ஓயாத தமிழீழத் தாகம்

இவ்வருட ஜுன் மாத இறுதி வாரத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒரு முக்கிய வெளிநாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டினார். அதில் அவர் கூறிய கருத்துக்கள் உலகின் பல பாகங்களைச் சென்றடைந்தன.

ஒரு மரபு ரீதியான இராணுவமாகச் செயற்படுவதில் புலிகள் தோல்வி கண்டுள்ளனர். மரபு இராணுவமாகச் செயற்பட எல்.ரி.ரி.ஈ.யால் இனிமேல் இயலாது.

'நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவந்தாலும், வடக்கு முழுவதையும் நாம் கைப்பற்றினாலும், எல்.ரி.ரி.ஈ.யில் சில உறுப்பினர்கள் இணைந்துகொண்டே இருப்பார்கள். தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் போராளிகளோடு எல்.ரி.ரி.ஈ. இன்னும் இரு தசாப்தங்கள் வரை நீடிக்கக்கூடும். இப்போது போல் நாம் சண்டையிடமாட்டோம். அது ஒரு கிளர்ச்சியாக என்றென்றும் நீடிக்கும்" பொன்சேகாவின் இந்த உரை 30.06.2008 ஆம் நாள் பீ.பீ.சி. ஆங்கில சேவையில் ஒலிபரப்பாகியது.

அவருடைய இந்த முடிவுகள் சிங்களவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளன. புலிகளின் தோல்வி நிச்சயம், அது விரைவில் நிறைவேறும் என்று மனப்பால் குடிக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்குச் சில கசப்பான உண்மைகளைச் சீரணிக்க வேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மிகவும் அட்டகாசமாக ஒரு அமெரிக்க விமானம் தாங்கியில் போர் விமானம் ஒன்றிலிருந்து இறங்கினார். அவர் சீருடை தரித்திருந்தார். வெற்றியின் அடையாளமாக வலது கை விரல் இரண்டைத் தூக்கிக் காட்டினார். அதன்பின் தான் தொடக்கிய ஈராக் போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த கருத்துப்பட மிஷன் அக்கொம் பிளிஷ்ட்(Mission Accomplished) என்று கூறினார். ஈராக் போர் முடிந்த பாடில்லை. அமெரிக்கப் போர் வீரர்களின் உயிரிழப்புக்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. அதிபர் புஷ்ஷைக் கிண்டல் பண்ணுவோர்களும் நையாண்டி பண்ணும் எதிரிகளும் மேற்கூறிய இரு ஆங்கிலச் சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.

பொன்சேகாவைத் தொடர்ந்து சிங்களத் தலைவர்கள் வெற்றிச் சங்கு ஊதத் தொடங்கியுள்ளனர். இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். ஈழத் தமிழர்களின் தேசியம் மிகவும் பலமானது. அது எதிர்காலத்தில் கூடுதல் பலம் பெறுமேயன்றி ஓயமாட்டாது.

சிங்களவர்கள் நடத்தும் போர் புலிகளுக்கு எதிரானது மாத்திரமல்ல, அது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் எதிரானது. சிங்களவர்கள் நடத்தும் போர் இன அழிப்புப் பரிமாணத்தைக் கொண்டது. காணாமற் போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் சிங்கள அரசு சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையில் தமிழர் தாயகத்தின் மீதான இராணுவத் தாக்குதல்களை மனிதாபிமான நடவடிக்கை என்றும் அங்கு வாழும் தமிழர்களை மீட்டெடுத்து சனநாயக உரிமைகளை வழங்குவதற்கான போர் என்றும் அரசின் பிரச்சாரச் சாதனங்கள் கூறுகின்றன. இதை நம்புவதற்கு ஈழத் தமிழர்கள் தயாரில்லை. இராணுவம் நடத்தும் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள இராணுவத்திடம் அகப்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள அரசுகள் கடந்த மூன்று தசாப்தங்களாகக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள், மனிதாபிமானச் சட்டங்கள் (Humanitarian Law) மற்றும் இன அழிப்பிற்கு எதிரான தடுப்புக்கும் தண்டனைக்குமான ஐ.நா.சட்டம் (Un Convention On The Prevention And Punishment Of Genocide) ஆகியவற்றின் கீழ் பாரிய குற்றங்களாகும். 'தமிழ்ப் பயங்கரவாதம்" என்று குற்றஞ்சுமத்தி அதற்கு எதிராகப் போர் புரிவதாகக் கூறும் அரசு தனது கையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரச பயங்கரவாதத்திற்கு உதாரணமாக விளங்கும் அரசு பிறர் மேல் குற்றஞ்சுமத்துவதற்கு எந்தவொரு யோக்கியதையும் இல்லாதிருக்கிறது.

'ஆக்கிரமிப்புச் செய்வதற்கு எத்தனிப்பவன் எப்பவும் சமாதான விரும்பியாகத் தன்னைக் காட்டிக் கொள்வான். எதிர்ப்பு இல்லாமல் நாட்டைக் கைப்பற்றுவதற்கு அவன் விரும்புகிறான். இதைத் தடுப்பதற்காக நாம் போருக்குத் தயாராக இருக்க வேண்டும்" என்று குளோசே விற்ஸ் கூறியதைப் பேராசிரியர் கல்லி (Gallie) தனது அமைதிக்கும் போருக்குமான தத்துவஞானிகள் (Philosophers Of Peace And War) என்ற நூலில் மேற்கோள்காட்டி இருக்கிறார். சிங்கள அரசு அமைதிக்கான போரை சில காலத்திற்கு முன்பு முன்னெடுத்தது. இப்போது அது அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போரை முன்னெடுக்கிறது.

சிங்கள ஆக்கிரமிப்பு அரசு ஒரு சராசரித் தமிழனுக்கு மூன்று தெரிவுகளை விட்டு வைத்திருக்கிறது.

(01) பயங்கரவாத அரசுக்கு எதிராக ஆயுதப்போர் நடத்துவது.

(02) உரிமைகளற்ற அடிமை வாழ்வை இராணுவ ஆட்சியின் கீழ் நடத்துவது.

(03) வெளிநாடுகளுக்குச் சென்று புலம்பெயர் வாழ்வை மேற்கொள்வது.

அடிமை வாழ்வை நடத்துவோர் அதை விரும்பி ஏற்கவில்லை, படுகொலைகளையும் சித்திரவதைகளையும் தாங்கிக்கொண்டு விடுதலைக்காக ஏங்குகிறார்கள். முதலாம் தரப்பினரும் மூன்றாம் தரப்பினரும் இணைந்து தமது விடுதலையையும் அடிமைகளின் விடுதலையையும் பெறமுடியும் என்பது வரலாற்று நியதி.

'ஒரு ஆக்கிரமிப்பாளன் பீரங்கியில் இருந்து வெளியேறும் குண்டு போன்றவன். தன்னைத் தான் இடை நிறுத்திக்கொள்ளக் குண்டினால் முடியாது. தொடரும் வலு இல்லாமல் அது சுருண்டு விழவேண்டும் அல்லது யாரேனும் அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்" இவ்வாறு மொஸ்கோவிற்குப் போவதற்குப் பல வழிகள் (ஆயலெ சுழயனள வுழ ஆழளஉழற) என்ற நூலில் லியனாட் கூப்பர் (Leonard Cooper.1968) கூறியுள்ளார்.

இராணுவத் தளபதி பொன்சேகா குண்டின் நிலையில் இருக்கிறார். அவரைத் தடுத்து நிறுத்தினால் ஒழிய அவர் ஓயமாட்டார். என்றாலும் அவருக்கு அண்மைக்காலமாகப் போர் பற்றிய வித்தியாசமான புரிதல் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆற்றிய உரையில் அவர் புலிகள் மரபுப் போர்முறையில் தோல்வியடைந்துள்ளனர் என்று கூறியதைச் சிங்கள இராணுவத்தின் வெற்றிப் பிரகடனமாகக் கொள்ளலாம் என்று சில படைய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இன்னும் சிலரோ புலிகள் நடத்தும் போரின் வடிவம்தான் மாறும் போர் தனது இலக்கை எட்டும் வரை தொடரும் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். தனது உரையில் பொன்சேகா இந்தக் கருத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியம் கனன்று கொண்டிருக்கும். அதற்குக் காலக்கெடு விதிக்க முடியாது. புலிகள் மூட்டிய தேசிய எழுச்சித் தீ பற்றிப்பரவும். இதையும் பொன்சேகா உணர்ந்துள்ளார். மேற்கூறிய சந்திப்பில் அவர் கூறாமல் கூறிய செய்தி இராணுவ பலத்தின் மூலம் ஈழத் தமிழரை வீழ்த்த முடியாது என்பது தான்.

என்றாலும் சிங்கள இராணுவத்தின் பேரினவாதச் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் எந்தவொரு விட்டுக்கொடுப்பையோ தளர்வையோ எம்மால் காணமுடியவில்லை.

மூடனும் முதலையும் கொண்டது விடா என்று சொல்வார்கள். சோதிடர்களோ கெட்ட காலம் துட்ட புத்தி என்றும் விநாசகால விபரீத புத்தி என்றும் கூறுவார்கள். இந்த இடத்தில் நாம், வாழ்க்கை கடினமாகும்போது கடினத்தைத் தாங்கக்கூடியவர்கள் தான் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்ற தத்துவத்தை மனதில் இருத்த வேண்டும். அப்போது தான் எதிரியின் தாக்குதல்களை எம்மால் எதிர்கொள்ள முடியும். ஈழப்போர் ஒரு முக்கியமான கட்டத்தை நெருங்கி விட்டது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.

இனப்பிரச்சினை என்றதொன்று இத்தீவில் இருப்பதாக மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. சென்ற மாதம் அறுகம் குடாப் பாலத் திறப்பு விழாவில் பேசிய போது அவர் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது.

இப்போது இருப்பது பயங்கரவாதப் பிரச்சினை ஒன்று மாத்திரமே என்று மிகவும் அழுத்தம் திருத்தமாகப் பேசினார். பேரினவாதக் கட்சிகளின் வழிநடத்தலில் இயங்கும் ராஜபக்சவால் வேறு என்ன கருத்தைத் தெரிவிக்க முடியும்? சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க போர் முடிந்துவிட்டதாகவே மேடையில் பேசி வருகிறார். பிக்குகளின் ஜாதிக ஹெல உறுமயக் கட்சியைச் சேர்ந்த இவர் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் பஞ்சாயத்து ஆட்சிமுறை மூலம் திருப்தியான தீர்வளிக்க முடியும் என்றும் தெரிவிக்கிறார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக மனிதாபிமானப் போர் செய்வதாகச் சொல்லும் ராஜபக்ச அரசு தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் தீங்கிழைப்பதிலும் அவர்களை அடிமைகளாக்கும் தீவிர முயற்சிகளிலும் ஈடுபடுவதைக் காணமுடிகிறது. வெள்ளவத்தைத் தமிழர்களை நள்ளிரவில் தட்டி எழுப்பி உடுத்த உடையோடு, பொது இடத்தில் வைத்துப் பொலிசார் வீடியோப் படம் பிடித்திருக்கிறார்கள். இது சார்க் மாநாட்டின் பாதுகாப்பு ஒழுங்கின் ஒரு அங்கமாம், ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்படும் மனிதாபிமான நடவடிக்கை என்பது வெறும் வாய்ப் பேச்சு மாத்;திரமே. மனிதாபிமானமற்ற செயல்கள் தான் கூடுதலாகக் காணப்படுகின்றன.

மன்னார், களிமோடையில் 400 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நியூயோர்க் நகரில் இயங்கும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (ர்ரஅயn சுiபாவளறய வஉh) இந்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக மார்ச் 2008 தொடக்கம் இராணுவத்தால் சிறைப்பிடித்து முடக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியுள்ளது. இவர்களை உடனடியாக விடுவிக்குமாறு அது சர்வதேச அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. (Sri Lanka: End Internment Of Displaced Persons) இவர்களை வேண்டப்படாத எதிரி நாட்டவர் போல் நடத்துவதை நிறுத்தும்படியும் அந்த 03 ஜுலை 2008 ஆம் திகதி இடப்பட்ட அறிக்கை கோரிக்கை விடுத்தது. 'இவர்களைத் தடுத்து வைப்பதற்கான ஆணையை ஒரு நீதிமன்றாவது பிறப்பிக்கவில்லை. இவர்கள் மீது எந்தவொரு குற்றமும் சுமத்தப்படவில்லை. இவர்களை உடனடியாக விடுவியுங்கள்" என்று இந்த மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு அரசைக் கேட்டிருக்கிறது.

களிமோடை முகாம் மாத்திரமல்ல இன்னும் இது போன்ற முகாம்களை அமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம். தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுதான் சிறந்த வழி என்று சிங்கள இராணுவம் பதில் கொடுத்திருப்பதோடு பாதுகாப்பு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதற்கிடையில், பெரும் எண்ணிக்கையிலான படையினர், போர்க் கப்பல்கள், விமானங்கள் என்பனவோடு கொழும்பு வந்த இந்தியப் பிரதமருக்குச் சிங்களப் பேரினவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோர் கொழும்பு வரும்போது வெறும் மெய்ப்பாதுகாவலர்களுடன் மாத்திரம் வருகை தந்தனர். மன்மோகன் சிங் இப்படியானதொரு விசேட ஒழுங்குடன் வருவதற்கு என்ன காரணம் என்று வெளிப்படையாகக் கேட்கப்படுகிறது. இது எங்கள் பிராந்தியம், இதில் சீனா, பாகிஸ்தான் ஆகியன ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கமாட்டோம் என்ற செய்தியைச் சொல்வதற்காகத் தான் இந்த ஒழுங்கு என்று சிலர் சொல்கிறார்கள்.

கொழும்பு ஐலண்ட் பத்திரிகை இந்தியப் பிரதமரோடு வந்த படையினருக்கு வேறு நோக்கம் இருக்கிறது என்று வெளிப்படையாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. (துரடல13இ 2008) தேவைப்பட்டால் ஒரு படையெடுப்பை நடத்துவதற்கான வெள்ளோட்டம் என்று அது கூறியிருப்பதோடு கொழும்பு வர எடுத்த நேரம், தங்கியிருக்கும் வசதிகள், சிங்களப் படைகளின் ஒத்துழைப்பு போன்ற தரவுகளைக் கணனியில் பதிவு செய்வதற்கு ஒரு சந்தர்ப்பமாகவும் அது பயன்படுகிறது என்று அது விரிவாகத் தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்திய இராணுவத்தின் ஐ.பி.கே.எவ்.காலப் புலனாய்வுத்துறை அதிகாரி கேணல் ஹரிகரன் அடிக்கடி கொழும்புப் பத்திரிகைகளில் கட்டுரை எழுதுகிறார். எல்.ரி.ரி.ஈ. மரபு இராணுவமாக இனிச் செயற்பட முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இனி அது மரபு சாரா இராணுவமாகத்தான் செயற்படும் என்று அண்மையில் எழுதியிருக்கிறார்.

இரண்டிற்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று காட்டுவதற்கு ஒரு உதாரணம் நல்கியுள்ளார். ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் ஒரு பெரும் பொதியைத் தூக்கிப் போடுவது போன்றது மரபுப் போர்முறை.

அதே பெரும் பொதியைப் பல எண்ணிக்கையிலான சிறிய பொதிகளாகப் பங்கீடு செய்து வௌவேறு இடங்களில் வௌவேறு நேரத்தில் தூக்கிப் போடுவது தான் மரபு சாராப் போர் முறை என்கிறார் ஹரிகரன். இதில் இரண்டாவது தான் மிகவும் ஆபத்தானது என்று கூறுவதோடு சிங்கள இராணுவத்தின் துயரம் நிறைந்த காலம் இனித்தான் தொடங்கப்போகிறது என்ற செய்தியையும் அவர் பதிவு செய்துள்ளார்.

-அன்பரசு -

வெள்ளிநாதம் (08.08.08)


Comments