விடத்தல்தீவு படைகளிடம் வீழ்ந்தது எப்படி?

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்தவாரம் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது.

“யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெ.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் விடத்தல்தீவின் வீழ்ச்சி யாருடைய யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்?

என்பதைத்ததான் பென்சேகாவிடம் இரகசியமாகத் தான் கேட்கவேண்டும். இதன்விடை தனக்குப் பாதகமாக இருக்கும் என்பது புலிகளிடம் பல தடவைகள் பாடம் கற்ற அவருக்குப் நிச்சயமாகப் புரிந்திருக்கும்.

விடத்தல் தீவின் தென்புறத்தில் அதன் நுழைவாயிலான பள்ளமடுவும் அதன் தெற்குப் புறத்தில் பரந்து விரிந்துள்ள நாயாற்று வெளிச்சதுப்பு நிலமும். படையினருக்கு நீண்ட காலமாகவே விடத்தல்தீவை அடையமுடியாமல் பெரும் தலைவலியாக இருந்து வந்துள்ளது.

காரணம் 1999 மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரணகோச படை நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்காக விடுதலைப்புலிகள் வகுத்த வியூகம் நாயாற்று வெளியின் குறுக்கே கிழக்கு மேற்காக சுமார் ஏழு மைல் தூரம் வரை அமைத்த மண்அணைக் காப்பரண்கள் இந்த இராணுவப் பிரசன்னத்தைத் தடுத்து நிறுத்தியது.

இப்பகுதிப் பொட்டல் வெளியில் நடந்த சண்டைகள் ரணகோசப் படைநடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதில் கற்ற பாடத்தின் விளைவுதான் இராணுவம் விடத்தல்தீவைக் கைப்பற்றுவதற்கு மாற்று வியூகத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது எனலாம்.

எனவேதான் விடத்தல்தீவுக்கு தெற்கிலிருந்து நகர்வதை இராணுவம் பல தடவைகள் முயற்ச்சித்தும் தோல்வி கண்டதனாதல் விடத்தல் தீவை முற்றுகையிடும் தந்திரோபாயத்தை படைகள் விடத்தல்தீவிலிருந்து கிழக்கு நோக்கி கையாள முடிவெடுத்தனர்.

இதனடிப்படையில் பெரியமடுவிலிருந்து வடக்காக பூநகரி வரை பரந்து விரிந்துள்ள அடந்த காட்டுப்பகுதியினூடாக பாலம்பிட்டியிலிருந்து இரகசியமாக நகர்ந்து முல்லை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான சிறாட்டிகுளத்தைக் கைப்பற்றியிருந்தனர். பின்னர் அங்கிருந்து மேற்காக நகர்ந்து கூராய்யில் நிலையெடுத்தனர். கூராய் 1980 களில் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய நீர்ப்பாசனத்திட்டம்.

ஆனால் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் அரை குறையாகவே கிடப்பில் போடப்பட்டது.. கூராய்க் குளக்கட்டு வேலைகளும் பூர்த்தி செய்யப்படாமல் இன்றும் அப்படியே கிடக்கிறது. அங்கு அடந்த காட்டினுள் நீர்ப்பாசனத் தினைக்களத்தின் கட்டடங்களைத் தவிர வேறு எதையும் காணமுடியாது.

இப்பகுதியில் ஏறக்குறைய 40 குடும்பங்கள் காட்டு மரங்களின் கீழேயே குடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். கூராயின் இராணுவப் பிரசன்னமானது. மன்னார் மாவட்டத்தின் தென்பகுதி காட்டுப்பிரதேசங்கள் முழுவதையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சென்றுவிட்டது.

கூராயில் நிலையெடுத்த இராணுவக் கொமோண்டோக்கள் (58-1) அடு;த்த கட்ட ஏ32 வீதியை ஊடறுக்கும் நகர்வினை கூராயிலிருந்து மேற்கு நோக்கி ஆத்திமோட்டை ஊடாக கள்ளியடியில் ஏ32 வீதியை ஊடறுத்தன. மற்றுமொரு படையணி (58-3) கூராயிலிருந்து புதுக்குளம், கோயில்குளம் வழியாக பள்ளிவாசல் பிட்டியில் ஏ32 வீதியை ஊடறுத்தது. இதன்மூலம் இரு படைப்பிரிவும் இணைந்து புலிகளின் பாணியில் ஒரு பெட்டி வியூகத்தை அமைத்தனர். இதனால் விடத்தல்தீவுக்கான புலிகளின் தரைவழி விநியோகம் தடுக்கப்பட்டது.

தரைவழி விநியோகம் தடுக்கப்பட்டபோதும் தொடர்ந்து ஒரு மாதம்வரை விடத்தல்தீவில் முகாம் அமைத்திருந்த புலிகள் கடல் வழியாக ஆளணி ஆயுத வளங்களை படிப்படியாகப் பின்னநகர்த்தி கடந்த வாரம் முற்றாக வெளியேறிவிட்டனர்.

விடுதலைப்புலிகள் முற்றாக விடத்தல்தீவை விட்டுவெளியேறிய பின்னர் அரசபடைகள் சகட்டுமேனிக்கு பெருமெடுப்பிலான ஆட்லெறி மற்றும் மோட்டார் வீச்சுக்களுடன் மிகப்பெருமெடுப்பில் நகர்ந்து சென்று விடத்தல் தீவுக் கிராமத்தினுள் புகுந்து விட்டனர்.

ஆனால் அவர்கள் அங்கு கண்டவைகள் வெறும் கடற்கரைக் காகங்களும், ஒருசில நாய்களும், மற்றும் உடைந்த சில படகுகளும், பாவனையற்றுக்கிடந்த சில வாகனங்களுமே. இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. விடுதலைப்புலிகள் எந்தவிதமான இழப்புக்களுமின்றி வெற்றிகரமாகவே பின்வாங்கியிருக்கின்றனர்.

ஒரு சண்டையில் ஒரு படையணி வெற்றி பெறுகின்றதா?
அல்லது தோல்வி அடைகின்றதா? என்பது முக்கியமல்ல.

ஆளணி ஆயுத வளங்களை பாதுகாப்பதே முக்கியம்.

இது ஓர் இராணுவ பூட்கை. அதைவிடுத்து ஒரு சண்டையில் ஆளணி ஆயுத வளங்களை இழந்து வெற்றி பெறுவதென்பது. தோல்வியின் ஆரம்பம் எனலாம். இந்த இராணுவப் பூட்கையை பிரான்சியப் பேரரசன் மாவீரன் நெப்போலியன் வோட்டலோவில் கடைப்பிடித்திருந்தால் அவனுக்கு வீழ்ச்சி என்பது நிகழ்ந்திருக்காது.

இவ்வாறானதொரு இராணுவத் தவறை விடுதலைப்புலிகள் எந்தக் காலத்திலும் விட்டதும் இல்லை. விடப் போவதும் இல்லை. இதைத்தான் தேசியத்தலைவர் அவர்கள் “வரலாறுகள் எமக்கு வழிகாட்டிகள்” என்கிறார் போலும்.

சிங்கள் ஊடககங்கள் விடத்தல் தீவின் வீழ்ச்சியினை புலிகளின் வீழ்ச்சி போல் கொண்டாடுகின்றன. ஆனால் உண்மையில் இது ஓர் தந்தியோபாயப் பின்வாங்கலே ஆகும்.

மனனார் மாவட்டத்தில் வெள்ளாங்குளம், மூன்றாம்பிட்டி, ஆகிய கிராமங்களைத் தவிர ஏனைய முழுப்பிரதேசமும் இராணுவ மயப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது அரசபடைகள் இலுப்பக்கடவையின் வாயிலில் நிலைகொண்டுள்ளன. எனவே மன்னார்ச் சண்டை என்பது. இத்துடன் முடிவுக்கு வருகின்றது என்றே செல்லாம். அடுத்து இராணுவ நகர்வு எப்படியிருக்கப் போகின்றது என்பது. புலிகள் எடுக்கப்போகும் முடிவிலேயே தங்கியுள்ளது.

இலங்கையில் நடைபெறப்போகும் சார்க் உச்சிமாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள். ஜூலை 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 4ஆம் திகதிவரை ஒருதலைப் பட்சமான போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். இது இயலாத்தன்மையால் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் அல்ல.

அதாவது தற்போது விடுதலைப்புலிகள் செய்துவரும் தற்காப்புச் சமரும், ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்திற்கான சமர் ஓய்வும் அவர்களின் இயலாத்தன்மையின் வெளிப்பாடல்ல. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சர்வதேச அரசியல் இராஜதந்திர வெற்றியை எதிர்பார்த்து தமது காய்களை நகர்த்தி வருகின்றனர்.

அதன் வெளிப்பாடே இப்போர் நிறுத்த அறிவிப்போயாகும். சார்க் மாநாட்டின் முடிவும், அமெரிக்க, இந்தியத் தேர்தல்களின் முடிவும் முடிவுக்கு வரும் வேளை பெரும்பாலும் ஓயாத அலைகள் வானெழுந்து வீசும். அப்போதே சிங்கள தேசமும், சர்வதேசமும் புலிகளின் இவ்வளவு கால அமைதிக் காற்றின் உத்வேகத்தினை அறிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.

அடுத்து சிங்களப்படைகள் ஏ32 வீதியில் இலுப்பக்கடவையில் இருந்து வெள்ளாங்குளம் மற்றும் முழங்காவில் ஊடாக பூநகரி நோக்கி நகர்வது, அதேபோல் நட்டாங்கண்டலுக்கு சற்று வடக்கே நிலை கொண்டிருக்கும் இராணுவம் ஒட்டங்குளம் ஊடாக துணுக்காய், மல்லாவி மற்றும் கிளிநொச்சி நோக்கி நகர்வது.

அத்துடன் நட்டாங்கடலில் நிலைகொண்டிருக்கும் படைகளில் ஒருபகுதி பாண்டியன்குளமூடாக வவுனிக்குளம் நகர்ந்து அங்கிருந்து மாங்குளத்தைக் கைப்பற்ற முயல்கின்றன. இதற்கு வவுனிக்களக் கட்டுப்பகுதியே இச்சமரைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது இதன் காரணத்தினாலேயே தினமும் 300 ற்கும் குறையாமல் வவுனிக்குளம் குளக்கட்டுப்பகுதியை மையப்படுத்தி ஆட்லெறி எறிகணைகளை படைகள் ஏவுகின்றன.

அரசபடைகள் ஏ32 வீதியில் மேலும் முன்னேறுகின்ற போது பறங்கியாற்றுக்கும் பாலியாற்றுக்கும் இடையில் அதாவது மூன்றாம் பிட்டிக்கும் வெள்ளாங்குளத்திற்கும் இடையில் கடுஞ்சமர் மூளும் என எதிர்பார்க்கலாம்.

ஏனெனில் பாலியாற்றை காப்பரணாகக் கொண்டு புலிகள் தற்போது தடுப்பு வேலிகளை அமைத்து வருகின்றனர். பெரும்பாலும் இப்பிரதேசத்தில் இடம்பெறும் சண்டைதான் நான்காம் கட்ட ஈழப்போரின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுகோலாகக் கூட அமையலாம்.

லண்டனிலிருந்து வன்னியன்


Comments