புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களிடம் உதவிகோரி மரணத்தின் விளிம்பில் நின்று மன்றாடும் வன்னி மக்கள்: செடோட் அறிக்கை

வன்னி பெருநிலப்பரப்பு மீது சிறிலங்கா படைகள் மேற்கொண்டுள்ள திட்டமிட்ட இனச்சுத்திகாரிப்பு நடவடிக்கையால் இடம்பெயர்ந்து, வாழ்விழந்து மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள், தமது அடிப்படை தேவைகளுக்கு உதவி புரியுமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களை மன்றாடி கேட்கிறார்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் தொண்டுநிறுவனமான 'செடோட்' வன்னியில் இருந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ் மக்களின் பாதுகாப்பு மையமாகத் திகழும் வன்னிப் பகுதி இன்று முற்றுமுழுதாக போர்மேகம் சூழ்ந்த பூமியாகிவிட்டது. மக்கள் அனைவருமே இன்று முழுமையானதொரு போர் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எமது மக்கள் வாழ்ந்த வாழ்விடங்கள், அவர்கள் விளைத்த விளைநிலங்கள், கல்வி கற்ற பாடசாலைகள், ஆலயங்கள் அனைத்துமே சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தத்தில், தமிழ் இனத்தின் மீது பெரும் போர் அவலம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. ஒருஇன அழிப்புப் போர் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.

தங்கள் உயிர் பிழிந்து சேர்த்த சொத்துக்கள் எல்லாம் இழந்து, தங்கள் உயிர் தப்பினாலே போதும் என ஓடி வந்து, மரநிழல்களிலும், பொது இடங்களிலும், வெட்டை வெளிகளிலும் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும், பால் அகவை வேறுபாடின்றி அப்பாவி மக்கள் படும் துயரங்கள் வார்த்தைகளில் வடித்துவிட முடியாதவை.

பசியினால் கதறும் பாலகர்களின் அழுகுரல்கள், அதனை நிவர்த்தி செய்ய முடியாத பெற்றோரின் கவலை தோய்ந்த முகங்கள், நோய்வருத்த அல்லலுறும் முதியவர்கள், அவர்களுக்கு உதவ எவருமற்ற நிலை என தாங்கோணா துன்பங்கள்.

உடுத்த உடையோடு உயிர்தப்பினால் போதும் என்று வந்த நிலையில் உங்கள் உறவுகள் வீதியோரங்களில் படும் இன்னல்கள் கொஞ்சமல்ல. பட்டவருக்கே புரியும் இடப்பெயர்வின் வேதனை. என்றோ ஒருநாள் நீங்களும் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்திருப்பீர்கள். கற்பனை செய்து பாருங்கள் இடப்பெயர்வின் வலிகளை.

இது வெறுமனே படிப்பவர்களுக்கு மனம் இளக எழுதுகின்ற எழுத்தல்ல. இதுதான் இன்றைக்கு வன்னி மக்களின் நிலைமை. எதிரிகளின் திட்டமிட்ட இன அழிவிலிருந்து இம்மக்களை காக்க வேண்டிய பொறுப்பு சகதமிழர் ஒவ்வொருவருடையதும் கடமையாகும்.

சிங்கள அரசின் இத்தாக்குதல்களால் மக்களின் வாழ்விடங்கள் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு சுருங்கிக் கொண்டிருக்கின்றன. விளைநிலங்கள் உள்ள இடங்கனை சிங்கள படைகள் திட்டமிட்டு ஆக்கிரமிப்பதால், இங்கு உணவுப்பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அத்துடன், மக்கள் வாழ்வதற்குரிய சூழ்நிலை இல்லாத இடங்களில் வசிப்பதால் சுகாதாரப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.

ஆன உணவில்லை, பிணி தீர்க்க மருந்தில்லை, பொருளாதாரத் தடையாலும் தாக்குதலாலும் இம்மக்களது நிலைமை மோசமடைகிறது. இவ்வழியிலிருந்து, எம்மக்களைக் காப்பாற்ற வேண்டும். மழைகாலம் தொடங்கினால் கற்பனைக்கு எட்டாத துயர் வந்துவிடும். இப்போதே உடனடி நிவாரணம் கொடுத்து இந்த மக்களுக்கு உதவவேண்டிய பொறுப்பு எங்கள் ஒவ்வவொருவருடையதுமே.

அன்பானவர்களே!

உடமைகளை இழந்து துயருறும் இந்த மக்களது வேதனை கண்டு உதவுவார் யாருமில்லை. தமது சேமிப்பில் உள்ள பொருட்களை மட்டும் கொடுத்து அனைத்துலக நிறுவனங்கள் உதவுகின்றன. உள்ளுர் நிறுவனங்களோ கொடுத்து உதவுவதற்கு எல்லாமே முடிந்து விட்ட கையறு நிலையில் உள்ளன.

தமிழினம் வீழ்ந்த பொழுதுகளில் எல்லாம் உங்களை நாடி ஓடிவந்தோம். அவ்வேளையெல்லாம் நீங்கள் எம்மக்களுக்கு கைகொடுத்து அவர்களை தூக்கி நிறுத்தி வாழ்வளித்தீர்கள். அதேபோன்று, இப்பொழுதும் உங்களைத் தேடி ஓடிவருகின்றோம். உங்கள் உறவுகளை நீங்கள் தான காப்பாற்ற வேண்டும். எங்களை நாங்களே அழிவிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.

வேலியே பயிரை மேய்கின்ற நிலையில் எமது இனம் ஆள்பவர்களாலேயே அழிக்கப்படுகின்றது. இனச்சுத்திகரிப்பு நோக்கிலான அரச வன்முறைகளாலும் உலக நாடுகளின் பாராமுகத்தாலும் எம்மினம் இன்று அந்தரித்து அலைகின்றது. மனிதநேயத்தின் உச்சமே என்மினம் தான். அதனால்த்தான் வீழ்ந்த போதெல்லாம் நாம் எழுந்தோம்.

எனவே, இடம்பெயர்ந்த மக்களின் உயிர் காப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தொண்டர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்கும் உதவியில் ஒரு உயிர் காக்கப்படுகின்றது என்பதையும் எமது இனம் பாதுகாக்கப்படுகின்றது என்பதையும் கருத்தில் கொண்டு விரைவாக செயற்படுங்கள்.

கொடுத்து கொடுத்து சிவந்துபோன உங்கள் கரங்களிலேயே எம்மக்களின் வாழ்வை ஒப்படைக்கின்றோம். உங்கள் வாசல் நாடிவரும் தொண்டர்களுக்கு தேடிச்சென்று உதவிடுங்கள். அவர்கள் மீண்டும் உங்கள் வாசல் வரும் சிரமத்தைக் கொடுக்காமல் வேளையறிந்து உதவிடுங்கள். உங்கள் உறவுகளுக்கு வாழ்வளியுங்கள்.

- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments