இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆரூடம் கூறும் நாராயணர்கள்

"அறப் படித்த பல்லி கூழ்ப் பானைக்குள் வீழ்ந்ததாம்!' என் றொரு பேச்சுமொழி நம் மத்தியில் உண்டு.

கூரை விட்டத்திலிருந்தபடி பலருக்கும் எதிர்காலம் குறித்துச் சாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி, தனது எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் இருந்துவிட்டு, விட்டத்திலிருந்து தவறு தலாகக் கூழ்ப் பானைக்குள் விழுந்து இறந்துபோனதாம் என்ற பேச்சு வழக்குக் கதைபோல இவ்வாறு கிண்டலாகக் கூறப்படுகின்றது.

இதுபோலவே இலங்கை விவகாரத்தில் இலங்கை அரசுக்குப் புரியாத விடயம் என்று குறிப்பிட்டு ஓர் ஆலோசனையை போதனையை வெளிப்படுத்தும் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தாம் கூறும் அதே கருத்துத் தமக்கும் புரியாதமை போல நடந்து கொள்வதுதான் விநோதமாக இருக்கின்றது.

மற்றவர்களுக்கு ஆரூடம் கூறும் பல்லி, தனக்கு ஆரூடம் பார்க்க முடியாமல் இயலாமல் கூழ்ப்பானைக்குள் விழுந்து இறந்தமைபோல இருக்கின்றது ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறும் இந்தியா, அந்த ஆலோசனையின் தாற்பரியத்தைத் தானே புரிந்து கொள்ளாமல் செயற்படுவது.

இலங்கை இனப்பிரச்சினையோடு நீண்டகாலம் சம்பந்தப்பட்டவர் எம்.கே.நாராயணன். விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு முழுத் தயாரான அரசியல் சூழ்நிலையை ஈழத் தமிழினம் எட்டுவதற்கு முன்னரே,

தமிழ் இளைஞர்களை இந்தியாவுக்குத் வருவித்து, மறைமுகமாக அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டு ஒருபுறம் கொழும்பு அர சுக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகளுக்குத் தூண்டி விட்டுக் கொழும்பைக் குழப்பிக் கொண்டு,

மறுபுறம் தமிழ் இளைஞர்களைப் பல்வேறு இயக்கங்களாகத் துண்டுபட வைத்து, அவற்றுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி,

அவற்றில் ஒன்று கூட விஞ்சிய போராட்ட கட்டமைப்பாக மேலெழும்ப விடாமல் குழப்புகின்ற செயற்பாட்டுத் திட்டத்தையே 1980 களின் நடுப்பகுதியில் புதுடில்லி கைக்கொண்டது.

அச்சமயம் இந்தத் திருகுதாளப் பணிக்குப் பொறுப்பான உளவு அமைப்பின் தலைவராகச் செயற்பட்டவர் இந்த நாராயணன்தான்.

இப்படி இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்ட வடிவத்தை நோக்கித் திரும்பிய காலகட்டம் முதல் இவ்விடயத்துடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அவர்,

இந்தப் போராட்டத்தின் போக்குக் குறித்தும், தாற்பரியம் குறித்தும் கருத்தும் ஆரூடமும் கூற முற்றிலும் பொருத்தமானவரே.

ஆனால் தாம் கூறும் தாற்பரியத்தின் உண்மையின் யதார்த்தத்தைத் தாமே புரியாதவராக அவர் செயற்படுவதுதான் குளறுபடித்தனமாகும்.

""புலிகளுக்கு எதிரான மோதல்களில் இலங்கை அரச படைகள் வெற்றி பெறலாம். எனினும், ஈழத் தமிழர்கள் அரசுப் பக்கம் இல்லாததால் அரசினால் யுத்தத்தில் வெல்ல முடியாது'' என்று கூறியிருக்கின்றார்

இந்தியத் தேசியப் பாது காப்பு ஆலோசகர் நாராயணன்.அவரின் அந்தப் பேட்டியின் வாசகங்கள் இரண்டு விடயங்களில் தீர்க்கமான முடிவான கருத்து நிலைப்பாட்டில் அவர் இருக்கின்றமையை வெளிப்படுத்துகின்றன.

ஒன்று

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைத் தரும் எண்ணப்பாடோ, பற்றுறுதியோ, திடசங்கற்பமோ சிங்கள அரசுத் தலைமைக்கு இல்லை என்பதில் தமிழர்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

அதனால் அவர்கள் இலங்கை அரசுப் பக்கத்தில் இல்லை.

மற்றது

ஈழத் தமிழர்கள் இலங்கை அரசுப் பக்கத்தில் இல்லாத காரணத்தினால் அரச துருப்புகள் மோதல்களில் வெற்றி பெற்றாலும் யுத்தத்தில் வெற்றி பெறமுடியாது.

இலங்கை நிலைவரத்தை மதிப்பாய்வு செய்து, இந்த இரண்டு கருத்து நிலைப்பாட்டையும் தெரிவிக்கும் தகுதியும் தரமும் உடையவர் நாராயணன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஆனால் தமக்கு நீதியான அதிகாரப் பகிர்வு ஒன்றை இலங்கை அரசுத் தலைமை தரமாட்டாது என்ற கருத்து நிலையில் ஈழத் தமிழர்கள் உள்ளனர் என்ற யதார்த்தத்தை அப்பட்ட மாக வெளிப்படுத்திப் போட்டுடைக்கும் அவர்,

தமிழர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு ஒன்றை மஹிந்தரின் தற்போதைய அரசுத் தலைமை வழங்கும் அல்லது வழங்காது என்ற நம்பிக்கை தமது புதுடில்லி அரசுக்கு உள்ளதா அல்லது இல்லையா என்பதை மட்டும் பகிரங்கமாக வெளிப்படுத்தவேயில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஈழத் தமிழர்களை ஆயுத ரீதியில் பலாத்காரம் மூலம் அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் பேரினவாத ஆக் கிர மிப்பும் மேலாதிக்கச் சிந்தனைத் திட்டமும் மட்டுமே தற்போதைய சிங்கள அரசுத் தலைமையிடம் உள்ளது என்றும்நீதி, நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைத் தமிழர்களுக்கு வழங்கும் சிந்தனைப் போக்கே கொழும்பு அரசுக்குக் கிஞ் சித்தும் கிடையாது என்றும்

ஈழத் தமிழினத்தின் பிரதிநிதிகள், நாராயணன் உட்பட்ட இந்திய அரசுத் தலைமையிடம் தொடர்ந்து வற்புறுத்தலாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

கொழும்பின் அத்தகைய ஆக்கிரமிப்பு, அராஜக அத்துமீறல் போக்குக் குறித்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து முறைப்பாடு செய்யும்போது, அதை செவிமடுத்துக் கொண்டு, உருப்படியான பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல்

வாளாவிருந்து விட்டு,

இப்போது ஈழத் தமிழினம் சுட்டிக்காட்டிய உண்மை களைத் தாமும் (நாராயணனும்) ஒருதரம் மந்திரம் போல திருப்பி உரக்கக் கூறுவதில் அர்த்தமில்லை.

ஈழத் தமிழினத்துக்கு நியாயம் செய்ய முடியாத விரும்பாத தலைமையே கொழும்பு அரசு என்பதை உணர்ந்த பின்னரும், அந்த விடயத்தில் கொழும்பைச் சரியான வழி யில் வழிப்படுத்தும் தார்மீக ரீதியான பொறுப்பிலும், கடமையிலும், அதிகாரத்திலும் இருக்கும் ஒருவர், இப்படி வெளியாளாக நின்று வெறும் "ஆரூடம்' கூறுவதும் அபத்தமே.

அதையும் விட இவ்விடயத்தில் இலங்கையைச் சரியாகச் செயற்பட வைக்கும் வழிக்கு நெட்டித்தள்ள நடவடிக்கை எடுப்பதே இந்தியாவின் நியாயமான செயற்பாடாக இருக்க முடியும்.

புதுடில்லி நாராயணர்களுக்கு இது புரியுமா?



Comments