சிரிப்பு அரசியல்

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை செல்போன் போன்ற "அடிப்படை' வசதிகள் கூட இல்லாமல் மக்கள் எப்படித்தான் வாழ்ந்தார்களோ என்று எண்ணி எண்ணி இன்றைய இளைஞர்கள் வியந்து கொண்டிருக்கிறார்கள். இன்று பெரு நகரங்களாக இருக்கும் இடங்களில்கூட கடந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை மின்சாரமே கிடையாது என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாகத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பெரும்பான்மை மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்களுக்கும் கூட இந்த வரிசையில் இடமுண்டு. மின்சாரமும் ஊடகங்களும் வருவதற்கு முன் பொழுதுபோக்குவதற்கு மக்கள் என்னதான் செய்துகொண்டிருந்திருப்பார்கள்?

3 ஆயிரம் ஆண்டுகளாக ராமாயணமும் மகாபாரதமும் கேட்டுத்தான் சாதாரண இந்தியனின் மாலைப்பொழுது கழிந்திருக்கிறது. செய்தித்தாள்களும் தொலைக்காட்சியும் வந்தபிறகே பொழுதுபோக்கின் தன்மை முற்றிலும் மாறிப்போய்விட்டது.

சராசரி மக்களுக்கு நாள்தோறும் ஓர் அதிர்ச்சித் தகவல் அளிப்பதற்காக இன்றைய தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பாளர்கள் நிறைய யோசிக்கிறார்கள். நித்தம் ஓர் அதிர்ச்சி, சோகம், நகைச்சுவை உள்ளிட்ட நவரசங்களையும் மக்களுக்கு வழங்குவதற்காக அவர்கள் படாதபாடுபடுகிறார்கள்.

உதாரணத்துக்கு சில நாட்களுக்கு முன் பிகார் சிறையில் இருந்து சத்யேந்திர துபே என்ற கொலைக் குற்றவாளி மீண்டும் தப்பிவிட்டதாக "அதிர்ச்சித் தகவலை தொலைக்காட்சி ஒன்று கூறியது. இரண்டாண்டுகளுக்கு முன் அவர் எப்படித் தப்பினாரோ அதே தந்திரத்தை இப்போதும் கையாண்டார் என்ற உபரித் தகவலையும் தந்தது. இந்திய காவல்துறை அமைப்பை நன்கு தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியெல்லாம் அதிர்ச்சியாக இருக்காது என்பது வேறு விடயம்.

பணவீக்கம் அதிகரிப்பு, பங்குச் சந்தை வீழ்ச்சி போன்றவையெல்லாம் தொலைக்காட்சிகளின் அதிர்ச்சித் தகவல் பட்டியலில் சேரும். செய்திகளில் சோகமும் வேண்டும் என்பதற்காக ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளத்தையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவுக்காக வாடுவதையும் காட்டுவது தொலைக்காட்சிகளின் வாடிக்கை. அவற்றைப் பார்க்கும்போது கடந்த ஆண்டே பதிவு செய்த காட்சிகளை மீண்டும் ஒளிபரப்புகிறார்களோ என்றுகூட நமக்குச் சந்தேகம் ஏற்படுவதுண்டு. அந்த அளவுக்கு ஒரே மாதிரி மழை, ஒரே மாதிரி வெள்ளம்.

அதிர்ச்சித் தகவல்களுக்கு அடுத்ததாக தொலைக்காட்சி செய்திகளில் தவறாமல் இடம்பெறுவது நகைச்சுவைக் காட்சி. அண்மையில் தொலைக்காட்சியில் நான் கண்டு ரசித்த நகைச்சுவைக் காட்சிகள் இரண்டைப் பற்றி இப்போது பார்ப்போம்.

முதல் காட்சி, சவூதி அரேபிய நகரான ஜெட்டாவில் நடந்த சர்வதேச எண்ணெய் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் கூட்டத்துக்குச் சென்ற நமது பெற்றோலிய அமைச்சர் முரளி தேவ்ராவை நிருபர் பேட்டி காண்கிறார்.

ஈரான் இந்தியா எரிவாயுக் குழாய் திட்டத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அமைச்சரிடம் கேட்கிறார் நிருபர். சிறிது நேரம் சீரியஸாக சிந்திப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டிருந்த அமைச்சர், "நேற்றிரவுதான் ஈராக்கின் பெற்றோலிய அமைச்சருடன் இதுகுறித்துப் பேசினேன்' என்றார். ஈரான் எரிவாயுக் குழாய்க்கும் ஈராக் அமைச்சருக்கும் என்ன சம்பந்தம் என நிருபர் குழம்பிக் கொண்டிருந்தபோது, திடீரென நினைவு வந்தவராய் ஈரான் என்று திருத்திக்கொண்டார் அமைச்சர்.

அந்த தொலைக்காட்சி பேட்டியின் மூலம் எந்த நாட்டு அமைச்சருடன் தேவ்ரா பேச்சு நடத்தினார் என்பதை யாரும் தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்க முடியாது. நம் இஷ்டப்படி மூன்று வழிகளில் ஊகித்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒன்று, அமைச்சர் வாய் தவறி ஈரானுக்குப் பதிலாக ஈராக் என்று சொல்லியிருக்கலாம். அல்லது இரு நாட்டு அமைச்சர்களிடமும் ஒருவேளை பேச்சு நடத்திக்கொண்டிருக்கலாம். அதுவும் இல்லையென்றால் ஈரான் எரிவாயுக் குழாய் மாதிரி ஈராக்கிலிருந்தும் எரிவாயுக் குழாய் அமைக்க இந்தியா பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ?

எரிவாயுக் குழாய் திட்டத்தில் இன்னும் சில சிறிய பிரச்சினைகள் மட்டுமே தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது என்று தேவ்ரா திரும்பத் திரும்பக் கூறினார். ஆனால், என்னென்ன பெரிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன. எவை தீர்க்கப்படவில்லை என்பதையெல்லாம் அவர் குறிப்பிடவே இல்லை. எரிவாயுக் குழாய் பற்றி பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசுவதற்கு வாய்புக் கிடைக்கவில்லை என்றுவேறு குறைபட்டுக் கொண்டார்.

நம் நாட்டுத் திரைப்படங்களில் மகிழ்ச்சியான முடிவு இருப்பதைப்போல பேட்டியும் மகிழ்ச்சியாக முடியட்டுமே என்று நினைத்தாரோ என்னவோ "இன்னும் நான்கே வாரங்களில் எரிவாயுக் குழாய் ஒப்பந்தம் கையெழுத்தாகும்' என்றார். அட!

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கூடவே கூடாது என்று பிடிவாதமாக இருக்கும் இடதுசாரிகள், ஈரானுடன் எரிவாயுக் குழாய் ஒப்பந்தம் செய்துகொள்வதை விரைந்து முடிக்க வேண்டும் என்கின்றனர். அதனால்தான் அணுசக்தி ஒப்பந்தத்தை தள்ளிப்போட்டு வந்த அரசு, எரிவாயுக் குழாய் ஒப்பந்தத்தை ஒரே நாள் பேச்சில் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதற்காக தேவ்ராவை ஜெட்டாவுக்கு அனுப்பியது போலும். அவரும் ஏதோ ஒப்பந்தமே கையெழுத்தாகும் அளவுக்கு வெற்றிகரமாகப் பேச்சு நடத்தி முடித்துவிட்டதாகப் பேட்டியளிக்கிறார். அப்படியானால், இந்தியாவின் சர்வதேச விவகாரங்களை தன்னந்தனியாகக் கவனித்துக்கொள்ளும் முழுத் தகுதியும் தேவ்ராவுக்கு உண்டு!

பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க அவரை அனுப்பிவிட வேண்டியதுதான். அவரும் தன் சர்வ வல்லமையையும் பயன்படுத்தி மூன்றே வாரங்களில் (?) ஒரு உடன்பாட்டை எட்டிவிடுவார். ஹ..!

இது ஒரு நகைச்சுவைக் காட்சியாக இருந்தாலும், நூறு கோடி மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்புகளில் இந்த மாதிரி மனிதர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும்போது மனதில் கொஞ்சம் வருத்தமும் கலந்துவிடுகிறது.

அடுத்த நகைச்சுவைக் காட்சியின் கதாநாயகர் நமது நிதியமைச்சர். இடம் அதே ஜெட்டா நகர். மிகவும் சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்த அமைச்சர், "சில வாரங்களில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டொலருக்கு கீழே சரியும்' என்றார். நாளை முதல் சூரியன் மேற்கே உதிக்கும் என்று கூறுவது அல்லது நான்கே நாளில் வறுமையை ஒழித்துவிடுவோம் என்று உறுதிமொழி அளிப்பது ஆகியவற்றுக்கும் கச்சா எண்ணெய் விலை பற்றி அமைச்சர் பேசியதற்கும் வித்தியாசம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எண்ணெய் விலை உயர்ந்ததால்தான் பணவீக்கம் அதிகரித்திருப்பதாக அமைச்சர் கூறியதையும் நாம் கவனிக்க வேண்டும். ஏப்ரலுக்கு முன்பே பணவீக்கம் வேகமாக அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது. பெற்றோலியப் பொருட்களின் விலை உயர்வு ஜூன் முதல் வாரத்தில்தான் அமுலுக்கு வந்தது. அப்படிப்பார்த்தால் இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் உண்மையான பணவீக்கம் பற்றித் தெரியவரும்.

கச்சா எண்ணெய் விலை குறையப் போவதாக தாம் கூறிய கருத்து, எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளுக்கு உற்பத்தி நாடுகள் குறைந்த விலைக்கு எண்ணெய் தர வேண்டும் என்பதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கை என்றும் நிதியமைச்சர் கூறினார். இப்படியே போனால், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காக இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்களை தொழிலதிபர்கள் தர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருத்தைக் கூறினேன் என்றுகூட அவர் கூறுவார். இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, "ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 150 டொலரை எட்டும்' என அதே தொலைக்காட்சியில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் கூறியதாக செய்தி வெளியானது. அமைச்சருக்குத்தான் எவ்வளவு நகைச்சுவை உணர்வு!

இந்த இரு காட்சிகளிலும் நாம் நாள் முழுவதும் சிரிப்பதற்குத் தேவையான நகைச்சுவை நிறைந்து கிடக்கிறது. நாடகத் தனமும் கூட.. புராணக் கதைகளுக்கும் அரசியல்வாதிகளின் நாடகங்களுக்கும் ஒரே வித்தியாசம்தான். பண்டைய கதாபாத்திரங்களில் தேவர்கள், அசுரர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவுகள் உண்டு. ஆனால், இன்றைய அரசியல்வாதிகளில் அதுபோன்ற பிரிவுகளெல்லாம் கிடையாது. அனைவரும் ஒரே பிரிவுதான். அது என்ன என்பது மக்களுக்கே தெரியும்.

(கட்டுரையாளர் முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Comments