மகிந்த பிள்ளாயான் இடையே ஆரம்பித்த நிழல் யுத்தம்

தெற்காசிய வலைய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட பதினைந்தாவது உச்சி மகாநாட்டின் மூலம் மஹிந்தா அரசுக்கும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் இடையில் முதல் முறையாக பாரிய நிழல் யுத்தம் ஆரம்பித்துள்ளது.

அரசாங்கத்தின் கைபொம்மையாக செயற்பட்டுவரும் ஆயுதக்குழுவின் தலைவர் பிள்ளையானை பாரத பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் சந்திக்க மறுப்பு தெரிவித்தமை பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும், முதல் அமைச்சருக்கும் அடித்த சாவு மணியாகும். 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் இலங்கையின் சிறுபான்மை இனமான தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு இணைந்த வடகிழக்கினுடாக பெறப்பட வேண்டும். என்பது பாரத பூமியின் நிலைப்பாடாகும். எனினும் இலங்கையின் இனவாத சக்திகளினால் வடகிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் வழக்குதாக்குதல் செய்யப்பட்டதையடுத்து இரு வேறு மாகாணங்களாக மஹிந்தாவின் அரசாங்கத்தில் செயற்பட்டுவருகின்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது வடகிழக்கில் உள்ள மக்களின் சுயநிர்ணய உரிமைகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான நிலையில் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக வடகிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள எவ்வித சரத்துக்களும் நிறைவேற்றப்படாது வடகிழக்கு பிரிக்கப்பட்டமை தெற்காசிய
வலயத்தின் வல்லரசான இந்தியாவை அவமதித்த செயலாகவே அந்நாடு கருதுகின்றது.

இலங்கையின் உச்ச நீதிமன்றம் வடகிழக்கு இணைப்பை ஒருபோதும் இதுவரையில் பிழையென தெரிவிக்கவில்லை. மாறாக இணைக்கப்பட்ட சட்ட முறையை தவறென சுட்டிகாட்டி பிரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் ஆயுதக்குழு இயங்கிவரும் நிலையில் கிழக்கு மாகாண சூழ்நிலையை சுட்டிக்காட்டி உள்ளுராட்சி மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்த போது அதனை நிராகரித்தது.

கல்வித் திறன், அரசியல் திறன், நிர்வாகத்திறன், மற்றும் எவ்வித அனுபவமும் இல்லாது ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம், என தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுபட்டுக்கொண்டுயிருக்கும் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் என்ற பெயரில் ஒட்டுக்குழுவின் தலைவரை மன்மோகன் சிங் சந்திக்க மறுப்பு தெரிவித்தமை வடகிழக்கு பிரிக்கப்பட்டமைக்கு தனது மறைமுகமாக எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் சார்க் மகாநாடு தொடர்பாக ஆராய வந்த இந்தியாவின் உயர்மட்ட தூதுக்குழு கூட ஒட்டுக்குழுவினரை சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐயோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினரும் ஒட்டுக்குழுவின் பிள்ளையானை சந்திக்க மறுத்துவிட்டனர்.

எனினும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயம் செய்த இக்குழுவினர் கிழக்கு மாகாண முதல் அமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பதாக தெரிவித்திருந்த போதிலும் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு எட்டப்படுவதற்காக உறுவாக்கப்பட்ட வடகிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்டமைக்கு மறைமுகமான எதிர்ப்பினை இந்தியா உட்பட சர்வதேச சமூகம் வெளிக்காட்டியுள்ளதை சிறிலங்கா அரசாங்கமும் அதன் ஒட்டுண்னிகளும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சார்க் மகாநாட்டின் பார்வையாளராக வருகைதந்த நாடுகளின் ஒன்றான அமெரிக்காவின் இராஜதந்திர பிரதிநிதி கிழக்கில் இயங்கிவரும் ஆயுதக்குழுக்களை களைக்க வேண்டும். என்ற மிகவும் இறுக்கமான கோரிக்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளது.

அதுமாத்திரமல்ல வடகிழக்கில் குறிப்பாக தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளது. இவ்வாறு பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் செயற்பட்டுவரும் கிழக்கு மாகாணம் அதில் இருந்து தப்பிக் கொள்வதற்காக சார்க்; மகாநாட்டின் போது வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் தலைவர்களை குறிப்பாக இந்திய பிரதமரை சந்திப்பதற்கான ஒழுங்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட போது அது இறுதியில் பயனளிக்கவில்லை.

இது ஒட்டுக்குழுவினரைப் பொறுத்தவரையில் பாரிய ஏமாற்றமாகும். வெளிநாடுகளின் தலைவர்கள் சந்திக்க மறுப்பு தெரிவித்தமையினால் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் வேலைக்காகதவர் என்ற உணர்வு கிழக்கு மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை போக்கும் முகமாக சிறிலங்காவின் ஜனாதிபதி மஹிந்தாவுக்கும் பிள்ளையானுக்கும் நிழல் யுத்தம் தோன்றியுள்ளமை அறியக் கூடியதாகவுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் தனது நிழச்சித் திட்டத்தின் படி ஒட்டுக்குழுவின் உதவியுடன் கிழக்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

கிழக்கில் ஜனநாயகம் மலர்வதாக வெளியுலகுக்கு திரையிட்டுள்ளது. இவ்வாறு கருதும் அரசாங்கம் கிழக்கில் ஆயுதக்குழுக்களை நடமாடவிட்டால் தமது பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிடும் என்பதற்காக ஒட்டுக்குழுக்களிடம் உள்ள ஆயுதங்களை களைவதற்கான நடவடிக்கையை முடுக்கிவிடவுள்ளது.

அத்துடன் கிழக்கில் ஆயுதப்பயிற்சி பெற்ற தற்போது ஒட்டுக்குழுவில் உள்ள இளைஞர்களை புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் கொரியா, சைபிறஸ், போன்ற நாடுகளுக்கு அனுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையினால் ஒட்டுக்குழுவினருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மஹகிந்தாவுக்கும் இடையில் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா இலங்கையில் பாரியளவில் முதலீடு செய்வதையிட்டு ஒட்டுக்குழுவின் மற்றொரு தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். எனினும் ஒட்டுக்குழுவின் சகாவை இந்திய பிரதமர் சந்திக்காமையையிட்டு தான் அதிர்ப்தியடைவதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அத்துடன் விடுதலை புலிகளின் ஆதரவுக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினை சந்தித்தமை குறித்து மற்றொரு தகவலையும் வெளியிட்ட அவர் அரசாங்கத்தின் மீது பாச்சலை முதல் தடவையாக மேற்கொண்டுள்ளார்.

இந்தியா தமிழீழ விடுதலை புலிகளை வெளிப்படையாக தனது நாட்டில் தடைசெய்தாலும் விடுதலை புலிகளின் சார்பான மக்கள் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பினை இலங்கைக்கு வரும் இந்தியாவின் பிரதிநிதிகள் சந்திக்க தவறியதில்லை. இதன் மூலம் தமிழர்களின் சுயநிர்ணய போராட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்பதையும், இந்தியா திடமாக உள்ளது என்பதனையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் தமிழகத்தில் அண்மையில் ஈழத்தமிழர் தொடர்பான கருத்துக் கணிப்பினுடாக ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள கரிசினையை அறிய முடிகிறது.

அதுமாத்திரமல்ல உலகின் வல்லரசுகளான அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் கூட இலங்கையில் தமிழர்களின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் கருத்துக்கள், ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு உலக நாடுகள் என்ன வகையான உதவிகளை வழங்கினாலும் இங்கு உள்ள சிறுபான்மை இனத்தின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்து கொண்டுள்ளது.

யாருடன் பேசினால் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்பதனையும் சர்வதேசம் நன்கு புரிந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் பரப்புரைகளை வெளிநாடுகள் முழுமையாக நம்பியிருந்தால் இன்று ஈராக், ஆப்கானிஸ்த்தான் போன்ற நாடுகளில் மேற்கொண்ட ஏகாதிபத்தியத்தை எமது தாயகத்திலும் மேற்கொண்டுயிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

காரணம் சிறிலங்காவில் சிறுபான்மை இனம் சுயநிர்ணய உரிமை கோரி போராடுகின்றது. தவிர அது பயங்கரவாத போராட்டம் அல்ல. என்பதனை வெளிநாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது.

தமிழர்களின் போராட்டம் சர்வதேச சமூகத்திற்கு புரியாத புதிராக இருந்திருந்தால்; சிறிலங்காவில் தமிழர்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள், மனித படுகொலைகள், பாலியல் வன்முறைகள், போன்ற மனித உரிமை மீறல்களை சித்தரிக்கும் காட்சிகளை இன்று ஐரோப்பிய நாடுகளில் வெளிப்படுத்த முடியாது.

இன்று தமிழர்களின் போராட்டம் என்பது சிறிலங்காவில் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழர்கள்;

தாயகத்தில் உள்ள ஒட்டுக்குழுக்களுக்கு அஞ்சாது, தமிழர் போராட்டதை சிங்களவர்களிடம் காட்டிக் கொடுக்கும் கூட்டத்திற்கு தலைவணங்காது, தமிழர்க்கு போராட்டத்தின் மூலமே விடுதலை பெறமுடியும் எனவும், மண்ணில் பற்றுக் கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வாழ்கின்ற உறவுகள் உழைப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.
மட்டக்களப்பிலிருந்து மகான்


Comments