நாராயணன் குழுவினரின் இலங்கை வருகையும் அவர்களின்; உள்நோக்கங்களும்

இக்கட்டுரையானது முற்றிலும் ஒரு அறிவியற் கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றது.

விருப்பு வெறுப்புக்கு அப்பால் அரசியல் விஞ்ஞானத்தை அப்படியே யதார்த்தத்தில் கணித ரீதியாக கணக்குப் போட்டுப்பார்க்கும் ஓர் ஆய்வாகவே இது அமைகின்றது.

தேசிய இனப்பிரச்சினை என்பது எப்போதும் முதலாவது அர்த்தத்தில் ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகும்.

சர்வதேசம் என்பதற்குரிய ஆங்கிலப்பதம் International என்பதாகும்.

இதன்படி International என்றால் தேசங்களுக்கிடையானதெனப் பொருள்படும்.

எனவே International Relations என்றால் தேசங்களுக்கிடையான உறவுகள் என்பதாகும்.

ஆகவே இரண்டிற்கு மேற்பட்ட நாடுகளுக்களுக்கிடையேயான உறவு தேசங்களுக்கிடையிலான உறவுகள் ஆகும்.

இவ்வாறு தேசங்களுக்கிடையிலான உறவு என்பது தமிழில் பிழையான மொழிபெயர்ப்பாக 'சர்வதேச உறவுகள்" எனப் பிரயோகிக்கப்படுகின்றது.

'சர்வ" என்ற வடமொழிப் பதத்திற்கு அர்த்தம் 'அனைத்து" என்பதாகும்.

உண்மையில் பல தேசங்களுக்கிடையேயான உறவு என்ற பதம் தான் 'சர்வதேச உறவு"

நாம் 'சர்வதேச உறவு" எனப் பிழையாக பிரயோகித்து பிழையான பொருள் கொண்டு விட்டோம்.

தற்போது சரியாகவே பண்பாட்டு உறவுகள் என்ற பதம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி பண்பாட்டு உறவு என்ற அர்த்தத்திலான சர்வதேச உறவுகளையும் தாண்டி இன்று உலகம் பூகோளமயத்திற்குள் பிரவேசித்து விட்டது.

ஆதலால் இன்றைய நிலையில் ஒரு தேசிய இனப்பிரச்சினை என்பது ஒரே வேளையில் சர்வதேச பிரச்சனையாகவும், பூகோளப் பிரச்சினையாகவும் முப்பரிமாணம் கொண்டதாய் உள்ளது.

இந்த வகையில் தேசிய இனப்பிரச்சினையை சர்வதேச பிரச்சினையில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாது என்பதுடன் ஒரு தேசிய இனப்பிரச்சினையானது சர்வதேச அரசியலாலும் பூகோள அரசியலாலும் சுற்றிவளைக்கப்படும் ஒன்றாயும் உள்ளது.

எனவே, ஒடுக்கும் இனமா அல்லது ஒடுக்கப்படும் இனமா மேற்படி சர்வதேச அரசியலாலும் பூகோள அரசியலாலும் சுற்றி வளைக்கப்படுகிறது என்பதிலிருந்தே ஒரு தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வின் தன்மை தங்கியுள்ளது.

ஆதலால் இன்றைய இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை அரசியல் மதிப்பீடு செய்யும்போது உள்நாட்டு - வெளிநாட்டு - பூகோள அரசியல் என்ற முப்பரிமானத்தில் நின்று நோக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த வகையில் ஆர்.கே. நாராயணன் தலைமையிலான இந்திய தூதுக்குழுவின் கொழும்பிற்கான 20.06.2008 திடீர் வருகையானது இனப்பிரச்சினை விவகாரத்தில் எத்தகைய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்பதை நுணுகி ஆராய்ந்து பொருள் கொள்ள வேண்டியது இராஜதந்திர அரசியலில் ஒரு தலையாய பக்கமாகும்.

மேற்படி இராஜதந்திரக்குழுவின் கொழும்பு விஜயம் ஒர் இராஐதந்திர பயிற்சியல்ல. இது ஓரு வகையில் ஓர் அரசியல் பிரகடனமாகவும், ஓர் அரசியல் - இராணுவ உள்ளோட்டமாகவும் காணப்படுகின்றது.

அதாவது, மகிந்த இராஜபக்ச தனது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டு வருகின்றார்.

அது இந்தியாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் முரண்படுகிறது.

மேற்படி இரு நிகழ்ச்சி நிரல்களுக்கும் இடையில் ஓர் அமைவு ஒழுங்கை காண்பது தான் மேற்படி நாராயணன் குழுவினரது விஜயத்தின் காரணமாகும்.

முதலில் மகிந்தவின் அரசியல் பலம் என்ன என்பதை எடை போடுவோம்.

1. உள்நாட்டில் இனவாத அடிப்படையிலாயினும் மக்களின் பேராதரவினை பெற்ற ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினதும் அரசாங்கத்தினதும் தலைவர். அவர் மேற்கொள்;ளும் யுத்தத்தை இங்குள்ள மக்களில் 88 வீதத்தினர் ஆதரிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையின் வீத கணிப்பின்படி 30 வீதமான மக்களின் ஆதரவு மகிந்தவின் தற்போதைய யுத்தத்திற்கு கிடைக்கின்றது என்பது வெளிநாட்டு அரசுகளுக்கு அதிர்ச்சியூட்டும் விடயமாகும்.

2. இந்தியா - இலங்கை உறவு தொடர்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தேடி வைத்த முதுசம்தான் மகிந்தவின் வெளியுறவுக்கொள்கைக்கான முதலீடாகும். அதாவது, நட்பு நிலையில் காணப்பட்ட இந்தியப் பழந்தமிழர் உறவை பகைநிலைக்குத் தள்ளிய ஜே.ஆர். இலங்கை அரசுக்கும் இனவாதத்திற்கும் தேடிவைத்த முதுசொத்தாகும். இது மகிந்த அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கைக்கான முதற்தரப் பலமாய் அமைந்தது.

3. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறி இந்தியா அரசை இராணுவ ரீதியில் தனக்கு சேவை செய்யச் செய்யும் யு1 நேர்கோட்டு உறவை மகிந்த வடிவமைத்தார்.
புலிகளை ஒடுக்குவதற்கு சீனாவிடம் உதவி பெறுவதற்கான இலங்கை - சீனா யு2 உறவைக்காட்டி இந்தியாவிடம் பேரம் பேசும் நிலையை மகிந்த வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
இத்தகைய பேரம் பேசுவதற்கான உறவுக்கோட்பாட்டுக்கு யு2 எனப் பெயர்.

அதாவது, புலிகளைக் சுற்றிவளைக்க இலங்கை - இந்திய உறவு என்ற யு1 கோட்டையும் இலங்கை- சீனா- இந்தியா என்ற சுற்று வட்டத்தில் உருவாகும் யு2 கோட்டையும் மகிந்த அரசாங்கம் தனது சுற்றிவளைப்புக்கான வெளியுறவுக்கொள்கை மூலாபாயமாக வரைந்தது.

யு2 கோடானது இனப்பிரச்சனையின் பெயரால் இலங்கைத் தீவில் சீனா செல்வாக்;குப் பெறுவதை சாத்தியமாக்கியது. இந்த வகையில் யு1இ யு2 கோடுகள் பல்கிப் பெருகி சர்வதேச வலைப்பின்னல் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கியது.

இத்தகைய வலைப்பின்னல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு எரிச்சலையும் சினத்தையும் ஏற்படுத்தின.
இந்த வகையில் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தானும் எடுப்பதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தானும் சர்வதேச வலைப்பின்னலில் ஒரு பங்காளியாகும் வியூகத்தை வகுத்தது.

இனப்பிரச்சினையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தற்போது தமக்கு சாதகமானது எனக்கருதும் மேற்குலகம் புலிகளால் தாம் நெருக்கடிக்குள்ளாகிவிட்டதாகக் கருதும் நிலையில், புலிகளுக்கு எதிராக மக்கள் ஆதரவைப் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்த அரசாங்கத்திற்கு உதவுதன் மூலம் புலிகளை தோற்கடித்து தனது உறவை சிங்கள மக்களின் ஆதரவுடன் இலங்கையில் பலப்படுத்த விரும்புகின்றது.

மேற்குலக நோக்கு நிலையானது மகிந்தவிற்கு யு3 மேற்குலக நட்புக்கோட்பாட்டை பரிசளித்துள்ளது.

அதேவேளை ஏகாதிபத்திய சந்தை வலைப்பின்னல் யு4 நட்புக்கோட்டை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் யு1இ யு2இ யு3இ யு4 போன்ற நட்புக் கோடுகளினால் மகிந்த பலம் பெற்று இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு பதிலாக மகிந்த நிகழ்ச்சி நிரல் பலம் பெறுவதாக அமைந்தது.

இந்நிலை கிழக்கு மாகாண அனுபவத்தின் மூலம் நிருபணமாகி விட்டது.

அதாவது, கிழக்கில் இராணுவ ரீதியாக புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்.

ஆனால் மகிந்த இது விடயத்தில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலைப் பயன்படுத்தி கிழக்கில் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு விட்டு தனது நிகழ்ச்சி நிரல்படி கிழக்கை அரசியல் ரீதியாக பரிபாலனம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

இந்த இடத்தில் தான் புதுடில்லியில் இருந்து மாகாண சபைத் தேர்வின் பின்பு மாகாண அரசு அமையும் விடயத்தில் தனக்குப்பொருத்தமான அழுத்தத்தைப் பிரயோகிக் தொடங்கியது.

அதாவது, ஒரு முஸ்லிம் முதலமைச்சரின் கைக்கோ அன்று சிங்கள முதலமைச்சர் ஒருவரின் கைக்கோ கிழக்கு போய்விடக்கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.

ஆனால், கிழக்கை கபளீகரம் செய்யும் விடயத்தில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலைவிட மகிந்த நிகழ்ச்சி நிரல் நடைமுறையில் மேலோங்கிவிட்டதை இந்திய இராஜதந்திரிகள் கண்டுகொள்ளத் தொடங்கினர்.

இந்தியாவின் தூரநோக்கு கண்ணாடிப் பார்வை இராஜதந்திரம் (BINOCULARS DIPLOMACY) தோல்வியடையவே, பருந்துப் பாச்சல் யதார்த்த இராஜதந்திரத்திற்கு தாவவேண்டி ஏற்பட்டது.

ஆனால், சிங்கள இராஜதந்திர குஞ்சுக்கோழிகளுக்கு இந்தப் பருந்துப் பாய்ச்சலிலிருந்து தப்பிப் பிழைக்கும் பதுங்கற் தந்திரம் நன்றாகத் தெரியும்.

எனவே, தற்போது நிகழ்வது இந்திய இராஜதந்திரிகளின் பருந்துப் பாச்சலும் சிங்கள இராஜதந்திரக் குஞ்சுகளின் பதுங்கல் பீடிகையும்தான்.

இதன்படி நாராயணன் குழுவின் வெளிப்படையான அரசியற் பிரகடனம் என்னவெனில் வடக்குக் கிழக்கு ஓர் அலகாக இருக்கக்கூடிய அரசியற் தீர்வை மகிந்தவிடம் வலியுறுத்துவது.

அடுத்து உள்ளோட்ட அரசியல் இராணுவ நோக்கின் படி புலிகளுக்கு எதிரான வன்னி மீதான தாக்குதலை முழு அளவில் எடுக்குமாறு வற்புறுத்துவதும் அதற்கு இராணுவ ரீதியாகத் தாம் உதவுவதாக உறுதியளிப்பதும்.

அடுத்து இறுதியாக தமது வருகையின் மூலம் இலங்கைத்தீவு இந்தியாவின் கொல்லைப் புறம் தான் என்பதை உலகிற்கு பறைசாற்றும் ஓர் இராஜதந்திரப் பரிபாசையாக்குவது.

இந்தியாவின் நாராயணன் குழுவின் விஜயத்தின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினையானது அரசியல் இராணுவ அம்சத்தில் மேலும் சூடு பிடிப்பற்கான சர்வதேசக் களமாய்த் தூண்டப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசும் தமிழ்மக்களின் வாழ்நிலையைக் கருத்திற்கொண்டு தமது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார்கள் என்றில்லை.

அவர்களுக்கு அப்பாவிகளான சிறிய இனமான தமிழ் மக்களின் வாழ்நிலையோ துயரமோ பொருட்டல்ல.

அரசுகள் தத்தமது தேவைகளுக்கேற்ப இலங்கை அரசியலில் தமது இடத்தைப் பேணுவதற்கான 'மனிதநேய" 'மனித உரிமை", 'சேவாதார உதவி" போன்ற வேடங்களை அணிவார்களே தவிர தமிழரின் வாழ்நிலைப் பொருட்டல்ல.

எனவே நாராயணன் குழுவின் விஜயத்திலிருந்து தோன்றக்கூடிய தமிழரின் வாழ்நிலை என்னாகும் என்பதே தற்போதைய முதற்தரக் கேள்வியாகும்.

அடுத்து சிங்கள இராஜதந்திரம் எப்படி இந்நிலையைக் கையாளப்போகின்றது என்ற கேள்விக்கான பதில் முக்கியமானது.

மூன்றாவது தமிழ்மக்களின் பக்கத்தில் இவை எவ்வாறு வடிவம்பெறப்போகின்றன? அதில் கிழக்கின் பங்கும் பாத்திரமும் என்ன? முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு எப்படி அமையப் போகின்றது? இறுதியில் யாருக்கு இலாபம்?.

-தாயகத்திலிருந்து மு.திரு-


Comments