ஓராண்டு பதவி நீடிப்பிற்கான சரத் பொன்சேகாவின் விண்ணப்பம், -ஜெயராஜ்-

6000 - 9000 = 5000 இது புலிகளின் தற்போதைய எண்ணிக்கை பற்றிய சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகாவின் புதிய சமன்பாடு. இச்சமன்பாட்டை எவ்வாறு சீர்செய்வது என்பது எமக்குத் தெரியாது. சிறிலங்காவின் இராணுவத் தளபதி இச்சமன்பாட்டை எந்த இராணுவக் கல்லூரியில் கற்றுக்கொண்டார் என்பதும் எமக்குத் தெரியாது. ஆனால் சிறிலங்காவிலுள்ள பாடசாலையிலோ அன்றி பல்கலைக்கழகங்களிலோ இத்தகையதொரு சமன்பாட்டை அவர் கற்றுக்கொண்டிருக்க முடியாது.

இப்புதிய சமன்பாடும் அது பற்றியதான விளக்கமும் கடந்த திங்கட்கிழமை இராணுவத் தலைமையகத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் அளிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, இச்சந்திப்பில் மேலும் இரண்டு விடயங்களையும் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

இதில் ஒன்று விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றலை இழந்து விட்டார்கள். இனிமேல் அவ்வாறான தாக்குதலில் ஈடுபடும் ஆற்றல்ஃ திறன் அவர்களிடம் இல்லை. இரண்டாவது விடுதலைப் புலிகள் மோசமாகப் பலவீனமான நிலையை அடைந்துள்ளபோதும் அவர்களைத் தோற்கடிக்க இன்னமும் ஓராண்டு காலம் தேவை என்பது.

இதில் முதலாவதாக சரத் பொன்சேகாவின் விடுதலைப் புலிகளின் எண்ணிக்கையைக் குறித்த புதிய சமன்பாட்டிற்கு எவ்வாறு வந்தார். அதன் கண்டுபிடிப்பு எதன்பாற்பட்டதென்பது ஆராயப்பட வேண்டியதாகிறது. ஏனெனில் 2006 இன் ஆரம்பத்தில் யுத்தம் ஆரம்பித்தபோது 6000 பேராக இருந்த விடுதலைப் புலிகள் இரண்டு வருடத்தில் 9000 பேரை இழந்துவிட்டதன் பின்னரும் எவ்வாறு 5000 பேர் ஆனார்கள் என்பதாகும்.

சரத் பொன்சேகாவின் இச்சமன்பாட்டிற்கு எம்மால் விளக்கம் அளிக்கமுடியாது போனாலும், எம்மால் சில கேள்விகளை முன்வைக்க முடியும். அதாவது 6000 பேராக விடுதலைப் புலிகள் இருக்கையில் 9000 விடுதலைப் புலிகளை எவ்வாறு கொல்ல முடியும்? ஆறாயிரம் பேரில் கொல்லப்பட்ட 9000 பேர் போக 5000 பேர் எப்படி எஞ்சியிருக்கமுடியும்?

ஆகையினால், சிறிலங்கா இராணுவத் தளபதியின் மதிப்பீட்டில் விடுதலைப் புலிகளை முதலில் ஆறாயிரம் பேர் என மதிப்பிட்டது தவறாக இருத்தல் வேண்டும் அன்றி கொல்லப்பட்ட எண்ணிக்கையின் அளவு தவறாக இருத்தல் வேண்டும்.

ஆனால், இதில் எதுவாயினும் சரி 5000 பேர் எஞ்சியுள்ளனர் என்பது மேற்கூறப்பட்ட புள்ளிவிபர அடிப்படையில், சமன் செய்யப்பட முடியாததொன்றாகும். அதாவது சரத் பொன்சேகாவின் கணிப்பீடு கணிதத்தின் பொது நியமங்களுக்குட்பட்டதாக இல்லை.

ஆனால், புலிகள் பற்றிய இம் மதிப்பீட்டுத் தவற்றைச் சிறிலங்காப் படைத்துறை அதிகாரிகளோ அன்றி அரசியற்தலைவர்களோ தற்பொழுது தான் தவறாக மேற்கொள்கின்றார்கள் என்றில்லை.

ஒரு சில தீவிரவாதிகளை ஆறு மாத காலத்திற்குள் முடித்து விடுவதாக யாழ். குடாநாட்டிற்கு 1979 இல் பொறுப்பேற்று வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மருமகன் பிரிகேடியர் விஜயதுங்கவில் இருந்து இன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வரையில் இத்தகைய மதிப்பீட்டையே செய்து வந்துள்ளனர்.

இதேபோன்று போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் எனப் போர்ப் பிரகடனம் செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவில் இருந்து இன்று புலிகளைத் தோற்கடித்தே தீருவோம் எனக் கூறியாவது ஆட்சியில் இருக்கும் மகிந்த ராஜபக்ச வரையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்க படை அதிகாரிகளுக்கு கால அட்டவணையுடன் கூடியதான அனுமதிகளை வழங்கியவர்கள் தான்.

ஆனால், அவர்களின் புலிகள் குறித்த மதிப்பீடு சரியாக அமையாததால் பிரிகேடியர் விஜயதுங்கவால் 1979 இல், ஆறு மாதத்திற்குள் முடித்து வைக்க முடியாது போனது மட்டுமல்ல, மூன்று தசாப்தம் கடந்தும் போராட்டம் நீடித்துச் செல்கின்றது.

ஏனெனில், விடுதலைப் புலிகள் நடத்துவது ஒரு இனத்தின் விடுதலைக்கான போராட்டம் என்பதையும், இதனால் போராளிகளின் எண்ணிக்கையை மதிப்பிட முடியாது என்பதும் அவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. அத்தோடு, சிறிலங்காப் படைத்தரப்பு புலிகளின் இழப்புக் குறித்து வெளியிடும் உண்மைக்கு மாறான தகவலின் அடிப்படையில் தமது மதிப்பீடுகளைச் செய்வதினால் மேற்கூறப்பட்டதான புதிய சமன்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டியும், அதன் மூலம் விமர்சனத்திற்குள்ளாக வேண்டியதாகவும் உள்ளது.

அடுத்ததாக, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இன்னும் ஓராண்டு கால அவகாசம் தேவை என்ற இராணுவத் தளபதியின் விண்ணப்பமாகும். அதாவது மேலும் ஓராண்டு கால அவகாசம் கோருவதாகும். ஆனால் இக்கால அவகாசத்தைச் சரத் பொன்சேகா தனது பதவிக்காலத்தை ஓராண்டிற்கு நீடிக்கு மாறு கோருகின்றாரா?

அன்றி இராணுவ நடவடிக்கையை முடிவிற்குக் கொண்டுவர ஓராண்டுகால அவகாசம் கோருகின்றாரா? என்பது முக்கியமானதாகும்.

ஏனெனில், சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் இவ்வாண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அவர் தனது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுகள் நீடிக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் ஆசீர்வாதமும், சனாதிபதி மகிந்தவின் அங்கீகாரமும் அதற்குத்தேவை, அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

தனது பதவிக் காலத்திற்குள் புலிகளைத் தோற்கடித்து - அடுத்த இராணுவத் தளபதிக்கு யுத்தத்தை விட்டுச் செல்லப்போவதில்லை என முன்னர் ஒரு தடவை தெரிவித்திருந்த சரத் பொன்சேகா தற்பொழுது நிச்சயமாக நம்புகின்றார் தற்போதைய தனது பதவிக்காலத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட முடியாது என்று.

சிறிலங்கா ஆட்சியாளர்கள் அனைவருமே தமது பதவிக் காலத்திற்கெனச் சில திட்டங்களை வகுத்துக் கொள்வதுண்டு. தேர்தலில் போட்டியிடும் போது ஒரு நிலைப்பாடு- தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த பின்னர் ஒரு நிலைப்பாடு பின்னர் தேர்தலுக்கு என்ற வகையில் அவர்களின் செயற்பாடு இருப்பதுண்டு. ஓராண்டிற்கு முன்னர் அதாவது அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாடு.

இன்று இது சிறிலங்கா அரசியல்வாதிளுக்கு மட்டும் பொருத்தப்பாடானதல்ல. சிறிலங்காப் படைத்துறையினருக்கும் பொருத்தப்பாடானதாக மாறியுள்ளது. ஏனெனில் அரசியல்வாதிகள் போன்றே படைத்துறைத் தளபதிகளும் தற்பொழுது தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்.

இந்தவகையில், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தற்பொழுது மேலும் ஓராண்டு காலப் பதவி நீடிப்பிற்கானதொரு அறிவிப்பே விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு இன்னமும் ஓராண்டு காலம் தேவை என்பதாகும். ஒருவகையில் பார்க்கப்போனால் பதவிக்கால நீடிப்பிற்கான விண்ணப்பமே இதுவாகும். ஏனெனில்; விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்தல் என்பது சாத்தியப்பாடானதாக இருக்க மாட்டாது என்பதை வரலாறு அவர்களுக்குக் கற்பிக்கும் பாடமாகும்.

அடுத்ததாக மரபுவழி இராணுவமாக விடுதலைப் புலிகளால் இனிச் செயற்படமுடியாது. அவர்கள் பெரிதும் பலவீனப்பட்டுப் போய்விட்டனர். அவர்கள் தற்பொழுது எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டு வரினும், ஆரம்பத்தில் போரிட்டது போன்று வலுவாக இல்லை என்ற சரத் பொன்சேகாவின் மதிப்பீடாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகாயக் கடல் வெளிச்சமரின் போதே (1991 இல்) ஒரு மரபுவழி இராணுவமாகச் செயற்படத் தொடங்கியிருப்பினும், ஜெயசிக்குறு தாக்குதலை விடுதலைப் புலிகள் முறியடிக்கும் வரையில் புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதை இராணுவ விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜெயசிக்குறு முறியடிக்கப்பட்டபோதே புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றல் கொண்டவர்கள் என ஒப்புக்கொண்டனர்.

ஆனால், விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் வல்லமை கொண்டிருந்தபோதும் - தேவைக்கேற்ற வகையில் அவர்கள் தமது செயற்பாட்டை மேற்கொள்வதுண்டு. அதாவது மரபுவழி இராணுவமாக, இடைநிலை தாக்குதல் அணிகளாகக் கெரில்லாக் குழுக்களாகவும் செயற்படுவதுண்டு. அது மட்டுமன்று தனித்தோ சிறு குழுக்களைக் கொண்ட தற்கொடைப் போராளிகளாகவும் செயற்படுவதுண்டு. அதாவது தேவைக்கேற்ற விதத்தில் தமது செயற்பாட்டை மாற்றிக் கொள்வதுண்டு.

புலிகளின் இத்தகைய செயற்பாடு வலிந்து தாக்குதலின் போதும் இடம்பெறுவதுண்டு, தற்பாதுகாப்புத் தாக்குதலின் போதும் இடம்பெறுவதுண்டு. இதற்குப் புலிகளின் வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. இத்தகையதொரு நிலையில் புலிகள் வலிந்து தாக்குதல்களில் ஈடுபடும் வலுவை இழந்துவிட்டார்கள் - மரபுவழி இராணுவத்திற்குரிய பலத்தை இழந்துவிட்டார்கள் எனக் கூறுவதுதெல்லாம் தவறான மதிப்பீட்டின் அடிப்படையிலானதே.

1995, 1996, 1997, 1998 ஆம் ஆண்டுகளின் முறையே. 1508, 1380, 2112, 1806, போராளிகளை இழந்த பின்பே புலிகள் ஓயாத அலைகள்-03 நடவடிக்கையை மேற்கொண்டார்கள் என்பதையும், அதன் பின்பே விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் வல்லமையைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என இராணுவ ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டதையும் இங்கு நினைவிற்கொள்ளுதல் வேண்டும்.

அதாவது, கடந்த இரண்டு வருடத்தில் களமுனையில் புலிகள் சந்தித்த இழப்பு மேற்கூறப்பட்டவற்றைவிட அதிகமும் அல்ல, புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்ற அர்த்தமும் அல்ல.

களமுனையை விடுதலைப் புலிகளும் திட்டத்துடனேயே மேற்கொள்கின்றனர். வலிந்து தாக்குதலும், தற்காப்புத் தாக்குதலும், பின்னகர்தலும் அவற்றிற்கேற்பவே இடம்பெறுகின்றது. புலிகள் களத்தைவிட்டு ஓடிவரவில்லை.

ஆனால், இவ் வரலாற்றுப் பாடங்களைக் கருத்திற்கொள்ளாத சரத் பொன்சேகா ஒரு வருட காலத்திற்குள் தமது தற்போதைய தாக்குதல் வலுவையும் புலிகள் முற்று முழுதாக இழந்து தமது கடைசித் தந்திரோபாயத்தை நாடவேண்டி வரும் எனக் கூறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டானது, தற்பொழுது கிழக்கில் விடுதலைப் புலிகள் செயற்படுவது போன்று வடக்கிலும் புலிகள் செயற்படவேண்டி வரும் என்பதாகும். இதன் அர்த்தமானது கைத்துப்பாக்கி மற்றும் கிளைமோர்த் தாக்குதல்கள் மட்டுமே மேற்கொள்ளும் அளவிற்கு வலுவிழந்து போவர் என்பதாகும்.

ஆனால், சரத் பொன்சேகாவின் பேட்டி வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளேயே அம்பாறைக்கு உலங்குவானூர்தியில் சென்ற சனாதிபதி மகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்கியமை மற்றும் அதிரடிப்படை முகாம் மீது நடத்திய தாக்குதல் மூலம் தனது பயணத்திட்டத்தின் மூலம் செயற்பட விடாது கொழும்பிற்கு விரட்டிவிட்டதோடு, அவர் பயணத்திற்கும் பயன்தரும் உலங்குவானூர்தி ஒன்றையும் தாக்கிச் சேதமாக்கியுள்ளனர்.

இது நிச்சயம் இராணுவத் தளபதிக்கு சனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இருந்து 'பாராட்டுதல்களைப்" பெற்றுக்கொடுத்திருக்கும் என்றே நம்பலாம். மறுபுறத்தில் முதல் நாள் இராணுவத் தளபதி பேசிய பேச்சை கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கியி ருக்கும் எனவும் நம்பலாம்.

முப்பது வருட விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் அதியுச்ச நெருக்கடிகளில் அதிசயிக்கத்தக்க பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்பது வரலாறு.

இத்தகைய நெருக்கடி ஒன்று தற்பொழுது ஏற்படவில்லை. ஆயினும் அவ்வாறு நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என நம்பும் சிறிலங்காவின் இராணுவத் தலைமைக்கு எதிர்காலத்திலும் விடுதலைப் புலிகள் பல அதிர்ச்சியினைக் கொடுப்பார்கள் என உறுதியாக நம்பலாம்.

நன்றி: வெள்ளிநாதம் (04.07.08)


Comments