சுற்றிவளைத்து அடக்கும் தந்திரோபாயத்திற்கு எதிரான பின்வாங்கும் தந்திரோபாயம்

கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கோணமலை துறைமுகத்தின் மீது விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடத்திய தாக்குதலானது பல்வேறு படைத்துறை, அரசியல் பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

அதாவது, சிறிலங்கா அரசும் அதன் படைகளும் விடுதலைப் புலிகள் போரிலே தோற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர்கள் அனைவரையும் அழிக்கப்போவதாகவும் ஆளுக்காள் தென்னிலங்கையிலே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துறைமுகத்திலே வான்புலிகளின் தாக்குதல் நடைபெற்றமையானது விடுதலைப் புலிகளின் படைத்துறை வலிமையினை தென்னிலங்கைக்கும் அனைத்துலகத்திற்கும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகள் ஏதோ 'சேடம் இழுப்பதாகவும் சிறிலங்காப் படையினரை எதிர்ப்பதற்கு திராணி இல்லாமல் இருப்பதாகவும்" தென்னிலங்கை அரசியல்வாதிகள் வாய் சவாடல்கள் விட்டுக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் இவர்கள் அனைவரினதும் முகத்தில் அறைந்தாற்போல இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காலத்திற்குக்காலம் சிங்கள தேசம் விடுதலைப் புலிகளின் அழிவுகாலம் நெருங்கி வருவதாக அறிக்கைகளை விடுவதும் பின்பு விடுதலைப் புலிகள் பாரிய படைநடவடிக்கைகளை மேற்கொண்டு சிறிலங்கா அரசிற்கு பாரிய அழிவுகளையும் இழப்புக்களையும் ஏற்படுத்தும் போது சிங்களத் தலைவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வெளிச்சக்திகளிடம் உதவி கேட்டு ஓடுவதும் வழக்கமாக இடம்பெறும் நிகழ்வாகும்.

தேசியத் தலைவர் அவர்கள் தமது படைத்துறை அறிவாற்றலின் அடிப்படையிலும் நீண்ட காலப்பட்டறிவின் அடிப்படையிலும் நுட்பமான முறையிலே போரியல் மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்து விடுதலைப் போரினை முன்னெடுத்துச்செல்வதாக தெரிவிக்கின்ற பல்வேறு படைத்துறை ஆய்வாளர்கள் சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பல்வேறு அதிர்ச்சிகளையும் வியப்புக்களையும் புலிகளிடம் இருந்து எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கின்றார்கள்.

அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் காலத்திற்குக் காலம் பல்வேறு போரியல் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, விடுதலைப் போராட்டமானது நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கின்றபோது அதனை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றி போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பதை நிரூபித்து வந்திருக்கின்றார்.

உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகளை நாம் சற்று உற்றுநோக்கிப் பார்ப்போமானால் அனைத்து அடக்குமுறையாளர்களும் போராட்டங்களை அழிப்பதற்காக ~சுற்றிவளைத்து அடக்கும்| தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதனை அவதானிக்கலாம்.

எனவே, விடுதலைப் போராட்டங்களின் வெற்றி என்பது அடிப்படையில் இவ்வாறான சுற்றி வளைத்து அடக்கி அழிக்கும் போராட்டத்திற்கு எதிராகப் பெறப்படுகின்ற வெற்றியே ஆகும்.

ஒவ்வொரு சுற்றிவளைத்து அடக்கும் நடவடிக்கைக்கும் எதிரான போராட்டம் வழமையாகப் பெரியவையும் சிறியவையுமான பல சண்டைகளைக் கொண்ட போரியக்கமாகின்றது. இந்தப் போரியக்கத்திலே ஆக்கிரமிப்பாளர்களின் ~சுற்றிவளைத்து அடக்கும் நடவடிக்கையின்| அடிப்படையினை தகர்க்கும் வரை விடுதலைப் போராட்டமானது இடம்பெற்றுக் கொண்டேயிருக்கும். இச்செயற்பாட்டின்போது தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இருவடிவங்களில் போரானது முன்னெடுக்கப்படுகின்றது.

அதாவது, எதிரியானவன் ~சுற்றிவளைத்து அடக்கும்| நடவடிக்கையினை மேற்கொள்ளும் போது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்கும் தரப்பினது தற்காப்பிற்கு எதிராகத் தாக்குதலை உபயோகிக்கின்றான். எதிரிக்கு எதிராக விடுதலைக்காகப் போராடும் தரப்பினர் தற்காப்பு தாக்குதலில் ஈடுபடுகின்றார்கள். இதுவே சுற்றிவளைத்து அடக்கும் நடவடிக்கையை| எதிர்ப்பதற்கான முதற்கட்டம்.

இதன் பின்னர் போராட்டத் தரப்பானது தாக்குதலை மேற்கொள்ளும்போது எதிரி தற்காப்பு நடவடிக்கையினை மேற்கொள்கின்றான். இது ~சுற்றிவளைத்து அடக்கும்| நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலின் இரண்டாவது கட்டமாகும். இவ்வாறு ஒரு ~சுற்றி;வளைத்து அடக்கும்| நடவடிக்கையும் அதற்கு எதிரான நடவடிக்கையும் என நீண்ட காலத்திற்கு ஒன்று மாறி ஒன்று விடுதலைப் போராட்டத்திலே இடம்பெறுவது வழக்கமாகும்.

இவ்வாறு ஒவ்வொரு ~சுற்றி வளைத்து அடக்கும்| நடவடிக்கையோடும் ஒவ்வொரு ~சுற்றிவளைத்து அடக்கும்| நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையோடும், சமர்களின் பரிமாணமானது மேலும் பெரிதாகின்றது. நிலைமை மேலும் சிக்கலடைகின்றது. சண்டைகளானது மேலும் தீவிரமடையும் என்பது ஒரு விதியாகிவிட்டது.

அதாவது, விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டினை தமது பிரதான தளமாக 1990 களில் இருந்து 1996 ஆம் ஆண்டுவரை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சிறிலங்கா அரசானது அங்கு பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டபோது விடுதலைப் புலிகள் தற்காப்பு தாக்குதல்களை நடத்தியவாறு வன்னி பிராந்தியத்திற்கு தமது பின்தளத்தினை மாற்றிவிட்டார்கள்.

அது மட்டுமல்லாது தமது ஆளணிகளையும் படை உபகரணங்களையும் பாதுகாப்பாகத் தம்முடன் கொண்டு சென்றார்கள். இதன்பின்னர் முல்லைத்தீவு படைத்தளத்தினை ~சுற்றிவளைத்து அழிக்கும்| நடவடிக்கை மூலம் முற்றாக கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின்கீழ் விடுதலைப் புலிகள் கொண்டுவந்தார்கள்.

இதன் பின்னர் வன்னி பிராந்தியத்தினை சுற்றிவளைக்கும் நோக்கோடு சிறிலங்காப் படையினர் கிளிநொச்சி நகரினை ஆக்கிரமித்ததுடன் யாழ். குடாநாட்டிற்காக பாதையினைத் திறப்பதற்காக என்று ஜெயசிக்குறு படை நடவடிக்கையையும் மேற்கொண்டார்கள்.

சிறிலங்காப் படையினர் முன்னேறுவதற்கு முதலில் அனுமதித்த விடுதலைப் புலிகள் பின்னர் சிறிலங்காப் படையினர் அகலக்கால் பதித்து தமது சக்திக்கு மீறிய அளவில் நிலப்பரப்புக்களில் நிலைகொண்டபோது கிளிநொச்சி நகரினைக் கைப்பற்றி சிறிலங்கா அரசினது படை நடவடிக்கையின் மூலோபாய நோக்கங்களை சிதறடித்ததுடன் ஓயாத அலைகள்-03 நடவடிக்கையை மேற்கொண்டு சிறிலங்காப் படையினர் ஒன்றரை ஆண்டுகளாக அங்குலம் அங்குலமாகப் பிடித்த இடங்களை விடுதலைப் புலிகள் ஒரு வாரத்திற்குள் மீளக் கைப்பற்றினார்கள்.

அதாவது, சுற்றிவளைத்து அடக்குதல் தந்திரோபாயத்தினை பயன்படுத்தும் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளும்போது பின்வரும் விடயங்களை முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று மாவோ சேதுங் வலியுறுத்துகின்றார். தாக்குதலுக்கான சரியான தருணத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்பதே இவற்றில் மிகவும் முக்கியமானது.

அதாவது, எதிரியின் நிலைமையை சரியாக அறிவது அவசியமானது. அவனது அரசியல், இராணுவ, நிதி நிலைமைகளைப் பற்றியும் அவனது பிரதேசத்தில் மக்களின் அபிப்பிராயம் எந்த நிலையில் உள்ளதென்பதைப் பற்றியும் தகவல் சேகரிக்கப்பட வேண்டும். அத்துடன் எதிரியின் மொத்த பலத்தினை முற்றாக கணக்கில் எடுக்கவும் அவனது கடந்த காலத்தோல்விகளின் அளவை மிகைப்படுத்தாதிருக்கவும் வேண்டும். ஆனால் மறுபுறம், அவனது உள் முரண்பாடுகள், அவனது கடந்தகால தோல்விகளின் பாதிப்பு முதலானவற்றைக் கணக்கில் எடுக்கத் தவறக்கூடாது. அதேபோன்று எமது தரப்பை பொறுத்த வரையில், எமது கடந்த கால வெற்றிகளின் அளவை மிகைப்படுத்தக்கூடாது. அத்துடன் அவற்றின் பாதிப்பினை முற்றுமுழுதாக கணக்கில் எடுக்கவும் தவறக்கூடாது.

~சுற்றிவளைத்து அடக்குதல்| நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியின் அளவு, வலிந்த நடவடிக்கைகளுக்கான தயாரிப்புக் கட்டத்தின் பணிகள் எந்தளவிற்கு நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பதுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். எதிரியை குறைத்து மதிப்பிடுவதன் காரணமாக ஏற்படுகின்ற தயாரிப்பு வேலைகளில் அசமந்தப்போக்கு மற்றும் எதிரியின் தாக்குதல்களைப் பற்றிப் பயங்கொண்டிருப்பது காரணமாக ஏற்படுவதான அச்சம் இரண்டுமே தீங்கான போக்குகளாகும். இரண்டும் உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும். நமக்குத் தேவையானது ஒரு உற்சாகமான, ஆனால் அமைதியான மனோநிலை: தீவிரமான ஆனால் ஒழுங்கான வேலை முறை.

பின்வாங்கும் போர்த்தந்திரோபாயம்

தன்னால் விரைவில் தகர்க்க முடியாத பலம் கூடிய படையின் முன்னேற்றத்தினை எதிர்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட போரிடும் தரப்பானது தனது பலத்தைப் பேணிக்கொள்வதும் எதிரியைத் தோற்கடிக்கத் தருணம் பார்;த்துக் காலத்தைக் கடத்துவதுமான நோக்கத்திற்காக எடுக்கும் ஒரு திட்டமிட்ட போர்த்தந்திரோபாய ரீதியான நடவடிக்கையே பின்வாங்கும் தந்திரோபாயமாகும்.

விடுதலைப் போராட்டம் தொடர்பான சரியான புரிதல்கள் இல்லாதவர்களும், இராணுவ மூலோபாயங்களில் நல்ல பட்டறிவுகளைக் கொண்டிராதவர்களும், எதிரியை உள்ளே நீண்ட தூரத்திற்கு இழுப்பதனால் நாம் பல பிரதேசங்களைக் கைவிடவேண்டியுள்ளது என்பதனால் இதனை தவறு என்று வாதிட்டார்கள் என்று மாவோ தெரிவிக்கின்றார்.

அத்துடன் எல்லா முனைகளிலும் தாக்குவது, கேந்திர நகரங்களைக் கைப்பற்றுவது, இரண்டு கைமுட்டிகளாலும் இரண்டு திசைகளில் ஒரே நேரத்தில் தாக்குவது, எமது பானை சட்டிகள் உடைக்கப்படாமல் பாதுகாப்பது- அதாவது, குறிப்பிட்ட கிராமங்களையும் வீடுகளையும் எதிரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பது போன்ற கள யதார்த்தங்களுக்கு சற்றும் ஒத்துப்போகாத ஆலோசனைகளையும் இவர்கள் மாவோவிடம் முன்வைத்தனர்.

இவற்றிற்கு பதிலளித்துப் பேசிய மாவோ பின்வரும் விடயங்களை முதலில் ஒழுங்குபடுத்திய பின்னரே வலிந்த தாக்குதலுக்கு செஞ்சேனை தயாராக முடியும் என்று தெரிவித்தார்.

1. செஞ்சேனையை மக்கள் தீவிரமாக ஆதரிப்பது

2. தரையமைப்பு போர் நடவடிக்கைகளுக்குச் சாதகமாக இருப்பது

3. செஞ்சேனையின் பிரதான படைகளெல்லாம் ஒருங்கு குவிப்பது

4. எதிரியின் பலவீனமான நிலைகளைக் கண்டுபிடிப்பது

5. எதிரிகளைப்பும் மனச் சலிப்புமுற்ற நிலைக்கு வந்திருப்பது

6. எதிரி தவறுகள் செய்யத் தூண்டப்பட்டிருப்பது

அதாவது, தாக்கும் எதிரி எம்மைவிட மிக அதிகம் எண்ணிக்கையும் பலமும் கொண்டிருந்தால், எதிரி எமது தளப்பிரதேசத்திற்குள் நெடுந்தூரம் ஊடுருவி, அது அவனுக்கு வைத்திருக்கும் கசப்பு முழுவதையும் அனுபவித்த பின் மட்டுமே எம்மால் சக்திகளின் சமன்பாட்டில் ஒரு மாற்றத்தை ஈட்ட முடியும்.

அதாவது, தடித்த வீரர்கள் களைத்து மெலியும் வரைக்கும் மெலிந்த வீரர்கள் களைத்து சாவடையும் வரைக்கும் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும்.

அதாவது, நாம் ஒவ்வொரு தடவையும் ஒரு அடி பின்வாங்க எதிரி தனது கோட்டைகளை ஒரு அடி முன்னே தள்ளுவான். இவ்வாறு அவனை நன்றாக பலவீனப்படுத்திய பின்னர் மேற்கொள்ளும் சரியான வலிந்த தாக்குதலானது முழுப் போரின் போக்கினையுமே மாற்றவல்லது என்று மாவோ தெரிவித்தார்.

சில கிராமங்களின் அல்லது சில பிரதேசங்களின் சட்டி பானைகள் குறுகிய காலத்திற்கு உடைக்கப்படுவதை அனுமதிக்க நீங்கள் மறுத்தீர்களானால், நீங்கள் எல்லா மக்களினதும் சட்டி பானைகள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து உடைக்கப்படுவதை விளைவிப்பீர்கள். நீங்கள் பாதகமான குறுகிய கால அரசியல் பின்னடைவுகளுக்கு அஞ்சுவீர்களானால் அதற்குப் பதிலாக நீங்கள் பாதகமான நீண்டகாலப் பின்னடைவுகள் ஏற்படுவதை விலையாகக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று மாவோ பின்வாங்கும் தந்திரோபாயக் கோட்பாடுகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு எச்சரித்தார்.

அதாவது, சுருங்கக் கூறினால், பின்வாங்கலின் கட்டத்திலேயே நாம் எதிர்த்தாக்குதல் கட்டத்தைக் காணவேண்டும். எதிர்த்தாக்குதல் கட்டத்திலேயே நாம் தாக்குதற் கட்டத்தைக் காணவேண்டும்.

அத்துடன் முதற்சண்டை வெல்லப்பட வேண்டும். முழுப் போரியக்கத்திற்குமான திட்டம் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். அடுத்து வரும் போர்த்தந்திர ரீதியான கட்டமும் கணக்கில் எடுக்கப்படவேண்டும். இவையே நாம் ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடங்கும் போது, அதாவது, முதற்சண்டையை செய்யும் போது ஒருபோதும் மறக்கக்கூடாத மூன்று கோட்பாடுகளாகும்.

-எரிமலை-

வெள்ளிநாதம் (29.08.08)

Comments