மீனவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள்: தமிழகத்தின் சீற்றத்தால் பலன் உண்டா?

இலங்கைக் கடற்படையினரால் ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய மீனவர்களும் சொல்லொணாத் துன்ப, துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆயுதம் ஏந்திய படையினர் அப்பாவிப் பொதுமக்களைத் துச்சமாக நினைத்து நடத்தும் அட்டகாசங்கள், தாக்குதல்களால் இப்போது தமிழகம் பொறுக்கமுடியாத எல்லையைக் கடந்திருக்கின்றது.

தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையுமே தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள், அராஜகங்கள் கொதிக்க வைத்திருக்கின்றன. அங்குள்ள எல்லாத் தரப்பினருமே சீற்றத்துடன் இவ்விவகாரம் குறித்துத் தங்களின் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் ஆளும் தி.மு.க. தரப்பு, இந்த மீனவர்கள் விவகாரத்தை ஒட்டி எழுந்துள்ள பதற்றமான நிலையை அடுத்து, இவ்விடயத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காகத் தனது உயர்நிலை அமைப்பான செயற்றிட்டக் குழுவின் கூட்டத்தை நாளை அவசர அவசரமாகக் கூட்டுகின்றது.

இவ்விவகாரத்தில் உடன் தலையிட்டு, இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் காத்திரமான உறுதியான தெளிவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதற்குத் தமிழக அரசு விரைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கின்றார்.

மத்தியில் ஆட்சியிலிருக்கும் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.வீ. தங்கபாலுவும் இலங்கைக் கடற்படையின் இத்தகைய அட்டூழியத்தைக் கண்டித்துக் காட்டமான அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

தமிழக மீனவர்கள் மீதான காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளமையுடன், மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் வரை, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யத் துடிக்கும் இந்திய மத்திய அரசின் முயற்சிக்கு ஆதரவு தரமாட்டோம் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நிபந்தனை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார்.

கச்சதீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கின்றார்.

இலங்கை இராணுவத்திடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழரின் இக்கட்டு நிலையே இன்று இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுநர் டாக்டர் ராமதாஸ், இந்நிலைமை பொறுத்துக்கொள்ளக் கூடியதல்ல என்றும் காட்டமாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

தமிழக மீனவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள இந்திய சமத்துவக் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், மீனவர் மீதான தாக்குதல்களை ஆட்சேபிக்கும் வகையில் இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விளையாடச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கண்மூடித்தனமாகக் கொல்லப்படுவதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் முன்னால் எதிர்வரும் 30 ஆம் திகதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அறிவித்திருக்கின்றார்.

தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப் படைகளின் வெறியாட்டத்தைக் கண்டித்து எதிர்வரும் 21 ஆம் திகதி நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் அறிவித்திருக்கின்றார்.

தமிழக மீனவர்கள் மீதான இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் குறித்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே ஒன்றுபட்டுக் கொதித்துப்போய் இருக்கின்றன என்பதையே இந்தத் தகவல்கள் நமக்குக் காட்டுகின்றன.

இந்திய மத்திய அரசைத் தமிழகமும், அதன் முதல்வர் கலைஞர் கருணாநிதியுமே இன்று வழி நடத்துகின்றார்கள் என்று தமிழகத்தின் ஆளும் தி.மு.க. சார்பில் "தம்பட்டம்' அடிக்கப்பட்டாலும் கூட

இவ்வாறு தமிழக மீனவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு வருகின்றமை குறித்துத் தமிழக மக்களும், தமிழகத்தின் சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தில் சீற்றமுற்றிருந்தாலும் கூட

இவ்விவகாரத்தில் இந்திய மத்திய அரசைக் கொண்டு, பலனளிக்கக்கூடிய காத்திரமான நடவடிக்கை எதனையும் தமிழகத் தரப்பால் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம்.

இலங்கையிலும், தமிழகத்திலும் வாழும் தமிழர்களின் நலனை விட அந்த மக்களின் பக்கத்தில் இருக்கும் நீதி, நியாயங்களை விட இப்பிராந்திய அரசியலில் தனது புவியியல், கேந்திர நலன்கள் மட்டுமே முக்கியமானவை என்று கருதும்

"குளறுபடித்தனமான' புதுடில்லி அதிகார வர்க்கத்தின் சிந்தனைக்கு புதுடில்லி ஆளும் வர்க்கம் கட்டுப்பட்டிருக்கும் வரை, இத்தகைய அநீதிகள், அநியாயங்கள் தொடர்பான விடயத்தில் புதுடில்லியிடமிருந்து காத்திரமான செயற்பங்களிப்பை எதிர்பார்க்கவே முடியாது. அதுதான் மெய்மை நிலை.

தமிழக அரசியல் கட்சிகளும் தமிழகத் தலைவர்களும் வெறும் பந்தாவுக்குக் கண்டன அறிக்கைகளை விட்டு, ஆர்ப்பாட்டங்களை நடத்தி, கொடும்பாவிகளை எரித்து, மேடைகளில் முழங்கிவிட்டு அடங்கிப் போகவேண்டியதுதான்.


Comments