மகிந்த செல்லப்போவது யாரிடம்

இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு என்ற நிலைப்பாட்டில் மகிந்த அரசாங்கம் மிகவும் உறுதியாகவுள்ளது. யுத்தம் தவிர்ந்த எந்த ஒரு வழிமுறையையும் அது பரிசீலிக்கவும் தயாராக இல்லை. இதற்குச் சிங்கள மக்களின் ஆதரவும் குறிப்பிடும்படியாக உள்ளதெனக் கூறினும் மிகையாகமாட்டாது.

இதேசமயம், யுத்தத்திலும், சிறிலங்கா இராணுவத்தரப்பு குறிப்பிடத்தக்கதான சில நகர்வுகளை மேற்கொள்வதை நிராகரித்துவிட முடியாது. வடக்கில் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் யுத்தத்தில் மன்னார்க் களமுனையில் இராணுவத்தரப்பு குறிப்பிடத்தக்கதான அனுகூலங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

ஆனால், இதனைப் பெறுவதற்காக இராணுவம் எடுத்துக்கொண்ட காலம், இராணுவ ரீதியில் ஏற்பட்ட ஆளணி மற்றும் ஆயுத தளவாட இழப்புக்கள் என்பன அதிகமாகும். ஆனால் சிறிலங்காப் படைத்தரப்போ, அரச தரப்போ அது குறித்துத் தற்பொழுது கவலைப்படுவதாக இல்லை. ஏனெனில், களமுனை தமக்குச் சாதகமானதாக இருப்பதான அபிப்பிராயம் இதனை ஏற்படுத்தவில்லை.

இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு என்ற உறுதியான முடிவை முதலில் எடுத்தவர். சிங்களவர்களின் மதிப்பிற்குரிய தலைவர்களில் ஒருவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவாகும்.
தமிழ் மக்கள் தமது உரிமைக்கான கோரிக்கையை முன்வைத்தபோது 'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என அறைகூவல் விடுத்தவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவாகும். அன்று வெறும் கைகளுடன் நின்ற தமிழ் தலைவர்களைப் பார்த்து இவ் அறை கூவலை விடுத்தவர் ஆவர்.

இதேசமயம், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராகச் சட்ட ரீதியிலும், இராணுவ ரீதியிலும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் காலமே பயங்கரவாதத் தடைச்சட்டமும், பிரிவினைக்கு எதிரான சட்டமும் கொண்டுவரப்பட்டது.

அதாவது, தமிழர்களை ஈவிரக்கமின்றி ஒடுக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம், அரச பயங்கரவாதத்தைத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவதற்கு பெரிதும் கைகொடுத்தது. இப் பயங்கரவாதத் தடைச்சட்டம் சிங்களவர்களையும் இம்சைக்குள்ளாக்கியமை வேறுவிடயம்.

அடுத்ததாக தமிழ் இளைஞர்களின் எழுச்சியை அடக்குவதற்காக இராணுவத்தை வடக்கே ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அனுப்பி வைத்தார். அவரது மருமகனான பிரிகேடியர் விஜயதுங்கா தலைமையில் அனுப்பப்பட்ட இராணுவம் ஆறு மாத காலத்தில் இராணுவ நகர்வுகளினால் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவரும் என அரச தரப்பில் கூறப்பட்டது.

வடக்கே வந்த பிரிகேடியர் விஜயதுங்கா தலைமையில் இராணுவம் தனது பாணியில் படுகொலைகளை ஆரம்பித்தது. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு வீதியில் வீசப்பட்டார்கள். தமிழ் மக்கள் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

ஆனால், வடக்கிலும், கிழக்கிலும் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. அரசின் அடக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கினர். போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்த இளைஞர்கள் பின்னர் திரளத்தொடங்கினர்.

இதன் விளைவானது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இராணுவத் தீர்வென்பது சாத்தியமற்றுப் போனது.

இதில் உச்சமாக 1987 இல் வடமராட்சி மீது சிறிலங்கா இராணுவம் ஒப்பரேசன் லிபரேசன் என்னும் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சியை ஆக்கிரமித்தது. ஆயினும், கரும்புலி கப்டன் மில்லரின் நெல்லியடி மகாவித்தியாலய இராணுவ முகாம் மீது நடத்திய கரும்புலித் தாக்குதலானது இராணுவ ரீதியில் தம்மால் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்பதையும் சிறிலங்கா ஆட்சியாளருக்கு உணர்த்தியது.

இதனை உணர்ந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்கு மாற்றுவழி தேடுதல் என்பது அவசியமாகியது. இதன் காரணமாக அவ்வேளை இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டிய இந்தியாவுடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டார்.

தமிழ் மக்களை நேரடியாகப் போருக்கு அழைத்தவரும்- சிங்கள மக்களின் தலைவராகவே இருக்க விரும்புகிறேன் எனப் பகிரங்கமாக அறிவித்துவரும், தீவிர இந்திய எதிர்ப்பாளருமாகிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தை இலங்கைக்குள் வரவழைத்தார்.

அதாவது, ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் இனப்பிரச்சினைக்கான தீர்வை-அதாவது இராணுவ ரீதியிலான வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியாது என்ற நிலையில் - அந்நிய நாட்டுப்படை ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டியதாயிற்று. இதனைச் சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவிடம் பிரச்சினையை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஒப்படைத்தார் எனலாம்.

அடுத்ததாக வந்த சனாதிபதி ஆர்.பிரேமதாசாவும் குறுகிய காலத்திற்குள் இராணுவத் தீர்வு என்பதையே கையில் எடுத்தார். ஆனால், அவரது முயற்சியும் வெற்றிபெறவில்லை. சில நடவடிக்கைகளின் பின் அவரும் இந்தியா பக்கம் சாயவே தொடங்கினார். ஜே.ஆர் காலத்தில் இந்தியாவைத் தீவிரமாக எதிர்த்த அவர், இந்தியாவின் உதவிக்காக அடிக்கடி இந்தியா செல்லத் தொடங்கினார்.

ஆனால் அவர் கொல்லப்பட அவரின் பின் ஆட்சிக்கு வந்த டி.பி.விஜேயதுங்காவும் இராணுவத் தீர்வில் முனைப்புக்காட்டினார். இவர் காலத்தில் சிறிலங்கா இராணுவம் புலிகளிடம் வாங்கிய சில அடிகள் இராணுவத்தை முடக்கிப்போட்டது. இடைக்கால சனாதிபதி போன்று செயற்பட்ட அவர் இதற்கு அப்பால் செல்லவில்லை. இந்நிலையில், இனப்பிரச் சினைக்கு சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்படும் என்ற அறிவிப்புடன் சந்திரிகா குமாரதுங்கா பதவிக்கு வந்தார். ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே பௌத்த - சிங்களப் பேரினவாதத்தின் தலைவியானார்.

ஆனால் இவர் சமாதானத்தின் பெயரிலேயே பெரும் யுத்தம் செய்த சிங்களத் தலைவராக இருந்தார். இவர் காலத்தில் தமிழ் மக்கள் வரலாறு காணாத நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவரின் செயற்பாடுகளுக்குச் சிங்களவர்களதும், குறிப்பிடத்தக்க அளவிலானதான சர்வதேச ஆதரவும் இருந்ததெனக் கூறலாம்.

ஆனால், சனாதிபதி சந்திரிகாவினாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. யுத்தத்தில் வெற்றிபெற்று வருவதாகப் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடிந்ததேயொழிய வெற்றி என்பது சாத்தியமாகவில்லை. ஒரு சமயத்தில் இராணுவம் குறிப்பிடத்தக்கதான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது எனக்கூறிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இருந்தது உண்மையே. ஆயினும் விடுதலைப் புலிகள் இறுதியில் இராணுவ சமநிலையையே மாற்றத்தக்கதான தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தனது இரண்டு பதவிக்காலத்திலும் நாட்டின் அனைத்து வளங்களையும் வைத்துப்பெரும் யுத்தத்தை சந்திரிகா குமாரதுங்கா நடத்தினார். இதற்குச் சிங்களவர்களின் ஆதரவும் இருந்தது. ஆயினும் ஆனையிறவு வீழ்ச்சியும், தீச்சுவாலை தோல்வியும் கட்டுநாயக்கவில் வாங்கிய அடியும் இறுதியில் சமாதான ஏற்பாட்டாளர்களாகச் செயற்பட விரும்பிய நோர்வேயிடம் சரணடைய வைத்ததெனலாம்.

சிங்கள ஆட்சியாளர்கள் யாராயினும் சரி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை மனதார என்றுமே விரும்பியதில்லை. ஆனால், இராணுவ ரீதியில் அவர்கள் தோல்வியடையும் ஒவ்வொரு வேளையிலும் அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்குத் தயாராக இருந்ததாகக் காட்டிக்கொண்டார்கள். இதற்கென, அவர்கள் அயலவர்கள், சர்வதேசத்தினர் ஆகியோரின் ஆதரவையும் பெறவும் தயாராக இருந்தார்கள்.

இந்தவகையில் சனாதிபதி சந்திரிகாவும் யுத்தம் கொடுத்த சூழ்நிலை நெருக்கடியால் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் நோர்வே தரப்பைத் தொடர்புபடுத்திவிட்டுப் பதவியை விட்டுச்செல்ல பதவிக்கு வந்த சனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறிது கால இடைவெளியில் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். முன்னைய தலைவர்கள் போன்றே தீவிர இனவாதம் பேசுகின்றவராகவும், இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே ஒரேவழி என்ற நிலைப்பாட்டுடன் செயற்படுபவராகவும் உள்ளார்.

ஒருவகையில் பார்க்கப் போனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் பின்னர் வெளிப்படையாகத் தீவிர இனவாதம் பேசுபவராக மகிந்த ராஜபக்ச உள்ளார் எனக் கூறினும் மிகையாகமாட்டாது. அத்தோடு, நாட்டின் அனைத்து வளங்களையும் இவர் யுத்தத்திற்கென திருப்பிவிட்டுள்ளார்.

மேலும், இராணுவ ரீதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் திருப்தி கொண்டவராகவும் - இராணுவத் தீர்வில் முழு நம்பிக்கை கொண்டவராகவும் அவர் உள்ளார். ஆனால் ஒன்று இவரும் முன்னாள் சிங்கள ஆட்சியாளர்கள் போன்றே விடுதலைப் புலிகள் குறித்தும், தமிழ் மக்களின் தேசிய தலைமை குறித்தும் சரியான மதிப்பீட்டைக் கொண்டவராக இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பற்றியதான புரிதல் நீண்ட காலமாகவே பலருக்குச் சவால் நிறைந்ததொன்றாகவே இருந்துள்ளது. பலரால் அது புரிந்து கொள்ளப்படாமலும் இருந்துள்ளது. இருந்தும் வருகின்றது. ஆனால் ஒருசிலர் அதனை ஓரளவு புரிந்து கொண்டும் உள்ளனர்.

எடுத்துக்காட்டாக இந்திய ஊடகவியலாளரான அனிதா பிரதாப் பெருமளவு புரிந்து கொண்டுள்ளார் என்றே கூறுதல் வேண்டும். அவர் புதினம் இணையத்தளத்திற்கு அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில் - தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் குண இயல்பு பற்றியும், அவரது ஆளுமை பற்றியும் சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

குறிப்பாக தேசியத் தலைவர் அவர்களின் பொறுமை காத்தல், சந்தர்ப்பத்திற்காகக் காத்திருத்தல், அவரின் ஓயாத சிந்தனை, ஓயாத செயற்பாடு போன்ற பண்புகளை அவர் நன்கு விளங்கிக் கொண்டிருந்தார் என்றே கூறுதல் வேண்டும்.

அதாவது, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், காலம் தமக்குச் சாதகமானதாக, வாய்ப்பானதாக வரும்பொழுது தனது நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தன்னையும் புலிகளையும் தயார்ப்படுத்தி வருபவர் என்றும், சந்தர்ப்பம் அமையும் போது தனது வெற்றிகரமான நடவடிக்கையை ஆரம்பிப்பார் எனவும் அவர் மதிப்பீடு செய்துள்ளார்.

இதேவேளை, அனிதா பிரதாப் சந்தர்ப்பம் என்பதை அரசியல் சூழ்நிலையுடனும் இணைந்த தாகவே கொள்கிறார். 'பிரபாகரன் திறமையான இராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல. அவர் அரசியலிலும் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவெடுக்க வல்லவர். அனைத்துலக அரசியல் பற்றி ஆழமாக அறிந்தவர். முக்கியமாக மாறுகின்ற அனைத்துலகப் போக்குத் தமிழர்களின் போராட்டத்தை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்வது தொடர்பில் பிரபாகரனுக்குத் தீர்க்கமான ஞானம் உண்டு" என்கிறார்.

அத்தோடு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலை விரைவில் உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அத்தகையதொரு கனவு நிலை உருவாகி வருவதாகவும் அவர் கருதுகின்றார்.

அனிதா பிரதாப்பின் இம் மதிப்பீடு ஓரளவு தேசியத் தலைவர் குறித்த சரியான புரிதலின் அடிப்படையிலானது எனக்கூறுதல் மிகையாக மாட்டாது. இத்தகைய புரிதலுக்கு விடுதலைப் புலிகளுடனான நீண்டகாலப் பரீட்சையமும் மற்றும் அவதானிப்பும் காரணமாக இருக்கலாம்.

ஆனால், அனிதா பிரதாப் போன்று ஒரு சிலரைத் தவிர விடுதலைப் புலிகளையும், தேசியத் தலைவர் அவர்களையும் ஓரளவேனும் புரிந்து கொள்ளாதுவிடினும்-இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமாகப் போவதில்லை என்றும், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பது சாத்தியப்பாடான விடயம் அல்ல எனவும் வேறு பலரும் உறுதியாக நம்புகின்றனர்.

இத்தகையதொரு நிலையில் அனிதா பிரதாப் போன்றோர் எதிர்பார்ப்பது போன்று விடுதலைப் புலிகள் தமக்கான காலம் கனிந்ததும் பாரிய வலிந்து தாக்குதல்களை ஆரம்பிக்கும் நிலையில் சிறிலங்கா ஆட்சியாளர்களின் மதிப்பீடுகள் மாற்றத்திற்குள்ளாவதுடன் இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்பதும் மீண்டும் உறுதி செய்யப்படுவதாக இருக்கும். அவ்வேளையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யாரிடம் உதவிக்குச் செல்வது என்பதே அன்றுள்ள முக்கிய விடயமாக இருக்கும்.

அதாவது, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா ஆகியோர் இந்தியாவிடம் சென்றது போன்றும், சந்திரிகா குமாரதுங்க நோர்வேயை ஆதரித்தது போன்றும், மகிந்த ராஜபக்ச யாரை பிடிப்பதென்பதே கேள்வியாக இருக்கும். அதாவது, இந்தியாவிடமா அன்றி நோர்வே இடமா? அன்றி வேறு யாரிடமா என்பதே ஆகும்.

ஆனால், மகிந்த யாரை ஆதரித்தாலும், பிடித்தாலும் இனப்பிரச்சினைக்கு மகிந்தவின் சிந்தனைக்கு ஏற்ப தீர்வொன்றைக் கண்டுவிட முடியாது. ஏனெனில் இனப்பிரச்சினைக்கான தீர்வு சிங்களப் பேரினவாதத்தினரோ, மகிந்தவினரோ சிந்தனைக்கு உட்பட்டதாக இல்லை. சிங்களவருக்கும் அது புரியவில்லை. ஆனால் இதனைச் சர்வதேசம் இன்று புரிந்து கொண்டுள்ளது.

-ஜெயராஜ்-

வெள்ளிநாதம் (18.07.08)

Comments