பலவீனமா? தந்திரோபாயமா? வன்னிக் களமுனை குறித்துக் குழப்பம்!

விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்பட்டு விடுவர்; அடுத்த மாவீரர் தினத்தில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் எதுவும் இருக்காது பதுங்குகுழிகளிலேயே மாவீரர் நாளைக் கொண்டாட வேண்டும்; கிளிநொச்சி மீதான தாக்குதலுக்கு இராணுவம் தயாராகிவிட்டது என்பது போன்ற பிரகடனங்கள் சிறிலங்கா அரச தரப்பில் இருந்து வெளிவந்த வண்ணமுள்ளன.

இவ்வாறாகப் பிரகடனங்கள் வெளிவருகின்றபோதும் - சிறிலங்காப் படைத்தரப்பில் தற்பொழுது சில கேள்விகள் தவிர்க்கப்பட முடியாதவையாகவும், உடனடியாகப் பதில் தேடப்பட வேண்டியவையாகவும் உள்ளன.

சற்று, ஆழமாக நோக்கினால் படைத்தரப்பு சில குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளதை நிராகரித்துவிட முடியாது.

படைத்தரப்பில் ஏற்பட்டுள்ள இக் குழப்பத்தினை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் பேச்சுக்கள் தெளிவாகவே உறுதிப்படுத்துபவையாகவுள்ளன.

அதாவது, சரத் பொன்சேகா கடந்த சில வாரங்களில் யுத்தம் குறித்து வெளிப்படுத்திய மாறுபட்ட கருத்துக்கள் மூன்று நிலைப்பட்டவையாகவுள்ளன.

இரு வாரங்களுக்கு முன்பு கண்டியில் பௌத்த பீடாதிபதிகளைச் சந்தித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இரண்டு வருடங்கள் தேவைப்படுவதாகக் கூறியிருந்தார்.

இதேசமயம் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, சர்வதேச ஊடகவியலாளர் மத்தியில் பேசிய அவர், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இரண்டு தசாப்த காலத்திற்கு நீடித்துச் செல்லத்தக்கது என்றார்.

இத்தகைய முரண்பாடான அறிவிப்பானது, யுத்தம் விரைவில் முடியப் போவதில்லை; முடித்து வைக்கக்கூடியதல்ல என்பதற்கு சரத் பொன்சேகா வழங்கியுள்ள ஒப்புதல் வாக்குமூலம் என்றே கொள்ளத்தக்கதாகும்.

ஏனெனில் வடக்கில் ஓராண்டிற்குள் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவரப் போவதாகவும், தனது பதவிக்காலம் முடிவதற்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாகவும் 2006 ஆம், 2007 ஆம் ஆண்டுகளில் சரத் பொன்சேகா பேசி வந்தவர் ஆகும்.

இதற்கு அடுத்ததாகச் சரத் பொன்சேகா யுத்தம் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள மற்றொரு கூற்றானது, அடுத்த நான்கு மாதகாலம் யுத்தத்தினைத் தீர்மானிக்கும் காலமாக இருக்கும் என்பதாகும். இதன் மூலம் சரத் பொன்சேகா தெரிவித்திருப்பது என்ன?

அதாவது, அடுத்த நான்கு மாதங்களில் நடைபெறும் மோதல்களே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் என்பதாகும்.

இதன்மூலம், சரத் பொன்சேகா அடுத்த நான்கு மாதங்களே யுத்தத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காலம் என நம்புவதாகத் தெரிகின்றது.

அதாவது, தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரச்சாரப்படுத்தப்படும் வெற்றியில் அவர் கூட உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதன் வெளிப்பாடாகவே இதற்கு அர்த்தம் கொள்ளமுடியும்.

மேற்கூறப்பட்ட வகையில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி, சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அடுத்த மாவீரர் தினத்தை விடுதலைப் புலிகள் பதுங்குகுழியிலேயே கொண்டாட வேண்டியதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளமை, அவர் இராணுவ வெற்றி குறித்ததானதொரு மாயையை சிங்களவர்கள் மத்தியில் ஏற்படுத்த முனைகின்றார் என்றே கொள்ளுதல் வேண்டும்.

வேறொரு விதத்தில் கூறப்போனால் சிறிலங்கா இராணுவத் தளபதி இடத்திற்கும், தருணத்திற்கும் ஏற்றதான வகையில் பேசுகின்றார் என்றே கொள்ளுதல் முடியும்.

ஏனெனில் சர்வதேச ஊடகவியலாளர் மத்தியில் பேசும் போது ஒரு வகையிலும், பௌத்த பிக்குகள், பீடாதிபதிகளிடம் பேசும்போது வேறொரு விதத்திலும் சிங்கள ஊடகங்களிடம் பேசும்போது வேறொரு விதத்திலும் பேசுவதாகத் தெரிகின்றது.

இவ்வாறு அவர் பேசுவதன் நோக்கம் எதுவாக இருப்பினும், அவ்வாறு அவர் பேசுவதற்குக் காரணம் களமுனை தொடர்பாக அவர் சில குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளமையே ஆகும்.

அதாவது, யுத்தம் குறித்து அவரால் தற்பொழுது தீர்க்கமானதொரு முடிவுக்கு வரமுடியாத வகையில் களமுனை உள்ளதென்பதேயாகும்.

இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தற்பொழுது கைக்கொள்வது அவர்களின் யுத்த தந்திரோபாயத்தின் பாற்பட்டதா? அன்றி அவர்கள் பலவீனத்தின் வெளிப்பாடா? என்பதே ஆகும்.

இக்குழப்பத்திற்கு, களமுனை நிலவரத்தைக் கொண்டும், கடந்தகாலப் பட்டறிவைக் கொண்டும் அவரால் தீர்மானம் ஒன்றிற்கு வரமுடியாமல் உள்ளதே காரணமாகும்.

மன்னார்ப் பகுதியில் 2007 இன் ஆரம்பத்தில் படை நடவடிக்கை ஆரம்பித்தபோது விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்புக் காட்டினர். இவ் எதிர்ப்பானது சுமார் ஒரு வருடகாலம் நீடித்தது.

இம்மோதல்களில் இருதரப்பும் கணிசமான உயிரிழப்பைச் சந்தித்தன. ஆனால், மடுவை விட்டு விடுதலைப் புலிகள் வெளியேறியதன் பின்னர் படிப்படியாக அவர்களின் எதிர்ப்புக் குறைவடைந்தது.

இதனைச் சிறிலங்காப் படைத்தரப்பு விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுப் போய்விட்டதன் வெளிப்பாடு என்றே ஆரம்பத்தில் மதிப்பிட்டன.

இதனை அடுத்து இராணுவம் விரைவான முன்னகர்வை மேற்கொண்டு மேற்குக் கரையோரமாக வெள்ளாங்குளம் வரையிலும், உட்புறமாக வவுனிக்குளம் வரையிலும் முன்னேறியிருந்தது.

ஆனால், ஆரம்பத்தில் இவற்றைப் புலிகளின் பலவீனம் அதாவது, விடுதலைப் புலிகள் மரபு வழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றலை இழந்துவிட்டதாகக் கருதிய படை வட்டாரத்தில் தற்பொழுது இது குறித்துச் சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளன. இதற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை.

மடு மற்றும் அடம்பன் பகுதியில் விடுதலைப் புலிகள் போரிட்டதைக் கொண்டு, விடுதலைப் புலிகள் அந்தளவிற்கு விரைவில், பலவீனப்பட்டிருக்க முடியாது எனச் சிறிலங்காப் படைத்தரப்பில் சிலர் நம்புகின்றனர்.

அத்தோடு, முகமாலை முன்னரங்க நிலைகளில் அவர்கள் நிலை கொண்டிருப்பதைப் பார்க்கையில் புலிகள் பலவீனப்பட்டுப் போய்விட்டதாகக் கருத இடமில்லை என்பது அவர்களின் அபிப்பிராயமாகும்.

- ஜெயராஜ் -

வெள்ளிநாதம் (10.08.08)

Comments