகச் சரித்து வீழ்த்தினான்.

விடுதலைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியிலேயே சந்தித்த பெரும் இடர்; அந்தத் தாக்குதலில் தப்பிப்பிழைப்பதென்பதே பெரும் கெட்டித்தனமான் அதிஸ்டவசமான செயல்.

வீழ்ந்தவர்கள் பிணங்களாகச் சரிய உயிரோடு அதிலிருந்து தப்பியவர்கள்; இரண்டே இரண்டு பேர்தான்.

அந்த இரண்டு பேரில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச்.
பயிற்சிக்காக வண்டியேற வேண்டியவர்; மருத்துவச் சிகிச்சைக்காக வண்டியேற வேண்டியதாயிற்று.

தமிழ்நாட்டில்; காயத்தைக் குணமாக்கி அங்கேயே ஒன்பதாவது பயிற்சி முகாமில்; பயிற்சி முடித்து வெளியேறினார் தளபதி பால்ராச்.

அந்தத் தாக்குதலில் தளபதி பால்ராச்சைப் போராளியாக இணைத்த லெப்.காண்டீபன் வீரச்சாவடைந்து விட அதுவே அவரின் முதல் துயராகவும்; முதற்களமாகவும் அமைந்தது.

மரணவலயம்

மேஜர் பசீலன்.
வன்னியின் சண்டைக்காரர்களில்;; முதன்மையானவர்களில் ஒருவர்.
பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை.
எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.

இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்த லையில் குட்டிவிடுவதில்; வல்லவன்.

வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில்; புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள்; நீந்தி விளையாடினார்கள்.

மேஜர் பசீலன் அண்ணனின் அணியில்; தளபதி பால்ராச் ஒரு போராளியாக இருந்த அக்காலம்.
முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு; திட்டமிடப்பட்டது.

இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்குபடுத்தப்பட்டது.
மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி; அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.

எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு; போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.
போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர்;; திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.

எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும்; அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில்; போராளிகள் நிலையெடுக்க வேண்டும்;. ஒரு திகிலூட்டும் திட்டத்தை; மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.

கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை.

ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.

கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள்;; கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி; நிலையெடுப்பர்; அந்தப் பகுதியை; தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.

எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது.
கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.

துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு.
அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும்;- அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும்;; இராணுவ ஆற்றலும்; வேண்டும்.

யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்; அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி பால்ராச்.


தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி; பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை; தளபதி பால்ராச் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.

சூட்சமம்

இளம் போராளிகளுக்கான் பயிற்சிக் கல்லூரி அது.
அங்கே பல்வேறு நிலைப்பட்ட போராளிகளும் இருந்தனர்.

களம் என்பது சாதாரணமானதல்ல மரணத்தோடு விளையாடி மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக் வெற்றியைச் சுவீகரிக்க வேண்டிய வீரத்திடல். அந்த வீரத்திடலில்; எதிரியோடு விளையாடி அனுபவம் பெற்ற எமது பல தளபதிகள்; நிறைந்த அனுபவங்களையும், போர்ப்பட்டறிவுகளையும் கொண்டிருந்தனர்.

இவ்வாறு பலமுறை வெற்றியோடு விளையாடிய தளபதிகளுள் ஒருவர் தளபதி பால்ராச் தன்னுடைய போர்க்கள அனுபவங்களை இந்த இளம் வீரர்களுக்கு புகட்டினார். அவர்கள் முன்னிலையில் பல விடயங்கள் குறித்தும் பேசினார்.
எதிரிகளின் நோக்கம் - போர்க்களத்தின் எதிர்பாரா தருணங்கள் - சண்டையில் எதிரிகளை வீழ்த்தும் வியூகம் என எல்லாவற்றையும் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தார்.


தான் களத்தில் கற்றவற்றையும் - சந்தித்தவற்றையும் பகிர்ந்து கொண்டார்.
அங்கிருந்த இளம் வீரர்களுக்கு இந்த வீரனைப் பார்க்கவும் - அவர் சொல்வதைக் கேட்கவும் வியப்பாக இருந்தது அதிக விருப்பமாகவும் இருந்தது.

தளபதி பால்ராச்; அந்த இளம் போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்து முடிய அவர்கள் தமக்கிருந்த சந்தேகங்களை - விருப்பங்களை தளபதியிடமிருந்து அறிந்துகொள்ள விரும்பினர்.
அப்போது ஒரு இளம் வீரன்;; தளபதி பால்ராச்சிடம் கேட்டான்; உங்களுக்குச் சண்டையில் பயம் வருவதில்லையா?

போர் வீரர்களுக்கு இருக்கக்கூடாத அம்சம்; பயத்தை நீக்கி வீரத்தைப் பெற அவர்கள் கேட்டுணர வேண்டிய ஆரம்பப் பாடம்;; அதை மாவீரன் பால்ராச்சிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த இளம்வீரன் விரும்பினான்.

தளபதி பால்ராச் அந்த இளம் வீரனை நோக்கி கூறினார்.
'எனக்குப் பயம் வருவதில்லை... அது போல உங்களுக்கும் பயம் வரக்கூடாது"
அப்போது பயத்தை வென்று துணிவைப் பெறும் மந்திரத்தின் சூட்சுமத்தை; அவிழ்க்கத்தொடங்கினார் தளபதி பால்ராச்.

நீங்கள் முதலில் எந்தவேளையிலும்;; எந்த ஆபத்தையும்; எதிர்கொள்ளக்கூடியவாறு முழுத் தயார்நிலையில் இருக்கப் பழக வேண்டும்.

நான் காடாக இருந்தாலும் சரி... பெரும் வெளியாக இருந்தாலும் சரி... எந்தக் களச் சூழலில் இருக்கிறேனோ அந்தக் களச்சூழலில் எதிரி திடீரென எதிர்ப்பட்டால்; அவனை எப்படி எதிர்கொள்ளலாம் எனச் சிந்திப்பேன்.

சிந்திப்பதோடு மட்டும் நின்று விடாது அத்தகையதொரு எதிர்பாராத தாக்குதலை தடுக்கக்கூடியவாறு எனது மனதிற்குள் ஒரு கற்பனையான தாக்குதல் திட்டம் ஒன்றை ஒத்திகை செய்து... பார்ப்பேன். என்னை நான் எந்த நெருக்கடி நிலைக்கும் ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருப்பேன்...

அதனால் எதிரி எப்படி வந்தாலும்;.. பயமின்றி; பதட்டமின்றி எந்த என்னால் சூழலிலும் சிறப்பாகச் செயற்பட முடியும்.

இதைப் போன்று நீங்களும் செய்யுங்கள் என்றார்; இளம் வீரர்களை நோக்கி;
அந்தப் பயமறியாத் தளபதி.

பெருமை

சிங்களப்படைகள் தமது முழுப்பலத்தையும்... வளத்தையும் ஒன்று திரட்டி யாழ்ப்பாணம் மீது படையெடுக்க தமிழர் படையை வன்னியை நோக்கி பின்னகர்த்தினார்; தலைவர்.
யாழ்ப்பாணத்தைப் புலிகள் இழந்துபோனதால்;; போராடும் திறனை; அவர்கள் இழந்து போனார்களென எக்காளமிட்டது சிங்களம்.

யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வன்னி மீது போர் தொடுக்க தன்னைத் தயார்ப்படுத்தியது சிங்களம்.

அமைதியாய் - ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி; உள்ளே குமுறும் எரிமலை போல் தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்; தலைவர்.

வெற்றி மமதையெடுத்து புலிகள் அடியோடு அழிந்தார்கள் என்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தார் தலைவர்.

1996 யூலை 18

நந்திக் கடலோரம் அமைந்திருந்த முல்லைத்தளத்தை வீழ்த்த தலைவர் முடிவெடுத்தார்;
தளத்தை அழிக்கும் முழுப் பொறுப்பையும்; தளபதி பால்ராச்சிடம் ஒப்படைத்தார்.
புலிகளின் அசுர அடி தளம் ஆட்டம் கண்டு வீழ்ந்துபோனது.

ஆயிரத்து இருநூறிற்கும் மேற்பட்ட சிங்களப் படைகளை அழித்து தமிழர் படை எதிரியிடமிருந்து அந்த தளத்தையும் அங்கிருந்த ஆட்லறிகளையும் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றியது.

போராட்டச் சக்கரம் புதையுண்டு போனதாய் புலம்பியவர்களெல்லாம்;; வாயடைத்துப் போனார்கள்.

வெற்றிப் பெருமிதத்தோடு; தலைவரின் தளம் நோக்கி விரைந்தார்; தளபதி பால்ராச்.
தலைவர் நினைத்ததை நினைத்தபடியே களத்தில் செய்துவிட்டு; தளபதி பால்ராச் வர தலைவர் மகிழ்ச்சியுடன்; தளபதியுடன் பால்ராச்சின் ஒரு கரத்தைப் பற்றிப் பாராட்டினார்.

2000 மார்ச் 26.

மூன்றாம் கட்ட ஈழப்போரின் போக்குத் திசையை எதிரியின் பிடியிலிருந்து புலிகளின் பிடிக்குள் கொண்டுவந்து கொண்டிருந்தார்; தலைவர்.

இடிமுழக்கம்.... சூரியகதிர்.... சத்ஜெய.... எடிபல... ஜெயசிக்குறு என அடுத்தடுத்துப் படையெடுத்து புலிகளின் கதை முடிக்க முயன்றவர்களின்; கதை முடிக்கும்; ஓயாத அலைகள் படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார் தலைவர்.

வன்னியின் தென்முனை நோக்கிப்படை நடத்திய தலைவர்; சடாரென திரும்பிய புயல் போல் வன்னியின் வட திசையில் போர்ப்புயலை; வீசச் செய்தார்.
ஆனையிறவைச் சூழவிருந்த படை முகாம்கள் ஒவ்வொன்றாய் வீழகளம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

ஓயாது வீசிக் கொண்டிருந்தவர்கள் ஓயாத அலை படை நடவடிக்கையின் மகுடமாய்;; நீண்ட காலமாக கைகளுக்கெட்டாமல்; நழுவி நிமிர்ந்து நின்ற ஆனையிறவுப் பெருந்;தளத்தை அடியோடு சாய்க்கத் தலைவர் வியூகமிட்டார்.
திட்டம் புலிகளுக்கு மட்டுமேயுரிய தனித்துவமான திட்டம்.
அகன்று விரிந்து கிடக்கும் பகைவனின் முற்றத்தில்; புலிகள் கூடாரமடித்து எதிரிகளை வேட்டையாட வேண்டும்.


சிங்க வேட்டைக்குத் தலைவர் தேர்ந்தெடுத்த இடம்;; இத்தாவில்.
அதை அரங்கேற்ற அவர் தேர்ந்தெடுத்த தளபதி; பால்ராச்;.
முப்பத்து நான்கு நாட்கள்; இத்தாவில் மட்டுமல்ல தளபதி பால்ராச்சும்... போராளிகளும்; நெருப்பில் குளித்து நிமிர்ந்தனர்.

முடிவு இனிமேல் எங்களால் முடியாது என்ற பகைவன்;; ஆனையிறவிலிருந்த தமது சகாக்களையும்;; ஆனையிறவை நோக்கிப் பலாலியிலிருந்து அனுப்பிய தனது படைகளையும் பின்னிழுக்கச்;; சிங்களச் சிங்கங்கள் குந்தியிருந்த் அந்தப் பெருங்கோட்டை உக்கி உப்பு வெளிக்குள்; உதிர்ந்து போனது.

அதன் ஆணிவேரை ஆட்டங்காணச் செய்த அந்த முப்பத்து நான்கு நாள் இத்தாவில் சமரை பால்ராச் வென்று ஏ-9 சாலையால் தலைவரின் தளம் விரைய தலைவர் மீண்டும் கைகொடுத்தார்; அந்தத் தளபதியைப் பாராட்ட ஆனால், ஒரு கையை அல்ல இரு கைகளையும் சேர்த்து.

பகைவன் கூட பாராட்டும் வகையில்; படை நடாத்திய அந்தப் பெருந்தளபதி... எத்தனையோ சண்டைகளை.... சமர்களை.... வென்ற வீரன்.

எதிரிகளோடு தனித்துச் சண்டை செய்து.... குழுவாகச் சண்டை செய்து... பெரும் படையாகச் சண்டை செய்து... அந்தப் பெரும் படையையே வழிநடாத்தும் பெருந்தளபதியாய் உயர்ந்து எங்கள் புருவங்களை உயரச் செய்த அந்த உன்னத தளபதி; முடியாது என்ற களத்தில்கூட தன்னால் முடியும் எனச் சாதித்துக் காட்டிய அந்தத் தளபதி.

பெருமையோடு தான் பெற்ற இந்த இரண்டு பெரும் பாராட்டுக்களையும் மனமிளகி மகிழ்ச்சியோடு தோழர்களிடம் நினைவு கூறுவராம்.

சமயோசிதம்


தளபதி பால்ராச் தலைமையில் குடாரப்பில் தரையிறங்கிய புலி வீரர்களும் வீராங்கனைகளும்; எதிரியின் முற்றமான இத்தாவிலில் ~பெட்டிகட்டி சடு...குடு... ஆடினார்கள்.

திகைத்துப்போன பகைவன்; இருந்தவர்களையும் - கிடந்தவைகளையும் வாரிச்சுருட்டிக் கொண்டு; புலிகளோடு மூர்க்கமாக மோதத் தொடங்கினான்.
தாக்குதலின் கடுமை இத்தாவில் சமர் சரித்திரம் மறவாத் சமராக மாறியது.

பல்லாயிரக்கணக்கான எதிரிகளுக்கு எதிராக சுமார் ஆயிரத்து இருநூறு போராளிகள் மட்டுமே எதிர்ச் சமராடினர்.

பகைவனின் இரும்புக்கோட்டையைச் சரிக்க தலைவரின் எண்ணத்தில் உதிர்த்த அற்புதமான போரியல் திட்டம்; அதைத் தளத்தில் அரங்கேற்றும் நாயகன்; எங்கள் பிரிகேடியர் பால்ராச்; தலைவரின் நம்பிக்கையான தெரிவு எப்போதும் தலைவர் எதிரிகளை கலங்கடிக்க எய்யும்; சக்திமிக்;க அம்பு.

உள்ளே பால்ராச் நிக்குதாம்; அறிந்து கொண்ட எதிரி; எரிச்சலோடும் மூர்க்கத்தோடும்; மோதினான்.

எப்படியாவது... எங்காவது ஒரு மூலையில் சிறு உடைப்பை ஏற்படுத்த முடியாதா என எதிரி திணறினான்.

படையணிகளை மாற்றி... படையதிகாரிகளை மாற்றி... மூர்க்கத்தோடு முட்டிமோதிய போதும்; அவனால்; முன்னேற முடியாமற் போயிற்று.

உள்ளே மோதிக் கொண்டிருக்கும் போராளிகள்; குறைந்த எண்ணிக்கையாலானவர்கள்;; அவர்கள் வசமிருந்த படைக்கலங்களும்; குறைந்த எண்ணிக்கையிலானவை.

தாக்குதல் களம்; எதிரியின் முற்றம். போராளிகள் நினைத்தவுடன்; எந்தப் பற்றாக்குறைகளையும் தேவைகளையும்... நிவர்த்தி செய்துவிட முடியாது.

அதற்கு எதிரி; களத்தில் வாய்ப்பளிக்கப் போவதுமில்லை.
இப்படித்தான்; களத்தில் எதிரி மோதிக்களைத்த நிலையில்; ஒருநாள் நேரடி மோதுகையைத் தவிர்த்து அகோரமான எறிகணைத் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தான்.

அந்த முப்பத்துநான்கு நாள் சமரின் ஒருநாள்; போராளிகள் நிலைகொண்டிருந்த அந்தக் களமுனை முழுவதையும்; எறிகணைகள் துடைத்தழித்துக் கொண்டிருந்தன.

அப்போது எதிரி ஏவித்தொலைத்த அந்தப் பல்லாயிரக்கணக்கான எறிகனைகளில் ஒன்றோ சிலவோ அங்கே தாக்குதலுக்காகக் களஞ்சியப்படுத்தியிருந்த போராளிகளின் ஆயுதக்களஞ்சியம் மீது வீழ்ந்து வெடிக்கத் தொடங்கியது திருவிழா!

உள்ளேயிருந்த் அத்தனை வெடிபொருட்களும்;; கடாம்... புடாம்... டமால்... எனப் பெரும் வெடியோசையோடு; தொடர் குண்டோசையாக் வெடித்துச் சிதறியது.

உள்ளே என்ன நடக்கிறது என்பது எவருக்குமே புரியவில்லை. எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிரியும் கூடக் குழம்பிப் போனான்.

குண்டுமழை ஓய்ந்தது போல் அந்தக் களமுனை சற்று அமைதியுற அங்;கு நிலைமையின் விபரீதம் கண்முன்னே விரிந்து கிடந்தது.

உள்ளே இருப்பவர்களின் இருப்பு இந்த வெடிபொருட்களின்; இருப்பிலும் தான் இருக்கிறது.
அவை எதிரிகளை அழிக்காமலே அழிந்து போகுமானால் நிலைமையைக் கற்பனை செய்யவே கடினமாக இருக்கும். ஆனால் அத்தகையதொரு நிலைமைதான் அந்தக் களத்தில்; தளபதி பால்ராச்சின் முன் ஏற்பட்டுவிட்டது.

எத்தகைய படைகளையும்... எந்த உறுதி மிக்கத் தளபதிகளையும்... படையதிகாரிகளையும்; குழம்பச் செய்துவிடக்கூடிய அழிவு.

களமுனையில் நின்றவர்கள்; ஏதோ சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து பதட்டத்தோடு தொலைத் தொடர்புக் கருவியில்; தளபதி பால்ராச்சை அழைத்தனர்.
லீமா... லீமா...
என்ன மாதிரி...?
ஏதும் சிக்கலோ...?
அறிந்து கொள்ளும் அவசரம்; எல்லோருக்கும்;; நிதானமாக் எந்தக் குழப்பமுமற்று அழைத்த எல்லாக் குரல்களுக்கும் லீமாவின் பதில் வந்தது தெளிவாக.

அது ஒண்டுமில்லை நாளைக்கு நாங்கள் செய்யப்போகும் 'ஒழுங்குக்கு" இண்டைக்கு ஒத்திகை நடக்குது.
என தொலைத் தொடர்வுக்கருவியில் ஒலித்தது. உறுதிகுலையாத ஒரு தளபதியின்; சமயோசிதக் குரலாக.

சுனாமி..!

2004 ஆம் ஆண்டு காலப்பகுதி......
தளபதி பால்ராச் அப்போது தென்தமிழீழத்தின்; வாகரையில் நின்றார்.
வடதமிழீழத்தின்; அனேகமான போர்க்களங்களில் நடமாடிய அந்தத் தளபதி; இப்போது தென்தமிழீழத்தில்...

அது ஒரு அமைதிக்காலம்; போர் ஒய்ந்திருக்க அந்தத் தளபதியும்; ஓய்வாக இருந்தான்.
அழகான கடற்கரையோரம்... அழகூட்டும் ஊர்மனை... கல...கலவெனச் சிரிக்கும் ஏதுமறியாச் சனங்களின் வீடுகள் என எல்லா இடமும்; அந்தத் தளபதி; பயணித்தான்.

வாகரையின் கடல்மணல் தொடும்; அந்தக் கடற்கரையோரம்;; தென்னைமரக் கூடலுக்குள்;; தளபதி பால்ராச்சின் பாசறை இருந்தது.
2006 டிசம்பர் 26 விடிகாலை.
சத்தம் சந்தடி ஏதுமின்றி; இயற்கை மகள் சீறிச்சினக்க கரையோர மக்கள்; தண்ணீருக்குள்;; கண்ணீரோடு தவித்தனர்.
தென்னாசியாவின் கரையோரம் எங்கும்;; மனித உயிர்கள்; மண்மேடாய் குவிந்தன.
எல்லோரும் அழுதார்கள்;;; ஏதேனும் ஒரு அசுமாத்தம் தெரிந்திருந்தால் கூட ஓடிப் பிழைத்திருப்போமே என குமுறிக் குழறினர்.

இயற்கை ஏன் எங்களை எச்சரிக்கவில்லை; கடலைச் சபித்து மண்ணள்ளித் தூற்றினர்.
சின்ன எச்சரிக்கை எங்களுக்காக் எங்கள் மீது பரிவுகொண்டு; எவரேனும் எங்களை எச்சரித்திருக் கூடாதா?; ஆதங்கத்தால் ஏங்கினர்.

இயற்கையின் விபரீதத்தை; உணரமுடியாமற் போனதா அல்லது இயற்கையின் எச்சரிக்கையை உணரத் தவறினோமா?; எவருக்கும் விடை தெரியாத அந்த நாளில்; குமுறி எழுந்த அந்தச் சுனாமி அலை கடலைவிட்டுத் தரைக்குத் தாவியபோது கரையோர மக்களுக்கு விபரீதத்தின் விளைவு புரியவில்லைத்தான்.

நின்று... நிதானித்து... சுதாகரிக்க எந்த அவகாசமும்; எவருக்கும் இருக்கவில்லைத்தான்.
வாகரையின் கரையோரத்தை நோக்கி; மலை போல சீறிவந்த கடலலை சூழ்ந்துகொள்ள அங்கிருந்த தளபதி பால்ராச்சின் பாசறையையும்;; கடல் நீர் விழுங்கத் தொடங்கியது.

இந்தக் கடல்நீர் வெளியேற்றம்;;; வழமைக்கு மாறானது ஆபத்தானது புரிந்து கொண்ட தளபதி பால்ராச்; இயற்கை விளைவித்த அந்த ஆபத்திற்கு மத்தியிலும்; ஒரு களத்தின் நடுவே நின்று செயற்படும் வீரனைப் போல் துரிதமாகத் துணிவோடு செயற்பட்டார்.

கடல்நீர் காலளவு... கையளவு தாண்டி கழுத்தளவு வந்துவிட அந்த முகாமிலிருந்த ஆயுதங்களையும் வெடிபொருட்களையும்; நீரிழுத்துப் போகாமல்; இருக்க தளபதி பால்ராச்; பெரும் போராட்டத்தையே நடாத்த வேண்டியிருந்தது.

அங்கிருந்த கனரக மோட்டரொன்றைக்; கயிற்றில் இணைத்து தென்னை மரத்தோடு கட்டியதோடு, ஏனைய போராளிகளை ஏவி; இயக்கத்தின் உடமைகளையும்; தமிழ்மக்களின் பாதுகாப்புக் கேடயங்களையும் காப்பதில்; முன்னின்றான் அந்தத் தளபதி.

சீறியெழுந்து; சுழன்றடித்துக் கொண்டிருந்த அந்த அலையின்; கொடூரப் பிடியின் நடுவே நின்றுகொண்டும்; தன்னுயிரைப் பாதுகாக்க வேண்டுமெனக் கொஞ்சமேனும் நினையாத அந்தத் தளபதி; ஆபத்திற்கு மத்தியிலும் அந்த முகாமிலிருந்த ஒரு துப்பாக்கியை கையிலெடுத்து வானை நோக்கி; ரவைக்கூட்டிலிருந்த அத்தனை துப்பாக்கி ரவைகளும் தீரும் வரை சுட்டுத் தீர்த்தாராம்.

துப்பாக்கி ரவையின் சத்தத்தையும்; அலையின் பேரிரைச்சலையும் கேட்டுச்; சனங்கள் ஏதோ ஆபத்து வருகிறதென எச்சரிக்கையடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடித்தப்பட்டும். சனங்களின் மீது அன்புகொண்ட எங்கள் தளபதி...

நம்பிக்கை..!

'சிங்கமுகச்" சிலந்தி போல் ஆனையிறவுப் படைத்தளம்; தனது பாதுகாப்பு வலைப் பின்னலை இறுக்கமாகப் பின்னி; குடாநாட்டின் தொண்டைக்குழிக்குள்; விரிந்துகிடந்தது.
ஆயிரக்கணக்கில் போராளிகளை விதையாக்கிய பின்னும்; அந்தப் படைத்தளம் வீழாது வீங்கிப் பெருத்திருந்தது.

ஆனையிறவுச் சிலந்தியின்; ஒவ்வொரு பாதுகாப்பு வலைப் பின்னலையும்;; அது அகல விரித்திருந்த அதன் ஒவ்வொரு கால்களையும் அறுத்தெறிந்து பிணமாக்கத் தலைவர் முடிவெடுத்தார்.

ஒரு பகற்பொழுது; பரந்தனில் தொடங்கிய சண்டை விறுவிறுவென உமையாள்புரம் வரை அகன்று நின்ற ஆனையிறவின் கால்களையும்; மறுபுறம் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, புல்லாவெளிவரை நீண்டு கிடந்த கால்களையும் அறுத்தெறிய ஆனையிறவு ஒடுங்கிப் போனது.
புலிகளுக்கேயுரிய திகிலூட்டும் ஒரு அதிரடி முயற்சியின் மூலம்; ஆனையிறவை அடியோடு வீழ்த்துவதே தலைவரின்; திட்டம்.
குடாரப்பில் தரையிறங்கி; இத்தாவிலில் உறுதியாக நின்று கொண்டு; ஆனையிறவின் கழுத்தை நெரிக்க வேண்டும்.

திட்டத்தை நிறைவேற்றும் அதிபதியாக் பால்ராச்சைத் தேர்ந்தெடுத்தார் தலைவர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்; மிகப் பெரும் தரையிறக்க நடவடிக்கை தரைப் புலிகளும்... கடற்புலிகளும் இணைந்து மேற்கொள்ளப் போகும்; கூட்டு நடவடிக்கை.

எதிரியின் பயணப் பாதையில் சூறாவளியென சுழன்றடிக்கப்போகும் போராளிகளுக்கு நம்பிக்கையூட்டித்; தலைவர் அனுப்பிவிட வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரையோரம் போராளிகள் ஒன்றுசேர்ந்தனர்
ஒரு பெரும் வரலாற்றுப் பயணம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்போகிறது.

வெயில் பளீரெனச்; சுட்டெரிக்கும் ஒரு பகற்பொழுது அந்தக் கடற்கரையோரம்; தரையிறக்கத் தளபதி பால்ராச்சும்; கடற்படைத் தளபதி சூசையும்; ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
வந்திருந்த உணவுப் பொதியொன்றைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்க தளபதி சூசை மெதுவாக உரையாடலை ஆரம்பித்தார்.

அக்காலம்; மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டம்;; இயக்கம் ஒரு பெரும் தொடர்ச்சியாக போருக்கு முகம் கொடுத்து வந்ததால்; வளப் பற்றாக்குறைகளைப் பெரியளவில் எதிர்கொண்டபடியிருந்தது.
போராயுதங்களுக்கும்;; போரைப் பின்னின்று இயக்கும் பல அடிப்படைப் பொருட்களுக்கும் கூட பெரும் தட்டுப்பாடு.

இந்த நிலையில் கடற்புலிகளைப் பொறுத்த வரையில் தரையிறங்கப் போகும் ஆயிரக்கணக்கான போராளிகளையும்;; அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதத் தளபாடத் தொகுதிகளையும்; உள்ளே தரையிறக்குவதென்பது இமாலய சாதனை.

அதற்காக கடற்புலிகளின் கையிருப்பிலிருந்த பெருந்தொகை எரிபொருட்களையும்; படகுத் தொகுதிகளையும்; அவர்கள் செலவளிக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில்; கடற்புலிகளின் வசம் குடாரப்பில் தரையிறக்கப்பட வேண்டிய தளபதி பால்ராச் தலைமையிலான ஆயிரத்து இருநூறு போராளிகளையும்; அவர்களின் ஆயுதத் தளபாடங்களையும்; ஏற்றிச்செல்லக்கூடிய அளவு எரிபொருள் மட்டுமே தளபதி சூசையின் கையிருப்பில் இருந்தது.

சண்டை ஏதாவது சிக்கலாகி; நிலைமை நெருக்கடிக்குள்ளாகுமிடத்து அவ்வளவு தொகை போராளிகளையும் ஆயுத தளபாடங்களையும்; மீளவும் தளம் திருப்ப வேண்டும். ஆனால் அதற்கு தேவையான எரிபொருள்; கையிருப்பில் இல்லை.

நிலைமையின் தன்மையை கடற்படைத் தளபதி; தளபதி பால்ராச்சிற்கு சங்கடத்தோடு உரைக்க ஏற்கெனவே நிலைமையை நன்கு அறிந்திருந்த அந்தத் தளபதி; தனது இதழ்களில் தவழ்ந்த மெல்லிய புன்னகையோடு கண்களில் நம்பிக்கைத் தெறிக்க தளபதி சூசையை நோக்கிக் கூறினாராம்.

'என்னை உள்ள இறக்கி விட்டாக்காணும்.... நான் தரையால வருவன்" என்று.

கைதி..!

1983 க்கும் 1984 க்கும்; இடைப்பட்ட காலம்.
வன்னியில் புலிகள் இயக்கம்; வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பால்ராச் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள்...

அதாவது போராட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் இணைத்துக்கொள்ளாத காலம்.
ஆதரவாளனாக.... பகுதி நேரப் போராளியாக அவர்; இயங்கிக் கொண்டிருந்தார்;.
ஒருநாள்.........

இயக்க வேலையாக் தண்ணீரூற்று.... முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு; மிதிவண்டியில்; முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்; இளைஞனாக இருந்த தளபதி பால்ராச்சை இடைமறித்தனர்.
அப்பாவி இளைஞனாக் காட்டிக்கொண்ட போதும்;; அவரைச் சிங்களப் படைகள் கைது செய்தனர்.

தளபதி பால்ராச் முல்லைத்தீவு முகாமில்; மூன்று நாட்கள்; சிறை வைக்கப்பட்டார்.
அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும்;; சிறிலங்காப்; படையினரும் பொறுப்பதிகாரிகளும்... அவரை மிரட்டியும்... வெருட்டியும்; பல்வேறு உபதேசங்களைச் செய்தனர்.

தளபதி பால்ராச்;சைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளன் என்றோ... அல்லது பகுதிநேரப் போராளியென்றேர் அடையாளம் காணாத சிங்களப்படைகள்;; சின்னப் பெடியள் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது என போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை; விதைக்க விளைந்தனர்.

தளபதி பால்ராச் எல்லாம் அறிந்தும்;; அறியாதது போல மௌனம் காக்க சிங்களப் படைகள் அவரை விடுவித்தது.
பின்னர், தளபதி பால்ராச்; போராளியாகி; தளபதியாகி; சிங்களப் படைகளுக்கு எதிராகத்; தொடர் போராட்டங்களையே நடாத்தினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக் தளபதி பால்ராச் எந்த இராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டாரோ அந்த இராணுவ முகாம் பின்னாளில் தளபதி பால்ராச் தலைமையில்; தாக்கியழிக்கப்பட்டு வரலாற்றில் பதிவாகியது.
ஒரு முன்னாள் கைதியின் எழுச்சி; ஒரு இராணுவ முகாமின்; அழிவாகிப் போனது.

போரியல் புத்தகம்..!

போராட்டம் வளர்ந்துவிட்டது. போர்க்கலையில் வல்ல புலிகளாக் போராளிகளும் வளர்ந்து விட்டார்கள்.
ஒரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த விடுதலைப் போராட்டம்;; ஆட்லறிகளையும்... டாங்கிகளையும் கொண்ட பெரும் படையாக உயர்ந்து நிற்கிறது.

காலமும்... சூழலும் மாற... மாற... போரும் அதன் தன்மைக்கேற்ப மாறிவிட்டது.
கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர்;; மரவுவழிப்படை நடத்தலை மேற்கொள்ளும்; அளவுக்கு வளர்ந்தாயிற்று.

காலத்திற்கு ஏற்ப போராளிகளும் மாறவேண்டும்;; அவர்களை மாற்றவேண்டும்.
வெறும்; சண்டைக்காரர்களாக மட்டுமல்ல அதிகாரிகளாக... தளபதிகளாக... சண்டைத்திறன் கொண்ட நிபுணர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.
தலைவர்; இந்த விடயத்தில் எப்போதும் அதிக கரிசனை எடுப்பார்;.
அவரே நேர்நின்று எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவார்.

நவீன கால போர் என்பது சாதாரணமானதல்ல ஆயுதங்களும் அதன் பயன்பாடுகளும் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம்; தந்திரங்களும்... உத்திகளும் செல்வாக்குச் செலுத்தும்.

ஆயுதப்பயன்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வசதி; உத்திகளையும்... தந்திரங்களையும்; அறிந்துகொள்ளக் கிடைப்பதில்லை.
அது வெறுமனே எழுத்தில் வடிக்கப்பட்ட நூல்களிலிருந்து மட்டும்; கற்றுத்தெரிந்து கொள்ள முடியாது.

ஒவ்வொரு போர் அனுபவமும்... தந்திரமும்... உத்தியும்;; அதனதன் பௌதீகச் சூழலுக்கும் புவியல் அமைப்புக்கும் ஏற்ப மாறுபடும்; தளபதிகளின் திறமைகளுக்கும் ஏற்ப வித்தியாசப்படும்.
இதற்கேற்ப போரியல் அறிவை வளர்த்தெடுத்து இளம்புலி வீரர்களுக்கு புகட்ட வேண்டும்.

தலைவர்;; இளம் வீரர்களுக்கான அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியொன்றை ஆரம்பித்திருந்தார்.
தகுதியானவர்களைக் கொண்டு; பல்துறை சார்ந்த போரியல் பாடங்களை அவர்களுக்கு ஊட்டினார்.

அங்கு உள்நாடு தொட்டு... வெளிநாடு வரையான போர்க்களங்களையும் போரியல் அனுபவங்களையும் கற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது.
ஒருநாள்; தலைவர்; பிரிகேடியர் பால்ராச்சை அழைத்தார்;.
அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியில் கற்கும்; போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால்; ஒரு நிபந்தனையோடு...

நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம்; நீ... பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் பெரிய பாடம் என்றார். அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக எங்கள் தளபதி பிரிகேடியர் பால்ராச்;
தலைவரின் பார்வையில்; மிளிர்ந்தார்.

திசைகாட்டி..!


இந்திய - புலிகள் போரின் உக்கிரம்; மணலாற்றுக் காட்டுக்குள் தீவிரம் பெற்றிருந்த காலம்.
தலைவரின் இருப்பிடத்தை அறிந்து கொண்டதில்;; இந்தியர்களுக்கு உற்சாகம்.
தமது சிறப்புப் படையணிகளை ஒன்றுதிரட்டி மணலாற்றுக் காட்டைச் சுற்றிவளைத்து தலைவரைக் கொன்றுவிடத் துடித்தனர்.

தலைவரை அழிக்கும் படை நடவடிக்கைக்கு அவர்கள் சூட்டிய பெயர்;; ~செக்;மேற்.
இந்தியர்கள் அந்தப் பெரும் நடவடிக்கையை; மணலாற்றுக் காட்டுக்குள் மேற்கொண்ட போதும்;; தலைவர் அங்கிருந்து பின்வாங்கவோ இடம்மாறவோ விரும்பவில்லை.
இந்திய - புலிகள் போரின் இறுதி முடிவை இந்த மணலாற்றுக் காட்டுக்குள்; வைத்து தீர்மானிக்க அவர் விரும்பினார்.

வேட்டையாட வந்தவர்கள்; அங்கே வேட்டையாடப்பட்டார்கள்.
அது ஏறத்தாழ கோலியாத்துகளுக்கும்; தாவீதுகளுக்கு மிடையிலான யுத்தம்.
இந்த யுத்தம் அரங்கேறிய இடமோ பெரும் வனாந்தரம்.

அக்காலம்; காடு முழுவதுமாக போராளிகளின் உள்ளங்கைகளுக்குள்; அகப்பட்டுவிடவில்லை. ஒருபுறம்; இந்தியர்களோடு போராடிக்கொண்டு; காட்டின் விசித்திரங்களையும் விடுபடாத முடிச்சுகளையும் அவர்கள் அவிழ்க்க வேண்டியிருந்தது.

காடு எந்தச் சலனமுமற்று இருளால் மூடிக்கிடந்தது.
எங்கோ கத்தித் தொலைக்கும் விசித்திரப் பறவைகள்;; எட்டுமுட்டாகச் சந்தித்தால் துள்ளிப் பறந்தோடும் காட்டு விலங்குகள்; எவருக்கும் வளைந்து கொடுக்காது இறுமாப்போடு நிமிர்ந்து நிற்கும் காட்டு மரங்கள்;; எனக் காடு காடாகவிருந்தது.

மனிதர்களுக்கு அந்நியப்பட்டு நிற்கும் இந்தக் காட்டுக்குள்தான்;; தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும்;; ஒரு வல்லரசிற்கெதிரான போர்; நடந்து கொண்டிருந்தது.
உள்ளே தலைவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட இந்தியர்கள்; பேராசையோடு காட்டைச் சூழ்ந்தார்கள்;; காட்டுக்குள் குவிந்தார்கள்.

பெரும் வல்லரசு ஒன்றின்; ஒருமுகப்படுத்தப்பட்ட படை அவர்களுக்கு எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் தலைவரின் தலைமையில் நின்ற போராளிகளுக்கு...?
போராளிகளைப் பொறுத்த வரையில்; காடு நண்பனாகவும் இருந்தது எதிரியாகவும் விளங்கியது. அது இயற்கையின் ஒரு விந்தையான படைப்பு.

ஆற்றல் உள்ளவர்களுக்கும்;; அனுபவம் கொண்டவர்களுக்கும் மட்டுமே வழிகாட்டும். அது எத்தனை ஆற்றல் படைத்தவர்களையும்; அனுபவம் கொண்டவர்களையும் கூட சிலவேளைகளில் சறுக்கி விழுத்தி விடும்.

காட்டு அனுபவம் இல்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும்;; காட்டுக்குள் நிறைந்து கிடக்கும் எதிரியிடமோ மாட்டிவிடும். அந்த வனத்துக்குள் அனாதையாய் அலையவிட்டு; வேடிக்கை பார்த்து நிற்கும்.

அனுபவத்தின் மனக்குறிப்பைக் கண்களுக்குள் விரித்து காடு முறித்து பாதையெடுத்தால் மாத்திரம் தான்; போராளிகளின் பயணங்கள் இலகுவாகும்.
மற்றும்படி பயணத்தை இலகுவாக்கப் போராளிகளிடம்; போதிய திசையறி கருவியும் கிடையாது வரைபடக் குறிப்பும் கிடையாது.
இத்தனைக்கும்; எதிரிகளின் சுற்றிவளைப்புக்குள்ளும் முற்றுகைக்குள்ளும்; தொடரவேண்டிய பயணங்கள்.

அந்த நேரங்களில்; திசையறிகருவி இல்லாமலேயே காடுமுறித்து மனக்குறிப்பால் போராளிகளை அழைத்துச் செல்லும்; காட்டனுபவம் உள்ளவர்கள் வேண்டும்.

ஆம்; மணலாற்றுக் காட்டுக்குள்; காட்டனுபவமும்-ஆற்றலும்-அறிவுமுள்ள பல திறமைசாலிகளை தலைவர் தன்வசம் வைத்திருந்தார்.
அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச்.
அக்காலம்; தளபதி பால்ராச் தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒரு திசையறிகருவி.

முற்றுகை..!

இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேறியிருந்தன இல்லை வெளியேற்றப்பட்டிருந்தன.
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சிங்களப் படைகள் திமிர் எடுத்து மண் பசியுடன்; தமிழர்களை வேட்டையாட வெடித்தது இரண்டாம் கட்ட ஈழப்போர்.
விளைவு சிங்களப் படைகளிற்கு எதிரான போர்; தீவிரம் பெறத் தொடங்கியது.

அந்தநேரம் கொக்காவில்... மாங்குளம்... முல்லைத்தீவு என பல இடங்களிலும்; சிங்களப் படைகள்; குந்தியிருந்தன.
இவ்வாறு வன்னியை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படை முகாம்கள்;; எரிச்சலூட்டிக் கொண்டிருந்த அதேநேரம்.
அவர்களுக்கெதிராக பதுங்கித் தாக்குதல்கள்... கண்ணிவெடித் தாக்குதல்கள்... காவலரண்கள் தகர்ப்பு... மினிமுகாம்கள் கைப்பற்றல் என போரின் பரிமாணம் மாறத்தொடங்கியிருந்தது.

ஈழப்போர் இரண்டாம் கட்டத்திற்குத் தாவியிருந்த அதேநேரம்;; இயக்கம் வளப்பற்றாக் குறைகள்... ஆளணிப் பிரச்சினைகளென இல்லாமைகளோடு மோதியபடி தான் முன்னேறியது.

ஆயினும்;; நம்பிக்கையை முதலீடாக்கி; கொஞ்ச நஞ்சமாக இருந்த ஆயுத இருப்பைத் துணையாகக்; கொண்டு; பல சிங்களப் படைத் தளங்களை புலிவீரர்கள்; ஒவ்வொன்றாக வீழ்த்தத் தொடங்கினர்.

முல்லைத்தீவில்... நீண்ட நெடுநாட்களாக ஒரு இராணுவ முகாமை நிறுவி; அந்த மக்களின் அன்றாடச் சீவியத்தில்;; மண்ணள்ளிக் கொட்டினர் சிங்களப் படைகள்.
எப்படியும் இந்த இராணுவ முகாமை தாக்கியழிக்க வேண்டும்.

இயக்கம் முடிவெடுத்து... வேவு எடுத்து... சின்ன ஒத்திகை பார்த்து... முன்னேறித் தாக்கத் தொடங்கியபோது இல்லாத அந்த வளப் பற்றாக்குறைகள் இயக்கத்திற்கு நெருக்கடியைக் கொடுத்தது.

முகாமைச் சுற்றிவளைத்து வீழும் என்ற நம்பிக்கையோடு போராளிகள் தாக்கிய போதும்;; அது கைநழுவிப் போனது.

முகாமில் குந்தியிருந்த சிங்களப் படைகள்;; தாம் பலமாக அமைத்து வைத்திருந்த காவலரண்களுக்குள்ளும்... காப்பகழிகளுக்குள்ளுமிருந்த��
� கடுமையாகத் தாக்கினர். தாராளமாக வெடிபொருட்களைப் பயன்படுத்தி; பலமாகத் தாக்கினர்.

போதாததற்கு முள்ளிவாய்க்கால் பக்கமாக் கடல் வழியாகப் படைகளைத் தரையிறக்கம் செய்ய நிலைமை கைமீறிப்போனது.

முகாம் மீதான தாக்குதலுக்கே பற்றாக்குறை என்கிற நிலையில்தான் வெடிபொருட்கள் இருந்தன. இந்த நிலையில்; தரையிறக்கப்பட்டிருக்கும் படைகளுக்கு எதிரான சண்டைக்குத் தேவையான வெடிபொருட்களுக்கு; எங்கே போவது?

இருந்த பலமும்; வந்த பலமும் ஒன்றுசேர திரண்ட பலத்தோடு; உக்கிரமாக மோதத் தொடங்கினான்;; எதிரி.

இந்தளவுக்கும்; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளின் பல அணிகள் தளத்தின் முற்றத்திற்குள்; கடுமையாக மோதிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில்; தரையிறக்கப்பட்ட சிங்களப் படைகள்;; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளைச் சுற்றிவளைத்துவிட்ட நிலையில்; அணிகளைப் பின்னிழுக்க வேண்டியதாயிற்று.
ஆனால்; முகாமின் மையப்பகுதியில் மேஜர் றொபேட் தலைமையிலான அணியொன்று தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது அந்த அணி தாக்குதலை நிறுத்தி வெளியேற முயல்கையில்; அவர்களை தனது இறுக்கமான முற்றுகைக்குள்; வளைத்துவிட்டான்
தமது முகாமைத் தாக்க வந்த புலியணியொன்றை சுற்றிவளைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன சிங்களப் படைகள்.

மீளமுடியாத நெருக்கடிக்குள்; அணி திணறியது. உள்ளே நிற்பவர்கள் வெளியில் வரவேண்டுமானால் வெளியிலுள்ளவர்களின் உதவி தேவை.
உள்ளே இருப்பவர்களால்; முற்றுகையை உடைக்க முடியாத நிலை.
அப்படியாயின் முற்றுகையை உடைக்க யாரால் முடியும்...?
தொலைத்தொடர்புக் கருவி; நம்பிக்கையோடு அழைத்தது.
லீமா... லீமா...
லீமா...லீமா... ரொபேட்.
அழைத்த ரொபேட்டின் குரலுக்கு தளபதி பால்ராச் குரல் கொடுத்தார்.
'அப்படியே சண்டை பிடிச்சுக் கொண்டிருங்கோ இப்ப வாறன்..."
சொன்னதோடு நிற்கவில்லை அந்தத் தளபதி. நெருப்பு மழையில் நீந்தி; முன்னேறி; நெருக்கடிக்குள்ளாகிய அணியோடு சேர்ந்தபோது உடைந்து நொருங்கியது
எதிரியின் முற்றுகை.

ஓய்வறியாத் தளபதி..!
பூநகரிப் படைத்தளம் மீதான தாக்குதல்.
புலிகள் இயக்கத்தின் அனைத்துப் படையணிகளும் ஒன்றிணைக்கப்பட்டு; கடும் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

போராளிகள்-தளபதிகள்-பொறுப்பாளர்கள் என எல்லோரும் ஒரு சேர உழைத்தனர்.
இரண்டாம் கட்ட ஈழப்போரில்; புலிகள் இயக்கம் மேற்கொள்ளும்; பாரிய படை நடவடிக்கை.
ஆகாய கடல்வெளி படை நடவடிக்கையின் பின்னர்; புலிகள் இயக்கத்தின் அனைத்து படையணிகளும்; பங்கு கொள்ளப்போகும் ஒரு நடவடிக்கை பெரியளவில் மேற்கொள்ளப்படும் ஒரு ஈரூடகத்தாக்குதல்.

தளபதி பால்ராச் உட்பட அனைத்து தளபதிகளும், போராளிகளும் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகளிலும்; ஒழுங்குபடுத்தல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்க முந்திவிட்ட எதிரி ~யாழ்தேவி படை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டான்.

ஆனையிறவிலிருந்து - கிளாலி நோக்கி எதிரியின் முன்னகர்வு யாழ்தேவி வேகமெடுக்க முதல் அதன் பயணப்பாதையிலேயே தடம்புரளச் முன்பு செய்ய வேண்டும்.
அதுவும் பூநகரி படைத்தளம் மீதான தாக்குதல் ஏற்பாடுகளுக்கு எந்தப் பழுதும் ஏற்படாத வகையில்; யாழ்தேவியை தடம்புரளச் செய்யவேண்டும்.
தலைவர் தளபதி பால்ராச் தலைமையில் படையணிகளை; யாழ்தேவி களத்திற்கு அனுப்பி வைத்தார்.

படையணிகள் களத்திற்கு விரைய ~யாழ்தேவி படை நடவடிக்கையை வழிநடத்திக் கொண்டிருந்த சிங்களத்தின் தளபதிகளுக்கு பிடித்தது ~அட்டமத்து சனியன்
தளபதி பால்ராச் அவர்களும்- தளபதி தீபன் அவர்களும் களச்சூழலுக்கு ஏற்ப ஒரு அதிரடி நடவடிக்கையை திட்டமிட்டனர்.

பரந்து கிடந்த அந்த மணற்பாங்கான பகுதியில்; மணலைக் கிளறிப் போராளிகளை உள்ளே புதைத்த வேகமாக முன்னேறி வரும் பகைவன் நெருங்கி வந்தவுடன்; மண்ணுக்குள்ளிருந்து கிளர்ந்தெழுந்து புயலெனத் தாக்க எதிரி ஆடிப்போனான்.

சண்டை வெகு கலாதியாக சூடுபிடிக்க எப்போதும் போல் கட்டளைப் பீடத்துள்ளிருந்து வழிநடத்தவேண்டிய தளபதி பால்ராச்; சண்டை தொடங்கிய வேகத்தோடு; போராளிகளோடு போராளிகளாக களத்தில் குதித்து விட டாங்கியிலிருந்து எதிரி ஏவிய ஒரு குண்டு வீழ்ந்து வெடித்ததில்; தளபதி பால்ராச் விழுப்புண்ணடைந்து மருத்துவமனையில் கிடக்க வேண்டியதாயிற்று.

எவ்வேளையிலும் களத்தில் சுழன்றாட வேண்டும் என்ற எண்ணம் தளபதி பால்ராச்சிற்கு நோய்ப்படுக்கையில் கிடப்பதென்பது மரண வேதனையாக இருந்தது. அதிலும் பூநகரி தளம் மீதான நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்; ஓய்வாகக் கிடப்பதென்பது கடினமாக இருந்தது.

களத்தின் நினைவுகளோடு; படுக்கையில் தளபதி பால்ராச் இருந்த ஒருநாள்
பூநகரி தளம் மீதான தவளை நடவடிக்கையை ஆரம்பித்தார் தலைவர்;. போராளிகள் கடலாலும் - தரையாலும் உள்நுளைந்து தளத்தை வீழ்த்த மோதிக் கொண்டிருந்தனர்.
சண்டையின் போது பல இடங்களில் தடைகள் உடைந்தும்- உடையாமலும் உக்கிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. நிலையில்; தொலைத் தொடர்புக்கருவியில் இடையிடையே தளபதி பால்ராச் அவர்களின் குரலும் வந்து... வந்து போனது.

வைத்தியசாலையில் படுக்கையில் கிடக்கும் தளபதி பால்ராச்; எங்ஙனம் தொலைத் தொடர்புக்கருவியில் உரையாட முடியும்; வைத்தியசாலையில் தொலைத்தொடர்புக் கருவி இல்லையே. கேள்விகள் குழப்பத்தைத் தந்தன.
தவளை நடவடிக்கையின் மையக்கட்டளைப் பீடத்தில்; நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த தலைவர்; உசாரானார்.

தளபதி பால்ராச் வைத்தியசாலையில் இரகசியமாக ஏற்படுத்திக்கொண்ட தொலைத்தொடர்புக் கருவியினூடாகவே உரையாடுகின்றார்; என்பதைப் புரிந்துகொண்டு; உடனடியாகவே ஒரு போராளியை அங்கு அனுப்பி; தாக்குதல் தொடர்பான களநிலைமையை உடனுக்குடன் தெரியப்படுத்த தான் ஏற்பாடு செய்யலாம் என்றும்; வைத்தியசாலையிலிருந்து கொண்டு தொடர்புக்கருவியில் உரையாடுவது பாதுகாப்பு இல்லையெனவும் கூறித்தான்; அந்த ஓய்வறியாத் தளபதியை ஓய்வெடுக்கச் செய்யவேண்டியிருந்தது.

-சிறீ. இந்திரகுமார்-
விடுதலைப் புலிகள் ஏடு (04.07.08)


Comments