வன்னியில் மரங்களின் கீழிருப்பவர்கள் சாறெடுத்த சக்கைகள் அல்ல

சிங்களப் பேரினவாதிகள் எப்படியாவது தமிழரை காலில் மிதித்து கும்மாளம் போடுவதற்கு இறுதி வெற்றி கிடைத்து விடவேண்டும் என கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். அந்த மாதிரியான எண்ணத்துடன் நெடுங்காலமாக ஈழத்தமிழரை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்கள்... தொடர்ந்தும் அதனையே செய்கின்றார்கள்.

இன்று வன்னிப் பெருநிலப்பரப்பைச் சூழவும் தாக்குதல்கள், படை நடவடிக்கை ஈழத்தமிழினத்தின் அழிப்பின் உச்சக்கட்டம் போன்றே திட்டமிடப்பட்டுள்ளது. அப்படியான திட்டவரைபின் படியே வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால்... ஆடு நனைகிறதே என ஓநாய்கள் அழுவது போல், என்று சொல்வார்களே .. அதேபோல்தான் சிங்களப் பேரினவாதிகள் பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்பதற்கான போரைச் செய்வதாக உலகப் பரப்பில் பரப்புரை செய்து வருகின்றார்கள்.

இதே போன்ற தலைப்பிடுகை முன்னரும் சிங்களப் பேரினவாதிகளின் உள்நோக்கம் வஞ்சகம் பற்றி புரிந்து கொள்வார்கள். இன்று வன்னிப் பெருநிலப்பரப்பைச் சூழவும் பெரும் போரைத்தொடுத்திருக்கும் சிறீலங்காப் படைகள் பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்கிறோம் என்று கூறுவது உண்மையானால் படைகள் நகர்ந்து செல்லும்போது மக்கள் படையினரின் ஆளுகைக்குள் அல்லவா வந்திருக்க வேண்டும். ஏன் விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இடம் பெயர்ந்து செல்லுகிறார்கள். தமிழரை பாதுகாப்பதற்காக தமது உயிரைக் கொடுத்துப் போராடுகின்றவர்களிடம் தான் மக்கள் அடைக்கலம் தேடுகின்றார்கள்.

இதன் மூலமாகச் சொல்லபடும் அரசியல் ரீதியிலான செய்தி, எங்களை தனித்துவமாக வாழவிடுங்கள் என்பது தான்.

இந்த மாதிரியான கருத்தைச் சொல்கின்ற போது சிங்களப் பேரினவாதிகளி்ன் எலும்புத்துண்டுகளிற்கு நன்றிக்கடன் செய்பவர்கள் கூறுகின்றார்கள் அப்படியென்றால் சிறீலங்காப்படைகளின் ஆளூகைக்குள் வாழும் மக்கள் ஏன் விடுதலைபுலிகளின் ஆளுகைக்குள் செல்லவில்லை? இதுபோன்ற கருத்தை சொல்லும்போது மதில்மேல் பூனை போன்ற நிலையில் உள்ளவர்களும் மனம் பேதலிப்பிற்கு உள்ளாகி விடுகின்றனர்.

விடுதலைப்போராட்டம் வலிகளை தாங்கித்தான் ஆகவேண்டும் என்பது தெரியாத விடயமல்ல. சிறிலங்காப் படையினரின் ஆளுகைக்குள் சிக்கித்தவிப்பவர்களும் ஒருவிதமான போராட்டத்தைத்தான் செய்கின்றனர். சொந்த வாழ்விடங்களை விட்டுச் சென்றுவிட்டால் அது எதிரிக்கு சாதகமாகிவிடும். எதுவரினும் எங்கள் வாழ்விடங்களை விட்டகலோம் என மனவுறுதியுடன் வாழ்கின்றவர்களும் போராடுகின்றார்கள். சிறிலங்காப்படையினரின் பிடிக்குள் இரவில் நாய்கள் குரைத்தாலோ, ஊரடங்கிய நள்ளிரவு வேளையில் வாகனதச் சத்தம் கேட்டாலோ மனம் பதறியபடி பொழுதைக் கழித்து பறிகொடுத்தபின்னரும் சொந்ந மண்ணிலேயே வாழ்கிறார்கள். அந்த மனவுறுதியும் எதிரியை எதிர்கொள்ளக்கூடியது தான். அரசியல் அரசியல் தெளிவற்ற சிலர் தான் வாய்க்கு வந்தபடி பேசுகின்றார்கள்.

விடுதலைப் போராட்டம் பற்றிய தெளிவுடைய மக்கள் நிலமைகளை சரிவரப்புரிந்து கொள்கிறார்கள் யாழ்பாண இடப்பெயர்வு தமிழரின் அரசியல் உண்மையை உலகிற்கு சொன்னது என்று கூறினால்.. இப்பொழுது அந்த மக்கள் யாழ்ப்பாணத்திற்குள் தானே அதுவும் சிறிலங்காப்படையினரின் ஆளுகைக்குள் வாழ்கிறார்களே என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். முப்படைத் தளபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்த போது 1995 ம் ஆண்டு யாழ்பாணத்தை பாரிய படை நகர்வு மூலம் கையகப்படுத்திய போது ஏறக்குறைய ஐந்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். இந்த பாரிய படை நடவடிக்கையால் பாரிய இடப்பெயர்வு இடம்பெற்றது. இந்த இடப்பெயர்வு தான் மக்கள் ஒருமித்து ஈழத்தமிழருக்கு என்ன வேண்டுமென்று உரத்து சொன்ன இடப்பெயர்வு என்று சொன்னாலும் மிகையாகாது.

இந்த மக்கள் மீண்டும் ஏன் யாழ்பாணத்திற்கு போனார்கள்? அந்த மக்களிற்கு தெரியும் சிறிலங்காப்படையினர் என்ன செய்வார்கள் என்று. ஆனாலும் போனார்கள். வவுனியாவூடாக திருகோணமலை சென்று அங்கிருந்து கப்பலேறி யாழ்பாணத்திற்குள் கால் பதித்தார்கள். அந்த மக்களின் துணிவு தான் போராட்டத்தின் வலு. அதிருக்கும் வரை யாரும் தமிழீழ விடுதலை கிடைப்பதனை தடுத்து விட முடியாது.

இது தான் ஈழதமிழரின் நிலமை. இதுதான் அவர்களின் போராட்டத்தின் நுட்பம், என்று விடயமறிந்த அறிவுடையவர்கள் கூறிக்கொள்கிறார்கள். யாழ்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்தது அரசியல் ரீதியாக ஈழத்தமிழரின் நிலமையை உலகிற்கு சொன்னது தான். மீண்டும் யாழ்பாணத்திற்கு போனதும் அதேபோல்தான். இடம் பெயரும்போதும் உயிரைக் கொடுத்தார்கள் மீண்டும் யாழ்பாணத்திற்கு போயும் உயிரைக் கொடுத்தார்கள். யாழ் குடாநாடே தனியொரு பெரும் படைத்தளமாவதை தடுத்தாற் கொண்டவர்கள் இன்றும் விடிவை நோக்கி போராடிக்கொண்டு தானுள்ளனர். யாழ்ப்பாணத்தை தனியே குறிப்பிட்டுச் சொல்வது பற்றி யாராவது தவறாக எண்ணி விடாதீர்கள். சுட்டிக்காட்டுவதற்காக அந்த இடப்பெயர்வை நினைவு படுத்தினேன் அவ்வளவு தான்.

மட்டக்களப்பு வாகரையில் நேற்று பிறந்த குழந்தைக்கு பாலூட்ட தாய்முலை சுரக்க தாயிடம் வலுவில்லை. மல்லியை அவித்து அந்த நீரைப் பருக்கினாள் அந்தத் தாய். மக்கள் வயிற்றுப்பசியை போக்க வழியின்றி அது நாள் தனியே பருப்பை அவித்து உண்டதுடன் மருத்துவமனையில் வைத்திய வசதியின்றி தவித்தனர். கொடுமை தொடர்ந்தது. சிங்களப் பேரினவாதிகள் இரக்கமின்றி குண்டுமாரி பொழிந்தனர். சிங்களப் பேரினவாதிகளின் பிடிக்குள், சிறிலங்காப்படையினரின் துப்பாக்கி முனைகளிற்கு முன் அந்த மக்கள் வலிந்து இழுக்கபட்ட பின்னர் இடம் பெயர்ந்த மக்களிற்கான முகாமொன்றில் வாழும் பெண்மணியொருவர், "நாம் சிறிலங்காவின் பிரஜைகள் அல்ல", என்று கூறினார். இது போன்று மக்களின் உட்கிடக்கைகளின் வெளிப்பாடுதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூண்டுகோல்.

இது போன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களிடம் ஒவ்வொரு கதை உள்ளது. இன்று வன்னிப்பெருநிலப்பரப்பில் நடப்பதென்ன? சிங்களப் பேரினவாதிகள் அறிவியல் ரீதியான நடைமுறைச் சாத்தியமற்ற அதீத நம்பிக்கையுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கட்டிவிடும் நாள் நெருங்கி விட்டதாக அறிக்கை விடுகின்றார்கள். வன்னிப்பெருநிலப்பரப்பின் சில இடங்களில் இருந்து மக்களை வெளியேறி தவிக்கின்றனர். அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல் பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்பதற்காக போர் புரிவதாக கூறுகின்றார்கள்.

எதிரி எப்படிக் கூறுகின்றான்? இறுதிப்போர் என்றுதானே. நாங்களும் இறுதிப்போர் என்றுதான் கூறுகின்றோம். ஆனால் என்னைப் பொறுத்த வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிப்போரை இன்னும் செய்யவில்லை... தொடங்கவில்லை... என உறுதியாகச் சொல்லுவேன்.

விடயமறியாச் சிங்களப் பேரினவாதிகள் அவர்களின் படையை ஏவி விட்டபடியே இருக்கின்றார்கள்.... இப்படைகளோ நெடுங்காலமாய் துன்பப்பட்ட மக்களை மீண்டும் வாட்டி வதைக்கும் பணிகளில் தீவிரமாகச் செயற்படுகின்றன. போரிற்குள்ளேயே நெடுங்காலமாக வாழும் மக்கள், வான்குண்டு வீச்சு, நீண்ட தூர எறிகணை வீச்சு, பல்குழல் எறிகணை வீச்சு, ஆழ ஊடுருவும் படையின் தாக்குதல், பொருளாதார தடைகள், மட்டுப்படுத்தல்கள் என ஏராளம் வதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதிகளோ செய்யக்கூடிய பயங்கரவாத செயல் அனைத்தையும் செய்து கொண்டு தமிழ் மக்களை பாதுகாக்க தம்மையே தந்து களத்தில் நிற்பவர்களைப் பயங்கரவாதிகள் எனச் சொல்கின்றனர்.

மக்களை துன்பக்கடலில் குளிக்க வைத்து அரசியல் நடத்தும் சிங்களப் பேரினவாதிகள் சிறீலங்காவில் மகிழ்ச்சிக் கடலில் குளிக்கலாம்.... ஆனால் .... நெடுங்காலமாய் வலி தாங்கிப் போராடி வரும் தமிழினத்தை புரிந்து கொண்டு உலகம் ஏற்க்க் கூடிய நிலவரத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்படுத்துவார்கள். அதற்கான காத்திருப்புத் தான் இன்றைய காலம்.

இனிவரும் காலம் மழைகாலம். வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் பாதிப்புகளைக் காணவேண்டிவரும். அதனை முன்கூட்டியே உணர்ந்து தான் புலம் பெயர்ந்தவர்களிடம் உதவி கோரப்படுகிறது. புலம் பெயர்ந்த அன்பான உறவுகளே உங்கள் உறவுகள் எப்படித் துன்பப்படுகின்றார்கள் என்பது பற்றி மனக்கண் கொண்டு வாருங்கள். ஒருவர் துன்பப்படும்போது தான் உதவி தேவை. ஆகவே.. துன்பம் நிறைந்த காலத்தை சிங்களப் பேரினவாதிகள் வலிந்து திணித்துள்ள இந்தக் காலநேரத்தை உணர்ந்து புலம் பெயர்ந்தவர்கள் உறவுகளின் வலி போக்க வருடலாம்.(இந்த வரிகளை எழுதும் போது என் கண்கள் பனித்து தொண்டை அடைத்தது) வன்னிப்பெருநிலப்பரப்பில் மரங்களின் கீழ் எம் உறவுகள் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வார்களோ? புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நிச்சயமாக புலம் பெயர்ந்துள்ள அனைத்து ஈழத்தமிழ் உறவுகளிற்கும் உண்டு.

வெற்றிச் செய்தி எம் செவிகளை எட்டவில்லையென சலித்து விடாதீர்கள். வெற்றிச்செய்தி கிட்ட நாம் செய்ததது போதுமானாதா? என்று எங்களை நாங்களே கேட்டுக் கொள்வோம்.

இன்று சிறிலங்காப் படைகள் வன்னிப்பெருநிலப்பரப்பை சூழவும் தொடுத்துள்ள போர் சாதாரணமான விடயமல்ல. சிறீலங்கா தமிழீழம் மீது மூர்க்கத்தனமாகத் தொடுத்துள்ள போராகும். இதுவொரு சிறு விடயம் கிடையாது. இரு நாடுகளுக்கிடையிலான போர் போன்றது. தமிழினத்தின் மீது செய்வதையெல்லாம் செய்து விட்டு தமிழரையே பயங்கரவாதிகள் எனச் சொல்கின்ற பயங்கரமான போரை சிறிலங்கா செய்து கொண்டுள்ளது. சிங்களப் பேரினவாதிகள் இவ்வளவு பயங்கரமாக தமிழின அழிவைச் செய்து கொண்டு இன்று அவர்களின் கொடூரமான நடவடிக்கைகளில் இருந்து தம்மைத் தாமே பாதுகாக்க தமிழர் படை தயாராக இருக்கின்ற களச்சூழ்நிலையில்... உலகத்திலேயே மிகவும் அறிவுகெட்ட சமூகம் தமிழ் சமூகம் என்பது போல சிங்களப்பேரினவாதிகள் அறிக்கைகள் விடுகின்றனர். இதில் மிகவும் நகைப்புக்கிடமானது தான் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் மக்களை மீட்பதாக சொல்வது. வன்னிப் பெருநிலப்பரப்பில் சிங்களப் பேரினவாதிகளின் படைகள் பயங்கரவாதிகளைத் தேடிப்போய் இன்று வன்னியில் மரநிழல்களிற்க்கு கீழே கூரை விரிப்புகளால் அமைக்கபட்ட சிறு கூடாரங்களிற்குள் இடம் பெயர்ந்து வாழும் மக்களை பயங்கரவாதிகளாக்கி விடுவதற்கு வழிவகுக்கின்றார்கள். எனவே பயங்கரவாதிகளாக சித்தரிக்கபடுவர்கள் ஏன் பயங்கரவாதியாகினார்கள் என சிந்திக்கத் தவறுவதேன்?

வன்னிப்பெருநிலப்பரப்பில் சிங்கள பேரினவாதிகள் இடம்பெயரச்செய்த மக்களுள் சிறுவர்களும் அடங்குவர். இறார் உரிமை பற்றி வாய்கிழிய பேசுகின்றவர்களே இந்தக்குழந்தைகளின் நிலமை பற்றி என்ன கருதுகின்றீர்கள்? இவர்களின் விபரம் தெரிந்தவர்கள் தங்களின் நிலமைக்கு காரணமானவர்கள் மீது தமதி எதிர்ப்பை காட்ட துணிவது பயங்கரவாதம் என்றால் இவர்களை இப்படியான நிலமைக்கை தள்ளி விட்டவர்கள் செய்த வேலைகளிற்கு என்ன பெயர்?

இன்று அவதியுற்ற ஆதரவு தேடும் ஈழத்தமிழ் சமூகம் தலைநிமிர்விற்கான வலிகளை தாங்கித்தான் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றது தமிழரின் நெடுக்கால தொடர் போராட்டம் தோற்றுப் போகக் கூடியவொன்றல்ல. வன்னி மரங்களின் கீழிருந்து போராட்டம் உச்சம் கொள்ளுமே தவிர சிங்களப் பேரினவாதிகளின் கனவை நனவாக்கி விடுமளவிற்கு சாறெடுத்த சக்கையாகிவிடப்போவதில்லை


- மதி -



Comments