தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்: பா.நடேசன்

தமிழ் மக்களின் எல்லாப்பலத்தினையும் ஒருங்கிணைத்து எதிரிக்கு ஒரே சக்தியாக தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக்குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

போர் எழுச்சிக்குழுக்களின் கருத்துக்கள் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்துள்ளது. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் காலத்திலும் மக்களின் பலத்தின் ஊடாகத்தான் விடுதலைப் போராட்டம் பலமான அமைப்பாக வளர்ந்து விரிந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முப்பது ஆண்டு காலமாக வல்லரசுகளின் உதவியுடன் இயங்கும் சிறிலங்காப் படைகளுடன் எதிர் நின்று போரிட்டு வந்துள்ளது.

அக்கால கட்டத்தில் எல்லாம் போராட்டத்திற்கு மக்கள் பலமாக கவசமாக இருந்ததால்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகத்தில் பேசப்படும் தேசியப் போராட்டமாக மாறியுள்ளது.

அறவழிப் போராட்டமாக இருந்தாலும் ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் தமிழ் மக்களின் உரிமையாக தமிழீழம் தான் தீர்வு என்று உலகிற்கு சொன்னவர்கள் எமது மக்கள்.

மக்கள் சக்தி ஒரே சக்தியாக இருக்கும் வரையும் எந்த வல்லரசாலும் எந்த வல்லாதிக்க சக்திகளாலும் எந்த விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்கமுடியாது என்பது உலக வரலாறு எமக்கு சொல்லும் பாடமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை பார்க்கமுடியும்.

அந்த வகையில்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எந்த வல்லரசுகள் உதவி செய்தாலும் சிங்கள அரச பயங்கரவாதம் எந்த வடிவில் தமிழீழத்திற்கு வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து வெற்றிகொண்டவர்கள் எமது மக்கள். இது வரலாறு தந்த உண்மை.

யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது விடுதலைப் புலிகள் பலவீனமாகி விட்டார்கள் என நினைத்தனர். அடுத்த கட்டமாக முல்லைத்தீவை வெற்றிகொண்டு மக்கள் விடுதலைப் புலிகளுக்கு துணையாக நிற்கின்றனர் என்று நாம் உலகிற்கு ஒரு செய்தியைச் சொன்னோம்.

ஓயாத அலைகள் ஒன்றின் மூலமும் மக்கள் போராளிகளோடு போராளிகளாக அணிதிரண்டனர்.

ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராகவும் மக்கள் மக்கள் படையாக தென்மராட்சிக்குள்ளும் ஒட்டுசுட்டான் கிளிநொச்சி மாங்குளம் பிரதேசத்திலும் சிங்களப் படைக்கு எதிராக நின்று பல வரலாற்று சாதனைகளைப் படைத்தவர்கள் மக்கள் படையினர்.

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் சிங்களப் படைக்கு வரலாற்று தோல்வியை ஏற்படுத்தியவர்கள் மக்கள் படையினர். இவர்களுக்கு வரலாறு உண்டு.

தமிழீழ விடுதலைப் போராட்டாத்தை மேன்மேலும் வளர்த்தெடுப்பதில் பக்கத்துணையாக இருந்து செயற்பட்டவர்கள் எமது மக்கள் படையினர்தான்.

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மக்களின் ஆதரவு இருக்கும் வரை அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்று குறிப்பிட்டதுபோல் இது நல்ல எடுகோளாக அமையும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மக்களில் இருந்து அந்நியப்படுத்தலாம் என்று நினைத்து அவர்களால் முடியாமல் போனது.

மக்களும் புலிகளும் ஒன்றுதான் என்று உலகத்தில் உள்ள இராஜதந்திரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும். தமிழ் மக்கள் அனைவரும் எல்லாப் பலத்தினையும் ஒருங்கிணைத்து எதிரிக்கு ஒரே சக்தியாக தக்க பதிலடி கொடுக்கமுடியும் என்பதை காட்டி நிற்கின்றது.

மக்கள் அணிதிரண்டு விடுதலையுடன் ஒன்றிணைந்து நிற்கும் வரை எந்தச் சக்தியாலும் எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

சிங்களத்தின் அரச படைகள் பலவீனமான நிலையில் தான் தற்போது அகலக்கால் வைத்துள்ளனர். இதன் எடுத்துக்காட்டாகவே சிறிலங்காப் படையினர் தீவிர படைச்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கள அரசியல்வாதி ஒருவர் "சிங்களப்படை புலிகளின் பொறிக்குள் கால் வைக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார். இது மீளமுடியாத கால்வைப்பு என்று உலகில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். அவர்கள் பலவீனமான நிலையில் அகலக்கால் வைத்து வருகின்றனர். நல்ல பொறிக்குள் வருகின்றனர். இதனை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் மக்கள் படையாக எழுச்சிகொள்ள வேண்டும்.

வீரத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் தமிழர்கள். மக்கள் அனைவருக்கும் ஆயுதம் புதிதல்ல. எதிரியின் எறிகணைகள் புதிதல்ல. வானூர்திகள் புதிதல்ல. மக்கள் ஆயுதங்கள் எல்லாம் கற்றவர்கள். தற்போது மக்கள் படையாக எழுந்து பலவீனமாக அகல கால் பதிக்கும் சிறிலங்காப் படைக்கு வன்னியில் புதைகுழி அமைத்து வல்வளைப்பில் உள்ள மக்களை மீட்கவேண்டும்.

சிறிலங்காப் படையின் வல்வளைப்பில் பாரிய இனச்சுத்திகரிப்பினை சிறிலங்காப் படைகள் மேற்கொண்டிருக்கின்றனர். ஊடகங்கள் மூலம் உலகிற்கு ஒன்றைச் சொல்லிக்கொண்டு இங்கு இனச்சுத்திகரிப்பினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

எமது மக்களை அழித்தொழிப்பதில் சிங்களப் படையும் அரசம் கங்கணம் கட்டி நிற்கின்றன. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் காலம் இதுவாகும். சிங்களப் படையின் கொடூரத்திற்கு முடிவு கட்டவேண்டும் எனில் கடந்த காலத்தை போன்று எமது மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும் என்றார் அவர்



Comments