அகதிகள் தலையில் லைசென்ஸ் 'இடி'

இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வருவது, கடந்த 25 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய தேதியில் அகதி முகாம்களில் சுமார் 78 ஆயிரம் பேரும் முகாம்களுக்கு வெளியே சுமார் ஐயாயிரம் பேரும் தமிழகத்தில் அகதிகளாகத் தங்கியிருக்கிறார்கள்.

இங்கேயும் அவர்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் டிரைவிங் லைசென்ஸ்களை ரத்து செய்யப் போவதாகத் தமிழக அரசு தீடீரென சமீபத்தில் அறிவித்திருப்பது லேட்டஸ்ட் அடி!

தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக் கும் சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையரிடமிருந்து அண்மையில் ஒரு
சுற்றறிக்கை வந்திருக்கிறது.

'இலங்கைத் தமிழ் அகதிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்வது என காவல்துறை அதிகாரிகளின் சட்டம்-ஒழுங்குக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் உங்களுடைய பகுதியில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்கும் அகதிகளிடம் அதை ரத்து செய்வது குறித்து விளக்கம் கேட்டுப் பெறுங்கள்' என்பதுதான் அந்த சுற்றறிக் கையின் சாராம்சம்.

இதையடுத்து 'தங்களுக்கு வழங்கப் பட்ட ஓட்டுநர் உரிமத்தை மோட்டார் வாகனச் சட்டம் 19 (1)-ன் கீழ் ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்துடன் நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும்' என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுவருகிறது. இதனால் இலங்கைத் தமிழ் அகதிகள் பதறிப்போயிருக்கிறார்கள்.

விளக்கக் கடிதத்துடன் நெல்லை வட்டாரப் போக்கு வரத்து அலுவகத்துக்கு வந்திருந்த இலங்கை அகதி ரவீந்தர் நம்மிடம், ''இலங்கையின் போர்ச் சூழலால் குடும்பத்தையும் உறவுகளையும் பிரிந்து இங்கே வந்திருக்கோம். எங்களுக்கு உணவும் தங்கியிருக்கப் பாதுகாப்பான இடமும் கொடுத்து வருது தமிழக அரசு. அதனால் பதினெட்டு வருஷமா தமிழ்நாட்டை எங்கட சொந்த நாடு போல பாவிச்சு வாழ்ந்துட்டிருக்கோம்.

முகாமிலிருக்கும் பலரும் இலங்கையில் சொந்தத் தொழில் செஞ்சு வசதியா வாழ்ந்து வந்தவங்கதான். அவங்களால் இங்கே கஷ்டமான கூலி வேலைக்குப் போக முடியலை. அதனால் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துட்டு ஆட்டோ, வேன், லாரிகளை ஓட்டி வயிற்றைக் கழுவிக்கிட்டு இருக்கோம். அப்படியிருக்கையில் அரசின் 'லைசென்ஸ் ரத்து' அறிவிப்பால் நாங்கள் இடிஞ்சுபோயிருக்கோம்.

எங்களில் குடும்பத்துக்கு ஒருத்தராவது டிரைவர் வேலை செய்யுறாங்க. திடீர்னு அந்த வேலைக்கு ஆபத்து வந்துருச்சுன்னா, சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை வந்துரும். இதை எப்படித்தான் சமாளிக்கப் போறோமோ...'' என்று கலங்கினார்.

அவருடன் வந்திருந்த சுப்பிரமணியனோ, ''சார் நான் எட்டு வருசமா டிப்பர் லாரி ஓட்டி பிழைப்பு நடத்துறேன். எங்களோட பொழப்பைக் கெடுக்கற மாதிரி டிரைவிங் லைசென்ஸை ரத்து பண்ணப்போறதா லெட்டர் வந்ததும் பதறி அடிச்சு ஓடி வந்திருக்கோம். விளக்கம் எழுதித் தரச்சொன்னாங்க. 'எங்களோட லைசென்ஸை பறிச்சுட்டா பிழைக்க வழியில்லாமல், நடுத்தெருவுக்கு வந்துடுவோம். அதனால் எங்க மேல கருணை காட்டுங்க'னு எழுதிக் கொடுத்திருக்கேன்.

சொந்த நாட்டில் வாழ முடியாமல் உயிர் பிழைத்து ஓடிவந்திருக்கும் எங்களை இப்படித் தவிக்கவிடறது நியாயமா?'' என்று வேதனையை வெளிப்படுத்தியவர், ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்கையில்...

''அகதிகள் சிலர் செய்யுற தப்பான காரியங்கள் எங்களை மாதிரி அப்பாவிகளையும் பாதிச்சுடுது. எங்காவது சிலர் காரில் எதையாவது கடத்திக்கிட்டுப் போயிருக்கலாம். அதற்காக எல்லோரும் அப்படிச் செய்வாங்கனு நெனைச்சு ஒட்டுமொத்தமா லைசென்ஸை ரத்து செய்வது சரியில்லை. தப்பு செய்யுறவங்களைக் கடுமையா தண்டிக்கட்டும். அதில்லாமல் யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக எங்களை மாதிரி அப்பாவியான ஆட்களையும் சேர்த்துத் தண்டிப்பது நியாயமில்லையே?'' என்று கண் கலங்கினார்.

இந்த விவகாரம் அகதிகளை மட்டுமின்றி, அவர்க ளுக்காக வக்காலத்து வாங்கும் தமிழ் அமைப்புகளையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய 'தமிழ்ச் சான்றோர் பேரவை'யின் நெல்லை மாநகரத் தலைவர் சுதர்சன்,

''சொந்த தேசத்தில் வாழ வழியில்லாமல் புகலிடம் தேடி வந்தவர்களை ஆதரித்து அரவணைக்க வேண்டிய அரசாங்கம், அவர்களுக்கு வழங்கியிருந்த சலுகைகளைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் தமிழர்களை ஒழிக்க நினைக்கிறார்கள் சிங்களர்கள். ஆனால், தனியார் இடத்தில் சிங்களர்கள் ஆலயம் கட்ட நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் தமிழக அரசு அனுமதித்திருக்கிறது.

இன்னொரு பக்கம் நம்முடைய ரத்த உறவாக இருக்கக்கூடிய இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய முயற்சி நடக்கிறது. நாட்டில் தீவிரவாதிகளெல்லாம் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், இலங்கை அகதிகளைத் தீவிரவாதிகள் போல சித்திரித்து, தமிழ் மக்களிடம் அவர்களுக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சி நடக்கிறது. எனவே, இந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மீறி லைசென்ஸ் ரத்து நடவடிக்கை தொடர்ந்தால், தமிழ் அமைப்புகளைத் திரட்டிப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்'' என்றார் காட்டமாக.

நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மதுசூதனன் நாயரைச் சந்தித்துப் பேசினோம். ''இலங்கைத் தமிழர்கள் சிலர் சட்டத்துக்குப் புறம் பான செயல்களில் ஈடுபட்டதால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவர்களை வரச்சொல்லி என்ன வேலைக்காக லைசென்ஸைப் பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கம் கேட்கிறோம்.

அதோடு அவர்கள் மீது வழக்குகள் இருக்கிறதா, குற்றச்செயல்களில் ஈடுபட்டார்களா என்பதை போலீஸில் கேட்டு விசாரித்து, தவறு செய்தவர்களின் லைசென்ஸை ரத்து செய்வோம். இப்போது முதல்கட்ட விசாரணை மட்டுமே நடக்கிறது. விசாரணைக்குப் பிறகு இலங்கை அகதிகளின் டிரைவிங் லைசென்ஸ்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுமா என்பதை அரசுதான் முடிவு செய்யும்'' என்றார்.

'வச்சா குடுமி... எடுத்தா மொட்டை' என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். அதுமாதிரி, தீவிரவாதிகளாக இருந்தாலும் எல்லோருக்கும் லைசென்ஸ் கொடுப்போம்... இல்லையென்றால், ஒட்டுமொத்தமாக எல் லோருக்கும் லைசென்ஸை ரத்து செய்வோம் என்று அரசு முடிவெடுக்குமென்றால், அது சரியான அணுகுமுறையாக இருக்காது!

ஆண்டனிராஜ்

ஜூனியர் விகடன்

Comments