சிலு சிலுப்பு பணியாரம் ஆகிவிடாது !சிறுமதியோர் வீராப்பும் வெற்றி தராது

வீடும் நாடும் இழந்து கண்ணீரும் செந்நீரும் சிந்தி உணர்வுகளையும் இன்பங்களையும் கொன்று , உயிர்களை விதைத்து வீரத்தைப் பயிரிட்டு விடுதலையை அறுவடை செய்ய வேண்டிய இனமாக நம் இனம் உலகில் தனித்துப் போராடுகிறது. இந்த உண்மையை நாமும் உணர்ந்து பிற உலகினர்க்கும் உணர்த்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

எமது பெரும் அறிவுப் போரியல் பிரச்சாரப் பெட்டகமாகத் திகழ்ந்த பாலா அண்ணாவைக் காலன் பறித்தான். அதனால் புலத்தில் எம் கலங்கரை விளக்கம் மறைந்தது. சிரிப்புத் தூதனான பிரி கேடியர் தமிழ்ச் செல்வனை கயவர் கொன்றனர். இதனால் பிற நாடுகளுடன் உருவாக்கப் பட்ட அரிய ராஜரீகத் தொடர்புகளும் துண்டிக்கப் பட்ட நிலையில் புலத்தில் தவிக்கிறோம்.
இது போன்ற சிக்கல் நிறைந்த சூழலில் உலக வரலாற்றுச் சாதனையாளர்கள் எப்படி நடந்தனர் என்பதை அறிந்து மனம் தளராத உறுதியுடன் அடுத்த கட்டத்தை நகர்த்துவதுதான் அவசியமான தேவையாகும். 2ம் உலகப் போரின் போது ஹிட்லர் போர்க் களங்களில் பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கையை விட அதிக அளவில் தனது வெட்டிப் பேச்சால் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தான் ஹிட்லரின் பரப்புரைத் தளபதியான கோயபெல்ஸ் என்பவன்.

அவனுடைய புளுகு அவனை வரலாற்றுப் பொய்யன் என்ற பெருமையைக் கொடுத்து விட்டது. ஹிட்லரை உலகம் மறந்தாலும் கோயபல்ஸ் மறக்கப் படமாட்டான் என்பதற்கு அண்மையில் ஜோஜியாவின் தலைவர் சக்கஸ்விலி கூறிய கூற்றுக் குறித்துக் கருத்து வெளியிட்ட ரஷ்ஷியத் தலைவர் டிமிற்றி மெட்டெவொவ் அது ஒரு கோயபல்ஸ் பொய் என வருணித்தார்.

அப்படியான புகழ் மிக்க பொய்யனை மிஞ்சும் வகையில் இலங்கை அரசின் பாதுகாப்பு ஊடக மையப் பேச்சாளர் உதய நாணயக்காரவும் ராஜபக்ஷ சகோதரர்களும் திகழுகின்றனர். இவர்கள் தினமும் அவிட்டு விடும் பொய் புளுகு மூட்டைகளுக்கோ ஒரு அளவு கிடையாது. அவை பொய்கள் என்பதை உண்மை நிகழ்வுகள் பல முறை நிரூபித்தும் உள்ளன. அதனால் அவற்றை சர்வதேச ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்தாலும் அரச கொள்கை வகுப்பாளர் அவற்றைக் கருத்தில் எடுப்பதே இல்லை. ஆனால் தமிழர் தரப்பு வாதங்களுக்கு எதிர் வாதமாகச் சிலர் பயன் படுத்துவது உண்டு. அதனால் பொய்கள் உண்மைகள் ஆகிவிட்டன என்பது அல்ல உண்மை நிலை.

இலங்கை அரசின் புளுகு மூட்டைகள் இரண்டு வகையில் அதற்குப் பயன் தருகிறது. முதலாவதாகக் கொள்ள வேண்டியது சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவது.

இத்தனை பொய்களைக் கூறியும் ஆயுதக் குழுக்களின் வன் முறைகளின்றி அதனால் கிழக்கில் போதிய மக்கள் ஆதரவைப் பெற முடிய வில்லை என்பது அப்பட்டமான உண்மை.

எனவேதான் மேலும் திஸ்ஸநாயகம் போன்ற ஊடகவாளரை நீதிக்குப் புறம்மபாகத் தடுத்துவைத்தும் , கொலை மிரட்டலகளாலும் சிலரைக் கொன்றும் காணாமல் போக்கடித்தும் அரசு தனது ஜனநாயக ஆட்சியையும் போரையும் நடத்துகிறது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மையப் படுத்தி மகிந்தர் ஒவ்வொரு மாகாண சபையாகத் தேர்தல் நடத்தி தனது அரசியல் பலத்தை உறுதிப் படுத்த நினைக்கிறார். எனவே தொடர்ந்தும் வாக்கு வேட்டைக்காக தமிழின அழிப்புப் போரை நடத்துவதே அவரது செயற் திட்டமாக இருக்கப் போகிறது.

இருந்தும் நாட்டின் வளங்களையும் சொத்துக் களையும் பிற நாடுகளுக்கு விற்று வரும் பணத்தில் போரையும் தேர்தலையும் நடத்திக் காலத்தை ஓட்டுவதே அவரது திட்டமாக உள்ளது.

இதனை ஐ.தே.க. ஜே.வீ.பீயும் வெளிப் படையாகக் கூறத் தொடங்கி விட்டன மூர்க்கனும் முதலையும் கொண்டதை விடா என்று தமிழில் பழமொழி உள்ளது. இது இப்போ மகிந்தருக்கு பொருந்துகிறது.

இந்தக் கேவலத்தை இந்தியா சீனா போன்ற நாடுகள் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டாலும் 1990 களில் ஜே.வீ.பீ. இந்தியாவுக்கு எதிராகக் கிளம்பியது போன்ற ஒரு நிலையை உருவாக்கி விட்டிருப்பதை நாம் காணலாம்.

இதனைப் புரிந்து கொண்ட இந்திய பாதுகாப்புத் துறைச் ஆலோசகர் எம்.கே.நாராயணன் இலங்கை அரசு தமிழரின் மனங்களைக் கவரத் தவறிவிட்டது எனக் கூறி மறைமுக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

தன் முதுகு தனக்கே தெரியாது என்பது போல அவருக்கும் இலங்கைத் தமிழரின் உண்மை நிலை தெரியாதது போலவே காட்டிக் கொள்கிறார். ஒரு வேளை ஆனந்தசங்கரி, டக்லஸ், சித்தார்த்தன், கருணா, பிள்ளையான் போன்றோர்தான் இலங்கைத் தமிழர் என்ற கனவில் இருக்கிறாரோ தெரியவில்லை.

ஆனால் பல மத தலைவர்களைக் கொண்டு ஆன்மீகம் அமைதி சமாதானம் என்ற பசப்பு வார்:த்தைகளால் இந்திய அரசின் தூண்டுதலில் ஒரு அரை வேக்காடட்டுத் தீர்வை தமிழ் மக்பகள் மீது திணிக்கும் போக்கு குருஜி போன்ற இந்திச் சாமி மார்களின் நெறியாள்கையில் நாடகம் ஒன்று விரைவில் அரங்கேறும் சாத்தியப்பாடு தெரிகிறது. இந்த வலைக்குள் தமிழர் தேசியக் கூட்டமைப்பை இழுக்கும் நோக்கமாகவே

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் திரு. இரா.சம்பந்தனுக்கு விடுத்துள்ள டில்லிக்கான அழைப்பு பார்க்கப்பட வேண்டி உள்ளது. மேலும் விரைவில் இந்தியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் காங்கிரசுக்கு தி.மு.க. தமிழ் நாட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை இடது சாரிக் கட்சிகளின் ஆதரவு அற்ற நிலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசுக்குத் தாமே உண்மை நண்பன் என்ற விதத்தில் மேலை நாடுகள் போலல்லாது இலங்கைக்கு நல்ல ஒரு தீர்வை இந்தியா கொடுக்க முடியும் அதனை இலங்கை அரசு பயன்படுத்த வேண்டும்

என்றும் நல்லாசி வழங்கியுள்ளார். அவர் நினைப்பு அவரது பிழைப்பைக் கெடுப்பது போல் அமைந்திருந்தது ஆனந்த விகடன் பத்திரிகை நடத்திய தமிழகத் தமிழரிடையே நடத்திய கருத்தெடுப்பின் முடிவுகள். எமது வாசகர்களுக்காக விகடனின் சில கணிப்புகள் இதோ !




இத்தகைய செய்தி இருட்டடிப்புக்கு ஈழத் தமிழினம் பலியாகி தாய் மண் மீட்புக்கான தனது பங்களிப்பைச் சொல்லாலும் செயலாலும் வழங்க மறுக்கும் நிலையில் இந்திய இலங்கை அரசுகளின் திட்டமிட்ட ஈழத் தமிழின இன அழிப்பு யுத்தம் வெற்றிகரமாக நிறைவேறிவிடும்.

இத்தகைய முடிவில் இலங்கையின் தமிழினத்தின் கதை முற்றாக முடிந்து விடும். முன்பு பறங்கியர் என்ற ஒரு இனமக்கள் எம்மிடையே இலங்கையில் வாழ்ந்து வந்தனர். அந்த இனம் 1958 இனக் கலவரத்துடன் முற்று முழதாகப் புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியா கனடா அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் போய் விட்டதால் அந்த இனம் இலங்கையில் இல்லாது போய்விட்டது.

மகிந்த அரசின் ஆயதக்கலாச்சார மிரட்டல் ஆட்சியில் கிழக்கில் முஸ்லீம் மக்களின் இருப்பு கலைந்து சிங்களவரின் ஆதிக்கம் பெருகி வருகிறது. பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு மூதலீடுகள் மூலம் வரும் வேலை வாய்ப்புகள் பாதுகாப்புக் காரணம் காட்டிச் சிங்களவருக்கே கொடுக்கப்படும். அத்துடன் சிங்களக் குடியேற்றம் உறுதிப் படுத்தப் பட்டுவிடும்.

தமிழர் முஸ்லீம்களுக்கு இடையே சிங்கள அரசுகளால் திட்டுமிட்ட பிரிவினைகள் மூலம் அரசுக்கு வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசக் கோரிக்கையை முறியடிக்க வசதியாய் விட்டது. பதவி ஆசை பிடித்த கருணா பிள்ளையான் டக்லஸ் போன்ற தன்னலக் காரரால் மதரீதியான இணைவுகள் இல்லாமற் செய்யப் பட்டு விட்டன. பிரிந்து விட்ட இந்து முஸ்லீம் உறவால் இணைந்த வடக்கு கிழக்கு என்ற இருமதங்களுக்குமான தமிழர் தாயகக் கோட்பாடு சட்டரீதியாகவும் பிரிக்கப் பட்டவிட்டது.

இந்து முஸ்லீம் சமூகங்கள் இந்த ஆபத்தான நிலையை உணர்ந்து ஆத்மார்த்தமான உணர்வுகளின் அடிப்படையில் இணைந்து தமிழர் தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தி இணைந்த வடக்கு கிழக்கு மாநிலத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகிறது. இரு சமூகங்களையும் அச்சுறுத்தியும் பிரிவினைகளை உருவாக்கியும் சிண்டு முடிக்கும் எதிரிகளின் சதிவலைக்குள் விழாது தலைவர்கள் எச்சரிக்கையுடன் நடப்பதே புத்தி சாலித்தனமாகும். இந்து முஸ்லீம் மக்கள் பிரியாமலும் இருக்க வேண்டியது அவசிமாகிறது. நாம் இன்று இருக்கும் கால கட்டம் 1940களில் பெரிய பிரித்தானியப் பேரரசு இருந்தது போன்ற நிலைக்குச் சமானமானதாகும்.

அன்று ஹிட்லர் உலகில் பல களமுனைகளில் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவை இன்று இலங்கை அரசு கூறும் பிரச்சார வெற்றிகள் அல்ல. மாறாக அவனது வெற்றிகள் உலகறிந்த உண்மைகளாய் இருந்தன. இலண்டன் நகரத்தில் இரவு பகல் யேர்மனிய விமானங்கள் குண்டு மழை பொழிந்த வண்ணம் இருந்தன. அப்படியான சூழலில் “ பிரித்தானியாவைக் கோழிக் குஞ்சின் கழுத்தை நெரிப்பது போல் நெரிப்பேன் ’’ எனக் ஹிட்லர் கொக்கரித்தான். அன்று பிரத்தானியப் பிரதமராகப் புதிதாக பதவி ஏற்ற சேர் வின்ஸ்ரன் சேர்ச்சில் கொஞ்சமும் கலங்கவில்லை. பதிலாக ஏதோ ஒரு குஞ்சு ஏதோ ஒரு கழுத்து எனக் கிண்டலாக ஆங்கிலத்தில்
“ Some Chicken Some Necks “ எனப் பதிலடி கொடுத்தார். இந்தப் பதிலை இன்றைய சினிமா தமிழில் சொல்வதானால் “ போடா பேமாரி அதுக்கு வேறை ஆளப்பாருடா“ போன்றது.

சேர்ச்சில் வெறும் வாய்சவடால் அடிக்கவில்லை. உடனடியாகச் சகல போர் உத்திகளையும் தயாரிப்புகளையும் உசுப்பி விட்டதோடு தன் ஆற்றல் மிகு உணர்ச்சிப் பேருரைகளால் மக்களைப் போருக்கு முகங் கொடுக்க வேண்டிய தன்னம்பிக்கை , ஒத்துழைப்பு என்பவற்றை மக்களிடமிருந்து பெற்றார். மின்னல் தாக்குதல் Blitz Krieg எனப்படும் ஹிட்லரின் விமானக் குண்டுகளும் வீ.2 ரொக்கட் ஏவகணைகளும் இலண்டன் நகர் மீது மழையாய்க் கொட்டி எதிரி நகரத்தைப் பெரும் தீக்காடக்கி எரித்தான். அந்த நேரத்திலும் சேர்ச்சில் பங்கருக்குள் பதுங்கிக் கிடக்க வில்லை. இராணுவக் கட்டளைத் தளங்களில் போர் முனைக்கான தரவுகளையும் கட்டளைகளையும் வழங்கல்களையும் நேரம் தவறாமல் நிறை வேற்றினான். தெரு வீதிகளில் மக்களோடு மக்களாக நின்று மீட்பு மற்றும் நிவாரணத் தேவைகளை நிறைவேற்றினான். இங்கிலாந்தின் சரித்திரத்தில் அழியாத கடமை வீரனாகப் பேச்சாற்றல் மிக்க அரசியல் வாதியாக இன்றும் புகழப்படுகிறான்.

இன்று எம்மிடையே ஆயிரம் ஆயிரம் சேர்ச்சில்கள் வன்னியிலும் வடக்குக் கிழக்கிலும் புலம் பெயர் நாடுகளிலும் இரவு பகல் பாராது உழைக்கின்றனர். களத்திலும் பின்தளத்திலும் மேதகு தலைவர் பிரபாகரன் முதல் பிரிகேடியர்கள் தளபதிகள் கப்டன்கள் போராளிகள் எனப் பல தரத்திலும் தளராது போரிடுகின்றனர். தவழும் குழந்தைகள் முதல் குடு குடு தாத்தாக்கள் வரை போருக்கு முகங்கொடுத்து எதிரியைக் களத்திலிருந்து விரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எதிரி இரவு பகல் ஏவகணை வெடிகள் விமானக் குண்டு வீச்சுக்கள் மழையாகக் கொட்டும் நிலையிலும் எமது மக்கள் புத்தக ,சஞ்சிகை , இசைப் பேழை வெளியீடுகளையும் ,மாவீரர் வணக்க நிகழ்வுகள், மதிப்பளிக்கும் விழாக்கள் எனத் தினமும் நடத்திச் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர். புலத்தில் வாழும் நாம் மட்டும் எதற்கு வீண் சந்தேகங்களையும் வதந்திகளையும் எம்மிடையே பரப்பி எமது மக்களின் உறுதியக் குலைக்க வேண்டும் ?

எதிரகளின் தந்திரமாக யேன்ஸ யேர்னல் என்ற சர்வ தேச பாதுகாப்பு தளபாட வர்த்தகச் சஞ்சிகை புலிகளின் வருட வருமானம் 2500 மில்லியன் டொலர் இது மெக்ஸிக்கோ பயங்கரவாதிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது எனத் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தொகை போதை மருந்து மற்றும் ஆயத விற்பனையாலும் வெளிநாடுகளில் உள்ள தமிழரை மிரட்டிப் பெறும் வசூலிப்பாலும் கிடைக்கிறது எனத் தெரிவிக்கிறதாம். இது போன்ற ஒரு முயற்சியாக ஐ.நா. பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி மனித உரிமை பற்றியும் சிறுவர் படை பற்றியும் பேச இலங்கை போயிருக்கிறார்.

இதேநேரம் சர்வதேச அபய நிறுவனம் வன்னியில் இடம் பெயர்ந்த மக்களை புலிகள் வெளியே வர விடுகிறார்கள் என்ற ஒரு பரப்புரையைச் செய்கிறது. இவர்களுக்கு போரை நிறுத்தவோ அமைதியை குலைத்துப் போரைத் தொடக்கிய இலங்கை அரசைத் தட்டிக் கேட்கவோ திராணி இல்லை. போர்முனையிலும் இராணுவ நிலைகளிலும் ; இடம் பெற வேண்டிய தாக்குதல்களை அரச அதிபர் அலுவலகங்கள் வைத்தியசாலைகள் பொது மக்கிளன் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தும் அரச படைகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை கண்டிக்கவும் நசினைக்க வில்லை. ஆனால் புலிகளின் பல்லைப் பிடுங்கும் வேலைதான் இவர்களுக்குச் செய்யத் தெரிகிறது.

ஐயா மகிந்தர் கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் கைப்பற்றும் வரை புலிகளுக்கு எதிரான போர் தடையின்றித் தொடரும் என்கிறார்.பொலன்னறுவையில் நீர்ப்பாசனத் திட்டத்தை தொடங்கி வைத்த போது உதிர்த்த முத்துக்கள் இவை. ஐயா மேலும் இலங்கையை மேல் நாட்டவரில் தங்கி இருந்து ஆட்சி நடத்துவோரின் காலமும் மலைஏறி விட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.


ஐயாவுக்குத் தமிழினம் கொடுக்கப் போகும் பதில் என்ன ?
ஓட ஓட விரட்டுவதா ஒடிந்து மனம் அழிந்து போவதா ?

மானம் உள்ள தமிழினம் சேர்ச்சிலின் வழியைப் பின் தொடர்ந்து தாய் மண் மீட்புப் போரை வென்றெடுப்பதே எமக்க உள்ள ஒரே வழி ! ஒரே தீர்வு !


-பத்மா-



Comments