இராணுவ மயப்படும் சிறிலங்காவின் அரசியல்

சிறிலங்காவின் அரசியலில் படையினரின் ஆதிக்கம் குறிப்பாக தரைப்படையின் ஆதிக்கம் குறித்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச ஆகிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை உணர்வுடனேயே எப்போதும் இருந்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி சிசில் வைத்தியரட்ண ஒருமுறை கூறியிருக்கிறார்.

பொதுவாக தரைப்படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவில் என்று கூறுவதைவிட மிக மிக அதிகமாகப் பல மடங்காக இவ்விருவரது ஆட்சிக் காலத்தில் அதிகரித்துச் சென்றமை குறித்து இவர்கள் இருவரும் கவலை கொண்டிருந்ததாக சிசில் வைத்தியரட்ண குறிப்பிட்டிருக்கிறார்.

சுமார் 10 ஆயிரம் வரை இருந்த தரைப்படை இவர்களது ஆட்சிக்காலத்தின் முடிவில் சுமார் ஒரு லட்சத்தை எட்டியிருந்தது.

ஆனால் ஒவ்வொரு முறையும் இராணுவத்திற்கு மேலதிக படையணியைச் சேர்ப்பது தொடர்பில் அரசியல் தலைமைத்துவத்துக்கும் இராணுவத் தலைமைத்துவத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறான ஒரு பெருக்கம் இறுதியில் சிறிலங்காவின் அரசியலதிகாரமும் இராணுவத்திடம் சென்றுவிடுமோ என்ற அச்சம் இவர்களுக்கு இருந்ததே காரணமாக இருக்கலாம்.

ஏனெனில் ஆளணியைப் பெருக்குவதால் ஏற்படும் செலவீடு குறித்து - ஏன் யுத்தத்திற்குச் செலவிடப்படும் பாரிய நிதி குறித்து சிறிலங்காவின் தலைவர்கள் எவரும் எப்போதும் கவலை கொண்டதில்லை.

அவர்கள் 'பயங்கரவாதத்தை விரைவில் பூண்டோடு அழித்து" யுத்தத்திற்குச் செலவிடும் பணத்தை அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதாகவே கூறிவந்திருக்கின்றனர்.

எனவே யுத்தத்தில் பெறும் வெற்றியின் விளைவாக தரைப்படைத் தளபதிகளின் புகழ் வளர்ந்து தமது பதவிக்கு எங்கே ஆப்பு வைத்து விடுவார்களோ என்றே அஞ்சி வந்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

இந்த அச்சத்திற்குக் காரணம் ஜே.ஆர், பிரேமதாச ஆட்சிக் காலத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான டென்சில் கொப்பேகடுவவுக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் இருந்தது. இவரின் பிரபல்யம் குறித்து பிரேமதாச அச்சமடைந்திருந்தார் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியானது தனது பலவீன நிலைமையிலிருந்து மீண்டெழ முன்னாள் தளபதிகளையே நம்பியிருப்பது தெரிகின்றது.

முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த சரத் முனசிங்காவை ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கியது. இதில் அவர் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இப்போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியிருந்த ஜானக பெரேராவை மாகாண சபைத் தேர்தலில் களமிறக்கி அவரை வடமத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கியிருக்கின்றது.

இவர் ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் சிங்கள இளைஞர்கள் பலரது படுகொலையுடன் தொடர்புபட்டிருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தவர். பின்னர் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் யாழில் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் காணாமற்போவதற்கு காரணமாக இருந்தவர்.

பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இவர் மீது உண்டு. இவரை இராணுவத் தளபதியாக்குவதில் இவருக்கிருந்த முட்டுக்கட்டையாக ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளராக இருந்தமை காணப்பட்டது.

ஆனால் இவரை அவுஸ்திரேலியத் தூதுவராக்க முயன்றபோது அவுஸ்திரேலியா தயக்கம் காட்டிய போது சந்திரிகாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் தலையிட்டு நியமனத்தை உறுதி செய்தார்.

இவர் தூதரக சேவையிலிருந்து நீங்கி சிறிலங்கா திரும்பி அரசியலில் பிரவேசிக்கத் திட்டமிட்டார். தனது 'இராணுவச் சாதனைகளை" முன்னிலைப்படுத்துவதைத் தவிர அரசியலில் இவருக்கு என்றொரு பாத்திரமும் இருந்ததில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இவரது இந்தச் 'சாதனைகளை" பயன்படுத்திக்கொள்ள முன்வந்தது.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் தோல்வியுற்றால் தனது தலைமைக்கே ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட நிலையில் ரணில் இவரை முதன்மை வேட்பாளராக்கி வெற்றியைத் தமதாக்கிக்கொள்ள முயன்றார்.

அதாவது யுத்தம் ஒன்றையே தமக்குச் சாதகமாக்கி இனவாதத்தை மட்டுமே மூலதனமாக்கி மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ள முன்வந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இராணுவச் சாதனையாளராக வர்ணிக்கப்படும் ஜானக பெரேராவைக் களமிறக்க ரணில் முன்வந்தார்.

எனினும் தேர்தல் முடிவுகளின்படி ஐ.தே.க தோல்வியடைந்தாலும் ஜானக பெரேராவுக்கு கிடைத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையடிப்படையில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பேட்டி பிரேம்லாலை விட ஜானக பெரேராவுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே ஜானக பெரேராவின் அரசியல் பிரவேசம் ரணிலுக்கு வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் இந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் ஜானக பெரேராவுக்கு சிறந்த ஆரம்பமாகவே அமைந்து விட்டதாகக் கூறலாம்.

அதேவேளை அண்மையில் ஒரு ஆங்கில வார இதழ் ரணிலுக்கு மாற்றீடாக ஐ.தே.க தலைவராக வரக்கூடியவர் யார்? அவருக்குரிய சாதக பாதக நிலைகள் என்ன என்பன குறித்து ஆராய்ந்திருந்தது.

அதில் ருக்மன் சேனநாயக்க, சஜித் பிரேமதாச, எஸ்.பி.திசாநாயக்கா ஆகியோருடன் ஜானக பெரேராவும் ஒப்பிடப்பட்டிருக்கிறார். இவருக்கு உள்ள பெரிய சாதகமான அம்சம் இவரது 'இராணுவச் சாதனைகள்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக ஜே.ஆர், பிரேமதாச ஆகியோரின் அச்சம் இப்போது உண்மையாகி வருவதாகவே கொள்ளலாம்.

இது ஒருபுறமிருக்க ஜானக பெரேராவை வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக நியமித்ததன் மூலம் ஐ.தே.க தனது இனவாதத் தோற்றத்தை வெளிப்படுத்தியது. அதேவேளை மாகாண சபைத் தேர்தலில் தாம் பெற்றமை யுத்தத்தை தொடர்வதற்கான சிங்கள மக்களின் அங்கீகாரம் எனச் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

அதேவேளை ஜானக பெரேராவிற்கு அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கியதன் மூலம் ஐ.தே.க. வின் ஆதரவாளர்களும் போருக்கு அங்கீகாரம் வழங்கியதாகவே கருத முடியும்.

எனவே ஐ.தே.க.வின் இனவாத முகம் - சுயரூபம் ஜானக பெரேரா மூலம் வெளிவந்துள்ளதாகவே கொள்ளலாம்.

- வேலவன் -

நன்றி: வெள்ளிநாதம் (29.08.08)

Comments