சப்பென்று முடிந்த சார்க் மாநாடு

சார்க் நாடுகளின் 15-வது மாநாடுஇலங்கை கொழும்பு நகரில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் கச்சத்தீவு பிரச்னை விவாதிக்கப்படும், தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், அதுபற்றி உருப்படி யாக எந்தவொரு தீர்வையும் காணாமல் இந்த மாநாடு முடிந்திருக்கிறது.

சார்க் என்பதும் ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பு போல, எட்டு நாடுகளைக்கொண்ட ஒரு கூட்ட மைப்புதான். இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய எட்டு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாக 1985-ல் உருவாக்கப்பட்டதுதான் சார்க் என்பதாகும். பிராந்திய அளவில் அரசாங் கங்களுக்கிடையே புரிந்துணர்வை வலுப்

படுத்தவும், பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளவும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாணவும் இது உருவாக்கப் பட்டது. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில், இரண்டு நாடுகளும் தன்னு டைய அணுஆயுதங்களை விட்டொழிக்க வேண்டும், சர்வதேச அமைதிக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று முதலாவது சார்க் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அந்த நிலை இப்போது மாறிவிட்டது. ஆனால், இப்போது பயங்கரவாதம் என்பது தெற்காசிய நாடுகளைப் பயமுறுத்தும் முக்கியப் பிரச்னையாக மாறி உள்ளது.

சார்க் நாடுகளின் 14-வது மாநாடு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் நடைபெற்றது. அதில் முப்பது அம்சங்கள் கொண்ட கூட்டுப் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. வெறுமனே அறிக்கை வெளியிடும் அமைப்பாக இல்லாமல், செயல்படும் அமைப்பாக மாறவேண்டும் என்று அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. என்றபோதிலும், அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை.

இப்போதைய மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, தெற்காசிய நாடுகளின் முக்கியப் பிரச்னை பயங்கரவாதம்தான் என்று கூறியுள்ளார். தம்முடைய நாட்டில் இருந்து பயங்கரவாதத்தைக் கூடிய விரைவில் முற்றாகத் துடைத்தெறிந்து விடுவோம் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். சர்வதேச டெலிபோன் அழைப்புகளுக்குக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். தெற்காசிய அளவில் பல்கலைக்கழகம் ஒன்று டெல்லியில் உருவாக்கப்படு வதாகவும், அதற்கென நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், 2010-ம் ஆண்டில் அது செயல்படத் துவங்கும் என்றும் மன்மோகன் சிங் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். அந்த பல்கலைக்கழகத்தில் சுமார் ஐயாயிரம் மாணவர்கள் படிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பெங்களூரு, அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு குறித்து, மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவருடைய உரை, உப்பு சப்பில்லாமல் அமைந்து விட்டது. இலங்கை அதிபர் குறிப்பிட்டதை வழிமொழிவதுபோல பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலைப் பற்றி வலியுறுத்தியதோடு சரி. வேறு முக்கிய அறிவிப்பு எதையும் தன்னுடைய பேச்சில் மன்மோகன் சிங் வெளியிடவில்லை. மாநாட்டுக்கு வந்த பாகிஸ்தான் பிரதமரோடு தனியே அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அண்மையில் காபூலில் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் பற்றி பாகிஸ்தான் விசாரணை நடத்தும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஜிலானி செய்த அறிவிப்பு, அந்த பேச்சுவார்த்தையின் விளைவுதான்.

சார்க் மாநாட்டின் உருப்படியான விளைவுகள் என இரண்டு விஷயங்களைக் குறிப்பிடலாம். சார்க் நாடுகளுக்கிடையே உணவு தானிய வங்கி (Food Bank) ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நீண்டநாள் திட்டம் இப்போது செயல்வடிவம் பெறத்தொடங்கியுள்ளது. கோதுமை, அரிசி ஆகியவற்றை இதற்காக சேமிப்பில் வைத்து, பஞ்சத்தாலோ பற்றாக்குறையாலோ பாதிக்கப்படும் சார்க் உறுப்பு நாடுகளுக்கு வழங்குவது என்பதே அந்தத் திட்டம். இந்தியா 1 லட்சத்து 53 ஆயிரம் டன் தானியத்தையும், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவை தலா 40 ஆயிரம் டன் தானியத்தையும், இலங்கை, நேபாளம் ஆகியவை தலா 4 ஆயிரம் டன் தானியத்தையும், மாலத்தீவு 200 டன், பூட்டான் 18 டன் தானியத்தையும் இதற்காக சேமிப்பில் வைப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் வைத்திருக்க வேண்டிய தானிய இருப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். உணவுப் பற்றாக்குறை என்பது உலக அளவில் அச்சுறுத் தலான பிரச்னையாக மாறிவரும் இந்நாளில் இந்த ஏற்பாடு மிகவும் உருப்படியான ஒன்றாகும்.

இரண்டாவது விஷயம், சார்க் நாடுகளுக்கான வளர்ச்சி நிதி (SDF) என்ற ஏற்பாடாகும். இதுவும் கடந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம்தான். இதற்காக இருநூறு மில்லியன் அமெரிக்க Iடாலர்கள் கொண்ட நிதி உருவாக்கப்படும். அதில் நூறு மில்லியன் டாலர்களை இந்தியா வழங்கும். இந்த நிதி வறுமை ஒழிப்பு, மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும், மின் உற்பத்தி, தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் பிற பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விஷயங்கள் தவிர, வேறு உருப்படியான விஷயம் எதுவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப் படவில்லை. இதற்கு இவ்வளவு தூரம் இலங்கை அரசு செலவு செய்யவேண்டுமா என்ற விமர்சனம் அந்த நாட்டில் எழுந்துள்ளது. இந்த மாநாட்டை மாலத்தீவு தான் நடத்துவதாக இருந்தது. ஆனால், இலங்கை அரசு தானே முன்வந்து இதை நடத்தியது. சுமார் முப்பது சதவிகிதம் பணவீக்கம் உள்ள இலங்கை அரசு இந்த மாநாட்டை நடத்துவதற்காக சுமார் 280 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. இது தேவைதானா என்று அங்குள்ள கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் யாவும் மனித உரிமை மீறல்களுக்குப் பெயர் போனவை ஆகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கூட்டு நடவடிக்கைகளை வலியுறுத்துகின்ற இந்த அரசாங்கங்கள், தம்முடைய நாடுகளில் மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகப் பிராந்திய அளவில் எந்தவொரு ஏற்பாட்டையும் செய்து கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பு நாடுகளின் உளவு அமைப்புகள் ஒன்று மற்றதன் உள் விவகாரங்களில் தலையிடுவதாக அடிக்கடி குற்றச் சாட்டுகள் எழுப்பப்படுவதுண்டு.

காபூல் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டிருக்கிறது என்று இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம் சாட்டியிருந்தார். அதை இப்போது அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது. அதுபோல இந்திய உளவு அமைப்பான 'ரா'வைப்பற்றி பாகிஸ்தானும் குற்றம் சாட்டி வருகிறது.

அந்த நாட்டின் முன்னாள் தூதர் ஒருவர் தன்னைக் கொலை செய்வதற்கு 'ரா' முயற்சிப்பதாகக் கூறியிருக்கிறார். இப்படியான குற்றச் சாட்டுகள் குறித்து விவாதித்துத் தீர்வு காண இந்த மாநாட்டில் எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை.

சார்க் மாநாடு மேலும் ஒரு ஆடம்பர விழாவாகத்தான் முடிந்திருக்கிறது என்று இலங்கை எதிர்க்கட்சிகள்கூறுவது உண்மைதான். மாநாட்டுக் குழுவினருக்காக சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வரும் மோதல்களைத் தீர்ப்பதற்கோ அந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்தவருக்கும் சமமான உரிமைகளை அளிக்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கோ, இந்த மாநாட்டுக்கு வந்த எந்தவொரு நாட்டுத் தலைவரும் அக்கறை காட்டவில்லை.

மாநாடு நடந்துகொண்டிருந்தபோது, இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் யுத்தம் கடுமையாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

தமிழர்கள் தம்முடைய கிராமங்களைக் காலி செய்துவிட்டு, அகதிகளாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அதுபற்றி ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை.

போர் முனையில் வெடித்த குண்டுகளின் சப்தமும், அவற்றுக்குப் பலியான தமிழர்களின் அவலக் குரலும் மாநாட்டு மண்டபத்தை எட்டவில்லையா?

அல்லது அந்தத் தலைவர்கள் ரசித்துக் கேட்ட இசை நிகழ்ச்சியின் இரைச்சலுக்கிடையில் அவையும் மூழ்கி அமுங்கிப் போய்விட்டனவா?

மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கே வெளிச்சம்!

-யூனியர் விகடன்


Comments