நியாயப் போராட்டங்களுக்கும் கூட பயங்கரவாத முலாம் பூசும் முயற்சி

தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்தல் என்று ஒன்று கூடி "சார்க்' தலைவர்கள் விடுத்த அறிவிப்பு எள்ளி நகையாடத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

நோயின் மூலகாரணியைத் தேடிக் கண்டு பிடித்து, அதற்கு வைத்தியம் செய்வதை விடுத்து, நோய் வெளிப்படுத்தும் குணங்குறிக்கு மருத்துவம் பார்க்கும் "அரைகுறை' வைத்தியர்களாகவே அவர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள்.

அது மாத்திரமல்ல, அந்த நோயின் விளைவாக வெளிப்படும் "பயங்கரவாதம்' என்ற பிரச்சினை மட்டுமே இந்த எட்டு நாட்டுத் தலைவர்களின் கண்களில் பட்டிருக்கின்றது.

அதுபோன்ற மிக மோசமான இந்நோயின் மற்றொரு வெளிப்பாடு அவர்களின் கவனத்தை ஈர்க்காமை அவர்களை "அரைகுறை' வைத்தியர்களாகவே அடையாளம் காட்டி நிற்கின்றது.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் நியாயமான உரிமைகளுக்கான எழுச்சியும், கிளர்ச்சியும், நீதியின் வழியிலான போராட்டங்களும் "பயங்கரவாதமாக' சித்திரிக்கப்பட்டு, அதற்கு எதிரான போர்ப்பிரகடனம் சார்க் தலைவர்களால் செய்யப்பட்டது.

ஆனால் சிறுபான்மையினரின் நீதி நியாயமான போராட்டங்களை அடக்குவதற்காகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் வெறி கொண்ட அரச பயங்கரவாதமும், மோசமான அடிப்படை மனித உரிமை மீறல்களும் இந்தத் தலைவர்களின் பார்வைக்குப் படாமலேயே போய்விட்டன.

அது மட்டுமல்ல. இலங்கை போன்ற சில அங்கத்துவ நாடுகளினால் பூதாகரமாகப் பெருப்பித்துக் காட்டப்பட்ட பயங்கரவாதப் பிரச்சினைக்குப் பின்னால் புதையுண்டு கிடக்கும் சிறுபான்மையினரின் வானளாவ உயர்ந்த நியாயங்களும் கூட எட்டு நாட்டுத் தலைவர்களின் கண்களுக்குப் படாமலேயே போய்விட்டன.

மோசமான மனித உரிமை மீறல்களைக் கவனிக்காமல் புறந்தள்ளி விட்டு பயங்கரவாத விவகாரத்தை மட்டும் தூக்கிப் பிடித்த "சார்க்' அமைப்பின் போக்குக் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறை கூறி விசனம் தெரிவித்திருக்கின்றது.
ஜெகான் பெரேரா போன்ற அரசியல் அவதானிகளும் கூட இதனைச் சுட்டிக்காட்டி ஆதங்கம் தெரிவித்திருக்கின்றார்கள்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி வரை அனைவருமே "பயங்கரவாதத்தை' எதிர்த்துப் போராடுவதற்குப் பிராந்திய நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் என்பதை அதீதமாக வலியுறுத்தியமையைச் சுட்டிக்காட்டியுள்ள ஜெகான் பெரேரா, ஆனால் பெரும்பாலான இத்தகைய பயங்கரவாதம் மற்றும் மோசமான வன்முறைப் பிரச்சினைகளுக்குப் பின்னால் சிறுபான்மையினரின் ஆதங்கங்களும், மனக்குறைகளும், அபிலாஷைகளும் இராணுவ மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளின் மூலம் தீர்க்கப்பட்டு விட முடியாது என்ற உண்மை புதைந்து கிடப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கிலும், இந்தியாவின் வடகிழக்கிலும், பங்களாதேஷின் கிழக்கு மலைப் பிராந்தியத்திலும் காணப்படும் இனப் பிணக்கு அல்லது பூசல்கள், சுதந்திரமடைந்த காலத்தை ஒட்டிய, தேசியங்கள் இடையிலான போட்டியின் அடிப்படையில் எழுந்த பிரச்சினைகளே என்பதையும் சுட்டி விளக்கியுள்ளார் ஜெகான் பெரேரா.
இந்தத் தெற்காசியப் பிராந்தியங்களின் இன்றைய பொதுப் பிரச்சினை "பயங்கரவாதம்' என்று வரையறை செய்த "சார்க்' தலைவர்களிடம் அப்பிரச்சினைகளுக்குப் பெரும்பாலும் அடிப்படைக் காரணம் சிறுபான்மையினரின் தேசியங்களை மதிக்கத் தவறியமை அல்லது தேசியங்கள் இடையே எழுந்த போட்டியும் பூசலும்தான் என்பதை அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் அரசியல் துணிச்சலும், தூரநோக்குத் திறனாய்வும், நியாயத்தைச் சீர்தூக்கி வெளிப்படுத்தும் நீதிப் போக்கும் இருக்கவேயில்லை.

தேசியங்கள் இடையேயான மோதல்கள், கிளர்ச்சியாகி, புரட்சி வடிவெடுத்து, ஆயுதப் போராட்டங்களாக மாறும்போது அவற்றை வெறும் "பயங்கரவாதம்' ஆக அடையாளம் கண்டு, தீண்டத்தகாத விடயமாக ஒதுக்கி, அதை ஒழித்துவிட முயல்வது நீதியுமாகாது; விவேகமுமாகாது.

ஆட்சி அதிகாரத்துக்கும், அடக்குமுறைக்கும் எதிரான கிளர்ச்சிகளும் புரட்சிகளும் இப்படி மேலோட்டமாக அளவிடப்பட்டு "பயங்கரவாதம்' ஆக அடையாளப்படுத்தப்பட முடியுமானால் உலக வரலாற்றில், அமெரிக்க விடுதலைப் போர், பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி தொடக்கம் நேற்றைய கொஸோவோ விவகாரம் வரையான விடுதலைப் போராட்டங்கள் எல்லாமே பயங்கரவாதப் போராட்டங்கள் என்ற வகையறாவுக்குள் அடக்கப்பட்டு விடும் ஆபத்து நேரும்.

இந்த உண்மையை சர்வதேசம் சீர்தூக்கிப் பார்த்து "பயங்கரவாதம்' என்ற சொல்லுக்குப் புதிய வரைவிலக்கணத்தையும், எது பயங்கரவாதம் என்பதை அடையாளம் காண்பதில் புதிய அளவீடுகளையும் உருவாக்க முயன்று நிற்கையில் தத்தமது நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளின் மூலங்களை மறந்து மறைத்து அவற்றைப் "பயங்கரவாதமாக' அடையாளம் கண்டு, நியாயம் பொதிந்துள்ள தரப்புகளை அழித்தொழிப்பதற்கு அதே பயங்கரவாத முத்திரையைப் பயன்படுத்த "சார்க்' தலைவர்கள் முயல்வது உலகை ஏய்க்கும் செயலன்றி வேறில்லை.


Comments