உலக அரசுகளின் மிரட்டல் அரசியல் !அதுவே மகிந்த அரசின் கைதேர்ந்த தந்திரம் !

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டவை எல்லாம் பேய் என்று ஒரு பழமொழி தமிழில் உள்ளது. இரவில் இருட்டு வழியில் மிகப் பயந்த சுபாவம் கொண்ட ஒருவன் எவரது துணையும் இன்றித் தனியாகப் போக வேண்டித் தனித்துப் போகிறான். அவனுக்குக் கண்ணில் தெரிவது எல்லாம் இருட்டு மட்டுமே. எனவே அவனுக்குக் காணும் பக்கம் எல்லாம் பேயாகத்தான் தெரியும். அந்நிலையில் அவன் பயத்தில் அலறி மிரண்டு பிறரையும் மிரள வைப்பான்.
இத்தகைய தந்திரத்தை உலக அளவில் பயன் படுத்தியவர் அமெரிக்க அரசுத் தலைவர் புஷ் ஆவர். அமெரிக்கா அரசின் வெளியுறவுக் கொள்கையால் அடிபட்ட புலியாக எழுந்தார் முன்னாள் அமெரிக்க வெள்ளை மாளிகைச் செல்லப் பிள்ளையான பின் லேடன். ஆப்கானில் புகுந்து விட்ட ரஷியாவை விரட்டச் சவுதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப் பட்ட பந்தையக் குதிரைதான் பின் லேடன்.

அமெரிக்காவும் இஸ்ரவேலும் நடத்தும் இஸ்லாமியருக்கு குறிப்பாக பலஸ்தீன மக்களுக்கு இழைக்கும் கொடுமைக்கு எதிராகவும் கிருஸ்தவ மத மாற்றத்துக்கு எதிராகவும் எழுந்ததே அல் குவைய்தா இயக்கம். அமெரிக்காவின் தூதரகங்கள் மூலமாக முன்னெடுக்கப்படும் இஸ்லாமிய அரேபிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எவையும் புனிதமானவை அல்ல. எங்கே எவரை வளைசசுப் போடுவது எவரை ஒழித்துக் கட்டுவது என்பதே இலக்காக இருந்தது. எனவே அத்தைகய தூதரகங்கள் பின் லேடனின் தாக்குதலுக்கு உள்ளாயின.

அமெரிக்க அரசு கியூபாத் தலைவர் பிடல் கஸ்ரோவுக்கு எதிரான பல நூற்றுக் கணக்கான முயற்சிகள் உலகறிந்த விடையங்கள். அமெரிக்கா கற்றுக் கொடுத்த பாடத்தை அதன் தத்துப் பிள்ளை பின்லேடன் அதனிடமே காட்ட நினைத்தால் அமெரிக்கா சும்மா விடுமா ? கியூபா போன்ற தன்னை மதிக்காத நாடுகளிலே ஆட்சி மாற்றம் செய்ய எத்தனிக்கும் அமெரிக்கா ஒரு தனி மனிதனான பின் லேடனும் அவனது அமைப்பும் அதற்கு எதிராகச் செயற்பட விடுவதா ? அமெரிக்க அரசும், அதன் நண்பர்களான இஸ்ரவேலும் யூத கத்தோலிக்க மத பீடங்களும் ஒன்றாக ஆதரவு தர அகில உலகக் கில்லாடிகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரவேலுக்கும் பயங்கரவாதத்தைச் சொல்லியா கொடுக்க வேண்டும்? எனவேதான் இரட்டைக் கோபுரத் தாக்குதல் இடம் பெறுவதை முன்பே தெரிந்திருந்தும் தடுக்க நினைக்காது அதனை மேலும் கொடூரமாக்கித் தனது பயங்கரவாதத்துக்கு எதிரான பிரச்சாரமாக்கியது.

ஆப்கானில் தலிபான்களின் இஸ்லாமிய ஆட்சிக்கு சவாலாக கத்தோலிக்க மதமாற்ற அமைப்புகள் உள்ளே நுழைந்து ஜனநாயகம் ,பெண் விடுதலை என்ற போர்வையில் மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டன. இதனைக் கையும் களவுமாக மதமாற்றப் பிரச்சாரக் காணொளிப் பேழைகளுடன் கைப்பற்றி 7 யேர்மானியத் தொண்டர்களைச் சிறைப் படுத்தியது. ஆப்கானில் அமெரிக்கா நுழைந்த பின்னரும் அங்கு போய் மதமாற்றம் செய்த தென்கொரிய பெண் மதப் பிரச்சாரகர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப் பட்டு பணம் கொடுத்து விடுவிக்கப் பட்டனர். இச்செய்தியை இங்கு குறிப்பிடும் காரணம் மதம் எந்த அளவுக்குப் பயங்கரவாதத்தின் பின்புலமாய் உள்ளது என்பதைக் காட்டவே. பின் லேடனைப் போன்றே ஈராக்கின் தலைவர் சதாமும் வெள்ளை மாளிகையின் செல்லப் பிள்ளையாக இருந்தவரே. இருவரையும் ஒழித்துக் கட்ட உடைக்கப் பட்டதே அமெரிக்க வர்த்தக இரட்டைக் கோபுரம்.

இரட்டைக் கோபுர உடைப்பும் அதன் உலக அளவிலான பிரமிப்புத் தன்மையும் இஸ்லாமிய உலகப் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியைப் பூதாகாரப் படுத்த இலகுவாயிற்று. புஷ்ஷின் மொழியில் பயங்கர அச்சாணியாக இந்த இருவரோடும் வட கோரியாவையும் இணைத்து எல்லார் தலை மேலேயும் குண்டு விழப் போகிறது என்று அன்று புஷ் தொடங்கிய பிரச்சாரம் இன்றும் தொடர்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தப் பயமுறுத்தல் அரசியலை பராக் ஒபாமா மிகப் பிரயத்தனப் பட்டு நீக்க முயன்று வருகிறார். ஆனால் அவரது முயற்சி பலனளித்து அவர் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதே சந்தேகமாக உள்ளது.

இந்தப் பயங்காட்டும் மிரட்டல் அரசியலை மகிந்த அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக கடைப்பிடிப்பது அப்பட்டமாகவே தெரிகிறது. சர்வ தேச எதிர்ப்பைச் சரி செய்ய அவர் செய்த புத்தி சாலித்தனமான வேலை புத்த சிலைக்கும் புத்தகாயாவுக்கும் யாத்திரை போய் வரம் கேட்டவர், முதல் இலங்கை அரசுத் தலைவர் என்ற பெருமையுடன் இத்தாலி போய் வத்திக் கானில் பாப்ரசர் முன் முட்டி போட்டதுதான். ஏற்கனவே போலந்து மூலமாக சோவியத்தின் கம்மியூனிச ஆட்சிக்கு உலை வைத்தவர் பாப்பரசர் 2வது அருளப்பர் சின்னப்பர். எனவே மகிந்தர் தனது அரசு நடத்தும் போருக்குப் புனித போப்பாண்டவரை நாடியதில் வியப்பில்லை. அதன் பலனால் சர்வதேச அளவில் இத்தனை மனித உரிமை மீறல் கண்டனங்களுக்கு மத்தியிலும் அவரால் தலைநிமர்ந்து நிற்க முடிகிறது.

புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் கத்தோலிக்க மக்களும் திருச்சபையும் அதன் ஊழியர்களும் பாதிக்கப் படலாம். கத்தோலிக்க மக்களின் புராதன தலமான மடுத் தேவாலயம் புலிப் பயங்கரவாதிகளின் கட்டுப் பாட்டில் உள்ளதால் ஏனைய பகுதி மக்கள் வழிபடத் தடையாய் இருக்கிறது. எனவே அதன் விடுவிப்புப் போருக்கு ஆசி வேண்டும் எனக் கேட்டு வரம் வாங்கினார்.

மடுத் தேவாலயப் பகுதியைக் கபடமாகப் பெற்றுக் கொண்டதும் பேராயர் இராயப்பு யோசேப்பு அடிகளாரின் அமைதிப் பிரதேசக் கோரிக்கைக்கு விரைவில் நாடு முழுவதையும் பிடித்து அமைதிப் பிரதேசமாக்குவேன் எனக் கிண்டலடித்தே ஆயரை மீளவும் மாதா சொருபத்தை மடுப் பகுதிக்குக் கொண்டு வர வைத்து விட்டார். இப்போ அவர் அனைத்து மகாணசபைத் தேர்தல்களையும் மடுக் கோவிலை வைத்தே பிரச்சாரப் படுத்தி வெற்றி கொண்டு விடும் கனவில் மிதக்கிறார்.

இப்போது பகலில் மட்டும் யாத்திரிகர் வரலாம் எனக் கூறப் பட்டாலும் இராணுவம் விரைவில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிங்கள யாத்திரிகரை இரவு தங்கச் செய்யும் தந்திரங்களையும் அவர்கள் மூலமாக ஊடுருவல் வேலைகளையும் நடத்தும் என்பதை நிச்சயமான எதிர்வு கூரலாகக் கொள்ளலாம். அமைச்சர்கள் முதல் அனைவரும் புலிப் பயங்கரவாதம் என அலறிக் கொண்டே மற்றவர்களையும் அலற வைக்கிறர்கள். விஷம் போல் ஏறும் விலை வாசியாலும், அரசின் கட்டுப் பாடற்ற பண நோட்டு விநியோகத்தாலும் உருவான பண வீக்கத்தாலும், ஒரு நேர உணவுக்குக் கூடத் திண்டாடும் பொது மக்கள் சம்பள உயர்வு கேட்டால், முதலில் பயங்கரவாத முறியடிப்பு அதன் பின்தான் பசிக்கு உணவு என்பது போல் பதில் வருகிறது. எப்போ போர் முடியும் எனக் கேட்டால் தொடு வானத்தைப் பிடிப்பதுபோல் அதோ இதோ எனக் கூறிப்; பூச்சாண்டி காட்டி அரசியல் நடத்துகிறார்கள்.

யாரும் ஏதும் எதிர்த்துப் பேசிவிட்டால்; துரோகிகளை மக்களே தாக்கி அழித்து விடுவார்கள் எனக் கூறி தாம் செய்ய இருப்பதை மறைமுகமாகக் கூறி மிரட்டுகிறார்கள். மீறிச் செயற்பட்டால் அநாமதேயத் தொலை பேசி மிரட்டல் , அதனைத் தொடர்ந்து வெள்ளை வான் கடத்தல் ,சித்திரவதை , கொலை என்றும் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. மகிந்தரிடம் கேட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையே முறைப்பாடு செய்தால் நடடிக்கை எடுக்கலாம் என்கிறார்.

பொலிஸிடம் முறைப்பட்டால் வெள்ளை வான் இலக்கம் பொய்யானதாக இருந்தாலும் தாருங்கள் என்கிறார். அப்படித் தகவல் கொடுக்கப் பட்டால் பொலிஸின் தொல்லை தகவல் கொடுத்தவருக்கே சேரும் என்பது அனுபவமாக உள்ளது.

தகவலைப் பெற்ற பொலிஸ் அதிபரே எத்தனையோ வெள்ளைச் சிற்றூர்திகள் உள்ளன அவற்றில் எதைப் பிடிப்பது எனத் தெரியாது என்றும், வெள்ளை நிறச் சிற்றூர்திகளை இனிமேல் இறக்குமதி செய்யாமல் இருப்பதே இதற்கு ஏற்ற தீர்வு என்றும் பதில் கூறும் போது இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கையறு நிலை மனித உள்ளம் படைத்தவருக்கு மட்டுமே புரியும்.

இவர்களின் அர்த்தமற்ற பேச்சுக்களால் மனம் நொந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் அவதியுறுவோர் தெரிவிக்கும் மனித அவலங்களைக் கேலி செய்வது போலப் பேசி அமைதி வழிப் பேச்சு எனப் போரிட்டு மக்களை அழித்த பின் யாரோடு பேச நினைக்கிறார்கள்?
என மிகவும் வேதனையோடு தெரிவிதகார்.

அன்றாடம் போடப் படும் விமானக் குண்டு வீச்சுகளையும் தமிழ் மக்களின்; சாவுகளையும் மட்டைப் பந்து ஓட்ட எண்ணிக்கை போல் அரசு அறிவித்து மக்களைப் பரவசப் படுத்துகிறது. இதற்கு அரசு ஊடகங்களை மிரட்டியும் விரட்டியும் பொய்ப் பிரசாரங்கள் மூலம் சிங்கள மக்களின் மனதில் புலிகள் பற்றிப் பயம் ஊட்டியும் தன் போர்த் திட்டங்களை வகுத்து ஆட்சியில் இருக்கத் துடிக்கிறது.

சிங்களப் பொது மக்களும் இதே பீதியில் தமிழ் பேசும் எவரையும் புலி எனத் தகவல் கொடுப்பதும் அவர்களை பொலிசார் பிடித்து உள்ளே போடுவதும் தமிழ் மக்கள் அன்றாடம் படும் அவதிகள் ஆகும். மிரட்டலுக்குப் பயந்து பாதுகாப்புத் தேடி வலிந்து சென்று சிறைக் கூடங்களில் வாடுவதும் தமிழரின் தலைவிதியாக உள்ளது.

திறந்த வெளிச் சிறை வாழ்வும் ஊர் அடங்கு வேளையிலும் வீடுகளில் இருந்து கடத்திச் சென்று கொல்லப் படுவதும் தமிழரின் வாழ்வாக உள்ளது. இப்படியான சூழலில் மடு ஆலயத்தைப் போர்க் களமாக்கி அழிபாடுகளுக்கு உள்ளாக்கிக் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் கவலையைக கொடுக்காது விடுதலைப் புலிகள் பின் வாங்கினர்.

அதனை ஆக்கிரமித்த இராணுவமும் சிங்கள அரசும் புலிகள் மிரட்டி மாதாவின் சொரூபத்தை தங்கள் பகுதிக்கு எடுத்துச் சென்றனர் என்று பிரச்சாரம் செய்தனர். இராணுவம் மன்னாரிலும் போராடி மீடக முடியாத மாதாவைப் பேராயர் மூலம் மீண்டும் பழைய இடத்தில் கோவில் கொள்ள வைத்ததோடு அதனை அரசும் இராணுவமும் அரசியலாக்கி பிரச்சாரம் செய்கின்றனர்.

சிங்களம் இபர்போ சிங்கள போதகர்களை கொண்டு வந்து சிங்களத்திலும் பூசைகள் செய்யவும் அவர்கள் அங்கே தங்கி இருக்கவும் ஒழுங்குகள் செய்யப் பட்டுவிட்டன. இராணுவம் பொலிஸின் கண்காணிப்பும் உறுதிப் படுத்தப் பட்டவிட்டது. சதி மூலமாக மடுப் பிரதேசம் இலங்கை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சொந்துமாக்கப் பட்ட விட்டது.

தமிழரான பேராயர் இராயப்பு யோசப்பும் விரைவில் அகற்றப் பட்டுவிடுவார். இனி அங்கே தமிழ் மக்கள் யாத்திரை போவது தமிழருக்கு மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவது நிச்சயம். விரைவில் அந்தப் பிரதேசத்தில் புளொட், ஈ.பி.டி.பி., பிள்ளையான் குழுக்களின் மனித வேட்டை அன்றாடச் செய்திகளாகி விடும்.

மிரட்டல் பணியை நியமன உறுப்பினராகி அமைச்சரான மேர்வின் சில்வாவின் அடி தடிப் படையணியும் மற்றும் வெள்ளைச் சிற்றூர்திப் படையும் வழங்கும் சூட்டில் மகிந்தர் குளிர் காய்கிறர். மகிந்தர் சர்வதேச அளவில் புலிகளைப் பயங்காட்டிச் செய்யும் பிரச்சாரத்தில் புலிகளைச் சர்வதேச அளவில் தடை செய்ய முடிந்தது.

பாப்பரசரின் தரிசனங்களையும் ஆசீர்வாதத்தையும் இரு முறை பெற்றுக் கொண்டதால் சர்வதேச அளவில் அவருக்குப் பெரும் வெற்றி என்பதே உண்மை.

இதன் மூலம் பல கத்தோலிக்கத் தேவாலயங்களைக் குண்டு போட்டு அழித்தும்; கருணாரத்தின அடிகளார் உட்படப் பல கத்தோலிக்கக் குருமாரையும் கத்தோலிக்க மக்களையும் கொன்றும் செய்த பாவங்களுக்கான பாவ மன்னிப்பை வழங்கிய பாவியாகப் பாப்பரசர் நிற்கிறார்.

கடுமையான அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் உயிர் பறிப்புக்கும் உள்ளான நிலையில் ஊடகச் சுதந்திரத்தின் உயிர் ஊசலாடிக் கிடக்கிறது. 19.10.2000 ல் பீ.பீ.சி. உட்படச் சர்வதேச ஊடக நிருபரான நிர்மலராஜனின் படு கொலையுடன் தொடங்கிய இந்த வேட்டையில் 20 வரையான ஊடகவாளர் கொல்லப் பட்டும் காணாமல் போக்கடிக்கப் பட்டும் உள்ளனர்.

குற்றங்கள் அரச பாதுகாப்பு இயந்திரங்களின் கண் முன்னாலும் ஆதரவுடனும் இடம்பெறுகின்றன. அதனால் குற்றவாளிகள் என எவருமே நீதி முன் நிறுத்தப்படுவதோ தண்டிக்கப் படுவதோ கிடையாது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனக் கூறிக்கொள்ளும் இந்தியாவின் தயவிலே தமிழின அழிப்பைச் செய்தபடியே உலகத்தில் வலம் வருகிறது இலங்கை அரசு.

இத்தனை கூத்துகளுக்கும் மத்தியில் அமைச்சர்களுக்குக் குண்டு துளைக்காத வாகனம், அரச செலவில் ஆடம்பர வாழ்வு. துப்பாக்கி பிடிக்கத் தெரிந்தவனுக்கு அமைச்சுப் பதவி அடியாள் பதவி மற்றும் வாழ்வின் எல்லா வசதிகளும் தேடி வருகின்றன. மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத்தளபதி தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என அழுகிறார். பாடுபட்டு உழைப்பவனுக்கும் , படித்து வேலை தேடி அலைபவனுக்கும் அரசு தரும் ஒரே ஒரு வேலை முப்படைகளில் சேர்ந்து போரை நடத்துவதே. போர் ஒன்றுதான் அரசின் ஒரே ஒரு செயற்பபாடாக உள்ளது. பொதுமகனுக்குப் பாதுகாப்பு என்பதே கிடையாது கேட்கவும் முடியாது. இராணுவத்திலோ அரச ஊர்காவல் படையிலோ அல்லது பாதாள உலகக் குழுக்களில் சேருவது ஒன்றுதான் பாதுகாப்பான தொழில்.

தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என இன மத வேறுபாடின்றி மிரட்டல் ஆட்சி நடக்கிறது. தமிழீழ மண்ணும் கடல் வளங்களும் அந்நியருக்கு விற்கப் படுகின்றன. இத்தகைய ஒப்பந்தங்கள் செல்லுபடி அற்றவை எனச் சர்வதேசத்துக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். சொந்த வீடுகளிலில் இருந்து விரட்டப்பட்ட, விரட்டப்படும் மக்களின் வீடுகளும் நிலங்களும் மீள அளிக்கப்படாத வரை நடக்கும் ஆட்சி ஜனநாயக ஆட்சியும் அல்ல. அத்தகைய ஆட்சிக்கு துணைபோகும் அரசுகளும் ஜனநாயக அரசுகளும் அல்ல.

விரட்டப் பட்ட தமிழ் மக்களின் கதி என்ன ?

அன்றாடம் வெளிப்படும் அடையாளம் தெரியாத சடலங்களுக்கும் வெளிப்படும் மனிதப் புதைகுழிகளுக்கும் நீதி விசாரணையும் நீதியும் வழங்கப்படும் நாள் எப்போ வரும் ?

இவற்றுக்கு எதிராகவும் புலம் பெயர் மக்களின் போராட்டம் திருப்பி விடப்பட வேண்டும். இவற்றின் மூலமே நாம் எமது தாயகத்தைக் காப்பாற்ற முடியும்.

-ஈழப்பிரியன்-

Comments