சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு

ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:

பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.

சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.

சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.

செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.

உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.

தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.

மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments