மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ”மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைமாறி தடுமாறும் படைத்தரப்பு”

மட்டக்களப்பு மாவட்டத்தல் விடுதலை புலிகளின் தாக்குதல் அதிகரிக்கப்பட்டதையடுத்து நிலைமாறி தடுமாறும் சிறிலாங்கா படைத்தரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற பெயரில் அங்குள்ள பொதுமக்களை கசக்கிபிழிந்துவருகின்றனர்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்னர் விடுதலை புலிகள் சிறிலங்கா காவல்துறையினருக்கும், படைத்தரப்புக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் எதிராக தாக்குதலை அதிகரித்துள்ளனர்.

மட்டக்கப்பு நகர், மற்றம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் மற்றும் கிளைமோர் தாக்குதல் என தாக்குதல் திட்டங்கள் விரிவடைந்து காணப்படுகின்றது. கிழக்கு மாகாணம் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் சிறிலாங்கா படைத்தரப்பிற்கும் அங்கு இடம்பெற்றுவரும் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பொதுமக்களை பாதுகாப்பு கவசங்களாக பயன்படுத்துவதினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் ஆயித்தியமலையில் உள்ள காவல்துறையில் இருந்து அருகில் உள்ள குளத்திற்கு நீராடச் சென்ற காவல்துறை மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலையடுத்து தற்போது அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்களையும், பாடசாலை மாணவர்களையும் பாதுகாப்பு கவசங்களாக பயன்படுத்தி நீராடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று இப்பகுதிக்கு வரும் எவராக இருந்தாலும் எங்களிடம் தகவல் கொடுக்க வேண்டும். என கரடியனாறு பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமுக்கு பொறுப்பான அதிகாரி அப்பகுதி மக்களிடம் தெரிவித்துவருகின்றார்.

இதேபோன்று கடந்த இருவாரத்திற்கு முன்னர் வாகரை பகுதியில் விடுதலை புலிகள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பாக தகவல்களை தங்களிடம் தெரிவிக்கவில்லை என தெரிவித்து மூன்று இளைஞர்களை கடுமையான தாக்கியுள்ளனர். மட்டு நகர்க்கு வடக்கே உள்ள ஆரையம்பதியில் சிறிலங்கா படை, விசேட அதிரடிப்படை, மற்றம் காவல்துறையினர் கூட்டாக சேர்ந்து கடந்த ஒரு மாதகாலமாக சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் வீட்டியில் உள்ளவர்களின் தவல்களையும் சேகரித்துவருகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகளை பகல் வேளைகளில் மேற்கொள்ளும் சிறிலங்கா படைத்தரப்பு இரவு வேளைகளில் கணவனை இழந்து தனிமையில் வசிக்கும் வீடுகளில் தமது சேட்டைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் படையினர் எவ்வாறு உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள கூடியதாகவுள்ளது.

அதுமாத்திரமல்ல வடகிழக்கில் விடுதலை புலிகளி தாக்குதல் நடவடிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக விடுதலை புலிகளின் படைத்துறை பேச்சாளரான இராசையா இளந்திரையன் அவர்கள் தெரிவித்ததையடுத்து படையினர் மேலும் பீதியடைந்துள்ளனர். இதன் வெளிப்பாடாகவே மக்களை அச்சுறுத்திவருகின்றனர் என்பது நன்கு புலப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிகவிரைவில் ஜெயந்தன் படையணியினர் செல்வுள்ளனர் அங்கள்ள படைகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்தவும் தயார் நிலையில் உள்ளதாக அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியும் புலனாய்வு பொறுப்பாளருமான கீர்த்தி அவர்கள் தெரிவித்திருந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டம் சல்லடை போட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில இந்த மாதம் 1ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் செங்கமான் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம் மீது எறிகணைத் தாக்குதல் மற்றும் ஜனாதிபதி பயணம் செய்த உலங்கு வானுர்திக்கு பாதுகாப்பாக சென்ற வானுர்தி தாக்குதலுக்குட்பட்டதையடுத்து கிழக்கில் உள்ள படையினர் கிளிகலங்கிய நிலையில் உள்ளது மிகத் தெளிவாக தென்படுகின்றது.

மட்டக்களப்பில் படுவான்கரை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப் பகுதியில் கூட இவ்வாறான இராணுவ கெடுபிடிகள் இல்லை. என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்களும், அரசாங்க உத்தியோகஸ்த்தர்களும் பல்வேறுவிதான இராணுவ கெடுபிடிகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களுக்கு இவ்வளவு இராணுவ கெடுபிடிகள் இடம்பெற்றுவரும் நிலையில் கிழக்கு மண்ணை மீட்கப்போவதாக தெரிவித்த கருணா, மற்றும் பிள்ளையான் ஒட்டுக்குழுக்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஒட்டுக்குழுக்களினாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளையில் சிறிலங்கா படைத்தரப்புக்கு துணையாக இயங்கும் ஒட்டுக்குழு அங்குள்ள பாடசாலை செல்லும் க.பொ.த. சாதாரண தரத்தல் கல்வி கற்கும் மாணவிகளை தமது பாலியல் வல்லுறவுக்குட்படுத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாடசாலை செல்வது மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கு செல்வதில் பெரும் அச்சமடைந்துள்ளனர். மட்டு நகர்பகுதியில் வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் விசேட அதிரடிப்படையினர் மாலை நேர வகுப்புக்கு செல்லும் மாணவிகளை சோதனை என தெரிவித்து தமது சொறிச்சேட்டைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வார்த்தைகளாலும் நடவடிக்கையினால் பொதுமக்களை அச்சுறுத்திவரும் படைத்தரப்புக்கு ஒட்டுக்குழுக்களும் துணைபோவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் ஒரு புறமிருக்க பொருளாதாரங்களும் பாதிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கின்றனர். ஏறாவூர் காவல்துறைக்குட்பட்ட களுவாங்கேணி பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களிடம் பிள்ளையான் ஒட்டுக் குழுவினர் தினமும் பணம் கேட்டுக் தெர்ல்லைப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு கொடுக்காதவர்களுக்கு திருக்கை வாளினால் அடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மட்டு அம்பாறை மாவட்டங்களில் கடந்த 2006ம் ஆண்டு சிறிலங்கா படைத்தரப்பினால் வலிந்த படை நடவடிக்கையினால் இலட்சக் கணக்கான மக்களை தமது சொந்த இடங்களை விட்டு அவல வாழ்க்கை வாழ்ந்து தற்போது அவர்களின் அரைகுறை வசதிகளுடன் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் வேளாண்மை தொழிலை செய்ய முடியாத அளவுக்கு நெருக்குதல் கொடுத்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐரோப்பி குழு ஒன்று பாதிக்கப்பட்ட பொதுமக்களின் அவலங்களை கேட்டாறியாது கிழக்கு மாகாண முதல் அமைச்சர் என்ற பெயரில் பொதுமக்களை கொடுமைப்படுத்தும் ஆயுதக்குழுவின் தலைவர் மற்றும் அதன் அங்கத்தவர்களை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments