கம்பளம் விரித்தது போன்ற சிங்களப் படையெடுப்பை கடிவாளமிட்டு அடக்கி வரும் புலிகள்: "விடுதலைப் புலிகள்" ஏடு

கம்பளம் விரித்தது போன்ற நகர்வுத் தந்திரத்துடன்- பெரும் நம்பிக்கையுடன்- தொடங்கப்பட்ட படை நடவடிக்கை படையினருக்கு பாரிய இராணுவ நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை காட்டமாக நடத்துவதற்கான தெரிவுக்கு, சிங்களப் படையின் விரிந்த நகர்வு இடம் கொடுத்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரவழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (04.07.08) வெளியான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 141 ஆவது இதழில் "வன்னிப்போர் தீவிரமடைகிறது" எனும் தலைப்பில் வெளியான முகப்புச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வன்னிப் போர் அரங்கம் நான்கு பெரிய களங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. முதலில் மன்னார் மற்றும் வடபோரரங்கக்களங்களில் சிங்களப்படைகள் சண்டைகளைத் தொடங்கியிருந்தன. பின்னர், மணலாற்றுக் களமுனையில் அது சண்டைகளை விரிவாக்கியிருந்தது. இப்போது வவுனியா களமுனையிலும் தனது தாக்குதல்களை சிங்களப்படை முடுக்கி விட்டுள்ளது.

இவ்வாறு நான்கு முனைகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் சிங்களப்படைகளுக்கு எதிராக இந்த நான்கு முனைகளிலும் புலிப்படை வலிமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொள்ளுகின்ற அதேவேளை, சிங்களக் கடற்படையைக் குறிவைத்து ஐந்தாவது முனையை கடற்புலிகள் கடலில் திறந்துள்ளனர்.

நாள்தோறும் கடும் சண்டைகள் என்ற போரியல் பரிமாணத்துடன் வன்னிப்போர்க்களம் அதிர்ந்தபடியுள்ளது. வன்னிப்போர் தொடர்பாக சிங்களப்படைத் தளபதிகள் தயாரித்த இராணுவ நிகழ்ச்சி நிரலின்படி சண்டைகள் நடைபெறவில்லை என்பதே வன்னிப்போரின் முக்கிய போரியல் அம்சமாக உள்ளது.

இந்தச் சண்டைகளில் படைத்தரப்பு சந்தித்து வரும் உயிரிழப்பு அதன் உளவுரணை உடைத்துள்ளதுடள் வன்னிக்களமுனையில் அதை மெது மெதுவாக முடக்கி வருகின்றது.

"ஜெயசிக்குறு" படையினருக்கு நடந்தது போல, புலிகள் விரித்து வைத்துள்ள கொலை வலயத்தினுள் சிங்களப்படைகள் வீழ்ந்து வருகின்றன என்று இராணுவ அவதானிகள் கணிப்பிடுகின்றனர்.

ஏற்கனவே, சிங்கள இராணுவத்தளபதி சரத் பொன்சேகா போரை இழந்துவிட்டார் என்று சிங்கள ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். வெற்றிக்காக அவர் விதித்த காலக்கெடுக்கள் முடிவடைந்து விட்டன. அவர் தெரிவித்த இராணுவ ஆரூடங்கள் தோற்றுப் போய்விட்டன. படையினர் மீது வலிந்த தாக்குதல்களைத் தொடுக்கும் தருணத்தைப் புலிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். என்று அந்த ஆய்வாளர் கருத்துக்கூறியுள்ளார்.

சிங்களத்துக்கு வெற்றிகளைப் பெற்றுத்தரும் என எதிர்பார்த்த அதன் சிறப்பு டிவிசன்கள் சிதைந்துவருகின்றன.அதற்குப் பதிலாக புதிய சிறப்பு டிவிசன்களை உருவாக்க சிங்களத் தளபதிகள் முயற்சிக்கின்றனர்.

இதேவேளை, சிங்கள வான் படையினரின் வான்தாக்குதல்களும் அண்மை நாட்களில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இரவுத்தாக் குதல்களுக்கும் சிங்கள வான்படை முயற்சிகள் எடுப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கம்பளம் விரித்தது போன்ற நகர்வுத் தந்திரத்தை படையினர் பெரும் நம்பிக்கையுடன் தொடக்கியிருந்தனர்.

இப்போது அதுவே அவர்களுக்குப் பாரிய இராணுவ நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை காட்டமாக நடத்துவதற்கான தெரிவுக்கு, சிங்களப்படையின் விரிந்த நகர்வு, இடம் கொடுத்துள்ளது.

எந்த நேரத்திலும் - எந்த முனையிலும் - ஒரு ஓயாத அலைகள் பாணியிலான வலிந்த தாக்குதலைப் புலிகள் நடாத்துவார்கள் என்று சிங்களப்படைத்தலைமை அஞ்சுகின்றது.

போரைத் தனது பிரதான அரசியல் மூலதனமாக வரித்துக்கொண்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு காத்திரமான இராணுவ வெற்றியைப் பெறமுடியாது தவிக்கின்றது. பருவ மழை தொடங்க முன்னர் கீர்த்திமிக்க ஒரு இராணுவ வெற்றியைப் பெற்றுவிட ராஜபக்ச - பொன்சேகா கூட்டணி பெருமுயற்சிகள் செய்கின்றது. அதனாலேயே அண்மைய நாட்களில் வன்னிக்களம் அதிர்ந்தபடியுள்ளது.

ஜெயசிக்குறுவுக்குச் சமாதிக்கட்டியது போல சிங்களத்தின் தற்போதைய வன்னிப் படையெடுப்பிற்கும் தகுந்த பதிலடி கொடுக்கத் தயார்நிலையில் இருக்கவேண்டியது தமிழினத்தின் தேசியக்கடமையாகும். புலிகளுடன் மக்களும் இணைந்து போர்க்கள வேலைகளைப் பகிர்ந்து - சிங்கள படையெடுப்பை முறியடிக்கத் தயாராக இருப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments