கருணாநிதி டெல்லி சென்றது நன்றி சொல்ல மட்டுமல்ல!

இடதுசாரித் தலைவர்கள் பரதன், பிரகாஷ் காரத் ஆகிய இருவரும் பா.ஜ.க. பக்கம் போக நினைத்த பல கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்துள்ளார்கள். குறிப்பாக மாயாவதி, சந்திரசேகர் ராவ், சந்திரபாபு நாயுடு, தேவகௌடா, ஓம்பிரகாஷ் சௌத்தாலா ஆகியோரெல்லாம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் போக எண்ணியவர்கள்.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின் விளைவாக இவர்கள் அனைவரும் மாயாவதி தலைமையில் ஒன்று சேர்ந்துள்ளனர். இனி மூன்றாவது அணிக்கு பிரதமர் பதவிக்குரிய வேட்பாளர் இல்லை என்ற குறை வராது. மாயாவதி அதுவும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பிரதமர் வேட்பாளர் இப்போது ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு கிடைத்துவிட்டார்.

இந்தத் தைரியத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று போர்ப் பிரகடனம் செய்து புறப்பட்டு இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பின் விளைவாக இப்படியொரு சாதகமான சூழ்நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் முதல்வர் கருணாநிதியின் டெல்லி விஸிட்டின் பின்னணியாம். அதேபோல் தமிழகக் கூட்டணி நிலைவரங்களையும் சோனியாவுடன் ஆலோசித்துள்ளதாகத் தகவல். முதல்வரின் டெல்லி விஸிட் பற்றி நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஒருவர்;

""இந்த அணி உருவானதற்கு முதலில் காரணமாக இருந்தவர் கலைஞர். இடதுசாரிகள் விலகிச் சென்றுள்ள நிலையில் அடுத்த கட்டப் பயணம் புதிய கூட்டணிக் கட்சிகளுடன் நாங்கள் தொடர வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். முலாயம்சிங் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒமர் அப்துல்லா, சிபு சோரன் போன்றவர்கள் இந்த அணியில் இடம்பெறக் கூடும். இந்த கூட்டணி மாற்றங்கள் குறித்துப் பேசுவதற்காகவே முதல்வர் டெல்லி வந்தார்' என்றார்.

தி.மு.க. வட்டாரத்திலோ, ஜூலை 11 ஆம் திகதியே கலைஞர் டெல்லி செல்வதாக இருந்தது. சில காரணங்களால் அது தள்ளிப் போனது.

இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெற்றுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சோனியாவை நேரில் சந்தித்து நன்றி சொல்லியுள்ளார். தன்னைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர்' என்ற அந்த வட்டாரம் மேலும் முதல்வர் முன்பு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. பா.ம.க. விலக்கப்பட்டு விட்டது.

இடதுசாரிகளின் ஆதரவு தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் முன்பிருந்த ஜெயலலிதாவைச் சேர்க்கும் நோக்கில் இடதுசாரிகள் செயற்பட்டால் தமிழகத்தில் கூட்டணிப் பிரச்சினை ஏற்படும். எங்கள் கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெற முடியாத சூழ்நிலை உருவாகும். குறிப்பாக சென்னையில் முன்பு பேசிய பிரகாஷ் காரத் "காங்கிரஸில் எங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸுக்கு நண்பர்கள் அல்ல!' என்று கூறினார்.

ஆகவே, இடதுசாரிகள் தி.மு.க. கூட்டணியில் தொடருவது குறித்த காங்கிரஸின் சிந்தனையோட்டத்தையும் தெரிந்து கொண்டிருப்பார் முதல்வர் என்கிறார்கள். இந்நிலையில், நாம் தி.மு.க. எம்.பி.க்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்களும் முதல்வரின் டெல்லிப் பயணம் முழுக்க முழுக்க சோனியாகாந்திக்கு நன்றி சொல்வதுதான்.

இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெறுவதற்கு முன்பே நிலையான அரசு வேண்டும். இப்போது தேர்தல் வரக்கூடாது. மதவாதச் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வர நாம் வாய்ப்பு தந்துவிடக் கூடாது என்ற மூன்று முக்கிய காரணங்களை வைத்தே இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே சமரசம் செய்தார் முதல்வர்.

அது இடையில் முறிந்து போனாலும் இடதுசாரிகளை அப்படியே விரட்டியடிக்கும் பணியை செய்யக் கூடாது என்பது முதல்வரின் நோக்கம். இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் மீண்டும் இடதுசாரிகளின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவைப்படலாம்.

அவர்களைக் கைவிடக் கூடாது என்றே கருதுகிறார்கள். அதனால் தான், கம்யூனிஸ்டுகள் பிரிந்த போது காரத் காங்கிரஸை ""மூழ்கும் கப்பல்' என்று விமர்சித்தும் ""நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்கள் சுடு சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது' என்றார் கலைஞர்.

ஆகவே, நடந்தது எப்படியோ இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்ற ரீதியில் மத்திய அரசுக்கு இப்பயணத்தின் போது கலைஞர் ஆலோசனை சொல்லியிருப்பார் என்றவர்கள், ""ஒகேனக்கல்' திட்டம் சேது சமுத்திரத் திட்டம் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுப்பது போன்றவையும் முதல்வரின் டெல்லி அஜெண்டாவில் முக்கியமானதாக இருந்தது என்கிறார்கள்.

ஆனால், எதிர்முகாமிலோ டெல்லிக்கு கருணாநிதி போனதற்குக் காரணம் தமிழகத்தில் உள்ள கூட்டணிப் பிரச்சினையே! பா.ம.க., இடதுசாரிகளின் சிக்கலால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி ஆட்சிக்கு பிரஷர் கொடுக்கலாம். இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள சூழ்நிலையில் ஆட்சியில் பங்கு கேட்டால் என்ன செய்வது என்று கருணாநிதி கவலைப்படுகிறார்.

பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் நடத்திவிடலாம் என்பது ஓர் ஆப்ஷன். ஆனால், அது அந்த அளவுக்குச் சாதகமாக இருக்கும் என்பதில் கருணாநிதிக்கு சந்தேகம் இருக்கிறது. ஆகவே தான், முதல்வராக இருக்கும் போது ஆட்சியில் பங்கு கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்பதை சோனியாவிடம் சொல்லியிருப்பார்.

அப்படியில்லையென்றால் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி அரசுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு காங்கிரஸ் ஆதரவு சோனியாவின் ஒப்புதலைப் பெற்று வந்திருப்பார். பா.ம.க.வை. கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுள்ள நிலையில் விஜயகாந்த் போன்றவர்களை புதுவரவாகச் சேர்க்கும் வியூகம் பற்றியும் அவர் விவாதித்துள்ளதாக எங்களுக்குத் தகவல்.

அதனால் தான் காடுவெட்டி குரு பேசியதற்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. தி.மு.க. வினரைச் சுட்டுத் தள்ளனும் என்ற விஜயகாந்த் மீது தே.பா.ச. பாயவில்லை என்று பீடிகை போட்டார்கள்.

மொத்தத்தில் முதல்வர் கருணாநிதி டெல்லி விஸிட் நன்றி சொல்ல மட்டுமல்ல தமிழகக் கூட்டணி, அகில இந்தியக் கூட்டணி பற்றி சோனியாவுடன் தீவிர ஆலோசனைக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்றே தெரிகிறது.

-வர்மா-

தமிழன் எக்ஸ்பிரஸ்.


Comments