வன்னியைச் சூழ ஐந்து முனைகளில் தாக்குதல்!புலிகள் கையாளப் போகும் தந்திரோபாயம் என்ன?

வன்னி யுத்த முனையைப் பொறுத்தவரையில் வவுனியாவில் வவுனிக்குளம் பகுதி இப்போது சமர்க்களமாகி இருக்கின்றது. மன்னார் முனையில் வெள்ளாங்குளம் பகுதி யுத்த களமாகியிருக்கின்றது.

வவுனிக்குளம் பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்வைத் தொடர்ந்து அண்மைக் காலமாக வவுனிக்குளம் பகுதிதான் யுத்தகளமாகியிருந்தது.

இப்பகுதியிலிருந்து மேலும் முன்னேறுவதற்குப் படையினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறத்தில் மன்னாரில் விடத்தல் தீவு போன்ற பகுதிகளைக் கடடுப்பாட்டுக்குள் கொண்டுவந்த படையினர் வெள்ளாங்குளத்தையும் கைப்பற்றியிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

இரண்டு இலக்குகளை மையப்படுத்தியதாகவே படையினரின் நகர்வுகள் இன்றுள்ளன. வவுனிக்குளத்திலிருந்து மல்லாவியைச் சுற்றிவளைப்பதே படையினரின் அடுத்த கட்ட இலக்காக இருக்கின்ற அதேவேளையில், அதற்கு அனுமதிப்பதில்லை என்ற வகையில் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

மறுபுறத்தில் மன்னார் களமுனையில் வெள்ளாங்குளம் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் படையினர் அங்கிருந்து பூநகரியை இலக்கு வைத்து பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாம் என இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். இந்த இரண்டு யுத்த முனைகளும்தான் அடுத்துவரும் வாரங்களில் செய்திகளில் இடம்பெறப் போகின்றன.

முறியடிப்புச் சமர்

வவுனிக்குளத்தில் உள்ள பாலையடிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான மும்முனை முன்நகர்வு நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலால் முறியடிக்கப் பட்டிருப்பது படையினரை மேலும் முன்னேற அனுமதிக்க விடுதலைப் புலிகள் தயாராக இல்லை என்பதையே உணர்த்துவதாக இருக்கின்றது.

இப்பகுதியில் நடைபெறும் சமர்களில் அதிகமான படையினர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்துள்ளதாக வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமது நகர்வுகளை மேற்கொள்வதில் படையினர் எதிர்கொண்டிருக்கும் கடுமையான நெருக்கடிகளை இது உணர்த்துகின்றது.

தற்காப்பு நிலையிலுள்ள புலிகள் பலமாக இருப்பதையும் இது வெளிப்படுத்துகின்றது.

அண்மைக் காலத்தில் பாரிய முறியடிப்புத் தாக்குதல்களை நடத்தாமல் படையினரை உள்வாங்கும் உபாயத்தையே கையாண்ட விடுதலைப் புலிகள் வவுனிக்குளத்தில் நடத்தும் முறியடிப்புத் தாக்குதல்கள் படையினரின் மனோபலத்துக்கு பலமான அடியாக அமைந்திருக்கின்றது. முன்னேறி வந்திருந்த படையினரின் வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் பலவும் இப்பகுதியில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப் பட்டிருக்கின்றன.

வன்னி யுத்த முனையைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் அடுத்து என்ன செய்யப் போகின்றார்கள் என்பதே இன்று பாதுபாப்பு ஆய்வாளர்களால் ஆராயப்படும் பிரதான விடயமாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் தாம் தற்காப்பு யுத்தம் ஒன்றை முன்னெடுத்து வருவதாகவே அவர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

வன்னியைச் சுற்றி ஐந்து முனைகளில் படையினர் தற்போது முற்றுகையிட்டுள்ளார்கள். இந்த ஐந்து முனைகளிலிருந்தும் யுத்தம் முன்னெடுக்கப் படுகின்றது. இருந்த போதிலும் இரண்டு முனைகளில்தான் படையினர் முன்னேறியிருக்கின்றார்கள்.

மன்னார் பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட படையினர் விடத்தல்தீவுப் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மேலும் வடபகுதியில் நகர்ந்து வெள்ளாங்குளம் பகுதியையும் கைப்பற்றியிருக்கின்றார்கள். அதேபோல வவுனியா பகுதியில் வவுனிக்குளம் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டிருக்கின்றது.

பூநகரி அடுத்த இலக்கு?

வெள்ளாங்குளம் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதை படையினரும் சிறி லங்கா அரசுத் தலைமையும் பெரிதாகக் கொண்டாடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக வெள்ளாங்குளத்தையும் தாண்டி படையினர் முன்னேறினால் கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குள் பிரவேசிக்க முடியும்.

கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குள் பிரவேசிப்பதென்பது சிறிங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாகப் பெரும் பிரச்சார நலன்களைக் கொடுக்கக் கூடியது. இதனைவிட மேலும் முனனேறி பூநகரி வரையில் சென்றால் ஏ -9 பாதைக்கு மாற்றாக அமையக்கூடிய ஏ – 34 பாதையைத் திறந்துவைக்க முடியும். புடையினரின் நீண்ட கால இலக்குகளில் இதுவும் ஒன்று.

அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காப் படையினரின் இலக்குகளைத் தாக்குவதற்கான விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி தளமாகவும் பூநகரிதான் இருக்கின்றது. இதனைவிட பூநகரிக்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கின்றது. அதாவது, யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளிலுள்ள இராணுவ முகாம்களைத் தாக்கியழிப்பதற்கு கடற்புலிகளின் தளமாக பூநகரிதான் இருந்திருக்கின்றது.

ஆக, யாழ்ப்பாணத்தைப் பாதுகாப்பதற்கு பூநகரியைக் கைப்பற்றுவது படையினருக்கு அவசியமானது. அந்தவகையில் பூநகரிப் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த நிலையில் வெள்ளாங்குளம் வரையில் வந்துள்ள படையினர் தமது நகர்வை அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல.

சிறிலங்கா படையினர் ஒரே தடவையில் ஐந்து முனைகளில் தாக்குதல் நடவடிக்கைளை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் இரண்டாம் மூன்றாம் ஈழப் போர்களின் போது பாரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஒரே தடவையில் ஐந்து முனைகளில் படையினரின் நகர்வுகளோ அல்லது வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை என்பது உண்மை.

இதுவரையில் சிறிலங்கா படையினரால் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கைகளில் பிரதானமானதாகக் கருதப்படும் ஜெயசிக்குறு நடவடிக்கை கூட ஒரு முனையிலேயே முன்னெடுக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது படையினரை பல மைல் தொலைவுக்கு முன்னேற அனுமதித்த விடுதலைப் புலிகள் பின்னர் ஊடறுப்பு. முறியடிப்புத் தாக்குதலை நடத்தியபோது படையினர் சிதறியோட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் அனைத்தும் மீண்டும் விடுதலைப் புலிகளின் கைகளில் விழுந்தன.

அதேபோன்ற ஒரு நிலைமை இப்போதும் ஏற்படுமா என்பதுதான் தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது. அப்போது ஒரு முனையில் மட்டும் படையினரின் நகர்வு இருந்ததால் அதனை முறியடிப்பதற்கான தந்திரோபாயத்தை விடுதலைப் புலிகளால் இலகுவாக வகுக்க முடிந்தது. ஆனால். இப்போதும் அது போன்ற ஒரு வியூகத்துடன்தான் விடுதலைப் புலிகள் காத்திருக்கின்றார்களா என்ற கேள்வியும் எழுப்பப் படுகின்றது.

57 ஆவது படைப் பிரிவு

சிறி லங்கா இராணுவத்தைப் பொறுத்த வரையில் அது அதன் பலம்வாய்ந்த 57 ஆவது படைப் பிரிவைத்தான் வன்னி யுத்த களத்தில் முன்னேற்ற நடவடிக்கைகளுக்குப் பெருமளவுக்குப் பயன்படுத்துகின்றது. வவுனிக் குளத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதும் 57 ஆவது படைப் பிரிவைத்தான் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தியது.

57 ஆவது படைப்பிரிவின் மூன்று விஷேட பிரிகேட் அணிகளான 57-1, 57-2 மற்றும் 57-3 ஆவது பிரிகேட் அணிகளே வவுனிக்குளம் நகர்வுக்குப் பயன்படுத்தப்பட்டன. வவுனிக்குளத்தைக் கைப்பற்றிய படையினரின் அடுத்த இலக்காக இருப்பது துணுக்காய், மல்லாவி மற்றும் மாங்குளம் என்பனதான்.

இந்தப் பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதன் மூலம் யுத்த முனையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதுதான் படைத் தலைமையின் திட்டமாக இருக்கின்றது. வெகுவிரைவில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவோம் என சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவும் அவருடைய சகாக்களும் மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் இது அமைந்திருக்கும்.

நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களிலும் இதன் பலன்களை எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும். அதனால்தான் வவுனிக்குளத்தை அடுத்துள்ள நகர்வுகளுக்காக என்ன விலையையும் கொடுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகவிருக்கின்றது.

மாங்குளம் வரையில் முன்னேறுவது என்பது பிரச்சார ரீதியாக மட்டுமன்றி இராணுவ ரீதியாகவும் சிறிலங்கா படைத் தரப்புக்கு முக்கியமானது. ஏனெனில் வன்னியின் இரண்டு பிரதான நகரங்களாக இருக்கும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான பாதைகள் சந்திக்கும் இடமாகவும் மாங்குளம்தான் உள்ளது.

அதனால், மாங்குளத்தைக் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதென்பது சிறிலங்கா படையினருக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அத்துடன் மாங்குளத்தைக் கைப்பற்றினால் அதன் பின்னர் ஏ-9 பாதையை அடிப்படையாகக் கொண்டு படை முன்னகர்வை மேற்கொள்ள முடியும் என்பதும் படையினருக்குச் சாதகமானதுதான்.

அதனால்தான் வவுனிக்குளத்தில் தனது பலம்வாய்ந்த போரிடும் படைப் பிரிவை நிலைநிறுத்தியிருக்கும் சிறிலங்கா படையினர் துணுக்காய், மல்லாவி, மாங்குளம் பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட நகர்வை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

முறியடிப்புச் சமர்

இந்த நிலைமையில்தான் விடுதலைப் புலிகள் அண்மையில் நடத்திய முறியடிப்புச் சமர் படையினரின் கனவு இலகுவாக நனவாகக் கூடிய ஒன்றல்ல என்பதைத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் படையினரின் துரித முன்னேற்றம் மற்றும், தமது பிரதான தளங்களிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியிருந்தமை என்பவற்றுடன் பாரிய தாக்குதல்கள் எதனையும் முன்னெடுக்காமல் அவர்கள் மௌனமாக இருந்தமை என்பன வெறுமனே விடுதலைப் புலிகளின் பலவீனங்களாகக் கொள்ளக் கூடியவையல்ல என்பதைத்தான் இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கின்றது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் இவை அனைத்தும் தந்திரோபாயப் பின்வாங்கல்கள்தான்.

இதற்கு முன்னரும் இவ்வாறான தந்திரோபாய நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் இவ்வாறான தந்திரோபாய பின்வாங்கல்கள் மூலமாக தமக்குச் சிறிதும் பரிட்சயமில்லாத பகுதிகளுக்குள் படையினர் வலிந்து இழுக்கப்படுகின்றார்கள். படையினர் தற்போது சென்றுள்ள பகுதிகள் அடர்த்தியான காடுகளைக் கொண்ட பகுதிகள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்தப் பகுதி புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களுக்கே உகந்தவையாக இருப்பதால் அதற்குள் நின்று பிடிப்பது படையினருக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்கப் போவதில்லை. அதனால்தான் மாங்குளம் வரையிலாவது தமது கட்டுப்பாட்டை உடனடியாக விஸ்தரிக்க வேண்டும் என்பதில் படைத் தரப்பு அவசரம் காட்டுகின்றது. மாங்குளம் வரையில் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதன் மூலமாகவே வவுனிக்குளத்திலுள்ள படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

இருந்த போதிலும், வவுனிக்குளத்தைத் தாண்டி படையினர் செல்வதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கப் போவதில்லை என்பதைத்தான் அவர்களுடைய முறியடிப்புச் சமர் உணர்த்துகின்றது.

படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப் பட்டிருப்பதால் அந்த முயற்சியைப் படையின் கைவிட்டு விடுவார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல.

ஐந்து முனைகளில் படையினரின் நடவடிக்கை இடம்பெற்றாலும், இரண்டு முனைகளில்தான் அவர்கள் தமது முழுக் கவனத்தையும் செலுத்துகின்றார்கள். மற்றைய முனைகளில் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் புலிகளைத் திசை திருப்புவதற்கானதாகவே இருக்கும்.

மழைகாலம் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் படையினர் இவ்வாறு அகலக் கால்களை வைத்திருப்பது தந்திரோபாய ரீதியில் படையினருக்கு எந்த வகையிலும் சாதகமானதல்ல.

அத்துடன் தமக்குப் பரிச்சயமில்லாத பல பகுதிகளுக்குள் அவர்கள் நகர்ந்திருக்கின்றார்கள்.

இந்த நிலைமையில் வவுனிக்குளம் பகுதியில் புலிகள் நடத்திய கடுமையான முறியடிப்புச் சமர் படையினர் நிலை கொள்ளப் போகின்றார்களா அல்லது நிலை குலையப் போகின்றார்களா என்பதற்கான ஒரு சமிக்ஞையாகவே இருக்கின்றது எனக் கருதலாம்.

-ஆதவன்-


Comments