இதுவா ஜனநாயகம் ?

வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளின் தேர்தல்கள் நேற்று நடந்து முடிந்துவிட்டன. வாசகர்கள் இந்த ஆசிரிய தலையங்கத்தை வாசிக்கும் தருணத்தில் பெரும்பான்மையான முடிவுகள் வெளிவந்திருக்கும். இருமாகாணங்களினதும் மக்கள் தீர்ப்பு எவ்வாறாக அமைந்துள்ள போதிலும், அவற்றுக்கு அப்பால் எமது நாட்டின் அரசியல் கலாசாரம் பற்றி சிறிது அலசுவது பொருத்தமாக அமையும் எனக் கருதுகின்றோம்.

வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலோ அல்லது கடந்த காலங்களில் இடம் பெற்ற தேர்தல்களிலோ வழங்கப்பட்டவை ஜனநாயக ரீதியிலான மக்கள் தீர்ப்பா அல்லது அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் வாக்குக் கொள்ளையா என்று கேட்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.

பிரதான இரண்டு கட்சிகள் மட்டுமன்றி ஏனைய கட்சிகளும் சேர்ந்து மக்களின் ஜனநாயக உரிமையை தட்டிப்பறிக்கும் ஒரு யுத்தமே தொடர்ச்சியாக நடந்தவண்ணமிருக்கின்றது. தேர்தல் என்பது ஜனநாயக அரசியல் முறைமையில் மக்கள் தங்களது இறைமைப் பலத்தை பிரயோகிக்கும் முக்கிய சந்தர்ப்பமாகவே கவனத்தில் கொள்ளவேண்டும்.

அத்தகைய முக்கியமானபணி நீதியான, நேர்மையான சூழலிலேயே இடம் பெற்றாக வேண்டும். இந்த நீதியான, நேர்மையான தன்மையை உறுதிப்படுத்தும் விஷேட ஏற்பாடுகள் அனைத்து ஜனநாயக அரசியல் முறைமைக்குள் பொதுவாகவே காணமுடிகிறது.

அயல்நாடான இந்தியாவில் தேர்தலை நடத்தும் அதிகாரத்தைக் கொண்ட அதிகார சபையாக தேர்தல் ஆணைக்குழு செயற்படுகிறது.

அது 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் இலங்கையில் உருவாக்க முற்படுகின்ற தேர்தல் ஆணைக்குழு போன்றோ, அல்லது அமைக்கப்படாத அந்த ஆணைக்குழுவின் அதிகாரத்துடன் செயற்படும் தேர்தல் ஆணையாளர் போன்றோ பலவீனமானதொரு அமைப்பு அல்ல. சட்டம் ஒன்று இல்லாத நிலையில் சட்டத்தை ஏற்படுத்தும் அதிகாரம் கூட காணப்படுகின்ற, அதி உச்ச சுயாதீனத்தன்மையுடன் கூடிய, இந்திய மக்களின் கூடுதல் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நிறுவனமாக அது திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி அரச அதிகாரிகள், பொலிஸார் கூட அந்த அதிகார நிறுவனத்துக்குக் கட்டுப்பட்டவர்களாவர். அதிகாரத்திலுள்ள அரசோ, எதிர்க்கட்சிகளோ தேர்தல் ஆணைக்குழுவை கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவில் உயர் நீதிமன்றம் அரசியலமைப்பின் மூலம் அல்லது வேறு சட்டதிட்டங்கள் மூலம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை பாதுகாக்கும், மேலும் விருத்தி செய்யும் பாதுகாப்புத் தூதனாகவே அது மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.

தெற்காசியாவில் உயர்ந்த படிப்பறிவு வீதத்துக்கு உரிமை பாராட்டும் எமது இலங்கை தேர்தல் விடயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது.

எந்தவித முன்னேற்றமும் காணப்படாத ஒழுக்கக்கேடான நிலையிலேயே உள்ளது. படுமோசமான அரசியல் கலாசாரத்தைக் கொண்ட நாடாகவே இலங்கை காணப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட எந்தவொரு தேர்தலும் நீதியாக, நியாயமாகநடத்தப்பட்டதாகக்கூறவே முடியாது.

ஒவ்வொரு தேர்தலிலும் அரச அதிகாரம், அரச வன்முறை, வேறு வன்முறைகள், பணபலம் தாராளமாகவே பங்களிப்புச் செய்துள்ளதைக் காணமுடிகிறது. ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்திலிருக்கும்போது தேர்தலை சந்திக்கும்போது அரச அதிகாரத்தையும் அரச வளங்களையும் தாராளமாக பயன்படுத்திக்கொண்டுள்ளன.

அந்தத் தேர்தல்களில் பொலிஸார் சுயாதீனத்தன்மையைக்கடைப்பிடித்ததாகவே கூற முடியாது. எந்தவொரு தேர்தலிலும் நீதியான, நியாயமான தேர்தல் என்ற உத்தரவாதத்தை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையாளரால் முடியவில்லை. அதேசமயம் தேர்தல் முறைகேடுகள், வன்முறைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் கூட தவறியுள்ளதாகவே கூறவேண்டியுள்ளது.

இப்படியே இந்த படுமோசமான அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க எவராலும் எந்தக் காலத்திலும் முடியாமல் போய்விட்டது. கட்சி அரசியல் காரணமாக அப்பாவி பொதுமக்கள் ஏதாவதொரு அரசியல் அணிக்குள் ஈர்க்கப்பட்டு அதனை வெல்ல வைப்பதற்காக எக்காரியத்தையும் செய்யும் நிலைக்குத்தள்ளப் படுகின்றனர்.

ஒழுக்கக் கேடான இந்த அரசியல் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற பொதுவான எண்ணப்பாட்டை நாம் கொண்டிருந்தாலும் கூட அது கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இக்கேள்விக்கு விடை தேட முடியுமா என்பது கூட ஒரு கேள்வியாகவே காணப்படுகின்றது.

இதற்குப் பெயர் தானா ஜனநாயக அரசியல் கலாசாரம்?


Comments