சிறிலங்கா அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய அரசினை கண்டித்து அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக்கொல்லும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகள் கூட்டுக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, கடந்த மாதம் 11 ஆம் நாள் சென்னையில் அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழ் அமைப்புகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முடிவில் சென்னையில் இந்திய அரசைக் கண்டித்துப் பேரணி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் பேரணி நடைபெறவிருந்த இன்றைய நாளுக்கு முதல் நாள் இரவு, பேரணிக்குத் தடை விதித்தும் பேரணி தொடங்குவதாக இருந்த சென்னை பெரியார் சிலைக்குப் பதிலாக சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என அறிவித்தார்.

அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, சுவரொட்டிகள் துண்டறிக்கைகள் மூலமாக பரப்புரைகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த திடீர் மாற்றத்தினை காவல்துறை அறிவித்தது.

அவசர அவசரமாக மீண்டும் அனைவருக்கும் செய்திகள் பரிமாறப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியிலிருந்தே சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியின் முன் பெருந்திரளாக அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் கூடத் தொடங்கினர்.

செய்தி அறியாத பல தொண்டர்கள் பெரியார் சிலைக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து சேப்பாக்கத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காகப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

சரியாக பிற்பகல் 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு முழக்கங்கள் எழுப்ப, தொடர்ந்து தலைவர்களும் குழுமியிருந்த தொண்டர்களும் உணர்ச்சியோடு முழக்கம் எழுப்பினர்.

இந்திய அரசே! இந்திய அரசே!
எங்கள் ஈழத் தமிழர்களை
கொன்று குவிக்கும்
சிங்கள இன வெறி அரசுக்கு
கொடுக்காதே! கொடுக்காதே!
ஆயுதங்கள் கொடுக்காதே!

கச்சதீவைத் தாரை வார்த்த
இந்திய அரசே! இந்திய அரசே!
காப்பாற்று! காப்பாற்று!
எங்கள் மீனவர் உயிரைக் காப்பாற்று!

தமிழக மீனவர் மீது
தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி
சுட்டுக்கொல்லும் சிங்கள அரசின்
ஈனத்தனத்தை ஈனத்தனத்தை
தமிழக அரசே! தமிழக அரசே!
வேடிக்கைப் பார்க்காதே!
வேடிக்கைப் பார்க்காதே!

சாகிறான்! சாகிறான்!
எம் தமிழக மீனவன் சாகிறான்!
பார்க்கிறான்! பார்க்கிறான்!
இந்தியன் வேடிக்கைப் பார்கிறான்!

அத்துமீறுது சிங்களக் கடற்படை
வேடிக்கை பார்க்குது இந்தியக் கடற்படை
காப்பாற்ற மறுக்குது இந்திய அரசு
ஆயுதம் வழங்கு! ஆயுதம் வழங்கு!
தமிழக மீனவருக்கு ஆயுதம் வழங்கு!

கொத்துக் கொத்தாக
எமது தமிழக மீனவர்களைச்
சுட்டுக்கொன்ற சிங்கள அரசை
கண்டிக்கக் கூட லாயக்கற்ற
இந்திய அரசே! இந்திய அரசே!
உங்களுக்கும் எங்களுக்கும்
உறவெதற்கு! உறவெதற்கு!

தடையை நீக்கு! தடையை நீக்கு!
விடுதலைப் புலிகள் மீதான
தடையை நீக்கு! தடையை நீக்கு!

அங்கீகரி! அங்கீகரி!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை
அங்கீகரி! அங்கீகரி!

வெல்லட்டும்! வெல்லட்டும்!
விடுதலைப்புலிகள் வெல்லட்டும்!
பிறக்கட்டும்! பிறக்கட்டும்!
தமிழீழம் பிறக்கட்டும்!

ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து இலட்சிய தி.மு.க தலைவர் இயக்குநர் விஜய டி.இராஜேந்தர், தேசிய லீக்கின் மாநிலப் பொதுச் செயலாளர் நூருதீன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா.வெள்ளையன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, ஓவியர் வீர. சந்தனம், சா.சந்திரேசன், தமிழ்த் தேச மார்க்சியக் கட்சியின் பொதுச் செயலாளர் இராசேந்திர சோழன், மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த வாலாசா வல்லவன், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன், உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் மெல்கியோர், மறுமலர்ச்சி மக்கள் தமிழகத்தின் செயலாளர் இராசேந்திரன், ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக பழ. நெடுமாறன் உரையாற்றினார். உரைகளுக்கு நடுவே தொடர்ந்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல்வேறு கட்சிகள் அமைப்புகளைச் சேர்ந்த பேரா. சரசுவதி, இயக்குநர்கள் வ.செ.குகநாதன், புகழேந்தி, கவிஞர்கள் இன்குலாப், ஜெயபாசுகரன், ஓவியர் புகழேந்தி, பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா, முனைவர் தமிழப்பன், பேரா. ஆறு. அழகப்பன், பொன்னிறைவன், இரா. பத்மநாபன், இளவழகன், அற்புதம் அம்மையார், பேரா. மருதமுத்து, தமிழர் கழகத்தின் முத்துக்குமார் மணிகண்டன், கி. த. பச்சையப்பன் ஆகியோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பெரும் எழுச்சியுடன் பங்கேற்றனர்.


Comments