படையினரின் பூநகரி கனவில் புலிகளின் புயல் வீசுமா?

வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின் எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான ~பரிசு| பெறும் கட்டத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன.

பல்வேறு வழிகளிலும் புலிகளை சீற்றமுற செய்யும் காரியங்களை மேற்கொண்டு, ஒன்றிலுமே தாம் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றக்கொள்ளாமல் படைத்தரப்புத்தான் தற்போது சீற்றமடைந்திருக்கிறது.

இதன் வெளிப்பாடாக அண்மைக்காலமாக கொழும்பில் அதிக நேரம் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி, வன்னியில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களாக உள்ளுர் கல்வெட்டுக்களையும் கைவிடப்பட்ட ஓலைக்கொட்டில்களையும் காண்பித்து பேட்டிகள் கொடுத்தவண்ணமுள்ளார்.

அதேபோல, களத்தில் படைகளை வழிநடத்தும் இராணுவ அதிகாரிகளும், தாம் இப்படியொரு தலைமைத்துவத்தை பெற்றது பெரும்பேறு என்ற ரீதியில் அங்கு செல்லும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தவண்ணமுள்ளனர்.

உண்மையில், களநிலைவரத்தை பார்க்கப்போனால், விடத்தல்தீவை அரச படைகள் அடைந்திருக்கின்றன. புலிகளின் மிகப்பெரிய கடற்படை தளம் என தாம் வர்ணித்ததற்கு ஏற்ப, புலிகள் அதை விட்டுக்கொடுக்காமல் சண்டையிடுவார்கள் என இராணுவ தரப்பு எதிர்ப்பார்த்தது.

ஆனால், விடத்தல்தீவு என்பது மன்னார் தமது கைகளில் உள்ளவரை அதற்கு தேவையான ஒரு பின்புலமாக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு இடம். மன்னாரை விட்டு எப்போது புலிகள் பின்வாங்கினரோ, அன்றோடு விடத்தல்தீவின் கேந்திர முக்கியத்துவம் அற்றுப்போய்விட்டது.

இதனை புரிந்துகொள்ளாத படைகள் விடத்தல்தீவு வெற்றியை, ஆனையிறவை வென்றது போலான ஒரு நடவடிக்கையாக கருதி கொண்டாடுகின்றன.

தற்போது, அங்கிருந்து வடக்காக இலுப்பைக்கடவைக்கு சென்று ஏ-32 வீதியில் மேற்கொண்டு நகரும் நடவடிக்கையில் அரச படைகள் ஈடுபட்டு வருகின்றன.

படையினரின் நடவடிக்கையை சற்று ஆழமாக நோக்கினால், அவர்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பக்களில் இருந்து சில தெளிவுகளை பெற்றுள்ளார்கள் போல தெரிகிறது.

அதாவது, ஜெயசிக்குறு காலப்பகுதியில் பெருமெடுப்பில் ஏ-9 பாதையில் கால்வைத்த படையினர் மாங்குளம் செல்லும்வரை புலிகளின் எதிர்த்தாக்குதல்களால் பல ஆயிரக்கணக்கானோரை இழந்தனர்.

இதற்குக் காரணம், ஏ-9 பாதையின் இருமருங்கிலுமிருந்து புலிகள் மேற்கொண்ட தொடர்ச்சியாக தாக்குதல்கள்தான். தாண்டிக்குளத்தில் ஆரம்பித்து கனகராயன்குளம் வரை புலிகளின் பல்வேறு முற்றுகைத்தாக்குதல்களுக்குள் அகப்பட்டமை, படையினரின்; பல நூற்றுக்கணக்கானோரை இழக்க வைத்ததுடன் பல ஆயுத தளவாடங்களையும் புலிகளிடம் சேர்ப்பித்தது.

ஆகவே, தற்போது வன்னியின் மேற்பக்கமாக இருந்து - கடற்பிரதேசத்தை ஒரு பக்கமாக வைத்து - வடக்கு நோக்கி நகர்ந்தால், ஒரு பக்கம் கடல் மறுபக்கம்தான் வெளிகள் நிறைந்த இடம். இங்கு புலிகளின் முற்றுகை தாக்குதல்கள் இடம்பெறுவது என்பது - பழைய நிலைமையுடன் பார்க்கையில் குறைவாக இருக்கும் என்று படைத்தரப்பு கருதுகிறது.

இப்பொழுது, விடத்தல்தீவில் நிலைகொண்டுள்ள படையினரையோ அல்லது அதற்கு அப்பால் முன்னேறி நிலைகொள்ளவுள்ள படையினரையோ ஒரு முற்றுகைக்குள் கொண்டுவந்து, அவர்களுக்கு பெரிய இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு தாக்குதலை மேற்கொள்ள வேண்டுமாயின், கடல் வழியான தாக்குதல் ஒன்றை நிச்சயம் வெற்றிகரமாக ஒழுங்கமைக்க வேண்டிய தேவை புலிகளுக்கு உள்ளது.

அவ்வாறு தாக்குதல் நடைபெறும்போது, படையினருக்கு கடல்வழியாக உதவிக்கு வரும் படையினரை தாக்குவது, அதேவேளை படையினரை தப்பியோட விடாமல் தமது பொறிக்குள் விழுத்துவது, அவர்களுக்கான விநியோக வழிகளை தடுப்பது போன்ற புலிகளின் தரைவழி தாக்குதல் அணிகளின் பல்வேறு தேவைகளுக்கு கடற்புலிகளின் பங்கு அவசியமாகிறது.

கடந்த தடவை - ஜெயசிக்குறு நடவடிக்கையின்பேர்து - காடுகளுக்குள் அகப்பட்டு அடிவாங்கியதுடன் ஒப்பிடுகையில், கடற்புலிகளால் ஏற்படக்கூடிய இந்த சவாலை சமாளித்தவாறே தமது முன்னேற்றத்தை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று படைத்தரப்பு நம்புகிறது.

ஆனால், எவ்வளவு பிரதேசத்தை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும், அங்கெல்லாம் உள்ள கடலில் தமது ஆதிக்கம்தான் தொடர்ந்து உள்ளது என்பதை படைத்தரப்புக்கும் இடித்துரைப்பது போல, கடற்புலிகளின் சிறுத்தீவு தாக்குதல் மற்றும் மண்டைதீவு தாக்குதல் ஆகியவை நடைபெற்றிருக்கின்றன.

ஆகவே, வடக்கு கடலில் கடற்புலிகளின் கை எப்பொழுதுமே மேலோங்கியிருப்பது, படையினர் எவ்வளவுதான் நிலப்பிரதேசங்களை கைப்பற்றிகாலும், அவற்றை செல்லாக்காசாக்கிவிடும் என்பதை தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.

இதேவேளை, படையினரின் தற்போதைய நடவடிக்கை பூநகரியை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுகிறது என்ற களநிலையை தெளிவாக காண்பிக்கிறது.

ஓயாத அலைகள் ஒன்றின் ஆரம்பத்துக்கு முன்னர் படையினரால் ஆரம்பிக்கப்பட்ட சத்ஜெய நடவடிக்கையின்போது, கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக, படையினரால் கைவிடப்பட்ட பூநகரி அன்று முதல் இன்றுவரை புலிகள் வசமே இருந்து வருகிறது.

அதன் விளைவுகள், என்ன என்பதை பலாலி விமானத் தளம்வரை வீழ்ந்து வெடித்த புலிகளின் ஆட்லறிகள் பதிலாக சொல்லியிருக்கின்றன.

சம்பூரை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்வரை எவ்வாறு திருகோணமலை முழுவதையும் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனரோ -

அதோபோன்று, பூநகரி புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவரை குடாநாடு புலிகளின் மறைமுக கட்டுப்பாடட்டிற்குள்தான் இருக்கும் என்பது எழுதாத விதி.

ஆகவே, கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்கியதுடன் சம்பூர் பிரச்சினையிலிருந்து விடுபட்ட இராணுவத்துக்கு, தற்போது எஞ்சியிருக்கும் தலையிடி பூநகரி. அங்கு, கல்முனை பகுதியில் புலிகளின் ஆட்லறி தளம் உள்ளது கூறி என்று தினம் தினம் வான் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் போதும் இராணுவம் எந்த பயனையும் பெற்றதாக தெரியவில்லை.

ஆகவே, தற்போதைய மன்னார் நடவடிக்கையை பூநகரி வரை நீட்டி செல்வது என்று ஒரு பேராசையில் படைத்தரப்பு இறங்கியிருப்பது கள நகர்வுகளிலிருந்து தெளிவாக தெரிகிறது.

அவ்வாறு, பூநகரி மீது ஒரு தரைவழி தாக்குதலை மேற்கொள்வதாக இருந்தால்கூட படையினர் தற்போது நிலைகொண்டுள்ள இலுப்பைக்கடவையிலிருந்து வடக்காக இன்னும் நகரவேண்டியிருக்கிறது. குறைந்தது, நாச்சிக்குடாவரை சென்றால்தான் அங்கிருந்து பூநகரி மீது ஆட்லறி தாக்குதலையாவது மேற்கொள்ள முடியும்.

அதற்கு, இனி வெள்ளாங்குளம் தாண்டி இன்னும் சுமார் 25 கிலோ மீற்றராவது வடக்கே முன்னேற வேண்டிய பாரிய பணியில் படையினர் இறங்கவேண்டும்.

தினமும் மூன்று கிலோ மீற்றர் முன்னேறுவதாக கொழும்பில் பேட்டியளிக்கும் இராணுவத்தளபதியின் கருத்து உண்மையானால், படையினர் இலுப்பைக்கடவையை கைப்பற்றி எட்டு அல்லது ஒன்பது நாட்களில் நாச்சிக்குடாவை கைப்பற்றியிருக்க வேண்டும்.

பூநகரி மீது தரைவழியாக துல்லியமான ஒரு தாக்குதலை மேற்கொள்வதாயின், அதற்கு நாச்சிக்குடா படையினருக்கு தேவையான ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

அங்கிருந்து, படையினரிடம் தற்போதுள்ள சுமார் 27 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கக்கூடிய 130 மில்லி மீற்றர் ஆட்லறிகளால் தாக்கினால், புலிகளின் பூநகரி இருப்புக்கு கேள்வி எழலாம்.

அப்போதுதான், ஆட்லறி எனப்படுவது படையினருக்கு இராணுவ ரீதியாக உச்ச பயனை கொடுக்கும்.

தற்போது, களத்திற்கு நகர்த்தியிருக்கும் தனது ஆட்லறிகளால் மக்கள் பகுதிகளை நோக்கி தாக்குவதையே பிரதான பணியாக படையினர் மேற்கொண்டுவருகின்றனர். இது வன்னியில் பாரிய மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தியிருப்பது அரசை தவிர அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அதேபோல, படையினரின் அடுத்த இலக்குகளாக காணப்படுபவை - ஏ-9 பாதைக்கு மேற்காக உள்ள துணுக்காய் மற்றும் மல்லாவி பிரதேசங்கள் ஆகும்.

இவற்றை கைப்பற்றிக்கொண்டால், கிளிநொச்சி முழுவதையும் தமது ஆட்லறி வீச்செல்லைக்குள் கொண்டுவந்து விடலாம் என்ற இன்னொரு திட்டத்துடன் இராணுவத்தின் 57 ஆவது டிவிஷன் படைகள் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

துணுக்காய் மற்றும் மல்லாவி படையினர் வசம் வீழ்ந்தால், அது கிளிநொச்சியின் கேந்திரத்தன்மைக்கு பாரிய கேள்விக்குறியாக அமையும் என்பதில் உண்மையிருக்கத்தான் செய்கிறது.

அந்தவகையில், நாச்சிக்குடா, துணுக்காய், மல்லாவி ஆகிய இடங்களை படையினர் நெருங்கினால், அதுவே புலிகளின் வலிந்த தாக்குதலுக்கான தொடக்கப்புள்ளியாக அமையக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

அதேவேளை, படையினர் இவ்வாறு தமது முக்கிய பிரதேசங்களை நெருங்குவதற்கு முன்னர், வன்னியின் மேற்கில் அரச படைகளின் செறிவை குறைக்கும் நோக்குடன் புலிகள் புதிய களமுனையை திறக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் ஏனைய பிரதேசங்களில் தமது படைகளை உஷார் நிலையில் வைத்திருப்பதில் படைத்தலைமைகள் மும்முரமாக உள்ளன.

ஆனால், புலிகள் இதுவரை மேற்கொண்டு வரும் பின்வாங்கல்கள் மற்றும் வலிந்த தாக்குதல்களை இயன்றவரை தவிர்ப்பது போன்ற கள தந்திரோபாயங்கள், இறுதிப்போருக்கான ஆயத்தங்களாக தெரிகின்றனவே தவிர, இன்னொரு களமுனையை திறப்பதன் மூலம் ஒரு மினி யுத்தத்தை நடத்துவதற்கான முன்னேற்பாடாக தெரியவில்லை.

அவ்வாறு புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களின் முதற்கட்டம்தான் அவர்களின் வெற்றியை தீர்மானிப்பதாக அமையும் என்பது களநிலை ஆரூடம்.

ஜெயசிக்குறு முறியடிப்பு தாக்குதலை நோக்கினால், ஒட்டுசுட்டான் தாக்குதலும் கரிபட்டமுறிப்பு தாக்குதலும் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் புலிகளுக்கு பாரிய சவாலாக அமைந்தன. அவற்றை வெற்றிகராமாக நிறைவு செய்ததால் ஏனைய இடங்கள் இலகுவாக புலிகளின் கைகளில் விழ ஆரம்பித்துவிட்டன.

வவுனியா பக்கம் - அதாவது சிங்கள பிரதேசத்துடன் நிலத்தொடர்புடைய - பகுதியிலிருந்து படை நடவடிக்கையை ஆரம்பித்த இராணுவத்தினருக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை உள்ளது.

அதாவது, புலிகள் தாக்கினால், திரும்பி ஒடுவதற்கு பின்பக்கமாக தமக்கு இடமுள்ளது. ஆகவே, நம்பிக்கையாக - தமது தளபதிகளின் கட்டளைகளை கேட்டு - அவர்கள் எவ்வளவு தூரமும் வன்னிக்குள் வருவார்கள். இதுதான் ஜெயசிக்குறு காலப்பகுதியிலும் நடைபெற்றது.

ஆனால், குடாநாட்டில் அந்த சாத்தியம் இல்லை. தப்பியோடுவதானால் பலாலிதான் இலக்கு.ஆகவேதான், குடாநாட்டை பொறுத்தவரை படையினருக்கு தீராத பயம் எப்போதுமிருந்துவருகிறது.

-ப.தெய்வீகன்-

சுடர் ஒளி (25.07.08)

Comments