சிறப்புப் பார்வை-உலகின் இரட்டை அளவு முறைகளும் பலியாகும் அப்பாவி இனங்களும். !

மனித உரிமை மக்களாட்சி, மக்களின் கருத்துச் சுதந்திரம் ,ஊடக மற்றும் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பற்றி கூரை மீதேறிக் கொக்கரிக்காத அரசுகளும் அரசியல் வாதிகளும் இல்லை என்றே கூறலாம்.

ஆனால் அவர்களே தாம் நினைத்தபடி பிறர் மீது பயங்கரவாதி என்ற முத்திரை குத்திவிட்டு வகை தொகையற்ற கடத்தல் , கற்பழித்தல், கொலை, களவு, காணாமல் செய்து ஆளையே கொன்று புதைத்து விடுதல் என்பன எல்லா நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாகும்.

சட்டம் ஒழுங்கு என்ற சாட்டில் சட்டமும் அப்பாவிப் பொது மக்களும் இருட்டறைக்குள் தவிக்கின்றனர். இதில் உலகின் நாட்டாமை நாடுகளின் பங்களிப்பு பற்றி இங்கு பார்வையே இது.

அமெரிக்க ஜனநாயக முறை பற்றி அடிக்கடி பீற்றிக் கொள்ளும் புஷ் 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில் புளோரிடா மாநிலத்திலும் 2004ல் இயோவா மாநிலத்திலும் நேர்மையற்ற முறையில் வெற்றியைத் தமதாக்கிப் பதவிக்கு வந்தார்.

அவர் ஒருமுறை மோதத் தெரியாது அன்றைய ரஷிய அதிபர் புட்டினிடம் ரஷிய ஜனநாயகம் பற்றிக் குறைப் பட்டார். அதற்கு ரஷியாவில் அரசுத் தலைவர் மக்களால் தெரிவு செய்யப் படுகிறார்கள் அமெரிக்காவில் உள்ளது போல் நீதி மன்றங்களால் அல்ல எனப் பதிலடி கொடுத்து அவரின் வாயயை அடைத்தார் துணிச்சல் மிக்க புட்டின்;.

நீதி முறை பற்றியும் அமெரிக்கா பெருமைப் பட முடியாது. அங்கு அரசுத் தலைவரான புஷ் நியமனம் செய்த உச்ச நீதிபதிகள் பலர் பிரச்சனைக்கு உரியவர்களாகப் பார்க்கப் பட்டனர். பல அரச சட்டத்தரணி நியமனங்களும் பதவி விலகள்களும் அவரது ஊழல்களை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

அமெரிக்க அரசின் சீ.ஐ.ஏ. எனப்படும் மத்திய உளவுப் படைகளால் பல் வேறு நாடுகளிலும் நீதிக்குப் புறம்பான கைதுகள், விமான மூலம் கடத்தப் பட்டு அடையாளம் தெரியாத முகாம்களில் விசாரணை என்ற சாட்டில் அப்பாவிச் சந்தேக நபர்கள் மீதான சித்திர வதைகள் என்பன அமெரிக்க மக்களாட்சியின் முத்திரைகளாக உள்ளன.

ஸ்ரீலங்காவின் உரிமை மீறல்களைக் கண்டிக்கும் போது பதிலடியாக வெளியிடும் ஸ்ரீலங்கா அரச அறிக்கைகள் மேதாவித்தனமாக இருந்தாலும் அமெரிக்காவின் வாயடைத்து விடுகின்றன.

அடுத்து அமெரிக்காவின் அடியாள் போல் உள்ள பிரித்தானியா மனித உரிமை மீறல் பற்றி முன்னாள் சிலி நாட்டின் தலைவர் அகஸ்தஸ் பினோசேயை மனிதப் படுகொலைக் குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க உதவியது.

அதே வழியில் இன்று இலங்கையில் கற்பழிப்பு, கொலை, ஆட் கடத்தல் , ஊடகவாளர் தராகி கொலை , சிறுவரைப் படைக்குச் சேர்த்தல் போன்ற பல போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கப் பட வேண்டியவரான கருணாவை மீள இலங்கையரசிடம் ஒப்பித்து இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அண்மையில் பிரத்தானியப் பிரதமரைச் சந்தித்த இலங்கை அரசுத் தலைவர் மகிந்தவின் நேரடிக் கோரிக்கை இதுவாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பிரித்தானிய அரசின் யோக்கியதை இதுக்கும் மேலே உள்ளது.

இந்திய மத்திய மாநில அரசுகளின் யோக்கியதையோ சொல்லி மாளாது. இலங்கை அகதிகள் பராமரிப்பில் இந்திய அரசின் அதி உச்ச மனித மீறலாக ஈழத் தமிழ் அகதிகளைச் சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக் கூடங்களில் அடைத்து வைத்துள்ளது.

சாதாரண முகாம்களிலும் அடிப்படை வசதிகள் ஏதும் வழங்காமலும் சிறுவருக்குக் கல்வி வசதிகளை மறுத்தும் ஜெனீவா ஐ.நாவின் அகதிகள் தஞ்ச விதிகளை ஏற்காமலும் உள்ளமை யாவரும் அறிந்ததே.

சிறுவருக்குக் கல்வி வசதிகள் மறுக்கப் பட்டதால் இலங்கைத் தமிழ் அகதிச் சிறுவர்களை தொழில் நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாரத்தில் 6 நாட்களும் வேலைக்கு அமைர்த்திப் பெரும் மனித உரிமை மீறல் உழைப்புச் சுரண்டல் என்பவற்றை பீ.பீ.சீயின் பனோரமா நிருபர் அம்பலமாக்கியுள்ளார்.


உலகில் என்றும் எங்கும் இரட்டை நிலை அளவீடுகள்தான் நடைமுறையில் உள்ளன. இந்த வiகில் எரித்திரியா, கிழக்குத் தீமோர், கொசொவோ நாடுகள் தோன்றிய விதமும் ஒவ்வொன்றும் தனித்தன்மை உள்ளதைக் காணலாம்.

ஆனால் நிச்சயமாகத் தனித் தமிழ் ஈழம் இவற்றின் வழிகளில் வரும் வாயப்பே இல்லை.

தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் என்பது ஏசுவின் காலத்தில் சாத்தியமாகலாம்.

ஆனால் தமிழீழத்தைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் தட்டிப் பறித்தால் மட்டுமே தமிழீழம் சாத்தியமாகும் நிலையே உள்ளது.

அமைதிப் பேச்சு என்று பேசுவதெல்லாம் வெறும் காலத்தைக் கழித்து சுதந்திர உணர்வை மழுங்கடிக்கும் ஏமாற்று வித்தையே என்பதே எமது 100 ஆண்டுக்கால வரலாறாக உள்ளது.

எனவே நாமாகவே நமது செயற் பாடுகளைத் தீவிரப் படுத்தினால் மட்டுமே தமிழீழ வெற்றிக் கனி எமக்குச் சாத்தியமாகும். களத்தில் போரிடும் புலிகள் எதிரிகளின் ஆக்கிரமிப்பையும் இனஅழிப்பையும் நிலப் பறிப்பையும்தான் .தடுக்க முடியும்.

ஆனால் உருவாகியுள்ள எமது தமிழீழ அரசையும், மண்ணையும் , எமது இறைமையையும் இரட்டை அளவீடு முறை கொண்ட உலக அரங்கை ஏற்கச் செய்வது புலத்தில் வாழும் எமது கரங்களில் மட்டுமே தங்கி உள்ளது. ஒன்று பட்ட இனமாக எமது சோம்பல் முறித்துச் சோர்வு நீக்கி உழைத்து உயர்வு காண்போம்
-பத்மா -


Comments