மதிப்புக்குரிய தளபதி -கேணல் சூசை-


இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம்.

ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது ரோந்து நடவடிக்கைகளை எல்லா இடமும் இந்தியர்கள் தீவிரப்படுத்தினர்.

இந்தியர்களின் இந்த நகர்வு எமக்கு தாக்குதல்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தாலும், எமது நகர்வுகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத்தான் செய்தது.

இந்த நிலையில் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக நாம் வடமராட்சியிலிருந்து மணலாறு நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

வடமராட்சியின் கரையோரமாக கால்நடையாக நகர்ந்து கொம்படி, சுண்டிக்குளம் வழியாக நாம் மணலாற்றுப்பகுதியை நோக்கிச் செல்ல வேண்டும்.

தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டுக்குள்லிருந்து போரை வழிநடாத்திக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுகொண்ட இந்தியர்கள் மணலாற்றைச் சுற்றி இறுக்கமான இராணுவ முற்றுகையிட்டு தலைவரை அழிக்கும் நோக்குடன் 'செக்மேற்" இராணுவ நடவடிக்கையைத் தொடக்கியிருந்தனர்.

பெருந்தொகையில் ஆளணியையும், ஆயுதங்களையும் ஒன்று குவித்து மணலாற்றுக்காட்டுக்குள் புலி வேட்டையாட இந்தியர்கள் முயன்றனர்.

முல்லைத்தீவிலும் அதற்கப்பால் பதினைந்தாம் கட்டையிலும் பாரிய படை முகாமை அமைத்து மணலாற்றுக் காட்டை வளைத்து அவர்கள் நின்றனர்.

இதனால் மணலாறு, முல்லைத்தீவு மாவட்டங்கள் ஏனைய மாவட்டங்களைப் போலல்லாது இந்தியர்களின் தீவிரமான கண்காணிப்புக்குள் உட்;பட்டிருந்தது. அத்துடன் அங்கு நெருக்கமான இராணுவக் காவலரண்களையும், படை முகாம்களையும் நிறுவி இந்திய-புலிகள் போரின் முதன்மையான போரரங்கை திறந்திருந்தனர்.

இத்தனை கண்காணிப்பு வலைக்குள்ளும் அகப்படாது நெளிந்து சுளிந்து நாம் காட்டுவெளிப்புறம் ஒன்றை சென்றடைய வேண்டியிருந்தது.

இத்தனை படை முகாம்களையும் இந்தியர்களின் ரோந்து அணிகளையும் கடந்து நாம் மணலாற்றை சென்றடைவது இலகுவான காரியமல்ல ஆயினும் நாம் சென்றடைந்தோம்.

இனி மணலாற்றின் வெளிப்புறத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு களத்தினூடாக அதாவது அடர் காட்டினூடாக நாம் பயணத்தை மேற்கொண்டு தலைவரின் தளத்தை அடைய வேண்டும்.

எங்களைப் பொறுத்த வரையில் காட்டுப் பயணம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. எங்களுக்கு முன்னமே அனுபவமானதுமல்ல. காடு நாம் அறியாத ஒரு புதிராக விரிந்து கிடந்தது. அது அனுபவசாலிகளுக்கு மட்டுமே வழிவிடும். இல்லாதவர்களை அது வழிமாற்றி விடும் கடலைப் போல.

இந்தியர்களின் முற்றுகைக்குள்ளால் தொடரவேண்டிய பயணம். இரவு முல்லைத்தீவு கரையோரக்காட்டை அடைந்து எம்மை அழைத்துச் செல்ல தலைவரின் இடத்திலிருந்து ஒரு அணி வந்திருந்தது. அந்த அணிக்கு ஒருவர் பொறுப்பாக வந்திருந்தார். அவ்வாறு வந்தது வேறு யாருமல்ல அவர் தான் பால்ராச்.

நான் முதன் முதலில் சந்தித்த பால்ராச்.


அந்த இரவின் கரிய பொழுதில் பால்ராச் எங்களோடு கதைக்கத் தொடங்கினார்......

எல்லா இடமும் ஆமி இறங்கிட்டான்..... நாங்கள் காடு முறிச்சுத்தான் போகவேணும். அவங்கள் எந்த இடத்திலயும் எங்களுக்கு அடிக்கலாம். ஆனால், ஒருத்தரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அணியிலிருந்து விலகவோ சிதைஞ்சு இடம் மாறவோ வேண்டாம்... என்ற அறிவுறுத்தலோடு பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

எதிரி உள்ளே நிற்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டே மேற்கொள்ளும் ஒரு துணிவுப் பயணம். காட்டை ஊடறுத்து கால்கள் தூரத்தை மிதித்து மிதித்து பின்தள்ள காட்டின் ஆழமான உற்பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தோம்.

சில மணிநேர நடைப் பயணத்திற்குப் பின்னே அணியின் முன்னே சென்று கொண்டிருந்த போராளி, காற்றில் கலந்து கிடந்த இந்தியர்களுக்கேயுரிய அந்த அந்நிய நாற்றத்தை மூக்குத் துவாரத்தின் வழியே நாசி வரை உள்ளிழுத்துவிட்டு அவங்கள் கிடக்கிறாங்கள்... என எச்சரிக்க.... இந்தியர்கள் எம்மை நோக்கித் தாக்கத் தொடங்கி விட்டார்கள்.

கடுமையான சண்டை... காட்டு மரங்களுக்கிடையே பாதுகாப்பாக நிலையெடுத்துக் கிடந்த இந்தியர்கள் காப்பு எதுவுமின்றி நகர்ந்து வந்து கொண்டிருந்த எம்மை நோக்கித் தாக்கினர்.

அந்தக் காட்டிற்குப் பழக்கப்பட்ட பல போராளிகள் அணியிலிருந்த போதும் பழக்கப்படாதவர்களும் இருக்கத்தான் செய்தனர். அவர்கள் அணியின் ஒழுங்கிலிருந்து விடுபடுவார்களானால் மீண்டும் ஒன்றிணைப்பது கடினம்.

இந்தியர்கள் எந்த வேளையும் தாக்கலாம் என்ற எதிர்பார்க்கையை முன்னமே அறிவுறுத்திய பால்ராச் எதிரி தாக்குதலைத் தொடுத்த அதே வேகத்தில் எதிரியின் மீது ஒரு பதில் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டே அணியை எதிரியின் கொலை வலயத்திலிருந்து சற்றுப் பின்னகர்த்தி உடனடியாகவே அணியை மீள் ஒழுங்குபடுத்தினார்.

அது சண்டை பிடிக்கும் களமல்ல. நாம் சண்டையொன்றைப் பிடிப்பதற்காகச் சென்று கொண்டிருக்கவுமில்லை. எமது பயணமும் நோக்கமும் வேறு.

அணி நகர்ந்து கொண்டிருக்கும் வேளை நான் பால்ராச்சிற்கு அருகாகவே நடந்துசென்று கொண்டிருந்தேன். அவ்வேளை எதிரி தொடுத்த தாக்குதலில் ரவையொன்று எனக்குக் காயத்தை ஏற்படுத்தியதால் குருதி அதிகமாக வெளியேற எனக்கு உடல் குளிர்ந்து கொண்டு வருவதை உணரக்கூடியதாக இருந்தது. என்னுடைய உடல் நிலையை அறிந்து கொண்ட பால்ராச் அந்த இடத்திலேயே சாக்கு ஒழுங்குபடுத்தி காட்டுத்தடி வெட்டி 'ஸ்ரெச்சர்" உருவாக்கி என்னைப் பாதுகாப்பாகச் சுமந்து செல்ல ஆட்களை ஏற்பாடு செய்தார்.

அதன்பின் காடு முறித்துப் புதிய பாதையெடுத்து நாம் தலைவர் அவர்களின் இடத்தையடைந்தோம். அங்கு எனக்குச் சிகிச்சையளித்த போதும் மேலதிகச் சிகிச்சை பெறவேண்டியிருந்தது. தலைவர் என்னுடைய தலைமாட்டில் அமர்ந்திருந்தபடி அந்தப் பொறுப்பை நம்பிக்கையோடு பால்ராச்சிடம் ஒப்படைக்கப் பால்ராச்சின் கால்கள் மீண்டும் அந்தக் காட்டினூடே ஓய்வின்றிய அந்தப் பயணத்தைத் தொடக்கியது.

அளம்பிலில் படகு எடுத்து என்னை அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு பால்ராச்சிடம். நாயாற்றுச் சிறுகடலைத் தவிர்த்து இந்தியர்களின் கண்களுக்குள் முட்டுப்படாது பயணிக்க வேண்டும். செம்மலைக்கும் அளம்பிலுக்கும் இடையில் முழுக்காலளவுக்குப் புதையும் அந்தச் சேற்று வெளிக்கால் என்னைச் சுமந்து வந்து படகில் ஏற்றிவிட விடைபெற்றேன் பால்ராச்சிடமிருந்து முதல் பிரிவாக. மீண்டும் சந்திக்கும் வரை.

1989 க்குப் பின் வன்னிப் பிராந்தியத்தின் சிறப்புத் தளபதியாக பால்ராச் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியப் படைகளின் வெளியேற்றமும் இரண்டாம் கட்ட ஈழப்போரின் தொடக்கமும் நிகழ பால்ராச்சின் சுறுசுறுப்பால் வன்னி சூடு பிடிக்கத் தொடங்கியது.

1990 களில் கொக்காவில் இராணுவ முகாம் பால்ராச்சின் தலைமையில் வெற்றிகொள்ளப்பட்டு; சிறிது காலத்திலேயே மாங்குளம் இராணுவ முகாமைக் குறிவைத்து பால்ராச்சும் போராளிகளும் செயற்படத் தொடங்கியிருந்தனர்.

அப்போது போராளிகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை ஊட்டத்தக்க வகையில் மாங்குளம் இராணுவ முகாமை வெற்றிகொள்வதில் பால்ராச் சிறந்ததொரு ஒருங்கிணைப்புத் தளபதியாகச் செயற்பட்டார்

எம்மவரிடம் அந்த இராணுவ முகாம் வீழ்ந்து பெரியதொரு இராணுவ வெற்றியைப் பெற்றபோதும் எதிரியிடமிருந்து பெருந்தொகையான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றுவதில் எம்மவருக்கு சிக்கல் ஏற்பட்டது.

தப்பியோடிய படையினர் தம்வசமிருந்த பெருந்தொகையான ஆயுத தளபாடங்களை மாங்குளம் இராணுவ முகாமைச் சூழவிருந்த ஆழமான கிணறுகளினுள் எறிந்துவிட்டு எஞ்சியவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

நீருக்கடியில் அமிழ்ந்து கிடக்கும் இந்த ஆயுத தளபாடங்களை மீட்பதில் நெருக்கடி நிலை காணப்பட தலைவர் அவர்கள் என்னை அழைத்து சுழியோடியைக் கொண்டு அந்த ஆயுத தளபாடங்களை மீட்டெடுக்குமாறு பணித்தார்.

வடமராட்சியில் நின்ற வைரப்பாவையும்; அழைத்துக்கொண்டு வன்னியில் பால்ராச்சோடு இணைந்து செயற்பட மீண்டும் இனிமையான எங்களின் சந்திப்பு நிகழ்ந்தது.

கடமை முடிய மீண்டும் நாம் பிரிந்தோம்..... மீண்டும் ஒரு களத்தில் சந்திக்கும் வரை.


1991 ஆனையிறவுப் பெருந்தளத்தை வீழ்த்துவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். ஆனையிறவின் தென்பகுதிய+டான படை நடவடிக்கைகளுக்கு தளபதியாக பால்ராச் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.

பால்ராச்சின் தலைமையில் அந்தத் தாக்குதலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. வடமராட்சியிலிருந்து வந்த எம்மை ஒன்றிணைத்து ஆகாயக் கடல் வெளி நடவடிக்கையில் அவர் ஈடுபடுத்தினார்.

அது ஒரு தொடர் தாக்குதல் பல முகாம்களையும் வீழ்த்தி ஆனையிறவைக் கைப்பற்ற எடுத்த பாரிய முயற்சி இதற்காக நாம் பல சிறு முகாம்களையும் படைநிலைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டியிருந்தது. பால்ராச் ஓய்வின்றி உழைத்தார்.

சுற்றுலா விடுதி மீதான தாக்குதல் முதல் அந்த உப்புவெளிக்குள் நீண்டு கிடந்த ஒவ்வொரு காவலரண்களையும் காட்டி அதை வீழ்த்தும் வழி வகைகளை உரைத்து தாக்குதலை மேற்கொள்ள முழுச் சுதந்திரமும் தந்து செயற்பட்ட ஒரு தளபதிக்கேயுரிய அந்தவிதம் பால்ராச்சின்; மீதான நட்பை மரியாதையை அதிகம் உயர்த்திவிட்டது.

ஆகாயக் கடல்வெளி இராணுவ நடவடிக்கையைப் பொறுத்த வரையில் எமது இயக்கம் மேற்கொண்ட முதலாவது மரபு வழிப்போர் நடவடிக்கை. முற்றிலும் எதிரிக்குச் சார்பான அந்தக் களத்தில் பால்ராச் தனக்குக் கீழான படைகளை மிக நேர்த்தியாகக் கையாண்டார்.

எங்கள் இருவருக்கும் இடையேயான நட்பும் புரிந்துணர்வும் அந்த உப்புவெளிப் பகை முற்றத்தில் தான் வலுப்பெற்றது. சுற்றுலா விடுதி இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், சின்ன உப்பளம் மீதான தாக்குதலிலும் பால்ராச்சின் நேரடிக் கட்டளையின் கீழ் கள நடவடிக்கைகள் ஈடுபட்ட அந்த அனுபவம் வித்தியாசமானது.

பால்ராச்சின் ஓய்வின்றிய அயராத அந்த உழைப்பு இரவு-பகலாக நடந்து திரிந்து அவர் காட்டும் அந்தக் கடமையுணர்ச்சியும்; அது உன்னதமான ஒரு தளபதியின் நாட்டுப்பற்றின் உயர் வெளிப்பாடு என்பது மிகையில்லை.

அந்த ஆகாயக் கடல் வெளிச் சமரின் பின் தலைவர் அவர்களின் பணிப்பின் பிரகாரம் கடற்புலிகளின் உருவாக்கப் பணியில் நான் ஈடுபட அந்த உப்பு வெளியிலிருந்து நாம் மீண்டும் பிரிந்தோம், அடுத்த சந்திப்பில் மீண்டும் சந்திக்கும் வரை.....


பின்னர் போராட்டம் வளர வளர எங்களுடைய சண்டைக் களங்களும் சமர் முனைகளும் விரியத் தொடங்கியது. பல்வேறு சமர்களிலும் பால்ராச் திறம்படச் செயலாற்றத் தொடங்கியிருந்தார்.

அக்காலங்களில் தளபதி பால்ராச்; பங்கெடுத்து வழிநடத்திய போர்க்களங்கள் ஏராளமானவை. அவை சரித்திரத்தில் என்றும் அழியாப் புகழ் பெற்றவை.

பின்னர் 1995 இல் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்க சிங்களப் படைகள் தமது முழுப் பலத்தையும் வளத்தையும் ஒன்று திரட்டி மூர்க்கமுடன் மோத நாம் தந்திரோபாய ரீதியாக யாழ்ப்பாணத்திலிருந்து விலகினோம்.

யாழ்ப்பாணத்தில் நிலைபெற்றிருந்த போராட்டத்தளம் வன்னிக்கு இடம் மாறியிருந்தது.

அந்தக் காலம் இயக்கத்தின் ஆளணி - ஆயுதவளம் மற்றும் இதர வளங்களை எமது புதிய தளத்தை நோக்கி நகர்த்தும் பெரும் பணி எம்மீது சுமத்தப்பட்டிருந்தது.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகளோடு இறுதி வரை ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எமது வீரர்களை வன்னி நோக்கிக் கொண்டுவரும் கடமையும் எம்மிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சிங்களப்படைகள் யாழ்ப்பாணத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும் புலிகளை தப்பிச் செல்ல முடியாதவாறு தமது முற்றுகைக்குள் இறுக்கி விட்டோம் என இறுமாந்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் நின்ற பால்ராச் சிங்களப்படைகளுக்கு எதிரான அந்தச் சமரை அவர் எதிர்கொண்டு விட்டு சாதாரண படகு மூலம் எந்தப் பதற்றமும் இன்றி எதிரியின் கடும் தாக்குதலுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணக் கடல் நீரேரியூடாக வன்னி திரும்ப அந்தக் கடற்கரையில் நாம் சந்தித்து பிரிந்தோம் மீண்டும் சந்திக்கும் வரை.....

அதன் பின் பால்ராச்சிடம்; முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ஓயாத அலைகள் ஒன்று இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் பொறுப்பை தலைவர் ஒப்படைத்தார். அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டுமென்பதில் அவர் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

முல்லைத்தீவு கடலோரமாக அமைந்திருந்த அந்த இராணுவ முகாமை வீழ்த்துவதற்கான வியூகத்தில் கடல் சார்ந்த பெரும் பணியை என்னிடம் தலைவர் அவர்கள் ஒப்படைத்திருந்தார்.

முல்லைத்தளம் பெருங்கடலின் கரையோரம் விஸ்தரிக்கப்பட்டிருந்த காலம். அத்துடன் அந்தத் தளத்தை போராளிகள் சுற்றிவளைத்து. தாக்குதலை மேற்கொள்ளும் அந்தவேளை தளத்திற்கான கடல்வழி விநியோகத்தை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

அத்துடன் தளத்திற்கு மேலதிகமாக எந்த ஆதரவும் கிட்டாது தடுக்க வேண்டும். அந்தக் கடினப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

மிக முக்கியமான கால கட்டம் ஒன்றில் வெற்றி கொள்ளப்பட்டேயாக வேண்டிய ஒரு படைத்தளம் மீதான தாக்குதல் அது.

ஓயாத அலைகள் ஒன்றின் ஒருங்கிணைப்புத் தளபதியாக பால்ராச் செயற்படக் கடலிலும் தரையிலுமாக எமக்கிடையே மீண்டும் ஒரு இணைவு.

நம்பிக்கையை வெற்றியாக்கி படையினரைக் கொன்று பெருந்தொகையில் படைய வளங்களை கைப்பற்றிய அந்தச் சமரில் நாம் பல நாட்கள் இணைந்து பணியாற்றினோம்.

நித்திரையைத் தொலைத்துவிட்டு வரைபடத்தின் மேலேயே குந்தியிருந்து சின்னச்சின்ன உறுத்தல்களை அகற்றி வெற்றியை எமதாக்கிய அந்தச் சமரின் முடிவில் நாம் மீண்டும் பிரிந்தோம் கடமைகளுக்காகக் கடலிலும் தரையிலுமாக... அடுத்தமுறை சந்திக்கும் வரை....

அதற்குப் பின் எத்தனையோ சண்டைகள்.... சமர்கள்.... நீள.... நீள.... நாங்கள் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த சிங்களப்படை பெரு முயற்சி செய்தது.

பலாலியில் இருந்த எறிகணைக் கையிருப்புகள் முடிந்து போகுமளவுக்கு அந்தப் பெட்டிக்குள்ளே குண்டுகளை வாரியிறைத்தன சிங்களப் படைகள்.

குடாநாட்டுப்படையிடமிருந்த டாங்கிகள் அனைத்தும் தூணளவு நீளக்குண்டுகளுடன் பெட்டியைத் துவம்சம் செய்யப் படாதபாடுபட்டன. நாற்பதாயிரம் சிங்கங்கள் நடுவே ஆயிரத்து இருநூறு புலிகளைச் சீறவைத்து - தமிழரின் வீரத்தை உலகிற்கு வெளிப்படுத்திக் காட்டினார் மாவீரன் பால்ராச்.

34 நாட்கள் இரவும் - பகலுமாகத் தொடர்ந்து நடந்த அந்தப் பெட்டிச் சண்டையின் முடிவில், ஆனையிறவுத் தளம் இடம்பெயர்ந்தோட வேண்டிய நிலை எழுந்தது. ஓடிய படையினர் வேட்டையாடப்பட்டனர்.

ஆனையிறவுத் தளத்தில் நிலைகொண்டிருந்த சிங்களத்தின் 57 ஆவது டிவிசன் படையணி சிதைந்து - அழிந்து செயற்பட முடியாத நிலைக்குள் செல்லுமளவுக்கு வேட்டையாடப்பட்டது.

ஆனையிறவுப் படையினர் தளத்தைக் கைவிட்டோடிய பின்னர்; அந்த வழியே திரும்பி வந்த பால்ராச்சைப் பெருமிதம் பொங்க இரு கைகளையும் பிடித்து - கைகுலுக்கி வரவேற்றார் தலைவர்.

குடாரப்பில் இறங்கி நடக்கமுடியாத கால்களுடன் சதுப்பு நிலத்திற்குள்ளால் பால்ராச் அவர்கள் நடந்து சென்றபோது பிடித்த ஒளிப்படம் ஒன்றைத் தலைவர் தன் பணிமனையின் சுவரில் மாட்டி இந்த மாவீரனை, அவன் உயிருடன் இருந்தபோதே கௌரவித்துவிட்டார்.

பால்ராச் அவர்களின் இதயம் வீரத்தாலும் - ஓர்மத்தாலும் இறுகிக் கிடந்தது. ஒவ்வொரு களத்திலும் அதை நாங்கள் கண்டோம். கண்டு மெய்சிலிர்த்தோம்.

அந்த வீர இதயத்தில் போதியளவுக்கு ஈரமும் இருந்தது. மக்களை அவர் உணர்வுபூர்வமாக நேசித்தார். இவருக்காக உயிர் கொடுக்கும் அளவுக்குப் போராளிகளின் அன்பைச் சம்பாதித்தார். தலைவரின் நேசத்தையும் வென்றெடுத்தார்.

இவ்விதம் தமிழினம் பெருமையடையும் வீரத்தையும் - போராளிகள் - மக்களின் பாசத்தையும் சம்பாதிக்கத் தெரிந்த அந்த இதயத்திற்குத் தனது துடிப்பைத் தொடரத் தெரியாமற் போய்விட்டது.

அவருக்கு வந்த இதய நோயை நம்பவே முடியவில்லை. கற்கால மனிதன் போல பகல் முழுவதும் ஓடியோடி காடு மேடெல்லாம் நடந்து திரிந்த அந்த ஓய்வற்ற உழைப்பிற்கு இடமளித்த அந்த வலிமையான இதயம், இடைநடுவில் திடீரென இயங்க மறுத்த கதை ஏமாற்றமும் - சோகமும் நிறைந்தது.

இதயம் பலவீனப்பட்ட போதும்; இந்த மாவீரனின் வீரம் பாதிக்கப்படவில்லை. களச் செயற்பாடுகள் சோர்வு நிலையை அடையவில்லை. ஓய்வெடுக்கச் சொல்லித் தலைவர் ஆலோசனை கூறியும் அதை அவர் கேட்கவில்லை.

20 வருடப் போராட்ட வாழ்வில் தலைவர் சொல்லியும் செய்யாத ஒரேயொரு விடயமாக அதுவே இருந்தது.

என்னோடு தோளோடு தோள் நின்று களமாடிய போராளிகளில், எனது வழிநடத்தலில் களமாடிய போராளிகளில் பல நூற்றுக்கணக்கானோர் வீரச்சாவடைந்து விட்டனர். இவர்களில் கணிசமானோரின் வித்துடலை நான் பார்த்து இறுதி வணக்கம் செலுத்தியிருக்கின்றேன்,

அப்போதெல்லாம் நான் கண் கலங்கியதில்லை. சோகத்தை நான் எனது தொண்டைக்குள்ளே அடைத்துக்கொள்வேன். எனது கூடப்பிறந்த தம்பி வீரச்சாவடைந்த போதும் நான் வெளித்தெரிய அழவில்லை.

ஆனால், பால்ராச் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் அவரின் வித்துடலைப் பார்த்தபடி அவருக்கு இறுதிப் பிரியாவிடை கொடுக்கச் சில வார்த்தைகளை உச்சரித்தபோது, நான் அழுது விட்டேன்.

பால்ராச் என்ற மாவீரனை இழந்த சோகம் மட்டுமல்ல அந்த அழுகைக்குக் காரணம், நான் என் கண்களால் கண்டு இரசித்த ஒரு வீரத்தின் சின்னத்தை இழந்த துயரமும் சேர்ந்துகொண்டது.

என்னை ஒரு தளபதியாகக் களத்தில் அருகிருந்து வளர்த்துவிட்ட நன்றி உணர்வு எனது மனதில் கொப்பளித்தது. அவர் வளர்த்துவிட்ட வீரத் தளபதிகள் அவரது வித்துடலைப் பார்த்துக் கண்ணீர் சொரிந்ததையும் என்னால் சகிக்க முடியவில்லை. எல்லாம் சேர்ந்து என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. அதன் வெளிப்பாடாக அழுகையும் வந்தது.

பால்ராச் என்ற சொல் வீரத்திற்கு ஒத்த சொல்லாக எங்களது போராட்ட அகராதியில் இடம்பிடித்து விட்டது. அந்தளவுக்கு எமது போர் வரலாற்றில் ஒரு வீர அத்தியாயத்தைப் பதிவாக்கி விட்டுச் சென்றுள்ளார் பிரிகேடியர் பால்ராச்.

அவர் காட்டிய வீரத்தையும் - அர்ப்பணிப்பையும் - ஆளுமையையும் - உழைப்பையும் எங்களுடைய செயற்பாட்டிற்குள் எடுத்துக்கொள்வதே; பிரிகேடியர் பால்ராச்சிற்கு நாங்கள் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (04.07.08)

Comments