யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை -பழ. நெடுமாறன்-

இன்று காலை தொடங்கி இந்நேரம் வரையிலும் மிகப் பொறுமையுடன் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் இறுதியாக வாழ்த்தரங்கம் ஒன்று உள்ளது. இங்கே பேசிய அத்தனை நண்பர்களும் வெவ்வெறு வகையான சொற்களால் பேசினாலும் உணர்ச்சி ஒன்றாகத் தான் இருந்தது. உலகப் பெருந் தமிழர் விருதினைப் பெற்றிருக்கக் கூடிய இந்த அறிஞர்கள் இதை விடச் சிறப்பான விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது வேறு - அரசாங்க விருது கிடைத் திருக்கிறது என்பது வேறு - இது மக்களால் அளிக்கப் பட்ட விருது - தமிழர்களால் அளிக்கப்பட்ட விருது. இவர் களைப் பெருமைப்படுத்தியதன் மூலம் நாம் பெருமைப்பட இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

முன்னாலே பேசிய நண்பர்கள் வெவ்வேறு தலைப்பிலே உங்களுக்குப் பல விஷயங்களை மிக அழுத்தமாகப் பதிய வைத்தார்கள். நாம் ஒன்றுபட வேண்டும் - தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதுதான் எல்லோர் பேச்சிலும் ஒலித்தது. இன்றைக்கு தமிழினம் முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஒருகாலத்தில் பாராண்ட இனமாகவும் - ஒருகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளை அடக்கியாண்ட இனமாகவும் - மேற்கே உரோமாபுரி கிழக்கே சீனா வரையிலும் பல நாடுகளுடன் வணிகம் நடத்தி செழுமை அடைந்த இனமாகவும் - நம்முடைய இனம் இருந்தது.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் இப்படிப் பல இலக்கியச் செல்வத்தை நிறையப் பெற்ற ஓர் இனமாக நம் இனம் விளங்கி வந்திருக்கிறது. எல்லாம் பழம் பெருமை. ஆனால் இன்றைக்கு நம் தமிழ் உலக அரங்கில் இடம் பெறத்தக்க நிலையை அடைந்திருக்கிறது. தமிழர்கள் - உலகத்தில் இருக்கக்கூடிய சிறந்த இனங்களில் ஒன்றாக ஆகி இருக்கிறார்கள். உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. கணினித் துறையில் ஆங்கிலத்திற்கு இணையாகத் தமிழ் வளர்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலம் கடந்தால் ஆங்கிலத்தைத் தமிழ் விஞ்சும் என்னும் நிலை வரும்.

தமிழின் மதிப்பு கூடக்கூட அதற்கேற்றபடி தமிழர்களும் உயர வேண்டும். தமிழர்களின் நிலையும் உயரவேண்டும். தமிழும் தமிழர்களும் இணைந்து உயர்ந்தால் தான் நமக்கு வாழ்வு. ஒன்று உயர்ந்து ஒன்று உயரவில்லை என்றால் நமக்கு வாழ்வில்லை. உலகம் முழுவதிலும் தமிழர் எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள். இதற்கு முன் பேசிய நண்பர்கள் உலகின் பிற நாடுகளில் உள்ள தமிழர்கள் பற்றியும் ஈழத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பற்றியும் - சொந்த மண்ணில் வாழ முடியாத அகதிகளாக வாழ்கிற புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் பேசினார்கள்.

இப்படி ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் - நம்முடைய தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர் களால் அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைகளாக உழைப்புச் சுரண்டப்பட்டு அதனால் ஆங்கிலேய வர்க்கம் கொழித்தது - அந்த வர்க்கத்திற்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிலும் ரொம்ப முக்கியமானது என்று சொன்னால் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் நம் தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், அதே போல மொரீசியசு, ரீயூனியன், மற்றும் தென்ஆப்ரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் இப்படி பலவற் றிலும் நம் தமிழர்கள் கப்பல் கப்பலாகக் கொண்டு போகப்பட்டார்கள்.

அதிலும் யார் குறிப்பாக வெள்ளையர் விரித்த வலையில் சிக்கியவர்கள் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த வலையில் சிக்கினார்கள். அக்கறைச் சீமைக்குப் போனால் நாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையைக் காட்டி அவர்கள் ஏமாற்றப்பட்டு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டார்கள். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் சாதி ஒடுக்குமுறைத் தொல்லையிலிருந்து தப்பினால் போதும் என்று ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் வெளியேறத் துணிந்தனர்.

மேற்கண்ட நாடுகளில் எல்லாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் பரவினார்கள். தங்கள் உழைப்பினால் அந்நாடுகளை வளம் கொழிக்கச் செய்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் அதற்கு ஏற்றவாறு வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா என்றால் இல்லை. இன்றைக்கும் அந்த நாடுகளில் அவர்கள் வாழ்விற்காகப் போராட வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறார்கள்.

அந்த தமிழ் மக்கள் 5-6 தலைமுறைகளாக அன்னிய மண்ணில் வாழ நேர்ந்த காரணத்தினால் அந்த மக்கள் தமிழை இழந்து கொண்டிருக்கிறார்கள். தென்ஆப்பிக்காவில் ஏறத்தாழ ஏழரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். சில ஆயிரம் பேருக்குத் தான் தமிழ் தெரியும். ஆங்கிலம் தாய் மொழி ஆகிவிட்டது. மோரிசியஸ் வாழ் தமிழர்கள் பிரஞ்சு, கிரியோலி போன்றவற்றையும் பேசுகிறார்கள். தாய்த் தமிழகத்தின் அரவணைப்பு இல்லாமல் அவர்கள் எல்லாம் அங்கே மொழியையும், பண்பாட்டையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் மொழியை இழந்து இன்னும் தமிழர் என்னும் அடையாளத்தை இழக்க வேண்டிய அந்தக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் தங்கள் மொழியை-பண்பாட்டை- கலை-இசை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். அக்கறையாக இருக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழக்கூடிய ஈழத் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தாலும் கடின உழைப்பின் காரணமாக ஓரளவிற்கு நல்ல வாழ்க்கையைப் பெற்ற பிறகு திருப்தி அடையவில்லை. மாறாக தங்கள் மொழி - தங்கள் பண்பாடு நிச்சயமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் - குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். இன்று அந்த நாடுகளிலே தமிழர்களும் தமிழ்க் குழந்தைகளும் மொழி, பண்பாடு ஆகியவற்றுடன் வாழ்வதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

அதே காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் கதி என்ன?

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து தங்கள் பண்பாட்டை, தங்கள் மொழியைக் காக்கவும் பாதுகாத்துத் தீர வேண்டும் என்றும் அந்தந்த நாடுகளில் போராடுகிறார்கள்.

ஆனால் நம்முடைய தாய்த் தமிழகத்திலிருந்து எந்த அரவணைப்பும் இல்லாததனால் மொழியை இழந்து பண்பாட்டை இழந்து எப்படியோ ஆகிவிட்டார்கள். இந்தப் போக்குகளை நாம் எவ்வளவு விரைவில் களைகிறோமோ அந்த அளவுக்கு உலக அரங்கில் தமிழர்கள் உயர்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதை நாம் செய்தாக வேண்டும்.

இந்த போக்குக்குத் தாய்த் தமிழகத்தின் புறக்கணிப்பு மட்டும் காரணமா?

அது ஒரு காரணம். மற்றொன்று முக்கியமானது. இந்திய அரசு தமிழர்களைப் புறக்கணிக்கிறது.

இந்திய அரசு நம்முடைய வெளி நாடுகளில் வாழ்கிற தமிழ் மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இந்தியாவில் வேறு எந்த தேசிய இனமும் வெளிநாடுகளில் இந்த அளவுக்குப் பெருந் தொகையாக வாழவில்லை. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன், தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது. ஆனால் இதுவரை ஒரு தமிழன் கூட நியமிக்கப்படவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற போது மலேசியாவுக்கான இந்தியத் தூதுவராக டாக்டர் சுப்பராயன் முதன் முதலாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இன்றுவரை எந்த தமிழனுக்கும் அந்தப் பதவியைக் கொடுக்கவில்லை.

மேற்கண்ட நாடுகளில் நாம் பெரும்பான்மையாக வெளிநாடுகளில் வாழ்கிறோம் - பெரும்பான்மையாக இருந்த போதிலும் கூட அவர்களுக்கு என்ன குறை? என்ன தேவை என்று அறிந்து அவற்றைச் செய்து கொடுப்பதற்கு மொழி அறியாத இந்தியத் தூதுவர்களால் முடியவில்லை.

நேர்மாறான காரியங்களைத்தான் செய்கிறார்கள். இந்திய அரசு அதிலே மட்டும் அலட்சியப் போக்குக் காட்டவில்லை. கச்சத் தீவைத் தூக்கி இலங்கைக்குத் தாரை வார்த்தார்கள். அதனால் தமிழக மீனவர்கள் அங்கு செல்ல முடியாமல் அல்லற்படுகிறார்கள்.

ஏறத்தாழ 400 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு நாடும் ஒரு போதும் இப்படிப்பட்ட செயலைச் சகித்துக் கொள்ளாது. பதிலடி கொடுக்கும் - எச்சரிக்கை தரும் - இறந்த மீனவர்களுக்கு இழப்பீடு வாங்கும். தமிழக மீனவர்கள் சிங்கள வல்லரசால் சுடப்பட்டாலும் ஒரு தம்பிடி கூட நட்டஈடு வாங்கப் படவில்லை. இந்திய அரசு வாங்கவில்லை.

அதுமட்டுமல்ல - இலங்கையிலிருந்து ஈழத்தை எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் எந்த ஒரு அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் மண்ணின் பெரும் பகுதியை மீட்டு - முழுமையாக மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்திய அரசு துணை நிற்கிறது.

இராசீவ் காந்தி காலத்தில் இந்தியப் படை அனுப்பப்பட்டது. இப்போது படைக் கலன்களை அனுப்புகிறார்கள். நம் தமிழர்களைக் கொல்வதற்குத் தான் ஆயுதங்கள் என்று தெரிந்தும் கூட தொடர்ந்து அந்த தவறைச் செய்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தமிழர்களை இந்தியர்களாக - இந்தியக் குடிமக்களாக நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆறு கோடி தமிழர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கர்நாடகமும் கேரளமும் வஞ்சிக்கின்றன. தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்லும் துணிவு வருகிறது.

மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய விவசாயிகள் இங்கே வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை. துணிவும் இல்லை. எங்கே போய் முடியுமோ இது?

எந்த அரசையும் நம்பி எந்த அரசியல் கட்சியையும் நம்பி தமிழர்கள் எதையும் நிலைநாட்ட முடியாது என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஆறு கோடி தமிழ் மக்கள் கட்சி, மதம், சாதி இல்லாமல் ஒன்றுபட்டு நம் உரிமைகளை நாமே நிலைநாட்டிக்கொள்வது என்று முடிவு எடுத்தாலொழிய எதுவும் செய்ய முடியாது.

அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தான் இந்த உலகத் தமிழர் பேரமைப்பு தொடர்ந்து பாடுபடுகிறது.

இது ஒன்றும் வேடிக்கைக்கான மாநாடு அல்ல. இவ்வளவு பேரை நாம் திரட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான மாநாடு அல்ல. லாரிகளிலும் பஸ்களிலும் கூட்டம் கூட்டமாகக் கொண்டு சேர்க்கப்பட்ட கூட்டமல்ல இது. இயற்கையான உணர்வு படைத்தவர்கள் அவரவர்களாகச் சொந்தச் செலவிலே ஏதாவது ஒன்றை அடகு வைத்து வந்து இருப்பார்கள் - எனக்குத் தெரியும்.

இந்த உணர்வு என்பது அவ்வளவு எளிதிலே வந்து விடாது. அதைக் கண்டு அச்சமாக இருக்கிறது. எப்படி கூட்டம் கூட்டுகிறார்கள். நாம் ஒரு மாநாடு போட வேண்டுமானால் பல இலட்சம் செலவழித்து மக்களைக் கூட்ட வேண்டி யிருக்கிறது என்று நினைக்கிறார்கள். உணர்வின் அடிப் படையில் நாம் திரட்டுகிறோம். மக்களைத் திரட்டினால் தான் மாற்றம். அதை நாம் செய்ய வேண்டும். உலக மொழியாக நம் மொழி உயர்ந்து இருக்கிற இந்த நேரத்தில் உலகத்தில் உள்ள குறிப்பான இனமாகவும் தமிழன் மாற வேண்டும்.

நாம் பலமாக - ஒற்றுமையாக இருந்தால்தான் உல கத்தில் உள்ள தமிழர்களுக்கு - ஈழத்தில் உள்ள தமிழர் களுக்கும்- மலேசியத் தமிழர்களுக்கும் நம்மால் உதவ முடியும். உலகத்தின் பிற நாடுகளிலும் வாழும் தமிழர் களுக்கு நம்மால் உதவ முடியும். நாம் வலிவு இல்லாமல் போனால் நம்மையும் காத்துக் கொள்ள முடியாது நம்மைச் சார்ந்து இருக்கிற மற்ற தமிழர்களையும் நாம் காப்பாற்ற முடியாது.

1949ஆம் ஆண்டு செஞ்சீனம் பிறந்தது. பர்மா முதல் - பிலிப்பைன்சு வரை உள்ள தென்கிழக்காசிய நாடுகளில் சீனர்கள் பெருந்தொகையாக வாழ்கிறார்கள். மலேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும், சிங்கப்பூர், இந்தோனேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும் சீனர்கள் இருக்கிறார்கள். அப்போது மாசேதுங் சொன்னார்கள். ஆசிய நாடுகளில் வாழக்கூடிய சீனர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சொன்னார். இல்லையேல் செஞ்சீனா சும்மா இருக்காது என்றார். எனவே தான் இன்றளவும் சீனர்கள் என்றால் பயப்படுகிறார்கள். தமிழன் என்றால் அப்படிப்பட்ட நிலை இல்லை. வலிமையான செஞ்சீனம் தான் வெளிநாடுகளில் வாழும் சீனர்களைக் காக்கிறது.

வலிமை தான் நம் இனத்தைக் காக்க முடியும். அது தான் அத்தனை தமிழர்களுக்கும் பாதுகாப்பு. மறந்து விடாதீர்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் தமிழர்கள் வலிமையோடு மாறவேண்டும். இல்லாவிட்டால் அவர் களுக்கு எதுவும் நடக்காது. காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் - நடுவர் குழு தீர்ப்புகள் வந்தால் உடனடியாக கர்நாடகாவிலுள்ள தமிழர்கள் உதைக்கப்படுகிறார்கள். விரட்டி அடிக்கிறார்கள். நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இது எப்படி சரியாக இருக்க முடியும்?

நம்முடைய வலிமையை நாமே உணரவில்லை. நாம் எத்தகைய மக்கள்?

நம் வலிமை என்ன? நம்மை நாமே உணர வேண்டும்.

உணர்ந்தாலொழிய வேறு வழியில்லை. மீண்டும் வலிமையோடு எழுந்து நிற்க முடியும். யாராவது திசைதிருப்ப நினைத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு சகல பிரச்சினைகளைச் சந்திப்பதற்குத் தயாராக வேண்டுமென்று சொன்னால் தானாகவே திருந்தி விடுவார்கள்.. எவனும் வாலாட்டத் துணியமாட்டான்.

தமிழ்நாட்டு மீனவர்கள் 400 பேரை சிங்களப் படை கொல்லும் என்றால் - ஒரு இனம் வாழ்ந்து என்ன? போய் என்ன? நம்முடைய மீனவர்களை நம் கடல் பகுதியிலே வந்து அடிக்கிற துணிவு எப்படி வருகிறது?

இந்திய அரசு தலையிடாது என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது.

அப்படியானால் தில்லியைப் பணிய வைக்க வேண்டுமென்றால் - இப்படியெல்லாம் நடந்தால் தில்லியுடன் மோதுவோம் என்ற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் நடக்காது.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்றைக்கு உலக அரங்கில் பெரிய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் ஓரளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்றன என்பதை என்னால் உணர முடிகிறது. அதை விரைவு படுத்த நம் கிளர்ச்சிகளை விரைவுபடுத்த வேண்டும். போராட வேண்டும். எல்லாம் செய்ய வேண்டும். இலங்கையில் இருந்து இருபது கல் தொலைவில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - அவர்கள் சிறுபான்மை அல்ல. ஆறு கோடி தமிழர்களும் கிளர்ந்து எழுந்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட வேண்டும்.

மேற்கு நாடுகளில் அரசாங்க போக்குகளில் முழுமையான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது மாறும். மாறுவதற்கு அதை விரைவு படுத்த வேண்டுமானால் நாம் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கிளர்ச்சிகளை மேலும் மேலும் பெருக்க வேண்டும்.

அப்படி பெருக்கினால் தான் அந்த மாற்றங்களை விரைவில் கொண்டு வர முடியும். எந்த நாடாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அதன் இனம் கொதித்து எழு வேண்டும். கொதிப்பு இல்லாமல் இருந்தால் என்ன பயன்?

இன்றைக்கு இந்த மாநாட்டிலே எனக்கு முன்னாலே பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராசாவும் சிவாஜிலிங்கமும் என்ன சொன்னார்கள்?

அவர்கள் பேச்சு நம் நெஞ்சத்தை உலுக்க வில்லையா?

இவ்வளவு கொடுமை நடக்கிற பொழுது நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா?

என அவர்கள் கேட்டபோது நெஞ்சத்தை வாள் கொண்டு அறுப்பது போல் அல்லவா இருக்கிறது?

அவர்கள் வேறு யாரிடம் போய் முறையிட முடியும்?

நம்மிடம்தான் முறை யிட முடியும். நம் பதில் என்ன?

நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழ்நாட்டில் எழுச்சி மேலும் அதிகமாக வேண்டும். மேலும் மேலும் அதிகமாக வேண்டும். அச்சத்தைப் பயன்படுத்தி இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் நம்மை மிரட்டி வருகிறார்கள். அச்சமே இல்லை என்பதை நாம் காட்டினால் இந்த ஆட்சி என்பது எங்கே போகும் என்றே தெரியாது. மிரட்டுகிறவர்கள் எங்கே போவார்கள் என்று தெரியாது. தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் இவற்றால் புரட்சியின் முனையை மழுங்க வைக்க முடியாது. யாரையும் எதுவும் செய்து விட முடியாது. நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.

ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடத்தியது. கருத்து கணிப்பு என்று வந்து பார்த்த போது நகரம்-கிராமம் இல்லாமல் மக்கள் எல்லோரும் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்றுதான் கருத்துக் கணிப்பு நிரூபித்தது.

மக்கள் எல்லாம் ஆதரவாக இருக்கக் கூடிய அந்த உணர்வு என்பது நீறு பூத்த நெருப்பு போல இருக்கும். ஊதினால் பற்றிக் கொள்ளும். உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக் கிறார்கள். ஆனந்த விகடனைப் பாராட்டுகிறேன். மக்களை ரொம்ப நாட்கள் யாரும் ஏமாற்ற முடியாது.

புலிகள் புலிகள் என்று கூறிக்கொண்டு திடீர் வேட்டை நடக்கிறது.

பொய்யான தகவல்களைத் தருகிறார்கள்.

தில்லியில் உள்ள எசமானர்கள் இவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள். மக்கள் துணிந்து எழுந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. யாரும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை யில்லை.

என்ன பெரிய வலிமையான அரசாங்கம் இந்த அரசாங்கம்? பதினான்காம் லூயி, ஜார் மன்னர்கள் என்ன ஆனார்கள்?

மிரட்டுகிற வேலை வேண்டாம். ஏனென்றால் மிரட்டுவதற்குக் கூட துணிவு கிடையாது. எங்களுக்குத் தெரியும். தமிழ்ச் செல்வன் கொலை செய்யப்பட்டான் என்றால் தமிழக மக்கள் இரங்கல் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினையைத் திசை திருப்பு வதற்கு கவிதை எழுதுகிறார்கள். பிரச்சினையைத் திசை திருப்புவதை ரொம்ப நாளைக்குச் செய்ய முடியாது. திசை திருப்புவதால் தடம் புரண்டு விடுவார்கள். அவர்களுக்கு நெஞ்சில் உரம் இல்லை.

மக்களை ஒன்று திரட்டவும் மகத்தான மாற்றம் கொண்டு வரவும் ஈழத் தமிழர்களுக்கு உதவவும் உலகத் தமிழர்களால் முடியும் என்று கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.


மேற்கு நாடுகளில் உருவாகிவரும் மாற்றம்

அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு நான் சென்றிருந்தபோது, பிரிட்டனின் தலைநகரமான இலண்டனில் போய் இறங்கியபோது நான்கு பெரியபோலிஸ் அதிகாரிகள் என்னை எதிர்கொண்டு அழைத்துக் கொண்டுபோனார்கள். ஏதோ விசாரிக்கவேண்டும் என்று கூறினார்கள். ஒரு அறையில் உட்காரவைத்து மாறி மாறி கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

எனது வருகை அவர்களுக்கு பிடிக்காமலிருந்தால் அடுத்த விமானத்திலேயே என்னைத் திருப்பி அனுப்பியிருக்கவேண்டும். இல்லையென்றால் சென்னையில் நான் புறப்படும்போதே விசா அளித்திருக்க மறுத்திருக்க வேண்டும். இவற்றில் எதாவது ஒன்றைச் செய்யாமல் இலண்டனில் என்னை உட்காரவைத்துக்கொண்டு முழுக்க முழுக்க அரசியல் தொடர்பான கேள்விகளையே கேட்டார்கள்.

"நீங்கள் இந்தியாவைச் சேர்ந்த தமிழர், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இவ்வளவு ஈடுபாடு காட்டுவது ஏன்? என்பது அவர்களின் முதலாவது கேள்வி. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் "இரண்டு உலகப்போர்கள் நடைபெற்றபோது செர்மனி நாடு பிரிட்டன் மீது மட்டுமே போர் தொடுத்தது. ஆனால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மீது செர்மனி போர் தொடுக்கவில்லை. அப்படியிருந்தும் மேற்கண்ட நான்கு நாடுகளும் பிரிட்டனுக்கு ஆதரவாகப் போரில் இறங்கின. இது ஏன்? என எதிர் கேள்வி கேட்டேன்.

"எங்களுக்குள் இயற்கையாக இருக்கக்கூடிய உறவும் பாசமும் ஆகும்." என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

"அதே உறவும் பாசமும் எங்களுக்கும் ஈழத்தமிழர் களுக்கும் இடையே உள்ளது" என நான் பதில் கூறினேன்.

"இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடாதா? இவ்வளவு பேர் சாகவேண்டுமா? என அடுத்த கேள்வியைக் கேட்டார்கள்".

"இலங்கையில் இன்று இரத்த வெள்ளம் பாய்ந்தோடுவதற்கு பிரிட்டன் தானே பொறுப்பு" என்று நான் பதில் கூறியபோது. ஒரு கணம் திகைத்தார்கள். நான் எனது பேச்சைத் தொடர்ந்தேன்.

"இலங்கையை நீங்கள் கைப்பற்றுவதற்கு முன்னாள் தமிழர்களுக்கு என்று தனி அரசு இருந்தது. சிங்களர்களுக்கு என்று தனி அரசு இருந்தது. இருதரப்பினரையும் அடக்கி இலங்கையை நீங்கள் ஆண்டீர்கள்.

சரி, நீங்கள் வெளியேறுவது என முடிவு செய்தபோது தமிழர்களுக்கு உரிய நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் இந்தப் போரே வந்திருக்காதே" என்று நான் கூறினேன்.

"அது எங்கள் வேலையல்ல" என வேகமாகப் பதில் கூறினார்கள்.

"அப்படியானால் இந்தியாவிலிருந்து வெளியேறும் போது முஸ்லிம்களுக்கு என்று பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்துவிட்டுதானே வெளியேறினீர்கள்.

அதுமட்டும் உங்கள் வேலையா?" என்று திருப்பிக்கேட்டபோது. ஒருகணம் திகைத்தவர்கள் மறுகணம் சிரித்துக் கொண்டார்கள்.

"சமாதானத் தீர்வு எதையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா?" என்று கேட்டார்கள்.
"அவர் மக்களுக்கு நல்லது என்று தோன்றினால் ஏற்றுக்கொள்வார் இல்லை என்றால் மறுத்துவிடுவார்" என்று நான் கூறினேன்.

"நீங்கள் ஏன் பிரபாகரனுக்கு அறிவுரை வழங்கக்கூடாது?" என்று கேட்டார்கள்.

"அது எங்கள் வேலையல்ல அவர்கள் நாட்டுக்கு எது நல்லதோ அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாகத் துணை நிற்போம்" என்று நான் கூறினேன்.

"இல்லை. இல்லை பிரபாகரன் உங்கள் இல்லத்திலேயே 7 மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார். நீங்கள் சொல்லுவதற்கு அவர் செவி சாய்ப்பார்" என்று கூறினார்கள்.

நம்மைப் பற்றி எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டுதான் பேசுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

ஆனாலும் இறுதி முடிவை பிரபாகரன்தான் எடுக்க முடியும் வேறு யாரும் எடுக்கமுடியாது என்பதை அவர்களுக்கு விளக்கிக் கூறினேன்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த உரையாடலின் விளைவாக ஒரு உண்மை எனக்குப் புரிந்தது.

மேற்கு நாடுகள் இப்பிரச்சினையில் விடுதலைப்புலிகளை ஒதுக்கிவைத்துவிட முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே தங்களின் தீர்வுத் திட்டத்திற்கு அவரின் ஒத்துழைப்பு தேவை என்பதை மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்தது.

- பழ. நெடுமாறன்-


Comments