கிழக்கில் புலிகளின் தாக்குதலால் அதிர்ந்துபோயுள்ள படையினர்

கிழக்கில் இருந்து கடந்த வருடம் முற்பகுதியில் விடுதலைப்புலிகள் பின்வாங்கிச் சென்றபோது அதை பெரும் இராணுவ வெற்றியாக கொழும்பில் கொண்டாடிய மகிந்தா அரசு இனிமேல் புலிகளால் மீண்டும் கிழக்கில் கால் வைக்க முடியாது என அடித்துக் கூறியது. இந்த வெற்றியை தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியிலும் சர்வதேச நாடுகளிலும் கடுமையான பிரச்சாரத்தையும் செய்தது.

இப்பிரச்சாரம் தென்னிலங்கை சாதாரண சிங்கள குடிமக்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்கள மேலாண்மையாளர்கள் மற்றும் கடும்போக்காளர்கள் மத்தியிலும் மகிந்தா அரசு பற்றிய நம்பிக்கையைக் கட்டியெழுப்பியது. கிழக்கின் இராணுவ வெற்றி தொடர்பான சிறிலங்கா அரசின் இந்த பிரச்சாரத்தினால் சர்வதேச நாடுகள் சிலவற்றினால் மகிந்த அரசுக்கு நிதி மற்றும் படைப்பல உதவிகள் கிடைத்தன என்பதும் உண்மை. இந்த உதவி கிழக்கு அபிவிருத்திக்கு என நிதி மூலமாகவும் விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்ட படைவலு மூலங்களாகவும் எவ்வாறு வழங்கப்பட்டன அந்நிதி எதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பன பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இப்போதுள்ள விடயம் கடந்த வருடத்தில் சிறிலங்கா அரசு கிழக்குத் தொடர்பாக செய்த பிரச்சாரமும் அதன் இராணுவ வெற்றியும் எவ்வாறு தற்போது பிசுபிசுத்துப்போயின என்பது பற்றியதே. விடுதலைப்புலிகள் தொடர்பாக ஆட்சிக்கு வரும் சிறிலங்கா அரசுகளும் அதன் படைத்தரப்பினரும் எப்போதும் தப்புக்கணக்குகளையே போட்டு வந்துள்ளனர். இத்தப்புக்கணக்கு கிழக்கு விடயத்தில் தற்போது அரசுக்கும் படையினருக்கும் புரியவைக்கும்.

விடுதலைப்புலிகளை கிழக்கில் இருந்து விரட்டியடித்துவிட்டோம். அவர்கள் தற்போது வன்னிக்குள் ஓடிவிட்டார்கள் இனிமேல் கிழக்கில் எந்தவொரு புலி உறுப்பினரும் காலடிவைக்க முடியாது. கிழக்கில் நடத்தியதுபோல் இராணுவ நடவடிக்கையை வன்னியில் ஆரம்பித்து புலிகளை முற்றாக அழிக்கப்போவதாகக் கூறிக்கொண்டு அரசு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மன்னார் களமுனையில் இருந்து இராணுவ நடவடிக்கையைத் தொடக்கியிருந்தது. அதே காலத்தில் மணலாறு மற்றும் முகமாலை முன்னணி நிலைகளில் இருந்தும் வலிந்த படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர். ஆனால் ஒண்டரை வருடத்தைக் கடந்தும் அப்படை நடவடிக்கை உரிய இலக்கை அடையவில்லை என்பதைத் தவிர புலிகளின் ஆழுகைக்குள் இருந்த சில இடங்களில் அகலக்கால் பதித்துள்ளனர்.

புலிகள் எப்போதும் தமது மரபுவழி படை நடவடிக்கையாக இருந்தாலும் சரி கெரில்லாச் சண்டைகளாக இருந்தாலும் சரி எதிரிக்கு சில முன்னேற்றத்தையும் வெற்றியையும் கொடுத்து பின்னர் அதிரடித்தாக்குதல்களைச் செய்து அவர்களை நிலைகுலைய வைத்து அழித்தொழிப்பதுதான் தமது போரியல் அணுகுமுறையாகக் கைக்கொண்டு வருகின்றனர். இது கடந்த காலங்களில் சண்டைக் களங்களில் நடந்திருந்தது. இந்த உத்தியைத்தான் வன்னிக்களங்களில் எதிர்வரும் காலங்களில் புலிகள் பிரயோகிப்பார்கள். இதனால் அரச படைகள் தமது படைக்கட்டுமானங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் ஓட்டமெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வன்னிக் களங்களில் பின்தளத்தை கொண்டிருக்கும் புலிகள் மரபுவழிப்போரை சிறப்பாகச் செய்யும் அதேவேளை கிழக்குப் பகுதியில் கடந்த காலங்களில் கணிசமான நிலப்பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சில அதிரடித் தாக்குதல்களையும் அதிகளவான கெரில்லாச் சண்டைகளையும்தான் செய்து வந்தனர். இதற்குக் காரணம் கிழக்கில் பின்தளத்தை உறுதியாக கொண்டிராததேயாகும். கடந்த 1995 ஆம் ஆண்டில் யாழ் குடாநாட்டில் இருந்து புலிகள் தந்திரோபாயமாக வன்னியை நோக்கி நகர்ந்ததும் யாழ் குடாநாட்டில் பின்தளம் இல்லாததே காரணமாகும். கிழக்கில் இருந்து விடுதலைப்புலிகள் இவ்வாறு பின்வாங்கிச் சென்றதையும் கருணா குழு கிழக்கில் நிலை கொண்டிருப்பதையும் பார்த்து சிறிலங்கா அரசாங்கம் மற்றும் படையினர் மாத்திரமல்ல சில “தமிழர்களும்” இனி கிழக்கில் புலிகள் தலை வைத்துப்படுக்க மாட்டார்கள் என்றே நம்பினர். இதுபோன்றே யாழ் குடாநாட்டில் இருந்து புலிகள் வன்னிக்குச் சென்றபோதும் புலிகள் இனி தலையெடுக்க முடியாது என்ற கருத்தே அன்றைய அரசாங்கத்தின் மத்தியிலும் தென்னிலங்கையிலும் பரவலாக இருந்த நம்பிக்கை.

ஆனால் கிழக்கு வெற்றியை வைத்துக் கொண்டு வன்னியில் அதன் பின்தளத்தை உணராமல் அல்லது புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்ற இறுமாப்பில் அங்கு காலடி வைத்துள்ள படையினர் ஒண்டரை ஆண்டுகாலமாக அங்கு களநிலமையில் குறிப்பிட்டளவு வெற்றியை அடையாமலும் பெருமளவில் படையிழப்பை எதிர்நோக்கியுள்ள படையினருக்கு தற்போது கிழக்கிலும் தலையிடி தொடங்கியுள்ளது. தமது படை நடவடிக்கையின் மூலம் “கிழக்கு வெளித்துவிட்டது” என்று நம்பியிருந்த அரசுக்கும் அதன் படையினருக்கும் மீண்டும் நெஞ்சிடி தொடங்கியுள்ளது. அண்மைக்காலமாக கிழக்கிலும் புலிகள் படையினர் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

கடந்த வருடத்தில் கிழக்கை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக மகிந்த அரசு கூறியதை சிங்கள மக்களும் சிங்கள கடும்போக்காளர்களும் நம்பியும் ஆதரித்தும் வந்தனர். சிங்கள பேரினவாத ஊடகங்கள் கூட இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தன. ஆனால் கிழக்கை வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறிய சில நாட்களிலேயே அம்பாறை மாவட்டத்தில் புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன. இத்தாக்குதல்கள் யால வனவிலங்கு சரணாலயம் தொடக்கம் அம்பாந்தோட்டை வரை நீண்டிருந்தது. யால சரணாலயத்தின் பாதுகாப்புக்கு என அமைந்திருந்த படைமுகாமும் தாக்கியழிக்கப்பட்டது. அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வீதி காவல் சுற்றுக் கடமையில் சென்ற படையினர் மற்றும் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

இத்தாக்குதல்கள் அரசுக்கு கிழக்கை முழுமையாக கைப்பற்றி விட்டதாகக் கூறிய கதைகளுக்கு ஆப்பு வைப்பதாயிற்று. ஐனாதிபதி மகிந்தாவின் மாவட்டத்தின் கிராமங்களுக்குள்ளேயே புலிகள் புகுந்து தாக்குதல் நடத்துவது என்பது பெரும் மானக்கேடாய்ப்போனது. இதை ஆய்வாளர்களும் சில பத்திரிகைகளும் விமர்சனம் செய்தன. ஆனால் புலிகளின் ஒரு சிறு குழு அம்பாறை மாவட்டத்தில் சிக்குண்டு நிற்பதாகவும் அதையும் அழித்துவிடுவோம் என அமைச்சரவையின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல ஊடகங்களுக்கு கூறியிருந்தார். ஆனால் அத்தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இந்நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பலையையும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக செய்த பிரச்சாரத்தையும் முறியடிக்கும் வகையில் மகிந்த அரசு வன்னி மீதான படை நடவடிக்கைச் செய்திகளை படையினருக்கான வெற்றிச் செய்திகளாக வெளியிட்டனர். இதற்கு அரச மற்றும் தமக்கு ஆதரவான ஊடகங்களை அரசு பயன்படுத்தியது. இச்செய்திகளைத்தான் இன்னமும் சிங்கள மக்கள் மாத்திரமின்றி சிங்கள கடும்போக்காளர்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

கிழக்கின் படை நடவடிக்கைக்கு “கருணா குழு” தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. புலிகள் இனிமேல் கிழக்கில் காலடி வைக்க முடியாது என்று அரசு நம்பியதற்கு இராணுவத்திற்கு துணையாக நின்ற இக்குழுவும் காரணம். இது மகிந்த அரசுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது. ஆனால் இந்த நம்பிக்கை அனைத்தையும் தகத்தெறியும் வகையில் இம்மாதம் முதலாம் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுகம்பைக்குடா பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் பாதுகாப்பு வானூர்திகளில் ஒன்று கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் வைத்து விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. இத்தாக்குதல் அரச தரப்பை மாத்திரமின்றி படைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தாக்குதல் பற்றி “விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத” நிலையில் செய்திகள் அரச ஊடகங்களினால் வெளியிடப்பட்டன.

ஆனால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலும் புலிகளின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. அத்துடன் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் புலிகளின் அரசியல் துறையினரும் எதிர்காலத்தில் தாங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தவுள்ளதாக துண்டுப் பிரசுரம் மூலம் மக்களுக்குத் தெரிவித்துள்ளனர். இதுவும் படையினர் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளன. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் காட்டுப்பகுதிகள் சிலவற்றுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்ற கோரிக்கையும் எதிர்காலத்தில் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்ற செய்தியும் கொண்ட அத்துண்டுப்பிரசுரம் வெளியான சில தினங்களிலேயே மட்டகளப்பு மாவட்டத்தின் குடும்பிமலை மற்றும் தரவை உள்ளிட்ட சில பகுதியில் கிளேமோர்கள் வெடித்துள்ளன. இத்தாக்குதல்களினால் படையினர் தமது பலத்தைப் பலப்படுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

கிழக்கில் இருந்து புலிகள் ஒரேயடியாக துரத்தப்பட்டுள்ளார்கள் இனிமேல் காலடி எடுத்து வைக்கமாட்டார்கள் என்ற அரசின் “தம்பட்டம்” தற்போது தவிடுபொடியாகியுள்ளது. மேலே நான் கூறியதுபோன்று புலிகள் தமது போரியல் தந்திரோபாயங்களை களமுனைகளுக்கு ஏற்ப சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதத்தில் பின்வாங்குவதும் பின்னர் முன்னேறுவதும் வழமை. இதைத்தான் கிழக்கிலும் செய்தார்கள். இன்னுமொன்றையும் நாம் பார்க்க வேண்டும். வன்னியில் பெரும் சண்டைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிழக்கிற்கு தமது ஒரிரு அணிகளை புலிகள் நகர்த்தியுள்ளனர். எனவே வன்னியில் வலிந்த பாரிய சண்டைகளை செய்யும் அதேவேளையில் கிழக்கிலும் பரவலான சண்டைகள் நடக்கும். இது கெரில்லாத் தாக்குதல்களாகவே அமையும் இந்த நிலையில் கிழக்கில் படையினருடன் இணைந்து இயங்கும் ஆயுதக்குழு என்னதான் உதவியை படையினருக்கு கொடுத்தாலும் படையினரால் பல இடங்களில் குறிப்பாக கொக்கட்டிச்சோலை, கரடியனாறு, வாகரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து நிலைகொண்டிருக்க முடியாத நிலை தோன்றும். இதனால் பல முகாம்களை மூடிவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால் புலிகள் தாம் முன்பு வைத்திருந்த பல பகுதிகளைத் தமது ஆழுகைக்குள் கொண்டு வருவார்கள்.

இதனால் விடுதலைப்புலிகளின் கை கிழக்கில் மெல்ல மெல்ல ஓங்கும். ஆதனால் படையினர் பல இழப்புகளைச் சந்தித்தே ஆக வேண்டிவரும். எனவே சிறிலங்கா அரசு புலிகள் தொடர்பாக கிழக்கில் போட்ட தப்புக்கணக்குக்கு விரைவில் பதில் கிடைத்தே ஆகும். இதைவிட கிழக்கை கைப்பற்றிய வேளையில் அங்கு பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கப்போவதாக கூறிய அரசு தற்போது கிழக்கின் வெற்றி ஒரு வருட நிறைவடைந்துள்ள போதிலும் இதுவரை எந்தவிதமான அபிவிருத்தியும் நடைபெறவில்லை. மாறாக அரசு தனது நிகழ்சி நிரலுக்கு அமைய இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் மாகாணசபை தேர்தலையும் நடத்தி முடித்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் மகிந்தா அரசுக்கு மாத்திரமே இலாபம். மக்கள் அடைந்த நன்மை ஏதுமில்லை.

-அம்பிகை-


Comments