தமிழகத்தில் பெருகி வரும் ஈழத்தமிழர் ஆதரவுப் போக்கு

ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு வருவதைத் தனது கருத்துக் கணிப்பு விவரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றது "ஆனந்த விகடன்' சஞ்சிகை.

தமிழக மக்களின் தமிழின உணர்வுகளைப் புறக்கணித்து அல்லது அதனைக் கவனத்திலேயே எடுக்காமல் நடந்து கொள்வதுதான் புதுடில்லி அரசின் போக்காகவும் இருந்து வருகின்றது.

இப்போதும் கூட, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான எண்ணப் போக்கு தீவிரப்பட்டு வருகையில் அதைக் கவனத்தில் எடுக்காமலேயே புதுடில்லி காய் நகர்த்தல்களைச் செய்கிறது.
கொழும்பு "சார்க்' மாநாட்டை ஒட்டிப் புதிய கூட்டுப் பட்டயம் ஒன்றை இந்தியா பிரேரித்து வெளிப்படுத்திக் காய் நகர்த்துகின்றது.

"பரஸ்பர சட்ட உதவி உடன்பாடு' என்ற இந்த ஒப்பந்தத்தின் கீழ், கைது செய்யப்படும் "பயங்கரவாதிகளை' சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பது உட்படப் பல விடயங்கள் உள்ளடக்கப்படவிருக்கின்றன என்று ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது உண்மையானால் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகளை மடக்குவதற்கு இலங்கையோடு சேர்ந்து புதுடில்லி விரிக்கும் வலையாகவே இது கொள்ளப்பட வேண்டும்.

தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவான எண்ணப் போக்குத் தீவிரம் பெற்று வருகையிலேயே புலிகளை மடக்குவதற்கான தனது கைங்கரியத்தை மறுபுறத்தில் புதுடில்லி தீவிரப்படுத்துகின்றது.

இது தமிழகத்தை எள்ளி நகையாடும் புதுடில்லி ஆட்சியாளரின் திமிர்த்தனமேயன்றி வேறில்லை.

இன்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி போன்றோரின் தயவில்தான் புதுடில்லியில் மத்திய அரசே தாக்குப்பிடித்து நிற்கின்றது.


அப்படி இருக்கையில் ஈழத் தமிழர் விடயத்தில் மட்டும் தமிழக மக்களையும், தமிழக மாநில அரசுத் தலைமையையும் புதுடில்லி துச்சமென மதித்து, உதாசீனப்படுத்தி நிற்பது பொறுத்துக் கொள்ளத் தக்கது அல்ல.

தமிழகத்தில் உள்ள மக்களில் 55 வீதத்தினர் எப்போதும் தாங்கள் புலிகளை ஆதரிக்கின்றனர் என்பதை ஆனந்த விகடனின் கருத்துக் கணிப்பு மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

தமிழக மக்களில் 28 வீதத்தினர் மட்டுமே புலிகள் மீதான தடை இந்தியாவில் தொடர வேண்டும் எனக் கருதுகின்றார்கள். சுமார் 48 வீதத்தினர் தடையை நீக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார்கள்.

ராஜீவ் காந்தி கொலைக்காகப் புலிகளின் தலைவர் கைது செய்யப்படவேண்டும் என்று கூறுபவர்கள் கூட தமிழகத்தில் சுமார் 43 வீதத்தினர்தான். அவர் குற்றமற்றவர் என்றும், அவரை விட்டு விடலாம் என்றும் கருதுபவர்கள் சுமார் 57 வீதத்தினராவர்.

இப்படி இலங்கையோடு சேர்ந்து காய் நகர்த்தும் புதுடில்லி அரசுத் தலைமை பிறிதொரு விடயத்தையும் கவனித்து உள்வாங்கிக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

அதனைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனே மீண்டும் தெளிவாகச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்தியிருக்கின்றார்.

""இலங்கை அரசின் இராஜதந்திர நகர்வுகள் எப்போதுமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பாதகமாகவே இருந்து வந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே அவர்கள் (இலங்கை அரசுத் தரப்பு) வரலாற்று ரீதியான உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வருகின்றனர்.

சிங்களக் கட்சிகளின் இந்தியா தொடர்பான அரசியல் கொள்கைகள் எப்போதுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரானவையே. தற்போதைய போர்ச் சூழ்நிலையில் அது உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.'' என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நடேசன் ஏற்கனவே சுட்டிக்காட்டியமை போல இலங்கை விவகாரத்தில் உண்மையான நண்பன் யார், போலியாக நடிக்கும் எதிரி யார் என்பதைப் புரியாமல் கொழும்பின் வலைக்குள் வீணாக விழுந்து கொண்டிருக்கின்றது புதுடில்லி என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் அவர்களுடன் தொப்புள் கொடி உறவுகொண்ட தமிழகத் தமிழரின் கருத்து நிலைப்பாடு என்னவென்பது இப்போது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு விட்டதால், அதை உள்வாங்கி, அதற்கேற்ப தனது அணுகுமுறையையும் புதுடில்லி மாற்றிக் கொள்வது அவசரமும் அவசியமுமாகும்.

""இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.'' எனப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் குறிப்பிட்ட அதே கருத்துடன் புதுடில்லியின் கருத்தியல் நிலை மாற்றத்துக்காகக் காத்திருக்கின்றார்கள் ஈழத் தமிழ் மக்கள்.

தமிழகத் தமிழர்களின் கருத்தை உள்வாங்கித் தன் போக்கை மாற்றிக் கொள்ளுமா புதுடில்லி?

உதயன்

Comments