புலம்பெயர்ந்த நாடுகளில் பொங்கி எழும் எம் இனம்

உலகமெல்லாம் சிதறிக்கிடந்த யூத இனம் தமக்கான தாயகம் ஒன்று அமைய வேண்டும் என்பதற்காய் தாம் வாழ்கின்ற நாடுகளிலிருந்தே பொங்கி எழுந்தார்கள். தம் தாயக தேசத்திற்கான போராட்டத்திற்குப் பொன் கொடுத்தார்கள்-பொருள் கொடுத்தார்கள் இஸ்ரேல் எனும் வலுவான அரசை அமைத்தார்கள் என்ற ஒரு வரலாற்றை நாம் அறிந்திருக்கின்றோம். அந்த வரலாறு மீண்டும் எமது இனத்தால் புதுப்பிக்கப்படுகிறது என்பதே இன்றைய நிகழ் கால நிலைமை.

இஸ்ரேல் எனும் பூர்வீக தாயக தேசத்தை அமைப்பதற்காகவே யூதர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் நாமோ இருக்கின்ற எமது பாரம்பரிய தாயக பிரதேசத்தை மீட்பதற்காகவும் அதற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்குமாகவுமே இன்று போராடுகின்றோம். சர்வதேச அரங்கில் குரல்களை ஓங்கி ஒலிக்கின்றோம்.

எங்கள் தமிழை, தமிழீழ தாயகத்தை எங்கும் பரப்ப வேண்டும் என்பதற்காய் எமது இனம் பொங்கி எழவில்லை. எமது தாயகத்தில் நாம் வாழ எம்மை அங்கீகரியுங்கள் என்றுதான் பொங்கி எழுகிறது.

சிங்களப் பேரினவாதிகளின் தமிழினம் மீதான வன்முறைகள் தொடங்கி அது பல்வேறு விஸ்வரூபங்கள் எடுத்து எமது கல்வியை, மொழியை, நிலத்தை, உடமைகளை, உயிர்களை, உரிமைகளை அழித்து மறுத்து வந்த காலங்களில்தான் எமது இனம் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு தெரிவாக ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டப் பாதையைத் தெரிவு செய்தது. பரந்து விரிந்த தாயகப்பகுதியை காப்பதற்காய் சிறிய போராளிக் குழுக்கள் பென்னம் பெரிய அரச படைகளுடன் மோத வேண்டும். இதுதான் எமது விடுதலைப் போராட்டத்தின் தோற்றுவாயாக இருந்தது.

இலட்சியத்தின் கனதிக்கும் எமது ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்திற்கும் இடையே அதிக தூர இடைவெளி, காலப்போக்கில் பல்வேறு போராளிக்குழுக்கள் தம் பாதையிலிருந்து விலகிவிட கடுகு சிறிதெனினும் காரம் பெரிதாய் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் போராட்ட அமைப்பு மக்கள் மனம் வென்று இலட்சியத்தில் உறுதிகொண்ட செயல் வீரர்களாய் பலம்பெற்று வளர்ந்தது.

எமது விடுதலைப் போர் உள்நாட்டில் முக்கிய பதிவாகிக்கொண்டிருந்தது. தமிழர்களின் உரிமைப் போரினை இரும்புக் கரம்கொண்டு அடக்கிவிட சிங்களப் பேரினவாத அரசுகள் காலங்காலமாய் முயன்றன, அடக்கிவிடலாம் எனவும் நம்பின. இது அன்றைய ஜே.ஆர். தொடங்கி இன்றைய மகிந்த வரைக்கும் பொருந்தும்.

ஆனால் நடந்தது என்ன உள்நாட்டில் எழுச்சிகொண்ட தமிழினம் விடுதலைப் படையாய் வளர்ச்சி அடைந்த போது சிங்களப் பேரினவாத அரசு பல்வேறு இழப்புக்களையும் அழுத்தங்களையும் சந்திக்க நேர்ந்தது.

குறிப்பாக 1987 ஆம் ஆண்டு காலப்பகுதி சிங்களம் தன்நிலை இழந்த மிகப்பெரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கரும்புலியாய் உருவெடுத்த கப்டன் மில்லர் எனும் ஒரு தமிழ் வீரன் நடாத்திய தாக்குதலால் சின்னா பின்னப்பட்டுப்போன சிங்கள இராணுவ இயந்திரம் வெளிநாட்டுப்படை உதவியை நாடவேண்டிய இழிநிலைக்குச் சென்றது. இது ஒரு வரலாற்றுத் திருப்பம். பின்னர் என்ன நடந்தது என்பது யாவரும் அறிந்ததே.

உள்நாட்டில் எழுச்சிகொண்ட எமது விடுதலைப் போர் ஒரு அந்நிய வல்லரசு தேசத்தின் இராணுவ, அரசியல் அழுத்தங்களுக்கும் உட்பட்டு மீண்டெழுந்து வெற்றிகண்டது என்பதே அந்த வரலாற்றின் சுருக்கம்.

அதன் பின்னர் பல மாறுதல்கள், உள்நாட்டில் மட்டும் போராட வேண்டியவர்களாய் இருந்த எமது இனம் சர்வதேச அரங்கில் பின்னப்படும் சதிவலைப்பின்னல்களிலிருந்தும் மீண்டெழ வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது.

இன்றைய உலக அரங்கில் எமது விடுதலை வேண்டிய போராட்டத்தையும் அதன் தேவையையும் உணர்த்த வேண்டிய பாரிய பொறுப்பும் எமது இனத்திற்கு இருக்கிறது.

அந்தப் பாரிய பொறுப்புத்தான் இன்று பொங்கு தமிழாய் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கிறது என்ற செய்தியினை தாய் நிலத்தில் இருந்து நாம் மகிழ்ச்சியோடு அறிகிறோம்.

இது ஒரு காலமாற்றம். நிலத்தில் சிந்தப்படும் குருதிக்கும் வியர்வைக்கும் புலத்தில் வாழும் எம் தமிழ் உறவுகள் அங்கீகாரம் கோருகிறார்கள். இங்கே விதைக்கப்படுகின்ற மாவீரர்களின் ஆன்ம இலட்சியத்தை ஓங்கி ஒலிக்கிறார்கள். எங்கள் நிலமீட்பின் பின்னால் பலமாக இருக்கிறோம் என்ற செய்தியை வலிமையாய் உரைக்கிறார்கள்.

சர்வதேசமே எங்களை அங்கீகரி எமது விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள் என்று ஆயிரமாய், இலட்சமாய் கூடி முழக்கம் இடுகிறார்கள். யூதர்களின் குரல் இஸ்ரேல் எனும் நாட்டிற்கான அங்கீகாரத்தை எவ்வாறு தேடிக் கொடுத்ததோ அதேபோல் தமிழீழம் என்ற தேசத்தின் அங்கீகாரத்திற்காய் எமது இனம் இன்று சர்வதேச அரங்கில் செய்கின்ற பொங்கு தமிழ் நல்ல மாற்றத்தை உண்டு பண்ணும்.

தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் தமிழர்கள் தம் தாய்நிலத்தை விட்டு தப்பி ஓடி வெளிநாடுகளில் அடைக்கலம் தேடிக் கொண்டபோது அன்றைய சிங்கள அரசுகள் உள்நாட்டில் தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாய் மகிழ்ந்திருக்கும். ஆனால் இன்று அந்தத் தமிழர்களால் எமது விடுதலைப் போராட்டம் பலம் பெற்று நிற்கிறது என்ற செய்தி இப்போதைய மகிந்த அரசை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது என்பதே உண்மை.

நோர்வே, இத்தாலி, பிரான்ஸ் ஜேர்மனி, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா என்று ஓங்கி ஒலிக்கின்ற பொங்குதமிழின் செய்திகள் கேட்டு மகிந்த அரசு குழம்பிப்போய் இருப்பதாய் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில சிங்கள இனவாத ஆங்கில ஊடகங்கள் பொங்குதமிழ் குறித்த செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியிட்டு சிங்கள இனத்தை உசுப்பேத்திவரும் அளவிற்கு இன்று எமது புலம்பெயர்ந்த தமிழர்களின் பொங்குதமிழ்ப் பிரகடனம் பெரிய மாறுதல்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

கடந்த ஐந்தாம் திகதி கனடாவில் நடந்த பொங்கு தமிழ் குறித்த பதிவுகள் எமது இனத்தின் பலம் எவ்வாறு உள்ளது என்பதை கனடா நாட்டிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளை கனடா தடைசெய்துள்ள நிலையிலும், தமிழினத்திற்காய் குரல் கொடுத்து வருகின்ற உலகத் தமிழர் அமைப்பை தடை செய்துள்ள நிலையிலும் கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் ஒரு இலட்சத்திற்கும் அதிக தமிழர்கள் ஒன்றுதிரண்டு பொங்கு தமிழ் நிகழ்வை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி சிங்கள தேசத்தின் முகத்தில் கரியைப் பூசியுள்ளதுடன் சர்வதேசத்திற்கும் காத்திரமான செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறது. அடக்குமுறையினை உடைத்தெறிய எழுந்த எமது இனத்தை எந்த ஒரு சக்தியாலும் அடக்கிவிட முடியாது என்பதே அச்செய்தி.

ஆயிரம் தடை வரினும் அத்தனை தடைகளையும் உடைத்து எமது விடுதலை நோக்கிய பாதையைப் பலப்படுத்துவோம் என்ற செய்தியினையும் எமது புலம்பெயர் உறவுகள் உணர்த்தியிருக்கின்றன.

தமிழீழ தேசியத் தலைவரின் புகைப்படத்தினையும் தமிழீழ தேசிய கொடியினையும் தாங்கி ஒருமித்து குரல் எழுப்பிய கனடா வாழ் எம் தமிழ் உறவுகளின் உணர்வுகளைக் கனடா அரசு எதிர்காலத்தில் நிச்சயம் மதித்து நடக்கும் என்பதை நம்புகிறோம். ஏனெனில் சிங்களத்தின் அச்சமே அதனை எமக்கு உணர்த்தியிருக்கிறது.

தமது நாட்டின் வெளிநாட்டு தூதுவர்களுக்கு மகிந்தர் அண்மையில் கண்டிப்பான உத்தரவு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதாவது, சர்வதேச அரங்கில் தமிழர்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்காய் உரிய நடவடிக்கைகளை எடுங்கள், சிங்கள மக்களை ஒன்றுதிரட்டி புலிகளுக்கெதிரான பரம்புரைகளை முன்னெடுங்கள் என்பதே மகிந்தரின் அவசர கட்டளையாக இருக்கிறது.

இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, சர்வதேசத்தில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்பது தமக்கான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் எனும் பயம் சிங்கள தலைமையைப் பீடித்துள்ளது என்பதே அச்செய்தி.

அண்மையில் இத்தாலியில் 35 வரையான ஈழத்தமிழர்கள் சிங்கள அரசின் இராஜதந்திர அழுத்தத்தால் இத்தாலிய அரசால் கைது செய்யப்பட்ட பின்னரும் அங்கு எழுச்சியுடன் நடைபெற்ற எம் தமிழ் உறவுகளின் உரிமைக்குரல் நிகழ்வுகள் சிங்களத்தைச் சினமூட்டின.

அன்றைய நாளிலேயே தமது சிங்கள இனத்தை அங்கு திரட்டி எதிர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தது. எனினும் எமது இனத்தின் உணர்வெழுச்சிக்கு முன்னால் அவர்களின் போராட்டம் புஸ்வாணமாகியது.

இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் தமிழ் செய்தி அறிக்கை நடந்துகொண்ட விதம் குறித்து ஒரு தகவலை வேதனையுடன் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

அதாவது, இத்தாலியில் நடைபெற்ற தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்தினையும், சிங்களவர்களின் சிறிய எதிர்ப்புப் போராட்டத்தினையும் ஒரே தராசில் போட்டு ஏதோ நடுநிலைமையாகச் செய்தி சொல்கிறோம் எனக் காட்டிக்கொண்ட அந்தச் செய்தி ஊடகம் கடந்த 12 ஆம் திகதி (அச்செய்தி வளாகம் இயங்குகின்ற நாட்டில்) நாற்பதினாயிரத்திற்கும் அதிக தமிழர்கள் ஒன்றுதிரண்டு பொங்கு தமிழ் நிகழ்வை மிக எழுச்சியுடன் செய்தார்கள் என்ற செய்தியை இருட்டடிப்புச் செய்தார்கள் என்ற செய்தி எமக்கு மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது.

எது எப்படியோ எமது இனத்தின் பொங்கு தமிழிற்கு முன்னால் எந்த ஒரு சக்திகளும் நிகர் நிற்க முடியாது. ஆத்ம உணர்வில் இருந்து பிறக்கின்ற விடுதலைக் குரல்களை எந்த ஒரு அரசினாலும் அடங்கிவிட முடியாது.

எம் நிலத்தின் விடிவிற்கான விடுதலைப் போருக்கு வலுச்சோர்த்து நிற்கும் புலம்பெயர் வாழ் தமிழர்களின் நாடித் துடிப்புகள் என்றும் நம் நிலம் மீள வேண்டும் என்பதற்காகவே துடிக்கும் என்ற உண்மைகளைப் பொங்குதமிழ் நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

- க.ப.துசியந்தன் -

வெள்ளிநாதம் (18.07.08)

Comments