உணவு எரிகிறது உயிர்கள் துடிக்கின்றன

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியானா பொலிஸ் 500 அமெரிக்கன் மோட்டர் ரேசில் ஒரு கறுப்பு இன்டி கார் வெற்றிபெற்றது.

670 குதிரை சக்தியுள்ள அந்தக்காரின் ஓட்டுநர் சொந்தக்காரர் டேரியோ ஃப்ரான்சிட்டி கூறிய ஒரு செய்தி பலரை வியப்பிலாழ்த்தியதுடன் அமெரிக்காவில் மக்காச் சோள எத்தனோல் தொழிலுக்குரிய தொடக்கமாகவும் அமைந்தது. அவர் காருக்கு டீசல், பெற்றோல் போட்டு ஓடவில்லை. ஜின் போன்ற மதுவுக்கு நிகராக நல்ல வெள்ளைக் கண்ணாடி போல் இருக்கும் மக்காச் சோள சாராயம் ஊற்றி அக்காரை ஓட்டினார்.

மக்காச்சோள சாராயத்தில் (எத்தனோலில்) டீசல் பெற்றோலில் உள்ளதை விட அதிக அளவு ஆக்டேன் உள்ளதால் உயிரி எரிசக்திக்கும் புதைபடிவ (Fossil) எரிசக்தியை விட ஆற்றல் அதிகம் என்ற உண்மையும் புலனாயிற்று.

அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களில் வாழும் மக்களுக்கு மக்காச் சோளம் மனித உணவு. ஏனைய பல இதர நாடுகளில் மக்காச் சோளம் கால்நடைத் தீவனம். மக்காச் சோள எத்தனோலின் ஆற்றல் காரணமாக இந்த உணவை எரித்து அதை எரிசக்தியாகப் பயன்படுத்துவதால் குறிப்பாக ஆபிரிக்காவில் பட்டினிச்சாவு தொடங்கிவிட்டது. மனித உயிர்களும் கால்நடை உயிர்களும் துடித்தாலும் கூட உணவையே எரிசக்தியாக மாற்றிக் காரோட்டும் அமெரிக்க சுகவாசிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை.

2005 இல் வெளிவந்த மின்னசோட்டாப் பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் கணக்கை வைத்து இன்று அமெரிக்காவில் மொத்த விளைச்சலில் 20 சதவீத மக்காச் சோள உணவு சாராயமாக மாற்றப்பட்டுப் புதை படிவ எரிசக்திக்குரிய மாற்றாகிவிடட்து.

2005 ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா 4 பில்லியன் கலன் உணவுச் சாராயம் உற்பத்தி செய்துள்ளது. இந்த 4 பில்லியன் கலன் மக்காச் சோள சாராயம் அமெரிக்காவின் மொத்த மக்காச் சோள உற்பத்தியில் 15 சதவீதம் . ஆனால், இந்த அளவு இருந்தும் இந்த உணவுச் சாராயம் மரபு பழி பெற்றோல், டீசல் நுகர்வை 2 சதவீதம் மட்டுமே குறைக்கிறதாம். அதேசமயம் மக்காச் சோள உணவுச் சாராயத்தினால் மரபுவழி புதை படிவ எரிசக்தியை விட 25 சதவீதம் கூடுதல் ஆற்றல் பெறமுடிகிறது.

அதற்கு ஏற்ப கார் எஞ்சின்களும் திருத்தி அமைக்கப்படுகின்றன. இப்படிச் செய்வதால் பசுமையக நச்சுப்புகை (கரியமிலவாயு) 12 சதவீதம் குறைகிறதாம். எனவே, சுற்றுச்சூழலை ஒரு காரணமாகக் காட்டி இப்படி நன்மையுள்ள ஒரு அம்சத்தை மட்டும் பலூனாக ஊதவைத்து அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ஆதரவுடன் எரிபொருளாகப் பயன்படுத்தும் மக்காச் சோள சாகுபடிக்கு மானியம் அள்ளிவிடப்படுகிறது.

இது இந்தியாவையும் சேர்த்துப் பல்வேறு வளர்முக நாடுகளின் உணவு உற்பத்தியைப் பல்வேறு விதமாகக் கட்டுப்படுத்துவதும் கண்கூடு. ஆபிரிக்கா மட்டுமல்லாமல் மக்காச் சோ ளம் சாகுபடி செய்யும் அனைத்து உலகநாடுகளும் , இந்தியாவும் அமெரிக்காவுக்கு மக்காச் சோளத்தை ஏற்றுமதி செய்கின்றன.

மக்காச் சோள உணவுச் சாராயம் தயாரிக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் மட்டுமே உண்டு. உலகளாவிய மக்காச் சோள கொள்முதல் திட்டத்தை அமெரிக்கா கடைப்பிடிப்பதால் தமிழ்நாட்டு விவசாயிகள் கூடப் பயன்பெறுகின்றனர். தமிழ்நாட்டு விவசாயம் எப்படியெல்லாம் தாறுமாறாகத் தடுமாறுகிறது என்பதை யார் அறிவாரோ?

இன்று தமிழ்நாட்டில் தண்ணீர் வளமுள்ள பகுதிகளில் மக்காச் சோள சாகுபடி மேலோங்கியுள்ளது. நெல்லை விடவும் கோதுமையை விடவும் மக்காச் சோள சாகுபடியே இன்று இலாபகரமாகியுள்ளது. இதன் ஏற்றுமதித் தேவை உயர்ந்துவிட்டது. இன்று தஞ்சை மாவட்டத்தில் நெல் வயல்கள் எல்லாம் மக்காச் சோள வயல்களாகி விட்டன. அமெரிக்காவிலும் பாதிப்புகள் உண்டு. அங்குள்ள விவசாயிகளும் மக்காச் சோள சாகுபடியால் கொழுத்த இலாபம் பெறுகின்றனர்.

குறிப்பாக நில முதலைகளாகவும் திகழும் கார்கில், ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட்லாண்ட் பெறும் ஆதாயங்களுக்கு அளவே இல்லை. மக்காச் சோள உணவுச் சாராயத் தொழிற்சாலைகளில் 70 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்துள்ள தொழில் அசுரர்களான வெர்ஜின், அட்லாண்டிக்கைச் சேர்ந்த ரிச்சர்டு பிரான்ஸன், சன்மைக்ரோ சிஸ்டத்தின் வினோத்கோஸ்லா இருவருமே அமெரிக்கா வழங்கவுள்ள மக்காச் சோள மானியங்களை உண்ணத் தயாராகிவிட்டனர். மக்காச் சோள சாராய (எத்தனோல்) ஆராய்ச்சிக்கு 200 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்காச் சோளத்தில் இரண்டு வகை உண்டு. மக்காச் சோளத்தை முதன்மை உணவாக (Staple Food) ஏற்றுள்ள நாடுகளில் வெள்ளை வகை மக்காச் சோளம் மனித உணவாகவும், மஞ்சள் வகை கால்நடை உணவாகவும் உண்ணப்படுகின்றன. இந்தியாவில் அந்த வேற்றுமை இல்லை.

மஞ்சள் மக்காச்சோள மாவை ரொட்டி செய்து உண்ணும் மரபு இங்குண்டு. அப்படி உண்போர் இந்தியாவில் மிகக் குறைவு. ஏனெனில் நமது முதன்மை உணவு அரிசியும் கோதுமையும் ஆகும். நல்ல விலை காரணமாக மக்காச் சோளம் விளையும் மெச்சிக்கோ மற்றும் ஆபிரிக்கா , தென்னமெரிக்க நாடுகளில் வெள்ளை ரக சாகுபடி குறைந்து மஞ்சள் மக்காச்சோள சாகுபடி கூடியதால் பலர் பட்டினியால் மடிந்து போகிறார்கள். எத்தனோல் சாராய உற்பத்திக்கு மஞ்சள் ரகம் பயனாவதால் அமெரிக்க அதிபர் புஷ் ""இதனால் மனித உணவுக்கு ஆபத்தில்லை' என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

நம்மையெல்லாம் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார். அதுவும் நடக்கலாம். எதிர்கால இந்தியாவில் விவசாயிகள் நெல், கோதுமையை மறந்து மக்காச் சோளத்தை மட்டுமே சாகுபடி செய்து அமெரிக்காவின் ஆசீர்வாதத்தைப் பெறப் போகிறார்கள். அப்போது உணவுப் பழக்கம் மாறலாம். தினம் இரண்டு மக்காச் சோள ரொட்டியும், இரண்டு பெக் அதாவது குவார்ட்டர் மக்காச் சோள சாராயமும் இந்திய ரேஷன் கடைகளில் கிட்டும்.

இந்தியாவை விடுங்கள். அமெரிக்காவிலேயே பல மாற்றங்கள் ஏற்பட்டு அதன் தாக்கம் உலக நாடுகளில் நல்வாழ்வையும் சூழல் வாழ்வையும் பாதிக்கலாம்.

மின்னசோட்டாவில் தொடங்கி மியாமிக்கு அருகே சங்கமிக்கும் மாபெரும் மிசூரி மிஸிசிப்பி நதியைப் போல் அமெரிக்காவில் மக்காச்சோள சாராயம் ஆறாக ஓடுகிறது. "இதுதான் கார்பன் கட்டுப்பாடு இதுதான் சூழல் நேர்த்தி' என்று பீற்றிக்கொள்ள முடியாது இது பிதற்றல்தான்.

அமெரிக்காவில் மக்காச் சோள சாராயத் தொழிற்சாலைகள் உள்ள நெப்ராஸ்கா, வாகு போன்ற சிறு ஊர்களை நகரங்களாக்கியுள்ளன. இப்பகுதி விவசாயிகளுக்கு கொள்ளை இலாபம் உண்டு. மக்காச் சோள சாராய வடிவாலைகள் பற்றி அமெரிக்கப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ரோஜர்ஸ் ஹார்டர்ஸ் என்ற விவசாயி "நான் மக்காச்சோளம், கோதுமை சாகுபடியுடன் பால்பண்ணைத் தொழிலும் செய்கிறேன். மக்காச் சோள சாகுபடியில் கிட்டும் இலாபம் வேறுபயிர்களில் இல்லை. நான் மக்காச் சோள சாகுபடியிலே மட்டும் கவனம் செலுத்துவதாயுள்ளேன்.

பால் பண்ணையை விற்றுவிடப் போகிறேன்'. இது ஒரு மாதிரிதான். இப்பகுதி விவசாயம் இனி உணவையோ , கால்நடைத் தீவனத்தையோ நம்பப் போவதில்லை. காரோட்டக்கூடிய சாராயத்தை நம்பப்போகிறது . இது எவ்வளவு பெரிய சீரழிவு?

தீவனத் தட்டுப்பாட்டால் கால்நடைகள் இறைச்சிக்குச் செல்வதும் கூடவே உணவுத் தட்டுப்பாடும் பெருகி கால்நடை உயிர்களும் மனித உயிர்களும் துடிக்கப் போகின்றன.

உணவைப் புளிக்கவைத்து உணவில் உள்ள மாப்பொருட்களைச் சர்க்கரையாக மாற்றிப் புளிகலனில் மாறிய சர்க்கரைப் பொருளை ஈஸ்ட்கள் மூலம் சாராயமாக்கிக் காய்ச்சி வடிக்கப் போகிறார்கள்.

உணவு கலோரி சக்தியாக மாறி உயிர்களை வாழவைக்காமல் எரிசக்தியாக மாற்றிப் பெற்றோலுடன் கலந்து காரோட்டப் போகும் இத்திட்டம் இன்னும் இரண்டே ஆண்டுகளில் விரிவாக்கம் செய்ய பில்லியன் மில்லியன், டொலர் அளவில் மானியங்களை அமெரிக்க செனட் செலவிடப் போகிறது.

ஆராய்ச்சிக்கு மட்டும் 200 மில்லியன் டொலரை புஷ் ஒதுக்கியுள்ளார்.

அமெரிக்காவிலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மக்காச்சோள சாராய வடிவாலைகளுக்கு அனல் மின்சாரம் வேண்டும். அது மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு ஆற்றல் (ஃபாசில் எனர்ஜி) அல்லவா? பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு குழாய்த்தடம் வேண்டும். அதற்கும் புதைவு ஆற்றல் வேண்டும்.

பல இலட்சக்கணக்கான தரிசுநிலம், வனப்பகுதிகள் மக்காச்சோள சாகுபடிக்கு மாறப்போகிறது . வனப்பகுதி பாதிக்கப்பட்டால் அதுவே பசுமையக கார்பன் நச்சுப்புகைகளை ஓசோன் மண்டலத்திற்கு அனுப்பி ஒட்சிசன் உற்பத்தியைக் குறைத்துவிடுமே. மூன்றாவதாக நிலத்தில் யூரியாவைக் கொட்டி விரிந்த அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்தால் அந்த நிலங்களிலிருந்து வெளியேறும் நைட்ரிக் ஒட்சைட்களினாலும் ஓசோனுக்கு ஆபத்து உள்ளதே.

விவசாயம் உணவு உற்பத்தியை மையமிட்டு உணவை உயிர்வாழப் பயன்படுத்தாமல் உணவையே எரிபொருளாக்கும் அமெரிக்காவின் திட்டம் விரைவில் வளர்முக நாடுகளைப் பஞ்சப் பிரதேசமாக மாற்றும் திட்டமாகவும் செயல்படக்கூடியது. தமிழ்நாட்டில் இது தொடங்கிவிட்டதைக் கவனிக்கலாம். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எங்கு நோக்கினும் மக்காச் சோள பசுமையே அதிகம் தென்படுகிறது. தூத்துக்குடித்துறை முகத்திலிருந்து மக்காச் சோளம் ஏற்றுமதியாகிறது. அமெரிக்கா உணவையே சாராயமாக்கும் போது நாம் ஏன் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் விட்டு வைத்துள்ளோம் என்று புரியவில்லை.

கள் இறக்க அனுமதி இல்லை. பதநீர் இறக்குவதைக் கூடத் தடை செய்கின்றனர். அதேசமயம் கள்ளச்சாராயம் குடித்து மனிதர்கள் பலியாவதும் அதிகரித்துக் கொண்டு போகிறது.குறைந்த போதையுள்ள பியர் விற்கப்படுவது போல் உகந்த முறையில் பேக் செய்து உயர்வான முறையில் கலப்படமில்லாத கள் உற்பத்தியில் சாராய சாம்ராஜ்யங்களைக் களமிறங்கவிடலாமே.

உணவை எரிபொருளாக மாற்றுவதை விட இன்று உண்ணா எண்ணெயாக மாறிவிட்ட தேங்காய் எண்ணெயை பயோடீசலாக மாற்றும் திட்டம் தென்னை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாயிருக்கும் . காட்டாமணக்கு மானியத்தைத் தென்னைக்கு வழங்கலாம். தேங்கியுள்ள தேங்காய்ச் சந்தைக்கு விடிவு வரவில்லை. அமெரிக்காவில் உணவைச் சாராயமாக மாற்றுவதில் எவ்வித தயக்கமும் காட்டாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் "கள் இறக்கத் தடை ' என்ற நிலை?

ஆர்.எஸ்.நாராயணன்

(கட்டுரையாளர் : இயற்கை வேளாண்மை பொருளியல் நிபுணர்)

தினமணி

Comments