பலம்போல வெளித்தோன்றும் மகிந்த ஆட்சியின் பலவீனங்கள்

சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அதிகாரத்திற்கு இப்போது சிறிலங்கா பாராளுமன்றம் ஒரு பலவீனமான விடயமாகவே இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அவர் எவ்வளவு தூரம் தன்வசம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு 'பெரும்பான்மை"யைப் பெற்றுக்கொண்டு விட்டபோதிலும் இது ஒரு நம்பிக்கையற்ற பலவீனமான பெரும்பான்மை என்பது அவருக்கு நன்கு தெரியும்.

ஏனெனில் அவரது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் சாம, பேத, தான, தண்டம் என்பனவற்றைப் பிரயோகித்தே இவர்களைத் தம்வசம் இழுத்துக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

மகிந்தவின் வசம் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றில் அவரது மிரட்டலுக்குப் பணிந்தோ அல்லது பணத்திற்கோ பதவிக்கோ பணிந்தோ அவருடன் இணைந்துள்ளனர். இதனால் அவர்களை தம்வசம் வைத்திருப்பதற்காக மாபெரும் அமைச்சரவையொன்றையும் அவர் அமைக்க வேண்டி ஏற்பட்டது.

இந்த அமைச்சரவையானது மகிந்தவுக்குப் பெரும் சுமையானதாக மாறிவிட்டது. அமைச்சுக்களின் செலவீட்டிற்கான நிதியானது பெரும்தொகையாக, இன்று மகிந்த அரசாங்கம் எதிர்கொள்கின்ற நிதி நெருக்கடிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இது இருக்கின்றது.

இந்நிலையில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றி எண்ணியே பார்க்க முடியாத நிலையில் மகிந்த உள்ளார். அதேவேளை மேலும் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சிகளிலிருந்து பிரித்தெடுக்கும் கைங்கரியத்தில் அவர் ஈடுபட்டிருப்பதாகவே கருதமுடியும்.

உதாரணமாக மாகாணசபைத் தேர்தலுக்கு முன்மூன்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து ஐ.தே.க.விற்கு தேர்தலில் ஓர் பின்னடைவை ஏற்படுத்த மகிந்த திட்டமிட்டுள்ளார். இது மேலும் அவருக்குப் பலம் சோர்க்கும் எனக்கருதிவிட முடியாது. நீண்ட நோக்கில் இது மேலும் பலவீனப்படவே வழி வகுக்கின்றது.

அதாவது, ஆட்சியாளர்கள் தற்போது தம்மிடம் உள்ள அதிகாரங்களைப் பலப்படுத்தி தக்கவைத்துக் கொள்ளும் வகையிலான காய்நகர்த்தல்களை மட்டுமல்ல, அடுத்த தேர்தல்களை இலக்குவைத்தும் அவற்றைச் செய்வார். இவ்வகையில் பார்த்தால் இந்தப் பிளவு வேலைகள் மகிந்தவிற்குப் பலவீனமானதாகவே மாற வாய்ப்புகள் உண்டு.

இன்று சிறிலங்காவின் இந்தப் பெரிய அமைச்சரவை சாதகமான விளைவுகள் எதனையும் ஏற்படுத்தியதாகத் தெரியாத நிலையில் இவ்வாறானவர்களின் கட்சித் தாவல்களுக்கு விலையாக அமைச்சரவையை மேலும் பெருப்பித்தால் அது மகிந்தவிற்கு மேலும் பலவீனத்தையே ஏற்படுத்தும். அது மட்டுமல்லாது இவ்வாறு இணைந்து கொண்டிருப்பவர்களும் இணைய முன்வருபவர்களும் மகிந்தவுக்கு என்றுமே நம்பிக்கைக்குரியவர்களாகவும் மகிந்தவுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் தொடர்ந்து செயற்படுவார்கள் என நம்பிக்கைகொள்ள முடியாது. மகிந்தவின் அதிகாரம் ஆட்டம் காணத்தொடங்க இவர்களும் காணாமல் போய்விடவே வாய்ப்புண்டு.

அடுத்த பொதுத்தேர்தல் சனாதிபதித் தேர்தல் நோக்கிய செயற்பாடுகளிலும் மகிந்த ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற போதிலும் அவரின் செயற்பாடுகள் அவர் நினைப்பதற்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன.

அவரது எதிர்காலத்துக்கான முக்கிய முதலீடான யுத்தத்தின் வெற்றியில் அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் அது உடனடியாகக் கிடைத்துவிட முடியாது என்பதும் அவருக்குப் புரிந்திருக்கலாம். உண்மையில் யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியாது என்ற முடிவுக்கு அவர் விரும்பினாலும் வந்துவிடமுடியாது.

இதனையே ஜே.வி.பி.யின் முன்னாள் பிரச்சாரச் செயலாளரும் தேசிய விடுதலைப் முன்னணியின் தலைவருமாகிய விமல் வீரவன்ச யுத்தத்தை நிறுத்தினால் மகிந்த ஆட்சிக்கு அதுவே இறுதி ஆகிவிடும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் யுத்தத்தின் அறுவடையை அவர் இப்போது பெறமுடியாவிட்டாலும் அதனால் ஏற்பட்ட பாதக விளைவுகள் அவரது அரசைத் துரத்தத் தொடங்கிவிட்டது. நல்லாட்சி என்ற நிலையிலிருந்து அவரது ஆட்சி என்றோ விலகிச் சென்று தோல்வியடைந்த ஆட்சியாக மாறிவிட்ட நிலையில் யுத்தத்தை ஆதரித்த சிங்கள மக்களில் பலர் இன்னமும் யுத்தத்தை ஆதரித்தாலும் விலைவாசி ஏற்றத்தால் தமது வாழ்வியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தொடர்ந்து சகிக்கும் நிலையைக் கடந்துவிட்டதாகவே கூறலாம்.

குறிப்பாக உழைக்கும் வர்க்கம் இன்று இந்த நிலைக்கு வந்துவிட்டது. இதற்கு மகிந்த நடத்துகின்ற யுத்தத்தில் ஏற்பட்ட சலிப்பு என்பதைவிட மகிந்த ஆட்சி புரிகின்ற ஊழல்கள், முறைகேடுகள் என்பவற்றில் ஏற்பட்ட கோபமே காரணம் எனக் கூறலாம். இவர்களுக்கு யுத்தம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள படம் மட்டும் இந்தக் கோபத்தை ஆற்றிவிடப் போதுமானதாக இல்லை.

இதேவேளை, மகிந்த ஆட்சிக்கு இன்று வேறொரு சவாலாக அமைந்துவிட்ட விடயம் ஊடகவியலாளர்களை அவர் கையாள்கின்ற விதமாகும். யுத்தத்தில் ஏற்படுகின்ற பின்னடைவுகளை சிங்கள ஊடகவியலாளர்கள் பெரிதுபடுத்தி படையினரின் உளவுரனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு ஒருபோதுமே விரும்பமாட்டார்கள். ஆனால் மகிந்தவும் அவரது சகோதரர்களும் பொதுப்பணத்தை நேரடியாகவே கையாளுவது தொடர்பில் மௌனம் காக்க இந்த ஊடகங்கள் தயாராக இல்லை.

ஊடகவியலாளர்களை மகிந்த பல தடவைகள் தமது வதிவிடத்திற்கு அழைத்து விருந்து வைக்கிறார். அவர்களுக்கு தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால் ஊடகங்கள் ஊழல், முறைகேடுகளை வெளியிடாது இருந்துவிடத் தயாராக இல்லை.

இதன் காரணமாக மகிந்தவின் ஊடகவியலாளர்களை அணைத்துச் செல்லும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட இப்போது ஊடகவியலாளர்களைத் தண்டித்து வசப்படுத்தும் முயற்சியில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார்.

இது ஊடகவியலாளர்களை நெருக்கடிக்குள் தள்ளி விட்டிருக்கின்றபோதும் அது மகிந்த ஆட்சியை மேலும் மேலும் சிக்கலுக்குள் கொண்டுபோய் விட்டுள்ளது.

அண்மைய சம்பவங்கள் குறித்து வெளியான தகவல்கள் இந்த ஊடகவியலாளரை மிரட்டும் கைங்கரியத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதியின் நேரடி ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறது. இது தனிப்பட்ட ரீதியிலானதா? அல்லது ஆட்சியாளருடன் சம்பந்தப்பட்டதா? எனத் தெரியவில்லை. ஆனால் தனிப்பட்ட ரீதியில் இராணுவத் தளபதி சொந்தக் காரணங்களுக்காக இதனைச் செய்தாலும் பெயர் மகிந்தவுக்கே கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை இச்செயற்பாட்டிலிருந்து இராணுவத் தளபதியை மகிந்தவால் தடுத்துவிடவும் முடியாது.

இப்பொழுது பல முதன்மை ஊடகவியலாளர்கள் எழுதுவதைத் தவிர்த்துவிட்டனர். பலர் மகிந்தவுக்கு இசைவாக எழுதவும் கூடும். ஆனால் இது எதுவரை எனில் மகிந்த தான் யுத்தத்தில் வெற்றிபெற்று வருவதாக நம்பவைக்க முடியும்வரையுமேயாகும். அதற்குப் பின்னர் மகிந்தவால் இவர்களை மட்டுமல்ல இன்றைய அவரது அமைச்சர்களையும் கூடக் கட்டுப்படுத்தி விடமுடியாது.

அது மட்டுமல்லாது ஊடகங்கள் இவருக்கு எதிரான பாரிய பிரச்சாரத்திலும் ஈடுபடத் தொடங்குமாயின் மகிந்தவின் திட்டங்கள் அனைத்துமே தவிடுபொடியாகிவிடும்.

எனவே மகிந்தவின் இன்றைய தாரக மந்திரமாக யுத்தம் என்பது மட்டுமே இருக்கமுடியும்.

-வேலவன்-

வெள்ளிநாதம் (11.07.08)

Comments