இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அரசு அவசரப்படுவது ஏன்?

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்று நகர்வில் சடுதியான மாறுதலொன்று நிகழப் போவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அரசியலின் அதிகார மாற்றமும் இந்தியா ஏற்படுத்த முனையும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமும் தென்னாசியப் பிராந்திய அசைவியக்கத்தில் பாரிய புதிய ஆதிக்க வலுச் சமநிலையை தோற்றுவிக்கலாமென்று ஊகிக்கப்படுகிறது.
இப்புதிய சமநிலை உருவாக்கத்தில் இலங்கை வகிபாகமும் காத்திரமான பங்கினை ஏற்படுத்தப் போவதாக கணிக்கப்படுகிறது.

இந்த இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பான பலவகைப்பட்ட முரண்நிலை விவாதங்கள் இந்திய அரசியல் களத்தில் தீவிரமாக நிகழ்த்தப்படும் அதேவேளை, அமெரிக்காவில் இது குறித்த விவாதங்கள் அதிகம் எழவில்லை.

ஆயினும் இவ் ஒப்பந்தமானது தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் நிறை÷வற்றப்பட வேண்டுமென்கிற அவசரமும் துடிப்பும் அதிகமாகவிருப்பதை பலர் இனங்காணவில்லை.

இவ்வுடன்பாடு இந்தியாவை விட அமெரிக்காவிற்கு மிக அவசரமான உடனடித் தேவையாகவிருக்கிறது. அதுவே உண்மை நிலவரமாகும்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அöமரிக்காவின் அரசியல் விவகார மேலதிகச் செயலாளர் நிக்கலஸ் பேர்ன் எழுதிய கட்டுரையில் இவை தெளிவாக உணரப்பட்டுள்ளது.
அதாவது, இந்திய ஜனநாயகப் பாரம்பரியமும் அதன் அதிகரிக்கும் வளர்ச்சியும் அமெரிக்க நலனின் விரிவாக்கத்திற்கு இசைவாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அதேவேளை பனிப் போர் காலத்து இந்திய அணிசேராக் கொள்கை, இந்த இரு நாட்டு உறவிற்கும் இடையூறாகவும் சோவியத் முகாமில் அணி சேர்ந்த நிலைப்பாடு பாரிய இடைவெளியை முன்பு உருவாக்கி இருந்ததை அவர் சோகத்துடன் விளக்குகிறார்.

இன்றைய ஓருலகக் கோட்பாட்டில் அமைந்த உலகமயமாதலில் ஜனநாயகம், சந்தைப் பொருளாதாரம், பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற கருத்தியல்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட முடியுமென்பதே நிக்கலஸ் பேர்னின் பார்வையாகும்.

ஆசியப் பிராந்தியத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் சீனாவுடன் ஈடுகொடுக்கக் கூடியளவிற்கு தன்னை சகல துறைகளிலும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவிற்கு உண்டு.

இந்தியாவைச் சூழவுள்ள நாடுகள் அனைத்தும் சீனாவின் நேரடி அல்லது மறைமுக ஆளுகையில் இணைந்து கொண்டிருப்பதை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்தபடியே இருக்கிறது.

பாகிஸ்தானையும் இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் ஒரு கோட்டில் இணைத்து, பயங்கரவாதத்திற்கெதிரான போரின் நியாயப்பாட்டினை இந்தியாவிற்கு அழுத்திக் கூற முனையும் அதேவேளை சீனாவின் பொருளாதார இராணுவ வளர்ச்சிக்கு இணையாக சுய பலத்தை பெருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தியாவிற்கு தெளிவுபடுத்த முற்படுகிறது அமெரிக்கா.

இத்தகைய விளக்கங்களும் எதிர்வு கூறல்களும் இந்திய திட்டமிடல் கொள்கை வகுப்பாளர்களுக்கு புரியாத விடயமல்ல. இந்த வருட இறுதியில் அதிகாரத்தை விட்டு அகலும் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் காலத்தில் அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமென்று அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகள் அவசரப்படுவதன் உள்நோக்கம் எதன் அடிப்படையில் உருவாகுகிறது என்பதையும் ஆராய வேண்டும்.
தம்மால் மீட்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் உட்கட்டுமாணப் பணிக்கு பேருதவி வழங்கி வருவதாக இந்தியாவிற்கு புகழாரம் சூட்டுகிறது அமெரிக்கா.

பல்லாயிரக்கணக்கான உயர் தொழில்நுட்ப கல்வி பெற்ற இந்திய இளைஞர்களுக்கு அமெரிக்காவில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்ட விடயமும் பெருமையாகக் கூறப்படுகிறது.

அöமரிக்க கருத்துக் கணிப்பின் பிரகாரம் பத்துக்கு ஆறு பேர் அமெரிக்க உறவினை விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே, இரு நாட்டு எதிர்கால உறவினைப் பலப்படுத்த இத்தரவுகள் போதுமானவையென்பதே அமெரிக்காவின் தன்னிலை சார் விளக்கமாகும்.

இவ்வகையான முதுகு தடவிக் காரியம் சாதிக்கும் அணுகுமுறையின் மறுபக்கத்தில், உள்ளே இழுத்துதமது நலனிற்கேற்றவாறு ஆட்டிப் படைக்கும் சட்ட திட்டங்களையும் இவ்வொப்பந்தத்துள் அமெரிக்கா செருகி உள்ளது.

தமது நாட்டின் ஹாய்ட் சட்டத்தின் அடிப்படையில் உருவாகும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென்கிற விவகாரத்தில்தான் சிக்கல் தோன்றுகிறது.
அதேவேளை, அமெரிக்க அவசரத்தின் இன்னொரு பக்கத்தில் ஈரானுடன் இந்தியா செய்யவுள்ள எரிவாயு விநியோக குழாய்த்திட்டம் துருத்திக் கொண்டு நிற்கிறது.

ஆகவே ரஷ்யாவிடமிருந்தோ அல்லது ஈரானிடமிருந்தோ தனது எரிசக்தித் தேவைகளை பெறுவதற்கு முன்பாக, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி விட வேண்டுமென்பதே அமெரிக்காவின் நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் 2020 ஆம் ஆண்டிற்கு தேவையான 30,000 மெகாவட் மின்சாரத்தை இந்தியா பெற முடியும்.

அணு செறிவாக்கத்திற்குரிய மூலப் பொருட்களை தங்கு தடையின்றி இறக்குமதி செய்யலாம். குடிசார் அணுஉலைக்குத் தேவையான மூலப் பொருளை சட்டபூர்வ மாக இறக்குமதி செய்வதால் கையிருப்பிலுள்ள புலுடோனியத்தை அணு ஆயுத உற்பத்திக்குப் பயன்படுத்தலாம்.

ஐ.ஏ.ஈ.ஏ. எனப்படும் சர்வதேச அணுசக்தி முகவரமைப்பானது குடிசார் அணு உலைகளை மட்டுமே கண்காணிக்குமென்று தற்போது கூறப்படுகிறது.

தமது அணு ஆயுத உற்பத்தி மையங்களை இவர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட மாட்டாதென, ஒப்பந்த ஆதரவாளர்கள் திடமாகக் கூறினாலும் என்.பீ.ரி. யில் (Nககூ) கைச்சாத்திட்ட வட கொரியா, ஈரானிற்கு எத்தகைய அழுத்தங்கள் உருவாக்கப்படுகின்றன என்கிற விடயத்தையும் கவனிக்க வேண்டும்.

ஆனாலும் அணுசக்தி தொடர்பான எந்த சர்வதேச ஒப்பந்தத்திலும் இந்தியா கைச்சாத்திடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட முன்னர், இந்தியா ஐ.ஏ.ஈ.ஏ.இல் இணைய வேண்டும். அத்தோடு என்.எஸ்.ஜீ. எனப்படும் விநியோக அமைப்பில் அங்கத்துவம் பெற வேண்டும்.

இவை யாவும் சர்வதேச சட்டதிட்ட நடைமுறை சார்ந்த விடயமாகவிருந்தாலும் இந்திய அதிகார பீடத்தை நிமிர்த்தி நிற்கும் இடதுசாரி சக்திகள், இதனை நிறைவேற்ற விடுவார்களா என்பதே மிகப் பெரிய கேள்வியாகவுள்ளது.

அதேவேளை, இரண்டு தனி நபர்கள் குறித்த பார்வையும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோர்ஜ் புஷ் வெளியேறினாலும் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாகும் பராக் ஒபாமாவோ அல்லது வேறெவரோ இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயல்வார்கள்.

மத்திய கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடித்து ஆப்கானிஸ்தானில் தலிபானை அகற்றி வெற்றி வாகை சூடிய புஷ், ஆசியாவின் ஜனநாயகப் பிதாமகனையும் வென்று விட்டேனென்கிற வரலாற்றப் பதிவுடன் வெளியேற விரும்புகிறார் போல் தெரிகிறது.
அதேபோன்று தனது நீண்ட கால அரசியல் வாழ்வில் எதையாவது கல்வெட்டுச் சான்றாக பொறித்து விட்டுச் செல்ல வேண்டுமென்கிற ஆதங்கம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருக்கலாம்.

அணிசேராக் கொள்கைக்கு தலைமைவகித்து மூன்றாம் உலகின் முற்போக்கு நாயகனாக வலம்வந்த இந்தியாவின் கொள்கை வகுப்பு மேதாவிகள், அமெரிக்க வல்லரசுடன் செய்யும் ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை தேசத்துரோகிகள் என்று கூறுமளவிற்கு அரசியல் தெளிவு பெற்றுள்ளனர்.

இவ்வேளையில், நிக்கலஸ் பேர்ன் இந்தியாவிற்கு விடுத்த மறைமுக எச்சரிக்கை பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்.

அதாவது, தென்னாசியாவிலுள்ள இந்திய அயல் நாடுகள் குறித்த இணைந்த பார்வை ஒப்பந்தம் நிøறவேறாவிட்டால் மாறக் கூடிய சாத்தியப்பாடு உண்டென்பதே அவரின் கூற்று.

குறிப்பாக நேபாளம், இலங்கையை மையப்படுத்தியே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவதானிகள் கருதுகின்றனர்.

ஏற்கனவே நேபாள ஜனநாயகம் மாவோயிஸ்டுக்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.
பர்மிய (மியன்மார்) பிரதியாக்கம், இலங் கையில் நிறைவேற்றப்படுவதாக சீனா மீது சினங்கொண்ட பார்வையை இந்தியா செலுத்துகிறது.ஆகவே, அமெரிக்க இணைவு, பெரிய மாறுதல்களை இவ்விரு நாட்டு விவகாரங்களில் ஏற்படுத்தப் போவதில்லை.
துரிதகதியில் பொருளாதார, அணு ஆயுத வளர்ச்சியை அடைவதற்கு மட்டுமே இந்த அணுசக்தி ஒப்பந்தம் வழி சமைக்கலாம்.

ஆனாலும் சீன ஆதரவுச் சக்தி நாடுகளால் சூழப்பட்ட இந்தியாவிற்கு அமெரிக்க மாகாளியின் அருட் கடாட்சத்தால் பெரிய மாறுதல் எதுவும் ஏற்படாது.

- சி.இதயச்சந்திரன்-


Comments