யுத்தநிறுத்தம் முடிவுக்கு வருகிறதா?

மன்னாரில் ஏ32 வீதியால் முன்னேறிக் கொண்டிருக்கும் சிறிலங்காப் படையினர் விடத்தல்தீவு, இலுப்பக்கடவை போன்ற இடங்களை கைப்பற்றி விட்டனர். தற்பொழுது படையினர் இலுப்பக்கடவையையும் தாண்டி மேலும் சில கிலோமீட்டர்கள் முன்னேறி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விடத்தல்தீவும் இலுப்பக்கடவையும் விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்புக்கள் இன்றியே சிறிலங்காப் படைகளிடம் வீழ்ந்தன. விடத்தல் தீவையும் இலுப்பக்கடவையையும் கைப்பற்றுவதற்கு முதல், இப் பகுதிகளுக்கு வரக்கூடிய வினியோக வழிகளை சிறிலங்காப் படைகள் கைப்பற்றிக் கொண்டதால், விடுதலைப் புலிகளும் மறிப்புச் சமர்களைச் செய்யாது பின்வாங்கிக் கொண்டனர்.

இனி ஏ32 வீதியில் சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் முன்னேறி, வெள்ளாங்குளம் பகுதியையும் கைப்பற்றுவார்களாயின், மன்னார் மாவட்டம் முற்று முழுதாக சிறிலங்காப் படைகளின் வல்வளைப்பின் கீழ் வந்து விடும்.

மன்னார் நிலமை இவ்வாறு இருக்க, வவுனியாவில் இருந்து நகர்வினை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மங்குளத்திற்கு மேற்காக உள்ள துணுக்காயை அண்மித்த பகுதி வரை முன்னேறி உள்ளதாக தெரிகிறது. அத்துடன் மாங்குளத்திற்கு தென்மேற்காக உள்ள வவுனிக்குளம் வரை படையினர் முன்னேறி விட்டதாக சிறிலங்காப் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

மல்லாவியில் இருந்து 3 கிலோமீட்டர்கள் தொலைவிலேயே தற்பொழுது தாம் நிலை கொண்டுள்ளதாக சிறிலங்காப் படைத் தரப்பு கூறுகின்றது. வவுனிக்குளப் பகுதியைக் கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கின்ற படையினர், சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள மல்லாவி, வன்னிவிளாங்குளம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவார்களேயானால், அதன் பிறகு மாங்குளம் சிறிலங்காப் படைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

மாங்குளத்தின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள மல்லாவி, மாங்குளத்தில் ஏறக்குறைய 15 கிலோமீற்றர் தொலைவிலேயே அமைந்துள்ளது.

ஆனால் மாங்குளம் நோக்கிய நகர்வு மிகவும் கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விடுதலைப் புலிகள் ஏ9 பாதை இருக்கும் திசையை நோக்கி சிறிலங்காப் படையணிகளை நெருங்கவிடாது தொடர்ந்து கடும் மறிப்புச் சமரில் ஈடுபட்டு வருவதே அதற்கு காரணம் ஆகும்.

ஒரு புறம் விடத்தல்தீவு, இலுப்பக்கடவை என்றும் மூன்றுமுறிப்பு, பனங்காமம், ஒட்டன்குளம் என்றும் சிறிலங்காப் படையினர் வேகமான வல்வளைப்புக்களை செய்தாலும் சில இடங்களில் சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர்.

உதாரணமாக பாலமோட்டைப் பகுதியில் ஏறக்குறை ஒன்றரை வருடமாக நடந்து வருகின்ற சண்டைகளை குறிப்பிடலாம். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வன்னி மீதான நடவடிக்கையை சிறிலங்காப் படையினர் பாலமோட்டை மீதான நகர்வின் ஊடாகத்தான் ஆரம்பித்தார்கள். அதன் பிறகு பாலமோட்டைக்கு அப்பால் வடமேற்குத் திசையாக சிறிலங்காப் படையினர் ஏறக்குறைய 25 கிலோமீட்டர்கள் முன்னேறிச் சென்று விட்டார்கள். அப்படி இருந்தும் இன்று வரை பாலமோட்டையை சிறிலங்காப் படையினரால் முற்று முழுதாகக் கைப்பற்ற முடியவில்லை.

ஜெயசிக்குறு காலத்தில் புளியங்குளத்தில் வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய தீரம் மிகுந்த மறிப்புச் சமருக்கு ஒத்ததான ஒரு சண்டையை பாலமோட்டையில் வைத்து விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரத்தில் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் சிறிது தூரம் முன்னேறினர். விடுதலைப் புலிகளின் காப்பரண்களையும் கைப்பற்றிக் கொண்டனர். உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகள் சிறிலங்காப் படையினரை விரட்டி அடித்தன.

இதே போன்று மூன்றுமுறிப்பிலும் கிழக்குத்திசையில் சிறிலங்காப் படையினர் முன்னேறி விடாத வண்ணம் விடுதலைப் புலிகள் மறிப்புச் சண்டை செய்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் வவுனிக்குளம் பகுதியை கைப்பற்றி விட்டதாக தெரிவிக்கும் சிறிலங்காப் படையினர் மல்லாவி போன்ற பகுதிகளை கைப்பற்ற முனைகின்ற போது, விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பை சந்திக்கக் கூடும்

மன்னாரில் தொடர்ந்து முன்னேறுவதை வைத்து சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டதாக பெரும் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தப் பரப்புரைக்கு வாய்ப்பாக சில இடங்களை சிறிலங்காப் படையினர் வேகமாகக் கைப்பற்றிக் கொண்டது அமைகின்றது. அத்தடன் விடுதலைப் புலிகளின் உடல்கள் சிங்களப் படைகளிடம் சிக்குப்படுவதும் சிறிலங்காப் படைகளின் பரப்புரைக்கு உரம் சேர்க்கிறது.

கடந்த வாரத்தில் விடுதலைப் புலிகளின் 9 உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்திருப்பதாக சிறிலங்காப் படைத் தரப்பு தெரிவித்திருந்தது. தற்பொழுது வவுனிக்குளத்தை கைப்பற்றும் சண்டையின் போதும், விடுதலைப் புலிகளின் 7 உடல்களை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்காப் படையினர் கூறுகின்றனர்.

வீரச் சாவடைந்த மாவீரர்களின் உடல்களை மீட்பதற்காக சண்டை செய்து, அதில் வீரச்சாவடைந்த புலி வீரர்கள் பலர் உண்டு. விடுதலைப் புலிகளின் உடல்கள் எதிரியிடம் சிக்கி விடக் கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் பொதுவாக கவனமாக இருப்பார்கள்.

ஆனால் தற்பொழுது வன்னி மீதான நடவடிக்கை அதிகளவில் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினரால் நடத்தப்படுகிறது. மிக கடுமையான சூட்டு வலுவை பயன்படுத்தி சிறிலங்காப் படையினர் நடத்தி வரும் தாக்குதலில், அதிகரித்த ஆளணி இழப்புக்கள் ஏற்படாத வண்ணம் தற்காப்புத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே விடுதலைப் புலிகளின் உடல்கள் சிறிலங்காப் படைகளிடம் அகப்படும் சம்பவங்கள் நடக்கின்றன.

இவைகளைக் கொண்டு சிறிலங்கா அரசு பெரும் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தம்மால் முகமாலையில், மணலாற்றில், பாலமோட்டையில் முன்னேற முடியாது இருப்பதை பற்றி வாய் திறப்பதே இல்லை.

சிறிலங்காப் படைகள் பாரிய அளவில் மேற்கொண்டிருக்கும் படை நடவடிக்கையை குறைந்த வளங்களோடு எதிர்கொண்டு வரும் விடுதலைப் புலிகள், தமக்க சாதகமற்ற முனைகளில் எதிரியை குறிப்பிட்டளவு தூரம் முன்னகர அனுமதிப்பார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒரு விடயமே. இதை வைத்து விடுதலைப் புலிகளின் பலத்தை எடை போட முடியாது.

பத்திற்கும் மேற்பட்ட முனைகளில் முன்னகர முற்படும் சிறிலங்காப் படைகளால் ஓரிரண்டு முனைகளின் மட்டுமே முன்னேற முடிகிறது. சிறிலங்காப் படையினருக்கு இராணுவ ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பெரும் பலனை அளிக்கக் கூடிய மணலாறு, முகமாலை போன்ற முனைகளில் சிறிலங்காப் படையினர் முன்னேற முடியாது தேங்கி நிற்கின்றனர். இந்த உண்மைகள் சிறிலங்கா தரப்பின் பரப்புரைகளில் அமுங்கிப் போய்விடுகின்றன.

போரில் எப்படியோ, பரப்புரையில் சிறிலங்காவின் கைதான் ஓங்கியிருக்கிறது என்பதை இங்கே ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். தகவற் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனை தமிழர் தரப்பு அனுபவித்த காலங்கள் போய் சில ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலை ஆரம்பிக்கும் போது, சிறிலங்கா அரசின் இந்தப் பரப்புரைகள் எல்லாம் ஆட்டம் கண்டு விடும். விடுதலைப் புலிகளின் மற்றைய அணிகள் சிறிலங்கா அரசின் வன்னி நடவடிக்கையை எதிர்கொள்கின்ற அதே வேளை, விடுதலைப் புலிகளின் அதி சிறப்புப் படையணிகள் பெரும் போருக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் பாரிய வலிந்த நடவடிக்கைக்கான காலம் நெருங்கிக் கொண்டு வருகின்றது.

சார்க் மாநாட்டை ஒட்டி விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தம் அறிவித்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈழப் போர் 4 ஆரம்பித்த பொழுது, மூதூரிலும் மண்டைதீவிலும் வலிந்த படை நடவடிக்கைகளை மேற்கொண்ட புலிகள் அதன் பின்பு தற்காப்புச் சண்டைகளை மட்டுமே நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து “யுத்த நிறுத்தத்தை” கடைப்பிடித்துத்தான் வருகிறார்கள்.

தற்போதைய அறிக்கையிலும் சிறிலங்காப் படையினர் முன்னகர முயன்றால், தற்காப்புச் சண்டையில் மட்டும் ஈடுபடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலைதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆனால் ஓகஸ்ட் நான்காம் திகதி வரை யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள்.

இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு சார்க் மாநாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல் நகர்வாக இருந்தாலும், இன்னும் ஒரு கேள்வி இதற்குள் இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளாக கடைப்பிடிக்கும் “யுத்த நிறுத்தத்தை” விடுதலைப் புலிகள் ஓகஸ்ட் 4 அன்று முடிவுக்கு கொண்டு வரப் போகிறார்களா என்பதே அந்தக் கேள்வி.

- வி.சபேசன் (24.07.2008)

Comments