வன்னியில் நிலவும் மிகப்பெரிய மனிதத்துன்பியல் நிகழ்வுகள் உலகின் கவனத்துக்கு மறைக்கப்பட்டுள்ளன என்று கத்தோலிக்க திருச்சபையின் நீதி சமாதானத்துக்கான வன்னி துணை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளது.
வன்னியில் சிறிலங்காப் படையினரின் வல்வளைப்புத்தாக்குதல் நடவடிக்கையால் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரத்துக்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள பேரவலம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நீதி சமாதானத்துக்கான வன்னி துணை ஆணைக்குழு தலைவர் அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார், வன்னி மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்திரு பெனட் அடிகளார் ஆகியோர் கையெழுத்திட்டு இம்மனுவை ஐ.நா. செயலாளருக்கு அனுப்பியுள்ளனர்.
அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வன்னியில் தமிழ்மக்களுக்கு எதிராக சிறிலங்காப் படையினர் நடத்துகின்ற தாக்குதல்கள் மக்களுக்கு மிகமோசமான அவலத்தை ஏற்படுத்தியுள்ளன.
வான்தாக்குதல், ஆட்லறி பீரங்கித்தாக்குதல் என்பவற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏ-9 சாலையை எப்போதும் மூடும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு வன்னி மக்கள் மீது படையினர் நடத்தும் தாக்குதல்கள் மக்களை மிக மோசமாகப் பாதித்துள்ளன. சொல்லில் வடிக்கமுடியாத துயரங்களை ஏற்படுத்துகின்றன.
இன்றியமையாத - அன்றாட - தேவைகள், மருத்துவ வசதிகள், கல்வி வாய்ப்புக்கள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளன.
கடந்த ஆண்டு தொடக்கம் சிறிலங்கா கடற்படை - வான்படை - தரைப்படை ஆகியவை அப்பாவிமக்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதலை நடத்துவதும் எறிகணைத்தாக்குதலை நடத்துவதாகவும் உள்ளன. இது மக்களை உளரீதியாக கடுமையாக பாதிக்கச்செய்துள்ளது.
இவ்வாறு சுமார் ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து அல்லற்பட்டு வருகின்றனர்.
இந்த மக்கள் தமது உடமைகள், வளங்கள், வருமான மூலங்கள் எல்லாவற்றையும் இழந்துள்ளனர். இவர்களது குடும்பத்தேவைகள் பூர்த்திசெய்யப்படாத நிலை காணப்படுகின்றன.
இவர்களில், சிறுவர், கர்ப்பிணித் தாய்மார் பிள்ளைப்பேற்றுக்கு உட்பட்ட தாய்மார் ஆகியோர் அதிக துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வதற்கு இடமில்லாமல் மரங்களின் கீழும் காடுகளிலும் வெளிகளிலும் வாழும் அவலம் காணப்படுகின்றது. அவர்களுக்கு வாழ ஒரு குடிலாவது தேவையாக இருக்கின்றது. சுகாதார - குடிதண்ணீர் தேவைகளுக்கு அவர்கள் அலையவேண்டியுள்ளனர். காட்டு விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பூச்சிகளுக்கும் பாம்புகளுக்கும் மத்தியில் இவர்கள் வாழும் அவலம் காணப்படுகின்றது.
அடுத்து, மழைகாலம் தொடங்கவுள்ளது. ஆனால் எந்த ஒரு தொண்டு நிறுவனத்துக்கும் மக்களுக்கான குடிசைகளை அமைப்பதற்கான தறப்பாள்கள் படையினரால் அனுமதிக்கப்படவில்லை. இது அடுத்த மழைகால அவலத்தை தீவிரமாக்கவுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை. படை நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வியை மோசமாக பாதித்துள்ளன அல்லது இடையூறு செய்துள்ளன.
சிறிலங்கா ஊடகங்களுக்கு போடப்பட்டுள்ள எழுதப்படாத தடை, தணிக்கையால் இங்கு நிகழும் பெரும் மனிதத்துன்பியல் உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இம்மக்களின் துயர்களை துடைக்க ஐ.நா. உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மோசமாகவுள்ள அவலத்தை தடுக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments