இந்தியாவுடன் எதைப் பற்றிப் பேசுவது?

இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை சிறிலங்கா இல்லாமற் செய்தபோது அதுபற்றிக் கவலைப்படாமல் இந்தியா உள்ள நிலையில் இந்தியாவுடன் பேசுவதற்கு என்னதான் இருக்கிறது?

ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயாமான அரசியல் தீர்வு எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் செயற்பட்டுவரும் இந்தியா மீண்டுமொருமுறை ஈழப் பிரச்சினையில் மூக்கை நுழைக்க ஆரம்பித்துள்ளமையை அண்மைக்கால நடவடிக்கைகள் புலப்படுத்தி வருகின்றன.

போர்க்களத்தில் தமிழர் தரப்பின் கை ஓங்கிவிடக்கூடாது என்பதற்காக சிறிலங்காவிற்கு மறைமுகமாக ஆயுத, பொருளாதார, நிபுணத்துவ உதவிகளை இடையறாது இந்தியா வழங்கி வருகின்றமை ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

இந்நிலையில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்பதை ஏற்றுக்கொள்ள சிங்கள தேசம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஏற்றிருந்தாலும் கூட தொடர்ச்சியாக மறுத்துவரும் இந்தியா, தற்போது விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாகத் தனிமைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக சிறிலங்கா அரசின் அரசியல் நலன்களுக்காக அண்மையில் கிழக்கில் நடாத்தப்பட்ட பொம்மைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிள்ளையானின் கரங்களைப் பலப்படுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளது.

சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், பிள்ளையானை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள அதே நேரம், கிழக்கு மாகாண சபைக்கு பத்து புதிய பேருந்துகளை இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

(இந்திய ஆக்கிரமிப்புப் படை தமிழர் தாயகப் பகுதியில் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் இதுபோன்ற பேரூந்துகள் பல அன்பளிப்பாக வழங்கப்பட்டதும் அவற்றுள் சில இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு எரிக்கப் பட்டமையும் பல வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.)

இவை தவிர, சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான மீன்பிடிப் படகுகளும், வலைகளும் கூட மட்டக்களப்புப் பகுதி மீனவர்களுக்காக வழங்கப்பட்டதாகவும் தெரிகின்றது.

இதேசமயம், அண்மையில் நடைபெற்ற தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் 15 ஆவது மாநாட்டுக்காக கொழும்பு சென்றபோது தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் ஒட்டுக் குழுக்களையும் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பிள்ளையானின் கரங்களைப் பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிகின்றது.

அத்துடன், கிழக்கு மாகாண சபைக்குப் காவல்துறை அதிகாரம் அடங்கலான அதிகாரங்களை வழங்குமாறு சிறிலங்கா அரசை வலியுறுத்திய பாரதப் பிரதமர், வட மாகாணத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மிதவாத சக்திகளைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கட்டளையிட்டுள்ளார்.

இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகள் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை அப்பட்டமாக மறுதலிப்பதாகவும், விடுதலைப் புலிகளின் 'கடந்தகாலச் செயற்பாடுகளுக்கு' வஞ்சம் தீர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

இதேவேளை, இவ்வாறு செயற்படுவதன் ஊடாக தமிழ் மக்களுக்கு அற்ப உரிமைகளைக் கூட வழங்கிவிடக் கூடாது என நினைக்கும் சிங்களக் கடும் போக்காளர்களின் கரங்கள் பலப்படுவது பற்றியோ, தாய்த் தமிழகத்தில் உள்ள ஆறு கோடித் தமிழர்களின் உணர்வுகள் புண்படுவது பற்றியோ இந்தியா கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

இந்தியாவின் இந்த விடாப்பிடியான, குள்ளநரித்தனமான செயற்பாடுகளில் இருந்து ஈழத் தமிழ் மக்கள் எவ்வாறு தம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பதே இத்தருணத்தில் சிந்தனையில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

ஈழத் தமிழ் மக்களில் பெருவாரியானோர் தாம் விடுதலைப் புலிகளையும், அவர்களின் கொள்கைகளையுமே ஆதரிப்பதாக பல்வேறு ஜனநாயக வழிமுறைகளூடாக தெளிவு படுத்தியுள்ளனர். இது தவிர, தற்போதைய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே எனத் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றார்கள்.

இருந்தும் கூட

இந்தியா இந்த விடயத்தைக் கவனத்திற் கொள்ளவில்லை என்றால் அதனை மடைமை என்பதா அல்லது மமதை என்பதா?

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியா பேச்சுக்களுக்கு அழைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய ஒரு பேச்சுவார்த்தை இடம் பெறுமானால் எதைப் பற்றிப் பேசுவது?

தமது கோரிக்கைகள் என்ன என்பதை தமிழ் மக்கள் 1977 பொதுத்தேர்தலில் தெளிவாகக் கூறியுள்ளார்கள். இது தவிர, 1985 இல் திம்புவில் நடைபெற்ற பேச்சுக்களின் போதும் தமிழர் தரப்பு நான்கு அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்தது. இந்தக் கோரிக்கைகளை இந்தியா இன்றுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

எனவே, அத்தகைய பேச்சுக்களுக்கு முன் இந்தியா இது தொடர்பாகத் தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

இவை ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை சிறிலங்கா இல்லாமற் செய்தபோது அதுபற்றிக் கவலைப்படாமல் இந்தியா உள்ள நிலையில்

இந்தியாவுடன் பேசுவதற்கு என்னதான் இருக்கிறது?


Comments