கிளிநொச்சியில் படையினர்! யாழ்ப்பாணத்தில் புலிகள்!

வன்னி மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கை ஒரு முக்கிய கட்டத்தை எட்டி நிற்கின்றது. மடுவைக் கைப்பற்றிய பின்பு மிக வேகமான முன்னகர்வுகளை செய்த வந்த படையினரின் முன்னேற்றத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

வவுனிக்குளத்தின் பெரும்பாலான பகுதிகளை ஒரு திடீர் நகர்வின் மூலம் கைப்பற்றிய சிறிலங்காப் படையினர் மல்லாவியையும் ஓரிரு நாட்களில் கைப்பற்றி விட முடியும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் மல்லாவி, துணுக்காய் ஆகிய இடங்களுக்குள் சிறிலங்காப் படையினரை நுழைய விடாது விடுதலைப் புலிகள் தீவிர மறிப்புச் சண்டையை நடத்தி வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளப் பகுதியையும் தாம் கைப்பற்றி விட்டதாக சிறிலங்காப் படையினர் கூறுகின்றனர். ஆனால் வெள்ளாங்குளத்தை சிறிலங்காப் படையினர் கைப்பற்றியிருந்தால், அதை ஒரு பெரு வெற்றியாகக் கொண்டாடி இருப்பார்கள். வெள்ளாங்குளத்துடன் மன்னார் மாவட்டம் முற்று முழுதாக சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும். வடக்கில் ஒரு மாவட்டத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து முற்று முழுதாக மீட்டு விட்டதாக சிறிலங்கா அரசு உலகம் முழுவதும் பெரும் தம்பட்டம் அடித்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் பெரிதாக நடைபெறவில்லை.

வெள்ளாங்குளம் கைப்பற்றப்பட்டதாக படைத் தரப்பில் இருந்து ஒரு சிறிய அறிக்கை மட்டும்தான் வந்தது. ஆனால் அதே வேளை தமிழ் மக்களை நோக்கி உளவியல்ரீதியான ஒரு பரப்புரைப் போரை சிறிலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. கிளிநொச்சிக்குள் சிறிலங்காப் படையினர் நுழைந்த விட்டதாக அறிவித்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ளது.

புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தப் பரப்புரை ஒரு குறிப்பிட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தியதைக் காணக் கூடியதாக உள்ளது. இரண்டு தமிழர்கள் சந்திக்கின்ற போது கிளிநொச்சிக்குள் படையினர் நுழைந்தது பற்றித்தான் பேசுகின்றனர். தேசியத்திற்கு ஆதரவு போன்று தன்னைக் காட்டிக் கொண்டு, சிறிலங்கா அரசின் செய்திகளைப் பரப்பி வரும் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றும் கிளிநொச்சிக்குள் படையினர் நுழைந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தியை ஒளிபரப்பியது.

கிளிநொச்சி என்பது ஒரு நகரம் மட்டும் அல்ல. அது ஒரு மாவட்டமும் கூட. மன்னாரில் தற்பொழுது சண்டை நடந்து வரும் வெள்ளாங்குளத்தில் இருந்து ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர்கள் தூரத்தில் கிளிநொச்சி மாவட்டம் ஆரம்பமாகின்றது. ஆனால் படையினர் தற்பொழுது நிலைகொண்டிருக்கும் பகுதியில் இருந்து கிளிநொச்சி நகரத்திற்கு குறுக்கு வழிகளால் சென்றால் கூட 35 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தைக் கடக்க வேண்டும்.

இப்படியான நிலையில் தாம் கிளிநொச்சிக்குள் நுழைந்து விட்டதாக சிறிலங்கா அரசு கதைகளை பரப்பி வருகின்றது. ஆனால் கிளிநொச்சியில் எப் பகுதிக்குள் சிறிலங்காப் படையினர் நுழைந்துள்ளார்கள் என்பதை மட்டும் சிறிலங்கா அரசு சொல்ல மறுக்கின்றது.

கிளிநொச்சிக்குள் சிறிலங்காப் படைகள் நிற்கின்றன என்பது ஒரு விதத்தில் உண்மையான செய்திதான். வட போரரங்கின் மிகப் பெருந்தளங்களாகிய கிளாலி, முகமாலைப் படைத் தளங்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்குள்தான் அமைந்துள்ளன. இதைத்தான் சிறிலங்கா அரசு குறிப்பிட்டதோ தெரியவில்லை.

அப்படிப் பார்க்கப் போனால் வெற்றிலைக்கேணியில் நிற்கும் விடுதலைப் புலிகளும் தாம் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து விட்டதாக சொல்ல முடியும். வெற்றிலைக்கேணி யாழ்ப்பாண மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.

நகரங்களில் பெயரில் மாவட்டங்கள் அமைந்துள்ளதனால், அதை தன்னுடைய பரப்புரைக்கு வாய்ப்பாக சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் தாம் கிளிநொச்சிக்குள் சென்று விட்டதாகக் கூறி, தமிழ் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதற்கு முற்படுகின்றனர்.

சிறிலங்காப் படையினர் வெள்ளாங்குளத்தைக் கைப்பற்றி தொடர்ந்து ஒரு சில கிலோமீட்டர்கள் முன்னேறி கிளிநொச்சி மாவட்டத்திற்குள் நுழையவும் கூடும். அப்பொழுது சிறிலங்கா அரசு இதை விட பலமாக தன்னுடைய பரப்புரைகளை மேற்கொள்ளும். இந்தப் பரப்புரையில் உள்ள மோசடி பற்றி தமிழ் மக்கள் விழிப்போடு இருப்பதே இங்கு முக்கியமானது.

அதே வேளை சிறிலங்காப் படையினரின் முன்னகர்வுகள் இதுவரை இருந்தது போன்று வேகமாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்குமா என்ற பலமான ஒரு கேள்வியை எழுப்ப வேண்டிய அவசியத்தை விடுதலைப் புலிகள் உருவாக்கி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (03.08.08) வெள்ளாங்குளம் நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய முன்னகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் பத்திற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். இம் முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்காப் படையினரின் பல ஆயுதங்களும் இரண்டு உடலங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

அதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை (01.08.08) மல்லாவி நோக்கி மூன்று முனைகளில் முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தீவிரமான முறியடிப்புத் தாக்குதலை நடத்தி படையினரை விரட்டியடித்தனர். விடுதலைப் புலிகளால் சிறிலங்காப் படையினரின் பல ஆயுதங்களும், ஒரு லாண்ட்றோவர் ஊர்த்தியும், மூன்று உடலங்களும் கைப்பற்றப்பட்டன. இச் சண்டையில் முப்பதிற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க் கிழமை (05.08.08) குஞ்சுக்குளம் பகுதியில் முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் பத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். இச் சண்டையின் போதும், ஆயுதங்களையும் இறந்த ஒரு படையினனின் உடலத்தையும் விட்டு விட்டு சிறிலங்காப் படையினர் பின்வாங்கினர்.

கடந்த இரண்டு வாரங்களாக சிறிலங்காப் படையினரால் குறிப்பிடக்கூடிய வெற்றி எதையும் பெற முடியவில்லை. மாறாக சிறிலங்காப் படையினர் மேற்கொள்ளும் முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பை சந்திக்கின்றன. பலத்த இழப்புக்களோடு சிறிலங்காப் படையினர் ஆயுதங்களையும் படையினரின் உடலங்களையும் விட்டுவிட்டு பின்வாங்க வேண்டி வருகின்றது.

மல்லாவி, துணுக்காய் போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஒரு நீண்ட கால மறிப்புச் சமருக்க தயாராகி வருவதாக சில செய்திகள் தெரிவித்திருந்தன. அவைகள் உண்மை என்பது போல் விடுதலைப் புலிகளின் தற்போதைய முறியடிப்புத் தாக்குதல்கள் அமைந்துள்ளன. ஏற்கனவே பாலமோட்டை போன்ற பகுதிகளில் நீண்ட கால மறிப்புச் சமரை நடத்தி வரும் விடுதலைப் புலிகள் மற்றைய இடங்களிலும் அப்படியான மறிப்புச் சமர்களை நடத்துவார்களாக இருந்தால், சிறிலங்காப் படையினரின் நிலைமை படு திண்டாட்டமாகிவிடும்.

வன்னி மீது சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் வலிந்த படை நடவடிக்கையால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வீடு வாசல்களை இழந்து மரங்களின் கீழ் தங்க வேண்டிய நிலை இந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சென்றடைவதற்கும் சிறிலங்கா அரசு பல தடைகளை போட்டுக் கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கொள்ளும் போர் மக்களாலேயே முறியடிக்கப்படுவது வரலாறு. எதிரியானவன் தமது வாசல்களுக்கு போரைக் கொண்டு வருவதை உணர்கின்ற போது மக்கள் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிப்பார்கள். தமிழர் தாயகம் முழுவதும் தமிழர்களை இடம்பெயரச் செய்து அல்லல்படுத்திய சிங்கள அரசு தற்பொழுது வன்னியிலும் மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வருகின்றது.

வன்னியில் வாழும் மக்கள் வீட்டுக்கு ஒருவரை விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கியுள்ளார்கள். சிறிலங்காப் படையினரை தமிழர் தாயகத்தில் இருந்து விரட்ட வேண்டியதன் அவசியத்தை இந்த மக்களுக்கு சிறிலங்கா அரசே உணர்த்தி வருகின்றது. இந்த நிலையில் வன்னியில் உள்ள நான்கு இலட்சம் மக்களும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து சிறிலங்காப் படையினரை அடித்து நொறுக்குகின்ற காலம் தானாகவே நெருங்கி வருகின்றது.

- வி.சபேசன் (07.08.08)


Comments